
ஆன்லைன் திருமண தகவல் மையத்தின் மூலம் வரன் தேடும் பெற்றோர் மற்றும் தனிநபர்கள் மிகவும் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம்
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறி அரசுப் பெண் மருத்துவரிடம் ரூ. 20 லட்சம் மோசடி செய்த பொறியாளரை லால்குடி அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செல்வவிநாயக நகர் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி மகன் சக்ரவர்த்தி (34). பொறியாளாரான இவர் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இவருக்கு திருமணமாகி மனைவி, மகள் உள்ள நிலையில் ஒரு ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம் போலி பெயர்களில் தனக்கு மணப்பெண் கோரி பதிவு செய்துள்ளார்.
இதன் மூலம் தொடர்பு கிடைத்த திருச்சி சமயபுரம் நெ.1 டோல்கேட் பகுதியில் உள்ள அரசுப் பெண் மருத்துவரைத் திருமணம் செய்வதாக கூறி பழகி, அவருக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து அவரிடமிருந்து ரூ. 20 லட்சம் பெற்றுள்ளார்.
ஆனால் அவரைத் திருமணம் செய்ய மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மருத்துவர் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளர் மு. கவிதா வழக்குப் பதிந்து சக்ரவர்த்தியைத் தேடி வந்தனர்.
இருப்பினும் அவர் கைது செய்யப்படவில்லை.
இதையடுத்து அந்தப் பெண் மருத்துவர் சென்னை உயர்நீதி மன்றம் மதுரைக் கிளை உயர்நீதி மன்றத்தில், ஒரே புகைப்படத்தை வைத்து பல பெயர்களில் மணப்பெண் தேவை என விளம்பரம் செய்யும் ஆன்லைன் தகவல் மையம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் தன்னைத் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். மேலும் தன்னிடமிருந்து ரூ. 20 லட்சத்தை மோசடி செய்த சக்ரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் வழக்குத் தொடுத்தார்.
விசாரணைக்கு வந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திருமண தகவல் மையம் மீதும் சக்ரவர்த்தி மீதும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடபட்டது.
அதன்படி லால்குடி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் மு. கவிதா மற்றும் காவலர்கள் திருவண்ணாமலை சென்று அங்கு வீட்டில் இருந்த சக்ரவர்த்தியையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கார் ஒட்டுநர் திருவண்ணாமலை கோசலை பகுதியைச் சேர்ந்த மு. முருகன் (39) ஆகிய இருவரையும் கைது செய்து,
லால்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிமன்ற நடுவர் உத்தரவின்பேரில் இருவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



