
தமிழகத்தில் முழு மதுவிலக்கு அமல்படுத்த கோரி மெரினா பீ்ச்சில் உள்ள காந்தி சிலை முன்பு தேசிய கொடியுடன் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு போராட்டம், பேரணி, உண்ணாவிரதங்கள் நடத்த சென்னை மாநகர காவல் துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் அந்த தடையை மீறி அவ்வப்போது போராட்டங்கள் நடந்து வருகிறது.
இதை தடுக்கும் வகையில் மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் முதல் நேப்பியார் பாலம் வரை 24 மணிநேரமும் போலீசார் பாதுகாப்பு பணி மற்றும் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தடையை மீறி போராட்டம் நடத்தும் நபர்களையும் போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன்பு நேற்று காலை 9.30 மணி அளவில் பெண் ஒருவர் வந்தார்.
ஆனால் அந்த பெண் திடீரென கையில் தேசிய கொடியை பிடித்தப்படி காந்தி சிலை முன்பு அமர்ந்து உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டார்.
போராட்டம் நடத்த தடைசெய்யப்பட்ட பகுதியில் பெண் ஒருவர் தேசிய கொடியுடன் அமர்ந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணை அங்கிருந்த அப்புறப்படுத்த முயன்றனர்.
ஆனால் அந்த பெண் தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும். மது உற்பத்தி செய்யும் ஆலைகளை மூட வேண்டும். மதுவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறு வாழ்வு மையம் திறக்க வேண்டும் ஆகிய கோரிகளை தமிழக அரசு நிறைவேற்றினால் தான் நான் உண்ணாவிரதம் போராட்டத்தை கைவிடுவேன் என்று கூறிவிட்டார்.பின்னர் கடும் போராட்டத்திற்கு இடையே பெண்ணை மெரினா போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
பிறகு அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, சென்னை திருநின்றவூர் சிடிஎச் சாலையை சேர்ந்த கணபதி என்பவரின் மனைவி கலைச்செல்வி(40) என தெரியவந்தது.
இவர் தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவர் என்றும் விசாரணையில் தெரியவந்தது.
பிறகு கலைச்செல்வியின் கணவர் கணபதியை போலீசார் நேரில் வரவழைத்து முன் அறிவிப்பு இன்றி தடை செய்யப்பட்ட பகுதியில் போராட்டம் நடத்த கூடாது என்று கடுமையாக எச்சரித்து,
எழுத்து பூர்வமாக எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் மெரினா காந்தி சிலை அருகே பரபரப்பு ஏற்பட்டது.



