1911-ம் ஆண்டு ஜூன் மாதம் இதே நாளில்தான் வீ்ரவாஞ்சிநாதன் ஆங்கிலேய ஏகாதிபத்திய அடக்குமுறைக்கு பொங்கி எழுந்து நெல்லை கலெக்டராக இருந்த ஆஷ்துரையை மணியாச்சி ரயில்நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். போலீசில் பிடிபட்டு ஒரு வெள்ளைக்காரன் கையில் சாகக் கூடாது என்ற நோக்கத்தில் அடுத்த சில நிமிடங்களிலேயே அதே துப்பாக்கியால் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டார்.தனது 25-வது வயதில் உயிர் தியாகம் செய்து இந்திய நாட்டின் விழிப்புணர்வுக்கு பாடுபட்ட அவரது நினைவு தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் அவர் பிறந்த ஊரான நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் உள்ள முத்துசாமி பூங்கா வளாகத்தில் அவருக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மணிமண்டபம் எழுப்பினார். அங்கு அவருக்கு அரை உருவ வெண்கலச்சிலையும் உள்ளது.
இந்த நிலையில் வாஞ்சிநாதனின் 108 வது நினைவு நாளான இன்று அரசு சார்பில் நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், தென்காசி கோட்டாட்சியர் சவுந்திரராஜன், தாசில்தார் ஓசான்னா பெர்னன்டோ, காவல்துறை ஆய்வாளர் சுரேஷ் குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதே போல் பேரூந்து நிலையம் அருகில் உள்ள அவரது முழு உருவச்சிலைக்கு வாஞ்சிநாதனின் தம்பி மகன் ஹரிஹர சுப்பிரமணியன்,பேரன் வாஞ்சி கோபால கிருஷ்ணன்,வாஞ்சி இயக்கத்தலைவர் ராமநாதன், அதிமுக சார்பில் நகர செயலாளர் குட்டியப்பாவும், திமுக சார்பில் நகர செயலாளர் ரஹீம், காங்கிரஸ் கட்சி சார்பில் மேற்கு மாவட்டதலைவர் பழனிநாடார், பாஜக சார்பில் நகர தலைவர் மாரியப்பன், இந்து முன்னணி ஒன்றிய தலைவர் மாசாணம் தலைமையிலும் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், பள்ளி மாணவ, மாணவியர்கள், பிராமணர் சமுதாயம் உள்ளிட்டவர்கள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.



