
ஏழு மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற தாமிரபரணி கேள்வி பதில் நிகழ்ச்சி
— கவிஞர் மீ. விஸ்வநாதன்
கலைமகள் மாத இதழும், தேஜஸ் பவுண்டேஷனும் இணைந்து பாரத தேசத்தின் எழுபத்தி ஐந்தாவது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தை ஒட்டி எழுபத்தி ஐந்து கேள்விகளுக்கு ஒரே நாளில் பதிலளிக்கும் வகையில் “தாமிரபரணி கேள்வி பதில் தொடர் நிகழ்ச்சி”யை சென்னை, மயிலாப்பூரில் இருக்கும் சம்ஸ்கிருத கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள “ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மகாஸ்வாமிகள்” அரங்கத்தில் (04.12.2022) ஞாயிறு காலை பத்து மணியில் இருந்து இரவு ஏழரை மணிவரை நடத்தினர்.
தாமிபரபரணி என்பது கீழாம்பூர் அவர்களின் புனைப்பெயர்களில் ஒன்று! 75 ஆவது சுதந்திரத் தினத்தை ஒட்டி 75 கேள்விகள் இந்த நிகழ்வில் இடம் பெற்றன. இப்படி ஒரு யோசனையை கலைமகளின் பதிப்பாளர் பி டி ராஜன் தெரிவித்து அதற்கு உருவகம் கொடுத்து மிகச் சிறப்பான முறையில் நடத்திக் காட்டி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்..

கலைமகள் அன்பர்கள் நண்பர்கள் மூலமாகப் பெறப்பட்ட கேள்விகளிலிருந்து 75 கேள்விகளைத் தேர்வு செய்து அதற்கு சரியான உருவாக்கம் கொடுத்து இந்திரன் நீலன் சுரேஷ் அவர்கள் சிறப்பான முறையில் கேள்விக் கணைகளைத் தொடுத்தார்.
தனக்கே உரிய பாணியில் சின்ன சின்னக் கதைகளையும் புதிய தகவல்களையும் இணைத்து கேள்விகளுக்குப் பதில் வழங்கி சபையோரை ஆச்சரியப்படுத்தினார் கலைமகளின் ஆசிரியர் கீழாம்பூர்.
கீழாம்பூர் அவர்களின் ஞாபக சக்தி பாராட்டத்தக்கது. குறிப்புகள் வைத்திருந்தாலும் அதனை கொஞ்சம் கூடப் பார்க்காமல் மிகத் தெளிவாக சரியான உச்சரிப்புடன் கேள்விக்கானப் பதில்கள் தரப்பட்டன என்கிறார் Additional Solicitor gGeneral Sankar Narayanan அவர்கள். குறைந்தது ஆயிரம் புத்தகங்களையாவது படித்திருந்தால்தான் இது போன்று பதில்களைத் தர முடியும் என்பதும் சங்கர் நாராயணன் அவர்களுடைய கணிப்பாகும்!
நிகழ்ச்சியில் எழுத்தாளர் இந்திரநீலன் சுரேஷ் கேள்விகளைத் தொடுக்க கலைமகள் ஆசிரியர் கலைமாமணி கீழாம்பூர் எஸ். சங்கரசுபிரமனியன் ஒவ்வொரு கேள்விக்கும் ஆழமான கருத்துள்ள பதில்களைத் தந்தது அரங்கம் நிறைந்த சபையோருக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல் நிறைவு வரை மைலாப்பூர் இராமகிருஷ்ண மடத்தின் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பேச்சாளர்களின் உரையைக் கூர்ந்து கேட்டு குறிப்பும் எடுத்துக் கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது.
