
மீன்வளத்துறையில் பதிவு செய்யப்படாத விசைப்படகுகளும் மீன் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் நாட்டுப்படகு மீனவர்களின் வேலை நிறுத்தம் 2-வதுநாளாக தொடர்கிறது.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மட்டும் மொத்தம் 245 விசைப்படகுகள் உள்ளன.
இவற்றில் பாதி அளவு படகுகளே மீன்வளத்துறை மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தற்போது மீன்பிடி தடைகாலம் முடிவடைந்த நிலையில் கடந்த 3 நாட்களாக விசைப்படகுகளில் சென்று மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.
இதில் மீன்வளத்துறையில் பதிவு செய்யப்படாத சில விசைப்படகுகளும் மீன் பிடித்து வருவதாக நாட்டுப்படகு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து பதிவு செய்யப்படாத விசைப்படகுகளை மீன்பிடிக்க அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் புன்னக்காயலில் 300 படகுகள், ஆலந்தலையில் 150, அமலி நகரில் 170, வீரபாண்டியபட்டினத்தில் 115, பழைய காயலில் 45, கீழவைப்பார் பகுதியில் 160, சிங்கிதுறையில் 100 என சுமார் 1200 நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையோரம் நிறுத்தி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டடனா்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் எங்களது போராட்டம் தொடரும் என தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு, பைபர் மற்றும் கட்டுமர மீனவ நலச்சங்கத்தினர் தெரிவித்தனர்.
இதனிடையே வேலை நிறுத்தம் குறித்து தகவல் அறியாத சில நாட்டுப்படகுகள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்தனர்.
எனினும் அத்தகைய மீன்கள் ஏலக்கூடத்தில் வைத்து ஏலமிட அனுமதிக்கப்படவில்லை.
இதனால் அந்த ஏலக்கூடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி நாட்டுப்படகு மீனவர்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இந்நிலையில் விசைப்படகு மீனவர்கள் இன்று 2-வது நாளாக கடலுக்கு செல்லாமல் தங்களது போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



