
சேலம் 8 வழிச்சாலை விவகாரத்தில் மீண்டும் தமிழக மக்களுக்கு துரோகம் செய்வது கண்டனத்திற்குரியது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்துள்ள ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ள மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு:
சேலத்தில் இருந்து சென்னைக்கு வெறும் 3 மணி நேரத்தில் செல்லும் வகையிலான 8 வழிச்சாலை திட்டத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் கொண்டு வந்தது.
இதற்காக ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 277 கிமீ தொலைவு கொண்ட இந்த சாலை கட்டமைப்புக்காக காஞ்சிபுரம், சேலம், தரும்பரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்துவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். மேலும் இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மேலும் இந்த வழக்கு விசாரணையில், 8 வழிச்சாலை விவகாரத்தில் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இந்த நிலையில், 8 வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
மேல்முறையீட்டு மனுவில் இந்த வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
இதனையடுத்து இந்த மனு மீது ஜுன் 3-ம் தேதி விசாரணைக்கு வரும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
8 வழிச்சாலை தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்யாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்தார்.
ஆனால் தேர்தல் முடிந்த பிறகு இப்போது மேல்முறையீடு செய்திருப்பது தமிழக மக்களுக்கு செய்யும் மாணிக்க முடியாத துரோகம் என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
மோடி தலைமையில் மத்தியில் அரசு பதவியேற்ற மறுநாளே மக்களை விரோத நடவடிக்கையில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது என கூறியுள்ளார்.
அதிமுக அரசின் எடுபிடி அத்தியாயம் 2-வது முறையாக தொடங்கிவிட்டதாக மு.க.ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் பதவி கூட தராமல் மோடி அரசு அவமதித்துள்ளது என்றும் தமிழக மக்களின் வாழ்வாதாரத்துடன் பாஜக அரசு இனியும் விபரீத விளையாட்டு நடத்த வேண்டாம் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக உச்சநீதிமன்றத்தில் செய்துள்ள மேல்முறையீட்டை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.