சென்னையில் உள்ள பல கல்லூரிகளில் இருந்து மாணவர்களும் மாணவிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். திரு தணிகைச் செல்வன் அவர்களுடைய மாணவர்களும் திரு சாய் கிருஷ்ணா அவர்களுடைய மாணவர்களும் மற்றும் சிவ ரிஷி ஸ்ரீ சத்யானந்தா யோகா பீடம் ஜெய கோபால் அவர்களுடைய யோகா மாணவ மாணவிகளும் இந்நிகழ்வில் அவ்வப்போது கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

காலை பத்து மணிக்கு திருமதி ஸ்ரீவித்யா கணேசன் இறைவணக்கத்துடன் துவங்கிய நிகழ்ச்சிக்கு நீதியரசர் திரு. வள்ளிநாயகம் தலைமை ஏற்று,” ஏன், எதற்கு, எப்படி” என்று கேள்வி கேட்கும் பழக்கத்தைக் கொண்டால் வாழ்வில் வெற்றி பெறலாம் என்று மாணவர்களை நோக்கிச் சொன்னபோது மாணவர்கள் உற்சாகமாகக் கரங்களைத் தட்டி வரவேற்றனர்.
ஆடிட்டர் ஆர். சிவகுமார்,” கலைமகள் இதழின் சிறப்புகளைச் சொல்லி மாணவர்களுக்கு நமது இலக்கிய, கலாச்சார விபரங்கள் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் நூறு பள்ளிகளின் நூலகங்களுக்கு ஆண்டுச் சந்தா செலுத்திவருவதைப் பெருமையோடும், பணிவோடும் தெரிவித்து இன்று நடைபெறப் போகும் தாமிரபரணி கேள்வி பதில்களை ஒரு நூலாக்கி இன்னும் ஆறு மாதத்திற்குள் நூலாகக் கொண்டு வரவேண்டும் என்றும், அதற்கான செலவைத் தாம் ஏற்ப்பதாகவும் சொல்லி சபையோரின் கரவொலியைப் பெற்றார்.

தமக்கும், கலைமகள் இதழுக்கும் இருக்கும் உறவை தொழிலதிபர் ஆர்.பி. கிருஷ்ணமாச்சாரி பகிர்ந்து கொள்ள, கிருஷ்ணமாச்சாரி அவர்களின் சமூகத் தொண்டினை, குறிப்பாக மலைவாழ் மக்களுக்குச் செய்து வருகின்ற உதவிகளை தமது உரையின் போது கீழாம்பூர் தெரிவித்து, பாராட்டினார்.
தமிழகத்தில் உள்ள பல குக் கிராமங்களில் குளியலறை கழிவறை இல்லாத இடங்களில் அவர்களுக்கு அதனை கட்டிக் கொடுத்த பெருமை கிருஷ்ணமாச்சாரி அவர்களுக்கு உண்டு. கல்விக் கண்ணைத் திறக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் ஓர் ஆசிரியர் பள்ளியை இவர் திறம்பட நடத்தி வருகிறார் என்பதும் மேலாதிக்க விவரமாகும்.
முக்கிய நிகழ்ச்சியான “தாமிரபரணி கேள்வி பதில்” முதல் சுற்று சரியாகக் காலை பதினோரு மணி ஒரு நிமிடத்தில் தொடங்கியது. எழுத்தாளர் இந்திரநீலன் சுரேஷ் கேட்ட கேள்விகளுக்கு நிதானமாகவும், தெளிவாகவும் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுபிரமனியன் பதில்யளித்தார். அதன் சாரத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

கேள்வி: விநாயகர் அகவலைப் பற்றிய தகவலைத் தர முடியுமா?
பதில்: விநாயகர் அகவலை எழுதியவர் ஔவையார். ஔவை என்றால் பெண், தாய், தவப்பெண், சிறந்தவள், அறிவுமிக்கவள் என்று பல பொருகள் உண்டு. விநாயகர் அகவல் எளிமைபோல் இருக்கும் ஆனால் அதில் யோக நிலைகளின் சூட்சமங்கள் நிறைய இருக்கிறது. ஔவையார் ஒரு விநாயக பக்தை. அவளுக்கு திருக்கைலாயம் செல்ல விருப்பம். அதை விநாயகரிடம் தெரிவிக்கிறாள். சுந்திரமூர்த்தி சுவாமிகள் வெள்ளை யானையிலும், (அதாவது இந்திரனின் யானை) சேரமான் நாயனார் சேர மன்னர் வெள்ளைக் குதிரையிலும் கயிலாயம் நோக்கிப் புறப்பட்டு விட்டார்களே, விநாயகா உன்னைத்தான் நம்பிக் கொண்டிருக்கிறேன், எனக்கு நீயே துணை என்று இறுக்கப் பிடித்தாள். அடுத்த வினாடி தனது தும்பிக்கையால் ஒளவையைத் தூக்கி சிவபெருமான் உறையும் கயிலாயத்தில் சேர்த்து விட்டார். அப்படி ஒரு நம்பிக்கை இருக்க வேண்டும். மனஉறுதி வேண்டும். இருந்தால் வெற்றி நிச்சயம் என்றார்.
