
சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டில் இன்று இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
நேற்று நெய்வேலியில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்துக்குச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள், நடிகர் விஜய்யிடம் திடீரென விசாரணை மேற்கொண்டனர். விஜய் பிகில் படத்துக்காக வாங்கிய சம்பளம் குறித்து எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெற்றதாகக் கூறப்பட்டது.
பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவத்துக்குச் சொந்தமான இடங்களில் புதன்கிழமை நேற்று காலை முதலே சோதனை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் அது தொடர்பாக, பிகில் படத்தில் நடித்த போது வாங்கிய சம்பளம் குறித்தும் விஜய் இடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, தாம் படப்பிடிப்பில் இருப்பதாகவும், படப்பிடிப்பு முடிந்த பின்னர் விசாரணைக்கு வருவதாகவும் கூறியுள்ளார் விஜய்.
இருப்பினும் வருமானவரித்துறை அதிகாரிகள், அவரை அப்போதே அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்! இதை அடுத்து அப்போது படப்பிடிப்பு நிறுத்தப் பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையை அடுத்த பனையூரில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.