சென்னை:
ராம்கோ நிறுவனத் தலைவர் ராமசுப்பிரமணிய ராஜா மறைவுக்கு இந்து முன்னணி அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
அவர் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில்…
தொழில் அதிபர் ஆன்மீகச் செம்மல் ராமசுப்பிரமணிய ராஜா மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது..
பாரம்பரியமிக்க குடும்பத்தில் தோன்றி, அரும்பெரும் சாதனைகள் புரிந்த ராம்கோ குழுமத்தின் தலைவரான பி.ஆர். ராசுப்பிரமணிய ராஜா, நேற்று இறைவனடி சேர்ந்துள்ளார். அவரது மறைவுக்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. அவரது மறைவால் துயரரும் அவரது குடும்பத்தார், நிறுவன ஊழியர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறோம். அவரது ஆன்மா நற்கதி அடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.
ராமசுப்பிரமணிய ராஜா, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகரை தொழில் நகரமாக வளர்ச்சி பெற பெரும் பணிகளைச் செய்தவர். ஆன்மீகத்திலும், கல்வி வளர்ச்சியிலும் அதிக ஆர்வம் கொண்டவர். தமிழக இளைஞர்களிடம் நல்ல மாற்றத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வெற்றி கண்டவர். கோயில் திருப்பணிகளைச் செவ்வணே நிறைவேற்றியவர். அவரது இழப்பு தொழில் துறைக்கும், ஆன்மிகப் பணிகளுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
– என்று தெரிவித்துள்ளார்.