உபரித் தகவலாக, கடையத்தில் ஸ்ரீ மான் கிருஷ்ணமூர்த்தி என்றொரு டாக்டர் இருந்தார். கீழாபூரின் நெருங்கிய நண்பராம். சித்தர் பாடல் ஒன்றில் ஓலைச்சுவடியில் வரும் காலத்தில் இந்த உலகை எலிதான் ஆளப்போகிறதென்ற குறிப்பிருப்பதாகவும் டாக்டர் இவரிடம் சொன்னாராம். ஒருவேளை இன்று அனைவரும் கணினியைக் கையாள்வதற்கு “மௌஸ்” (mouse) உபயோகப் படுகிறதே அதுதானோ என்னமோ? என்று தனது ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி பேராசிரியர் லக்ஷ்மிநாராயணன் வேடிக்கையாகச் சொன்னதையும் அது இன்று நிஜமாகி இருப்பதையும் சுவைபடச் சொன்னார் கீழாம்பூர்.

கேள்வி: முருகனை வழிபடுவோர், வேல் வழிபாடு செய்யலாமா?
பதில்: தாராளமாகச் செய்யலாம். ஆனால் வீட்டில் வைத்து பூஜை செய்வதற்கு வேலின் உயரம் ஒரு அடிக்குள்ளாகத்தான் இருக்க வேண்டும். அதற்கு மேல் இருந்தால் அதை வைத்து வழிபட கோவிலே சிறந்த இடம் என்று திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொன்னதாகச் சொன்னார். முருகன் கையில் இருந்த வேல் சூரனை அழித்தாலும் சேவலும், மயிலுமாக இரண்டு உயிர்களாக்கி இறைவன் திருவடிக்கே தந்தது.
உபரித் தகவல்: போர்க்களத்தில் சூரனோடு போரிடும் முருகனுக்குப் பெயர் ஜெயந்தி நாதர். வெற்றியின் நாயகர். இன்றும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சியை எடுத்துரைத்தார். சூரசம்ஹாரம் முடிந்து ஜெயந்தி நாதரைக் கோவிலுக்குள் அழைத்து வரும் போது அவருக்கு முன்பாக ஒரு பெரிய நிலைக் கண்ணாடியை வைத்திருப்பார்கள். அந்தக் கண்ணாடியில் தோன்றும் பிம்பத்திற்கு அபிஷேகம், ஆராதனை செய்வார்கள். காரணம் போர் முடித்துத் திரும்பும் பொழுது கோபம் ஆறாமல் உடல் வெப்பத்தால் தகிக்கும். அப்போது தன் உருவத்தைக் கண்ணாடியில் பார்க்கும் பொழுது உடல் வெப்பம் கொஞ்சம் தணியும். மெல்ல மெல்ல மனம் குளிரும். இந்த மனோதத்துவத்தைத்தான் மரபு வழியாக, இப்படி ஒரு திருவிழா நிகழ்ச்சியாக ஆன்மிகப் பெரியோர்கள் செய்து வருகிறார்கள். அடுத்த முறை கந்தசஷ்டித் திருவிழாவின் பொழுது இந்த நிகழ்ச்சியையும் கண்டு களியுங்கள். முக்கியமாக மாணவர்கள், இளைஞர்கள் இது போன்ற நம் கலாச்சார நிகழ்வுகளின் உட்கருத்துகளைத் தேடித் துருவி அறிந்து கொள்ளல் அவசியம் என்றார்.

