
டிக்கெட் பரிசோதகரை கண்டித்து விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் சிவனடியார்கள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வேப்பூர் பகுதியை சேர்ந்த உழவாரப்பணி சிவனடியார்கள் 151 பேர் கடந்த 28-ந் தேதி காசிக்கு யாத்திரை சென்றனர்.
வட நாட்டில் உள்ள ஆன்மீக தலங்களுக்கு யாத்திரை சென்ற அவர்கள் சென்னை வந்தனர். அங்கிருந்து ராமேஸ்வரம் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று நள்ளிரவு விருத்தாசலம் வந்தனர்.
சிவனடியார்கள் அனைவரும் விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றவுடன் இறங்கி ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே சென்றனர்.
அப்போது ரெயில் நிலையத்தின் முகப்பு பகுதியில் நின்று கொண்டிருந்த டிக்கெட் பரிசோதகர் ஒருவர் அவர்களை வழிமறித்து உங்களிடம் டிக்கெட் உள்ளதா? என கேட்டுள்ளார். அப்போது டிக்கெட் வைத்திருப்பவர் பின்னால் வந்து கொண்டிருக்கிறார் என்று அவர்கள் கூறியுள்ளனா்.
ஆனால் அதை ஏற்காத அந்த டிக்கெட் பரிசோதகர் சிவனடியார்களிடம் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து டிக்கெட் வைத்திருந்த நபர் அங்கு வந்து அனைத்து டிக்கெட்டையும் டிக்கெட் பரிசோதகரிடம் காட்டினார். ஆனாலும் டிக்கெட் பரிசோதகர் சிவனடியார்களை மீண்டும் தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.
இது குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
சிவனடியார்கள் அனைவரிடமும் டிக்கெட் இருப்பதை உறுதி செய்த அவர்கள் டிக்கெட் பரிசோதகரை சமாதானப்படுத்தியுள்ளனா்.
ஆனால் அவர் சமாதானம் ஆகவில்லை, சிவனடியார்கள் தன்னை தாக்க முயன்றதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ரயில்வே போலீசாரிடம் கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த சிவனடியார்கள் டிக்கெட் பரிசோதகரை கண்டித்து ரெயில் நிலைய வளாகத்திலேயே அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து போலீசார் சிவனடியார்களை சமாதானப்படுத்தினார்கள். பின்னர் ரெயில் நிலைய அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட டிக்கெட் பரிசோதகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு கொடுத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
நள்ளிரவில் விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் சிவனடியார்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



