ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை தொடர்பாக தமிழக அரசு கூறும் கருத்துகள் தவறானவை தமிழகத்துக்கு மத்திய அரசு ஓரவஞ்சனை செய்யவில்லை.
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே சுமுக உறவில்லை என தமிழகத்தில் பொய் பிரசாரம் செய்யப்படுகிறது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் நடந்த துக்ளக் 52 வது ஆண்டு நிறைவு விழாவில் பேசினார்.


‘துக்ளக்’ இதழின் 52-வது ஆண்டு நிறைவு விழா சென்னை மியூசிக் அகாடமியில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. நிகழ்ச்சிக்கு துக்ளக் இதழின் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி தலைமை வகித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது,
மத்திய அரசு தமிழகத்துக்கு போதிய நிதி உதவி வழங்கவில்லை என்று தமிழக அரசு அண்மைக்காலமாக குற்றம்சாட்டி வருகிறது. குறிப்பாக சரக்கு மற்றும் சேவை வரி ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை தொடர்பாக தமிழக அரசு கூறும் கருத்துகள் தவறானவை என்று ஏற்கனவே பா.ஜ.க. தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு ஓரவஞ்சனை செய்யவில்லை.
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே சுமுக உறவு இல்லை என்றும், பாகுபாடு பார்க்கிறார்கள் என்றும் பொய் பிரசாரம் செய்கிறார்கள். குறிப்பாக உயர்ந்த குலத்தில் பிறந்தவர்களுக்கான கட்சி, வடமாநில கட்சி பா.ஜ.க என்ற தவறான கருத்து தமிழகத்தில் பரப்பப்படுகின்றது. அதனையும் மீறி கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் பெரிய மாறுதல்கள் நாட்டில் நடந்துள்ளது. முன்னேற்றம் அடைந்த நாடுகளை விட இந்தியா பல மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக கொரோனா தொற்று பாதிப்பிற்கு பிறகும் வேகமாக வளரும் நாடு இந்தியா என சர்வதேச நிதி முகமை தெரிவிக்கிறது.
கொரோனா தடுப்பூசி மீது அவநம்பிக்கையும், தயக்கத்தையும் மக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஏற்படுத்தியது. காங்கிரஸ் தலைமை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை போட்டுக்கொண்டார்களா? அல்லது வெளிநாட்டு தடுப்பூசியை போட்டுக்கொண்டார்களா? என்பதை இதுவரை வெளிப்படுத்தவில்லை. இந்த நாட்டுக்கு எதிராக போராடும் சக்திகளுடன் காங்கிரஸ் கைகோர்த்து உள்ளது.
இந்தி திணிக்கப்படவில்லை. இந்தி கற்றுக்கொண்டு பேசினால் தவறில்லை. ஆங்கிலம் பேசும் அளவிற்கு இந்தி பேச முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது. திராவிட இயக்கம் இந்தி கற்றுக்கொள்ளும் தனிமனித உரிமையை பறித்தது. அதிக வரி செலுத்தும் தமிழகத்துக்கு அதிக திட்டங்களை கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கருத்து தெரிவிக்கின்றனர். பிரிவினைவாத மனநிலை கொண்டதால்தான் இப்படியான கருத்துகள் முன்வைக்கப்படுகிறது.
சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜி.எஸ்.டி.) இருந்து பிப்ரவரி, மார்ச் ஆகிய 2 மாதங்களுக்கான மத்திய அரசின் பங்கு தொகை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வழங்க வேண்டியுள்ளது. குறிப்பாக ரூ.7.35 லட்சம் கோடியில் ரூ.78 ஆயிரம் கோடி மட்டுமே பாக்கி உள்ளது. அதுவும் விரைவில் வழங்கப்படும். தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைய வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து
பேசிய ஆசிரியர் குருமூர்த்தி இந்தி திணிப்பு, திராவிட மாடல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கடுமையாக விமர்சித்தார்.
மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பதே தேச விரோதம் தான். சட்டம், நீதி போன்ற அம்சங்கள் திமுகவிற்கு இல்லை. என்றைக்குமே ஆன்மீகம் தான் திமுகவுக்கு முதல் எதிரி. திமுக ஆட்சிக் காலத்தில் நாத்திகர் வேடத்தில் ஆத்திகர்கள் வருகிறார்கள். அப்படி வருகிறவர்களால் தான் ஆபத்து அதிகம்.
தற்போது பாஜக தமிழக தலைவராக இருக்கும் அண்ணாமலையால் பல மாநில பிரச்சனைகள் தீர்கிறது. அவர் என்றாவது ஒரு நாள் நிச்சம் தமிழகத்தின் தலைவர் ஆவார். 30 ஆண்டுகள் சிறையில் இருந்தார்கள் என்பதற்காக ஏழு பேரை விடுதலை செய்வது தவறான நடவடிக்கை. அதேபோல பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணம் என்று தவறாகக் கூறி வருகிறார்கள். ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல் கொண்டு வரப்பட வேண்டும்.கருணாநிதி இயற்கையான தலைவர். தமிழக அரசியலை ஒரேயடியாகத் திருப்பிப் போட்டவர். அந்தளவுக்கு விஷயமறிந்தவர்.
கருணாநிதி மட்டும் இந்தி படித்திருந்தால் இந்தியா ஆபத்தில் சிக்கியிருக்கும். எம்.ஜி.ஆர் காரணமாகவே தமிழகம் பிழைத்தது. அதிமுக 33 ஆண்டுகள் ஆட்சி செய்யாமல் போயிருந்தால் தமிழகமே காடாக மாறியிருக்கும். அனைவரும் இந்தி படிக்க வேண்டும் என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை. இந்தி அலுவல் மொழி குறித்த அமித் ஷா கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. அவர் இந்தி கட்டாயம் என்றோ, இந்தி திணிப்பதை ஆதரித்தோ எதுவும் பேசவில்லை.
திமுக அதிமுக என இரு கட்சிகளும் லஞ்சத்தில் பங்கு போட்டுக்கொள்கிறார்கள். இருவரில் யார் ஆட்சியில் இருந்தாலும் இதே நிலை தான் தொடரும். திமுகவில் ஒவ்வொரு தலைமுறையும் கருணாநிதியாக முடியாது. காங்கிரஸில் ஒவ்வொரு தலைமுறையும் நேருவாக முடியாது. காங்கிரஸ் கட்சி மோடி எதிர்ப்பு என்ற நிலையை விட்டுவிட்டு வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பத்திரிக்கையாளர்கள் பிரதமர் மோடியை எதிர்க்கிறார்கள். ஸ்டாலினைப் பற்றி எழுதப் பயப்படுகிறார்கள். உண்மையை மறைக்கவே பத்திரிக்கைகள் போராடுகிறார்கள்.பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே பயங்கரவாதத்தைத் தடுத்து அழிக்க முடியும். முத்தலாக் சட்டத்தை மோடி அரசு கொண்டு வந்தது. இதைச் செய்ய வேறு எந்த அரசியல் கட்சிக்கும் முதுகெலும்பு இல்லை. இதன் காரணமாகவே முஸ்லீம் பெண்கள் மோடிக்கு வாக்களித்தனர். அதேபோல இந்தி விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை சிறப்பானதாக இல்லை. தமிழ்நாட்டில் இந்தி திணிப்பை எதிர்ப்போம் என அண்ணாமலை பேசியது பிடிக்கவில்லை
குடி பழக்கம் இல்லாத தலைமுறையைக் குடிக்கு அடிமையாக்கியது திராவிட மாடல் ஆட்சியாளர்கள். திராவிட மாடல் பல பரிமாணங்களைக் கொண்டுள்ளது. ஈவேரா தமிழ், தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என்று சொன்னது திராவிட மாடலின் முதல் பரிமாணம். ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் கலாச்சாரத்தைத் தொடங்கியதும் திராவிட மாடலின் சாதனை. திராவிட மாடல் என்பதே முதல்வரைப் புகழ்ந்து பாடும் பஜனையாக மாறிவிட்டது’ என்று அவர் பேசினார்.விழாவில் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.