கேள்வி: கலைமகள் பத்திரிக்கையின் வரலாறு என்ன?
பதில்: முன்பெல்லாம் இலக்கிய வாதிகளும், தேச பக்தர்களும் ஏதாவதொரு நண்பரின் வீட்டில் அடிக்கடி சந்தித்து உரையாடி வருவது வழக்கம். எழுத்தாளர் பெ. நா. அப்புசாமி ஐயர் இல்லத்தில் 1932 ஆம் வருடத்தில் ஒருநாள் உ.வே.சா., Madras Law Journal பத்திரிகை அதிபர் நாயணசாமி ஐயர், சரித்திர ஆராய்ச்சியாளர் K.A. நீலகண்ட சாஸ்த்ரி, உ.வே.சா, தமிழறிஞர் வையாபுரிப் பிள்ளை, கி.வா.ஜ. ஆகியோர் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தனர். தமிழில் ஒரு பத்திரிக்கையை நாம் கொண்டு வரலாம் என்ற போது, “ என்னிடம் அச்சுக் கூடம் இருக்கிறது. பத்திரிக்கையைத் தொடங்கலாம். அதற்கு என்ன பெயர் வைக்கலாம்? யார் அதன் ஆரிரியர் ? என்ற கேள்வி நாராயணசாமி ஐயரிடம் இருந்து பிறந்தது.
“கலைமகள்” என்ற பெயரை உ.வே. சாமிநாதையர் சொல்ல அதை அனைவரும் ஏற்றனர். பிறகு அதற்கொரு ஆசிரியர் குழுவை அமைத்தனர். பெ. நா.அப்புசாமி ஐயர் விஞானக் கட்டுரைகளும், நீலகண்ட சாஸ்திரி சரித்திரக் கட்டுரைகளையும், வையாபுரிப்பிள்ளை தமிழ் இலக்கிய விஷயங்களை எழுதவும், இவைகளைச் சரிபார்த்து, தாமும் கட்டுரைகள் எழுதவும் உ.வே.சா.வைக் கேட்டுக் கொண்டனர். ஐயருக்கு உதவியாக கி.வா.ஜ இருந்தார். 1932ல் தொடங்கப் பட்ட கலைமகளுக்கு 1938 ஆம் ஆண்டு வரை ஆசிரியராக இருந்தவர் உ.வே.சா. 1938 முதல் தன் இறுதி காலம் 1988 ஆம் ஆண்டு வரை கி.வா.ஜ. ஆசிரியராக இருந்தார். மாதப் பத்திரிக்கை உலகில் ஐம்பதாண்டு காலம் ஆசிரியராக இருந்த பெருமைக்குரிய பெருமகனார் கி.வ.ஜகந்நாதன்.

கேள்வி: தேச பக்திக்கான பத்திரிகைகள் பற்றிச் சொல்லுங்களேன்?
பதில்: ஆங்கிலத்தில் இந்துப் பத்திரிக்கையை நடத்தி வந்த G. சுப்ரமணிய ஐயர் 1891ஆம் ஆண்டில் சுதேசமித்திரன் என்ற பெயரில் வாரப்பத்திரிக்கையைத் தொடங்கினார். பிறகு அதை தினசரியாகக் கொண்டு வந்தார். ஒரு முறை மதுரைக்குச் சென்றிருந்த ஐயர் அங்கே சி.சுப்ரமணிய பாரதியார் பள்ளியில் ஆசிரியர் பாணியில் இருப்பதைக் கண்டு, அவரைத் தன்னுடன் சென்னைக்கு அழைத்து வந்தார் என்பதும் வரலாறு. ,1934 செப்டம்பர் 11 பாரதியாரின் நினைவு நாளன்று தினமணி டி.எஸ். சொக்கலிங்கத்தை ஆசிரியராகக் கொண்டு வெளியானது. 1934ல் மணிக்கொடி. அதில் எழுதியவர்கள் தேசபக்தர்களாகவும் இருந்தார்கள்.

