திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் வியாபாரி கையை வெட்டி துண்டித்து பணத்தை கொள்ளை அடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜாபிரபு (வயது 50), இவர் அந்த பகுதயில் உள்ள பலசரக்கு கடைகளுக்கு மொத்தமாகவும், சில்லரை விற்பனைக்காகவும் பருப்பு வியாபாரம் செய்து வருகிறார். அதற்கான பணத்தை வாரந்தோறும் கடைகளுக்கு சென்று வசூல் செய்து வருவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று மாலை ராஜாபிரபு பணத்தை வசூல் செய்வதற்கு தனது பைக்கில் சங்கரன்கோவிலுக்கு புறப்பட்டார்.
கழுகுமலை சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போட்டு விட்டு சங்கரன்கோவில் புதிய பஸ் நிலையம் வழியாக நகருக்குள் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது ராஜாபிரபுவை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரை திடீரென்று வழி மறித்தனர்.
மர்மநபர்கள் அரிவாளை காட்டி மிரட்டி ராஜாபிரபுவிடம் பணத்தை தருமாறு கேட்டனர்.
ஆனால் அவர் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் அரிவாளால் ராஜாபிரபுவின் வலது கையில் சரமாரியாக வெட்டினர்.
இதில் அவரின் வலது கை துண்டானது. பின்னர் ராஜாபிரபு வைத்து இருந்த ரூ.15 ஆயிரத்தை அவர்கள் கொள்ளை அடித்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.
இதில் பலத்த காயம் அடைந்த ராஜாபிரபு வேதனையில் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அந்த வழியாக வந்தவர்கள் சங்கரன்கோவில் டவுன் போலீசுக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், டவுன் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் ராஜாபிரபுவையும், துண்டிக்கப்பட்ட வலது கையையும் மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக ராஜாபிரபு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
சங்கரன்கோவில் பகுதியில் இதுவரை வீடு புகுந்து திருட்டு, கடையில் பணத்தை எடுத்து கொண்டு ஓட்டம், வங்கியில் பணம் எடுத்து விட்டு வந்த முதியவரை ஏமாற்றி பணம் பறிப்பு என பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று உள்ளது.
இவற்றில் இதுவரை குற்றவாளிகள் பிடிபடாத நிலையில் தற்போது பணத்திற்காக வியாபாரியின் கையை வெட்டிய சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



