
தமிழகத்தில் கடந்த ஒருமாதமாக ரயிலில் பயணிக்கும் பெண்களிடம் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த கும்பலை பிடித்த தனிப்படை போலீசாருக்கு காவல்துறை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் பாராட்டு தெரிவித்தார்.
கடந்த ஒரு மாத காலமாக இரவு நேரங்களில் மாவேலி பாளையம், ஈரோடு ரயில் நிலையம் ஹோம் சிக்னல் என்பன உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தன.
இது சம்பந்தமாக 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய போலீஸார் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனா்.
அவர்கள் மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், தமிழ்நாடு என பல இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
இந்நிலையில், கடந்த 17ம் தேதி இரவு 12 மணிக்கு ஈரோடு ரயில் நிலையம் அருகில் நான்கு பேர் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்ததை கவனித்த போலீஸார் அவர்களை பிடித்து விசாரித்ததில் மகாராஷ்டிராவை சேர்ந்த பாலாஜி சங்கர் சின்டே (50), தானாஜீ மன்மத் சின்டே (20), சுனில் மன்மத் சின்டே (21), பப்பு ஈஸ்வர் பவர் (25) என்பதும், இவர்களுக்கு திருட்டு வழக்கில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
இவர்களில் பாலாஜி சங்கர் சின்டே என்பவர் ரயிலில் செயின் பறிப்பில் ஈடுபடும் போது, தவறி விழுந்ததால் சக்கரத்தில் சிக்கி வலது காலை இழந்துள்ளார்.
இருப்பினும் செயற்கை காலை வைத்துக்கொண்டு சில நண்பர்களுடன் சேர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது.
இவர்கள் 12 செயின் பறிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்டு சுமார் 53 சவரன் நகைகளை கொள்ளை அடித்துள்ளனர். இதையடுத்து, கைது செய்யப்பட்டு அவா்களிடமிருந்து 53 சவரன் நகைகளையும் மீட்டு 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடித்த தனிப்படை போலீசாருக்கு, காவல்துறை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் பாராட்டு தெரிவித்தார்.