கேள்வி: உங்களுக்குப் பிடித்த விளம்பர வாசகங்களைச் சொல்ல முடியுமா?
பதில்: பாரதத்தின் ஜனாதிபதியாக பதவியை ஏற்றுக் கொண்ட அப்துல்கலாம் சென்னைக்கு வருகிறார். அவரை வரவேற்று வைக்கப்பட்டிருந்த விளம்பரங்களின் ஒன்று இன்றும் என் நினைவில் இருக்கிறது. அது: “welcoming our Nuclear Head…NEW CLEAR HEAD”.
பலதரப்பட்ட செய்திகளைத் தருகிற கேள்வியும் பதிலும் மிக்க பயனுள்ளது.
சோழர் காலத்திற்கு முன்பாகவே பாண்டிய மன்னர்கள் காலத்தில் ஊர் சபையினரை தேர்வு செய்யும் முறையையும் திருநெல்வேலி மாவட்டம் மானூர் என்ற ஊரில் இருக்கும் ஸ்ரீ அம்பலவாண சுவாமி கோவில் கல்வெட்டுகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. எட்டாம் நூற்றாண்டில் கட்டப் பட்டது இக்கோவில். கட்டிய மன்னன் பெயர் சீவமாற பாண்டியன் என்பது தலவரலாறு. ஊர் சபையையும், அதைத் தேர்வு செய்யும் முறையையும் இவ்வூர் கல்வெட்டு மூலம் அறிந்து கொள்கிறோம். ஒரு முறை தேர்வு பெற்றவர்கள் மீண்டும் வரக்கூடாது. அவரது குடும்பத்தார்களும் வரக்கூடாது. சபையோர்கள் நன்கு படித்தவர்களாக இருக்க வேண்டும். வேதம் கற்றோழுகுபவராக இருக்க வேண்டும் போன்ற கட்டுப் பாடுகளையும் அறிய முடிகிறது. உத்திரமேரூர் கல்வெட்டுக்கு முந்தியது பாண்டியனின் மானூர் கல்வெட்டுக்கள்.
தேசபக்தியும் தெய்வபக்தியும் இருகண்களாகக் கொண்டு வாழ்ந்த முத்துராமலிங்கத் தேவர் குறித்த அரிய செய்திகள், மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் காசி ரகஸ்ய நூல் , பாரதியார் காசியில் வாழ்ந்ததும், கற்றதும், இன்றும் காசி விஸ்வநாதர் கோவிலில் நடைபெறும் இரவு பூஜைக் கட்டளைக் காரர்கள் காரைக்குடி நகரத்தார்கள் என்றும், காசிக்கும், தமிழ் நாட்டில் உள்ள இராமேஸ்வரத்திற்கும் இருக்கின்ற ஆன்மீக, கலாசார உறவுகளின் ஆழம் குறித்தும் “காசி தமிழ் சங்கமம்” நிகழ்ச்சியின் மூலம் ஒன்று பட்ட பாரத தேசத்தின் பெருமைகளை அறிய முடிகிறது என்றார்.
காலடியில் பிறந்த சங்கரர் சன்யாசம் கொள்ளும் முன்பே பிரும்மச்சாரியாக ஒரு ஏழையின் இல்லத்தில் நெல்லிக்கனியை பிக்ஷையாக ஏற்று அவர்களின் ஏழ்மையை நீக்க மகாலக்ஷ்மியிடம் வேண்டிக்கொண்டு தங்க நெல்லிக்கனி கொடுத்தது வரலாறு. தனக்குக் கீழே இருப்போரை எல்லாம் மேலே கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. அதைப் பொருளின் மூலமாகவும், அறிவின் மூலமாகவும் கொடுத்தார் சங்கரர். தேசத்தில் சமய ஒற்றுமைக்கு வழிகாட்டியவர் சங்கரர் என்றும் தனது முப்பத்தி ரெண்டாவது வயதில் கேதார்நாத் பனிச்சிகரத்தில் ஒன்றானார் என்ற வரலாற்றுச் சான்றாக சமீபத்தில் பாரதப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்கள் கேதார்நாத் மலை உச்சியில் ஸ்ரீ சங்கரரின் கருங்கற்சிலையை அமைத்ததையும் எழுபத்தைந்தாவது கேள்விக்குப் பதிலாகப் பதிவு செய்தார்.

