முகிலனை சிபிசிஐடி போலீசார் தங்களது கஸ்டடியில் எடுத்து விசாரிக்க கோரிய மனு மீது இன்று முகிலன் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் ஆஜரானார். விசாரணையில் சிபிசிஐடி கஸ்டடிக்கு செல்வதற்கு முகிலன் மறுத்ததால் வழக்கை நாளை ஒத்தி வைப்பதாக நீதிபதி விஜய் கார்த்திக் கூறினார்.
தமிழக போலீஸார் தேடுவது அறிந்தும், நீதிமன்றம் தேடிக் கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட்டும், தலைமறைவாக இருந்து தண்ணிகாட்டி, திருப்பதியில் ரயில்வே போலீஸாரிடம் மாட்டிக் கொண்ட முகிலன், பின்னர் தமிழக போலீஸார் வசம் ஒப்படைக்கப் பட்டார். அவர் குறித்த வழக்கு தொடர்பில், முகிலனை கரூர் நீதிமன்றம் எண் ஒன்றில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர்.
முன்னதாக, முகிலனை கடந்த வாரம் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். இந்நிலையில், விசாரணைக் கைதியாக இருக்கும் தன்னை காவல்துறை உயர் அதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் சிறைத்துறை அதிகாரிகள் தாக்கியதாக நீதிபதியிடம் தனது சட்டையைக் கழற்றிக்காட்டி முகிலன் முறையிட்டார்.
மேலும், நீட் தேர்வு, மாட்டுக்கறி விவகாரத்தில் போடப்பட்ட வழக்கு, சேலம் சென்னை எட்டு வழிச் சாலை, ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக நடத்திய துப்பாக்கிச்சூடு உள்ளிட்டவற்றை மேற்கோள்காட்டி நீதிபதியிடம் முகிலன் முறையிட்டார். தனது கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகக் கூறினார்.
அதற்கு நீதிபதி, நீங்கள் கூறும் முறையீடுகளை எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும் என்று கூறியதால், நீதிமன்றத்தில் அமர்ந்து தம் மீது சுமத்தப்பட்ட வழக்கு தொடர்பாகவும், சுற்றுச்சூழலுக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கை துப்பாக்கி சூட்டுக்கு காரணமான ஐ.ஜி மற்றும் டிஐஜி மீது கொலை வழக்கு பதிய உத்தரவிடுமாறும் சிபிசிஐடி போலீஸ் காவல் கேட்பதை ஏற்க மறுக்கும் தனது நிலைப்பாடு குறித்தும் புகார் மனுவில் எழுதினார்.