நாகர்கோவிலில் கடன் சுமையாலும் கந்துவட்டி கொடுமையாலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப் படுகிறது.
நாகர்கோவில் வடசேரி வஞ்சி மார்த்தாண்டம் புதுத் தெருவைச் சேர்ந்த தொழில் அதிபர் சுப்பிரமணி (வயது 50). இவர் வடசேரி-புத்தேரி சாலையில் பிஸ்கட், சிகரெட் மொத்த விற்பனை செய்யும் ஏஜென்சி நடத்தி வந்தார். இவருக்குச் சொந்தமான 3 மாடி கொண்ட பங்களா வீட்டில் அவரது தாயார் ருக்மணி (72), மனைவி ஹேமா (48), மகள் ஷிவானி (20) ஆகியோருடன் வசித்து வந்தார் சுப்பிரமணி. மகள் ஷிவானி ஹோமியோ டாக்டருக்கு படித்து வந்தார்.
வழக்கமாக சுப்பிரமணி காலையிலேயே கடை திறந்து வியாபாரத்தைத் தொடங்கி விடுவார். ஆனால், இன்று காலை வெகுநேரமாகியும் கடையை திறக்க அவர் செல்லவில்லை. இதனால் கடையில் வேலை பார்க்கும் ஊழியர் அவரைத் தேடி வீட்டுக்கு வந்தார்.
வீட்டின் கதவை பலமுறை தட்டியும் யாருமே கதவைத் திறக்கவில்லையாம். இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர் சுப்பிரமணியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் ஜன்னலை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கே படுக்கை அறையில் சுப்பிரமணி, ருக்மணி, ஹேமா, ஷிவானி என நான்கு பேரும் வாயில் நுரை தள்ளியபடி பிணமாகக் கிடந்தனர். இரவில் அவர்கள் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் நான்கு பேரின் பிணத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்பத்துடன் தற்கொலை செய்த தொழிலதிபர் சுப்பிரமணி தொழிலுக்காக பலரிடம் கந்துவட்டிக்கு கடன் வாங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
பணம் கொடுத்தவர்கள் திருப்பிக்கேட்டு நெருக்கடி கொடுத்ததால் ஏற்பட்ட வேதனையில் சுப்பிரமணி, தானும் விஷம் குடித்து குடும்பத்தினருக்கும் கொடுத்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்தத் தற்கொலைச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




