மயிலைக்கு புகழ்சேர்த்த ‘சமையல் செல்லப்பா’வை அடுத்து… ‘ஜன்னல் பஜ்ஜி கடை’ ரமேஷ்! கொரோனாவால் பரிதாபம்!

சென்னை லைஃப் ஸ்டைல்
mylapore jannal bajji shop
mylapore jannal bajji shop

மயிலாப்பூருக்கு பெயர் சேர்த்த ஜன்னல் பஜ்ஜி கடை உரிமையாளர் ரமேஷ் கொரோனாவுக்கு மரணம் அடைந்தது, மயிலைவாசிகளிடையே பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் மயிலாப்பூரில் மிகவும் புகழ்பெற்ற சமையல் காண்ட்ராக்டரான செல்லப்பா என்பவர், கொரோனாவுக்கு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவையே மயிலைவாசிகளால் ஜீரணிக்க இயலாமல் போன நிலையில், தற்போது மயிலைவாசிகளால் மிகவும் விரும்பப் படும் நபரான ஜன்னல் பஜ்ஜிக்கடை ரமேஷ் கொரோனாவுக்கு உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

bajjikadai horz
bajjikadai horz

நெல்லையில் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங்கை கொரோனா தாக்கியது. இதனால், பயந்து போன ஹரிசிங் தற்கொலை செய்து கொண்டார். அது, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இருட்டுக்கடை அல்வா போல சென்னை மயிலாப்பூரில் ஜன்னல் பஜ்ஜி கடையும் மிகவும் புகழ்பெற்றதுதான்.

ஜன்னல் கடை என்பது, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலை அடுத்துள்ள பொன்னம்பல வாத்தியார் தெருவில் அமைந்துள்ளது. கடையின் உரிமையாளர்களில் ஒருவர் ரமேஷ் என்ற சிவராமகிருஷ்ணன்( வயது 58). ஒரே ஒரு ஜன்னல் வழியே, தன் சகோதரர் சந்திரகேகருடன் பஜ்ஜி வடை, தோசை என விற்பனை செய்வார். இந்தக் கடையில் தயாரிக்கப்படும் பஜ்ஜி, வடை, போண்டா, மிளகாய் பஜ்ஜி மயிலாப்பூருக்கு வரும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதாக இருந்தது. மயிலை கோயிலுக்கு வரும் எவரும் இந்தக் கடையின் தயாரிப்புச் சுவையை ரசிக்காமல் போனதில்லை. இங்கு பரிமாறப்படும் சாம்பார், சட்னி ரகங்களும் தனித்துவ சுவையுடன் இருக்கும்.

மயிலாப்பூரின் அடையாளமாகவே மாறிவிட்டது ஜன்னல் பஜ்ஜி கடை. அலைமோதும் கூட்டத்தை சமாளிக்க, கடையை விரிவுபடுத்துமாறு பலரும் கூறியும், கடைசி வரை ஜன்னல் ஓரத்தில் இருந்தே ரமேஷ் பஜ்ஜி விற்பனை செய்து வந்தார்.

இந்நிலையில் சில நாள்களுக்கு முன் ஜன்னல் பஜ்ஜி கடை உரிமையாளர் ரமேசுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரமேஷ் கொரோனாவுக்கு உயிரிழந்துவிட்டார். இந்தச் செய்தி, மயிலாப்பூர் மக்களை மிகவும் வேதனை அடையச் செய்துள்ளது.

இது குறித்து ரமேஷ் குடும்பத்தினர் கூறுகையில், ”எங்களுக்கு எல்லாவிதத்திலும் அவர் உதவியாக இருந்தார். ஆடிட்டர் பணி செய்து கொண்டே தன் சகோதரர் சந்திரசேகருக்கு பஜ்ஜி கடையில் உதவியாக இருந்தார். அவரின் மறைவு பெரும் இழப்பு. இன்னும் ஒரு மாதத்துக்குப் பிறகே நாங்கள் கடையை திறக்க முடிவு செய்துள்ளோம். அவர் இல்லாமல் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று தெரியவில்லை” என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.