உசிலம்பட்டி பகுதியில் கருக்கலைப்புக்கு உடந்தையாக இருந்ததாக ‘3 ஸ்கேன்’ மையத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள ஸ்கேன் சென்டர்கள் மற்றும் ஆஸ்பத்திரிகளுக்கு சுகாதாரத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி ஆண்-பெண் பாலின விகிதத்தை பராமரிக்கும் வகையில் ஸ்கேன் மையங்களில் பொதுமக்களுக்கு கருவில் இருக்கும் பாலினத்தை கூறுதல் மற்றும் கருக்கலைப்பு செய்தல் கடும் குற்றம் என்று அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளில் பெண் குழந்தைகள் பிறப்பு குறைந்து வருவதாக சுகாதாரத்துறைக்கு புள்ளி விவரம் கிடைத்தது.
இந்நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் உசிலம்பட்டி பகுதியில் திடீர் ஆய்வு நடத்தினர். அங்குள்ள ஸ்கேன் மையங்களிலும் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு பரிசோதனை செய்யப்பட்ட ஆவணங்கள் சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது தெரியவந்தது.
கடந்த 2 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட ஸ்கேன் விவரம் மற்றும் கருக் கலைப்பு தொடர்பான ஆவணங்களும் இல்லை.
இதனால் உசிலம்பட்டி, டி.வாடிப்பட்டியில் உள்ள 3 ஸ்கேன் மையங்கள் செயல்பட தடை விதித்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த மையங்களுக்கு ‘சீல்’ வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக விளக்கம் தரவும், சம்பந்தப்பட்ட ஸ்கேன் உரிமையாளர்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், நடவடிக்கைக்குள்ளான 3 ஸ்கேன் மையங்களிலும் பாலினம் அறிதல் மற்றும் சட்ட விரோத கருக்கலைப்பு நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதன் பேரில் தான் அந்த மையங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.



