
பள்ளி தேர்வில், கலெக்டர் ஆக விரும்புவதாக பதில் எழுதிய பள்ளி மாணவியை நேரில் அழைத்து வந்து இனிப்புகள் வழங்கி வாழ்த்திய கரூர் கலெக்டர் அன்பழகன், அந்த மாணவியை தனது இருக்கையில் அமரவைத்து ஊக்கப்படுத்தினார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடத்தப்பட்ட ஆண்டுத்தேர்வில், ஆங்கில பாடத்திற்கான தேர்வில் “நீங்கள் எதிர்காலத்தில் யாராக ஆசைப்படுகிறீர்கள்? உங்களின் முன்மாதிரி மனிதர் யார்? என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது.
அந்த கேள்விக்கு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்வி பயின்று வரும் 6ஆம் வகுப்ப மாணவி மனோபிரியா எழுதிய பதிலில் நான் “எதிர்காலத்தில் மாவட்ட கலெக்டராக விரும்புகிறேன். எனது முன்மாதிரி மனிதர் எங்களது மாவட்ட கலெக்டர் தான்” என்று விடை எழுதியிருக்கிறார்.
விடைத்தாளை திருத்தும்போது, மாணவி மனோபிரியா அளித்திருந்த அந்த பதில் ஆசிரியரை பெருமிதம் கொள்ள செய்யும் வகையில் இருந்தது.
மேலும் இந்த தகவலை பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் பூபதி, மாவட்ட கலெக்டர் அன்பழகனின் எண்ணுக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலமாக அனுப்பி வைத்துள்ளார். இதனைப்பார்த்த மாவட்ட கலெக்டர், அந்த மாணவியை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வாருங்கள், என கூறியுள்ளார்
இதனையடுத்து ஆசிரியர் பூபதி, மாணவி மனோபிரியா மற்றும் விளையாட்டு, கலை, இலக்கியம் மற்றும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்ற அப்பள்ளி மாணவ-மாணவிகளை அழைத்து வந்து மாவட்ட கலெக்டரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்.
மாவட்ட கலெக்டராக விரும்பிய மாணவியை கலெக்டர் அன்பழகன் அழைத்துப் பாராட்டி, தேர்வில் அந்த மாணவி எழுதிய விடைத்தாளையும் பார்த்தார்.
பின்னர் அவர், யாரும் எதிர்பாராத வகையில், தான் அமர்ந்திருந்த இருக்கையில் அந்த மாணவியை அமரவைத்து,
“நன்கு படித்து எதிர்காலத்தில் நீங்கள் நினைத்ததைப்போல் ஒரு மாவட்ட கலெக்டராக உருவாகி இதுபோன்ற இருக்கையில் அமர்ந்து ஏழை, எளிய மக்களுக்கும் நமது நாட்டிற்கும் சேவை செய்ய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.
பின்னர் மாணவ-மாணவிகளின் பல்வேறு சம்பந்தமான கேள்விகளுக்கு அவர்களுக்கு புரியும் வகையில் எளிய நடையில் பதிலளித்தார்.
அதனைத்தொடர்ந்து வருகை தந்த அனைவருக்கும் இனிப்புகளை மாவட்ட கலெக்டர் வழங்கி வாழ்த்தினார்.இச்சம்பவம் பள்ளி மாணவ, மாணவியா்கள் மற்றும் ஆசிரியா்கள் பெற்றோர் மத்தியில் பெரும் மகிழ்ச்சி தரும் விஷயமாக இருந்து வருகிறது.



