அரக்கோணத்தில் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அரக்கோணம் அருகே உள்ள குருவராஜ பேட்டையை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த 23 இளைஞருக்கும் இன்று திருமணம் நடக்க இருந்தது.
திருமணத்திற்காக நேற்று இரவு பெண் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான உறவினர்கள் நண்பரகள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.
சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் குறித்து வேலூர் சமூகநலத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது
இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற வேலூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், அரக்கோணம் தாசில்தார் ஜெயக்குமார், வருவாய் ஆய்வாளர் கல்யாணி மற்றும் அரக்கோணம் போலீசார் ஆகியோர் நேற்று இரவு திருமணம் நடக்க இருந்த மண்டபத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சிறுமிக்கு திருமணம் நடக்க இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சிறுமிக்கு திருமணம் நடத்துவது சட்டபடி குற்றம் என அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.
இதையடுத்து இருவீட்டாரும் திருமணத்தை நிறுத்துவதாக உறுதியளித்தனர். இரு வீட்டாரிடமும் அதிகாரிகள் எழுதி வாங்கினர்.
திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டதால் இருவீட்டார் உறவினர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இது குறித்த அப்பகுதி மக்கள் பேசுகையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் வரும் சிவானாண்டி வீட்டு கல்யாணம் போல ஆயிருச்சு..! இது அந்த போஸ்பாண்டி செய்த வேலையாக இருக்குமோ என காமெடி செய்தவாறு கலைந்து சென்றனா்.



