சென்னை:
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் குறித்த தவறுதலான செய்திகளால் மக்கள் பீதி அடைய வேண்டாம் என கேட்டுக் கொள்வதாக மேயர் துரைசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
சென்னையில் வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்கும் காலங்களில் பொதுமக்களுக்கு பொதுவாக காய்ச்சல் பாதிப்பு அதிகமாக காணப்படும். ஆனால், அனைத்து காய்ச்சல்களும் டெங்கு காய்ச்சல் அல்ல. டெங்கு காய்ச்சலை முறையான எலிசா பரிசோதனை மூலம் மட்டுமே உறுதி செய்ய இயலும். தற்போது ஜனவரி 2015 முதல் இதுநாள் வரை 93 நபர்களுக்கு மட்டுமே டெங்கு காய்ச்சல் இருப்பது சென்னை மாநகராட்சி பகுதியில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மூலம் அனைத்து காய்ச்சல் கண்டவர்களின் விவரங்கள் தினந்தோறும் பெறப்பட்டு சுகாதாரத்துறை பணியாளர்கள் மூலம் கள ஆய்வு செய்யப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நலக்கல்வி விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்திய மருத்துவ முறை பாரம்பரிய மருந்துகளான நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு மற்றும் மலை வேம்பு இலைச்சாறு போன்றவை அம்மா உணவகங்களிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மற்றும் குடிசைப்பகுதிகளிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான ரத்த அணுக்கள், ரத்த கூறுகள், ரத்தம் மற்றும் தேவையான மருந்துகள் போதிய அளவில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய குடிசைப்பகுதி தோறும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. வீடுகள் மற்றும் பொது இடங்களில் கொசு உற்பத்திக்கு காரணமான டயர், கொட்டாங்குச்சி மற்றும் தேவையற்ற பொருட்கள் கண்டறியப்பட்டு உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகிறது. தொற்று நோய்களை பரப்பும் ஏடிஸ் கொசுக்களை அழிப்பதற்கு புகை பரப்பும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. போதுமான புகைப்பரப்பும் இயந்திரங்கள், கொசுக்கொல்லி மருந்துகள் சென்னை மாநகராட்சியின் இருப்பில் உள்ளன.
ஓவ்வொரு வட்டாரத்திலும், வட்டார அளவிலான விரைவு செயல்பாட்டுக் குழு தயார் நிலையில் உள்ளது. இக்குழுவானது காய்ச்சல் கண்டறியப்பட்ட பகுதிக்கு சென்று காய்ச்சலின் காரணத்தை உடனுக்குடன் கண்டறிந்து, போர்க்கால அடிப்படையில் நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்கிறது.
அக்டோபர் மாதத்தை பொறுத்தவரை 1,522 காய்ச்சல் இருப்பவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், 492 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு இருக்கலாம் என கண்டறியப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 34 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு குணம் அடைந்துள்ளனர்.
பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிணறு, மேல்நிலைத்தொட்டி மற்றும் தண்ணீர் தேங்கும் இடங்களை முறையாக கொசு புகா வண்ணம் மூடியிட்டு பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும், கொசு முட்டையிட ஏதுவான மழைநீர் தேங்கக் கூடிய தேவையற்ற பொருட்களை உடனுக்குடன் அகற்றவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
எனவே, தவறுதலான செய்திகளால் மக்கள் பீதி அடைய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



