சென்னை தலைமை செயலகத்தில் அரசுத்துறை வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இருந்த தனியார் காரின் முன்புறப் பகுதியில் திடீரென தீப் பற்றி எரிந்தது.
சென்னை தலைமைச் செயலகத்தில் அரசுத் துறை வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இருந்த தனியார் காரின் முன்பகுதியில் தீடீரென தீ பற்றி அதிகளவில் புகை வெளியேறியது. இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.
தலைமைச் செயலகம் அமைந்திருக்கக் கூடிய சென் ஜார்ஜ் கோட்டையின் பின்பகுதியில் அரசுத் துறை, பணியாளர் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இருந்த தனியார் கார் ஒன்றில் திடீரென தீப்பிடித்து புகை வெளியேறியது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக தண்ணிரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். விபத்தில் காரின் முன்பக்கம் எரிந்து சேதமடைந்தது. இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
இந்த வாகன நிறுத்துமிடம் ராணுவத்துக்குச் சொந்தமான இடம் என்றும், தலைமைச் செயலக அரசுத் துறை, பணியாளர் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும் கூறப் படுகிறது. தனிநபர்களின் வாகன நிறுத்துமிடம், தலைமைச் செயலகத்துக்கு வெளியே எதிர்ப்புறத்தில் உள்ளது.
இந்நிலையில், கார் பாஸ் வாங்கி, காரில் ஒட்டப்பட்டு, இந்த இடத்தில் தனியார் கார் நிறுத்தப் பட்டு அதில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், வருங்காலங்களில் பாதுகாப்பு கருதி, தனிநபர்களின் கார்களை இங்கே அனுமதிக்க கண்டிப்பாக அதிகாரிகள் மறுக்கக் கூடும் என்று கூறப்பட்டது.