“உண்மையை மறைக்கப் பார்க்கிறாரா பால்வள ஆணையர்..?”
கடந்த அதிமுக ஆட்சியில் காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர், நாமக்கல், திருப்பூர், திருச்சி, தேனி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்ட ஆவின் ஒன்றியங்களில் சுமார் 236பேரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அவ்வாறு முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டு 21மாதங்களுக்கு மேல் ஆன நிலையில் அவர்கள் அனைவரையும் இதுவரை பணி நீக்கமோ, பணியிடை நீக்கமோ செய்யாமல் அனைவருக்கும் சம்பளம் உள்ளிட்ட அனைத்து படிகளையும் வழங்கி விட்டு தற்போது அவர்களுக்கு பணி வரன்முறை, தகுதி காண் பருவம் தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்கக் கூடாது என பால்வளத்துறை ஆணையர் திரு. சுப்பையன் ஐஏஎஸ் அவர்கள் அறிவித்திருப்பது வெறும் கண்துடைப்பு நாடகமே.
ஏனெனில் மேற்கண்ட ஆவின் ஒன்றியங்களில் முறைகேடாக பணியில் சேர்ந்த அனைவரையும் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதமே பணி நீக்கம் செய்து விட்டதாகவும், இனிமேல் TNPSC மூலம் தான் ஆவினுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என பால்வளத்துறை அமைச்சர் திரு நாசர் அவர்கள் ஊடகங்கள் முன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அவ்வாறு கடந்த ஆட்சியில் முறைகேடாக பணியில் சேர்ந்த எவரும் பணி நீக்கமோ, பணியிடை நீக்கமோ செய்யப்படாமல் அதில் பலரும் இந்த ஆட்சியாளர்களின் ஆசியோடும், ஆதரவோடும் இதுவரை சம்பள உயர்வோடு பணி நிரந்தரமும் செய்யப்பட்டு விட்டதாக எழுகின்ற புகாரை மறைக்கவே தற்போது மேற்கண்ட அறிக்கையை பால்வள ஆணையர் வெளியிட்டிருப்பதாக விபரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே தமிழகம் முழுவதும் உள்ள 27மாவட்ட ஆவின் ஒன்றியங்களில் இருந்து நாளொரு ஊழலும், பொழுதொரு முறைகேடுகளும் வெளிச்சத்திற்கு வந்து கொண்டே இருக்கும் நிலையில் தமிழக அரசு அமைதி காக்காமல் உரிய நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், அத்துடன் லஞ்சம் கொடுத்து முறைகேடாக பணியில் சேர்ந்த அனைவரையும் உடனடியாக பணி நீக்கம் செய்து அவர்கள் மீதும், லஞ்சம் பெற்றுக் கொண்டு பணியில் அமர்த்திய அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் ன சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
- சு.ஆ.பொன்னுசாமி
(நிறுவனத் தலைவர், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.)