சிம்புவும் அனிருத்தும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்: தமிழருவி மணியன்

சென்னை:
சிம்புவும் அனிருத்தும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் அறிக்கையில் கோரியுள்ளார்.
அவர்வெளியிட்ட அறிக்கை:

தமிழ்த் திரைப்பட உலகில் இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு தெய்வீக மணம் கமழும் பாடல்கள் பாபநாசம் சிவன் போன்றவர்களால் படைக்கப்பட்டன. அதற்கடுத்து உடுமலை நாராயண கவியின் பேனாமுனையில் சிந்தனையைத் தூண்டும் சீர்திருத்தப் பாடல்கள் சிறப்பாக வெளிப்பட்டன. சென்ற தலைமுறையில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் தத்துவப் பாடல்கள் திரைப்பாடல்களின் தரத்தை உயர்த்தின. இளமையிலேயே காலம் அவரைக் களவாடிவிட்ட நிலையில் கண்ணதாசனின் இலக்கியச் செழுமை மிக்க இனிய பாடல்கள் உலகத் தமிழர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டன. அவரது சம காலத்தில் வாலியும் புலமைப் பித்தனும் முத்துலிங்கமும் எம்.ஜி.ஆரின் அரவணைப்பில் அற்புதமான பாடல்களைத் தமிழுக்குத் தந்து மகிழ்ந்தனர். இளையராஜாவும் வைரமுத்துவும் கைகோத்த போது சாகாவரம் பெற்ற நல்ல பாடல்கள் பல இசை ரசிகர்களின் காதுகளைக் கௌரவித்தன.

ஆனால், இன்றைய இளந்தலைமுறையைச் சீரழிப்பதற்காகவே மிகவும் தரம் தாழ்ந்த திரைப்பாடல்கள் வரிசையாக வலம் வருகின்றன. கானாப் பாடல்கள், குத்துப்பாடல்கள் என்ற பெயரில் விகாரமான உணர்வுகளை உசுப்பிவிடும் அருவருப்பான பாடல்கள் அடுத்தடுத்துப் படையெடுத்த போது சமூகப் பொறுப்புணர்வு மிக்கவர்கள் மௌனப்பார்வையாளர்களாகச் செயலற்றுக் கிடந்ததன் விளைவுதான் இன்று சிம்பு-அனிருத் கூட்டணியில் வெளிப்பட்டிருக்கும் அருவருப்பும் ஆபாசமும் நிறைந்த மிகக் கேவலமான ‘பீப்’ பாடல். ஒரு தாயின் வயிற்றில் பிறந்த எந்த ஆண்மகனும் பெண்மையைப் பழிக்கும் இழிந்த வார்த்தைகளை எந்த நிலையிலும் பயன்படுத்த மாட்டான்.

குத்துப் பாடல்களுக்கும் கானாப் பாடல்களுக்கும் திரையுலகம் முற்றாக விடை தர வேண்டிய தருணம் வந்துவிட்டது. சிம்புவும் அனிருத்தும் பெண்மையை இழிவு படுத்திய சமூக குற்றத்திற்காக நீதிமன்றத்தில் நிறுத்தப் படவேண்டும். அவர்களுக்கு வழங்கப்படும் தண்டணையின் மூலமாவது சீரழிந்து கிடக்கும் சினிமா உலகத்தின் விழிகள் திறக்கப்பட வேண்டும்…