தமிழ் திரையுலகில் விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் உள்ள சிங்காரவேலன் தற்போது மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் ‘வால்டர்’ என்கிற படத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். விக்ரம் பிரபு, அர்ஜுன் நடிக்கும் இந்தப் படத்தை இயக்குனர் அன்பரசன் இயக்க உள்ளார்..
இந்த நிலையில் தயாரிப்பாளர் பிரபு திலக், இதே இயக்குனர் அன்பரசன் இயக்கத்தில், சிபிராஜ், கௌதம் மேனன், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் இதே கதையை வால்டர் என்கிற தலைப்பிலேயே படமாக தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின..
இதைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கான பூஜையும் இன்று போடப்பட்டு அந்த புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும் வெளியாகியுள்ளன!
இதனைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர் சிங்காரவேலன், ‘வால்டர்’ படத்தின் கதையும் படத்தின் தலைப்பும் தன் வசமே இருக்கிறது என்றும், இதே கதையை வேறு நடிகர்களை வைத்து தனது அனுமதி இல்லாமல் தயாரிக்க முற்பட்டால் சம்பந்தப்பட்ட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது காப்பிரைட் சட்டத்தின் கீழ் நீதிமன்றம் மூலமாக கடும் நடவடிக்கை எடுப்பேன் என்றும் எச்சரித்துள்ளார்.