சரியாக மாலை ஆறு பதினைந்து மணிக்கு நிறைவு விழா தொடங்கியது. நிகழ்ச்சியில் பங்குகொள்ள வந்திருக்கும் முக்கிய விருந்தினர்களை மிக நேர்த்தியாக, அவரவர்களின் தகுதியையும், பெருமையையும் அளவோடு கூறி வரவேற்றார் எழுத்தாளர் டாக்டர் ஜெ.பாஸ்கர். கீழாம்பூர் சொல்லும் ஒவ்வொரு செய்திகளுக்கும் அர்த்தம் உண்டு. பல ஆய்வுகள் செய்து இதனை அவர் வெளிக் கொணர்கிறார். பல விஷயங்களை நான் குறிப்பெடுப்பதுண்டு என்றார் டாக்டர் பாஸ்கர்..
“இங்கு மாணவர்கள் இருக்கிறீர்கள். மாணவர்களுக்கு தேசபக்தி, தெய்வபக்தியுடன் நல்லொழுக்கமும் மிகவும் அவசியம். நம்தேசதில் பல மதங்கள், ஜாதிகள் இருந்தாலும் தேசம் ஒன்றுதான் என்ற எண்ணத்தை ஆழமாகக் கொண்டு வாழ வேண்டும் என்றார் தலைமையுரை ஆற்றிய மத்திய அரசின் சொலிசிட்டர் ஜென்ரல் எஸ். சங்கரநாராயணன்.

கேள்வி பதில் நிகழ்ச்சியின் நிறைவுப் பகுதியைத்தான் கேட்க அவகாசம் கிடைத்ததாகவும் மிகவும் ரசித்ததாகவும் கூறிய சிவாலயம் மோகன் தெய்வபக்தி, தேசபக்தியோடு எதிலும் ஒரு ஒழுங்கு வேண்டும் என்றும் அதை சுவாமி சிபவானந்தருக்குச் சேவை(ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம்) செய்து வந்த காலத்தில் உணர்ந்தேன் என்றார்.
“அர்ஜுனனின் சந்தேகம் கேள்வி கேட்டது. கண்ணனின் ஞானம் பதில் தந்தது. அதுபோலவே நாம் ஒவ்வொருவரும் கேள்விகள் கேட்க வேண்டும், துருவித் துருவிக் கேள்விகள் கேட்க வேண்டும். முடிவில் பதில் நமக்குள்ளேயே கிடைக்கும்.” என்ற இந்திய பௌண்டேஷன் சுதர்ஷன் ராமபத்ரனின் உரை மாணவர்களை மிகவும் ஈர்த்தது.
எழுமணிநேரம் இடைவெளி இல்லாமல் கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன், இந்திரநீலன் சுரேஷ் இருவரது “தாமிரபரணி கேள்வி பதில் தொடர் நிகழ்ச்சி”ப் பணியை வாழ்த்தி சென்னை ஸ்ரீ இராமகிருஷ்ண மடத்தின் சுவாமி ஞானசொரூபானந்தா ஆசி தந்தார்.
சிறப்பு விருந்தினராக வந்திருந்து கேட்டு வாழ்த்திய பெருமக்கள் கலைமாமணி காத்தாடி ராமமூர்த்தி, எழுத்தாளர் சிவசங்கரி, சக்தி குழுமம் சி. ரவீந்திரன்,உரத்த சிந்தனை தென்காசி கணேசன், ஆர்.டி. நமச்சிவாயம், , டாக்டர் சேது சேஷன், சிவரிஷி ஜெயகோபால் இஸ்ரோ விஞ்ஞானி ஜி கிருஷ்ணன். அனைவரையும் விழாக் குழுவினர் கௌரவித்தனர்.

முழுநாள் நிகழ்ச்சியிலும் தனக்கே உரிய உற்சாகத்தோடு கவிநயம் சொட்டச் சொட்ட இணைப்புரை வழங்கிய கலைமாமணி, இணைப்புரைத் திலகம், நாடகாசிரியர் சந்திரமோகனுக்கு ஒரு அன்பான பாராட்டு. கச்சிதமாக, கலகலப்பாக நன்றி கூறினார் ரமேஷ்.
“வாழியச் செந்தமிழ் வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திருநாடு
வந்தே மாதரம் வந்தே மாதரம்”
பாரதியாரின் நாட்டு வாழ்த்துப் பாடலுடன் விழா நிறைவடைந்தது.
அறிந்து கொள்ள வேண்டிய கேள்விகளைத் தேர்வு செய்து அதற்கு பதில்யாளிக்க ஏழு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு துளியும் சோர்வு கொள்ளாமல் உற்சாகமாக இருந்த எழுத்தாளர் இந்திரநீலன் சுரேஷ், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியம் இருவரையும் உளமாரப் பாராட்டுகிறேன்.
முழுநாள் நிகழ்ச்சிக்கும் பள்ளி மாணவர்கள், இலக்கியவாதிகள், தேசியவாதிகள், நாடகாசிரியர்கள், கலைஞர்கள் என்று அரங்கம் நிறைந்திருந்தது. அனைவருக்கும் செவிக்குணவோடு காலையின் சிற்றுண்டி, மதியம் சுவையான உணவு, இரவில் ஜாங்கிரி, இடியாப்பம், பிரிஞ்சி சாதம், சப்பாத்தி, குருமா, தயிர்சாதம் என்று வயிற்றுக்கும் கலைமகள் உணவளித்தாள்.
இரவு உணவு உண்ணும் போது மாணவர்களுடன் உரையாடினேன். எத்தனை உற்சாகம் அவர்களுக்கு.
“இன்றைய கேள்வி பதில் நிகழ்ச்சியில் இப்போதும் உங்கள் மனத்தில் நிற்கும் கருத்து எது?” என்றேன்.
“ஒழுக்கம்தான் முதல். படிப்பு அதன் பிறகுதான்”
“கேள்விகள் கேட்கத் தயங்காதே கேட்டுக் கேட்டுத் தெளிவு அடையும் வரைக் கேளு”
“தேசத்தை மறக்காதே”
இவைகள் என்றனர். போதுமே… இதைத்தானே எதிர்பார்த்தீர்கள் அன்பு நண்பர்களே… பலே.. பலே..

இரவு உணவு முடிந்ததும் கூடியிருந்த மாணவர்களிடம் கீழாம்பூர் ஒரு கேள்வியைக் கேட்டார் உங்களுக்கு இந்த கேள்வி பதில் நிகழ்ச்சி பிடித்திருக்கிறதா? பிடிச்சிருக்கு சார் என்று சொன்ன மாணவர்கள் தற்கொலை என்கின்ற எண்ணமே இனி யாருக்கும் ஏற்படக்கூடாது அதற்கு நீங்கள் சொன்ன பதில் எங்கள் மனதைக் கவர்ந்தது… அது மட்டுமல்ல இந்திய தேசத்தின் மேன்மையை சுதந்திரப் போராட்ட வீரர்களின் அறிய தொண்டை நீங்கள் சொன்ன போதெல்லாம் நாங்கள் கண்கலங்கினோம் என்றார்கள் மாணவர்கள். இந்த நிகழ்ச்சியின் உண்மையான பலன் அதுதானே. தற்காகத்தானே அருமை நண்பர் பி டி டி ராஜன் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.
நேற்று படித்ததே என்று நமக்கு நினைவில் இருப்பதில்லை… ஆனால் என்றோ கேட்ட விஷயங்களை என்றோ படித்த விஷயங்களை மனசில் பதியம் போட்டுக் கொண்டு அந்த விஷயங்களை சரியான நேரத்தில் சொல்லுகிற ஆற்றல் கீழாம்பூர் ஒருவருக்குத்தான் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல என்கிறார் பிரபல நாடக ஆசிரியர் நானு அவர்கள்.