
நாமக்கல் அருகே மோகனூரில் பட்டாசுக் கிடங்கில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பெண்கள் உள்பட 4 பேர் உடல் சிதறி பலியாகி உள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் தில்லைகுமார்(40). இவர் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி பட்டாசுகளை விற்பனை செய்வதற்காக அதிகளவில் வீட்டில் வாங்கி வைத்திருந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென பட்டாசும், எரிவாயு உருளைகளும் வெடித்துச் சிதறியதில் வீடு இடிந்து விழுந்தது. வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தில்லை குமார், அவரின் தாய் செல்வி(60) மற்றும் மனைவி(36), பக்கத்து வீட்டு மூதாட்டி பெரியக்காள்(75) ஆகியோர் உடல் சிதறி பலியாகினர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த நாமக்கல் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை கட்டுக்குள் வரும் பணியை மேற்கொண்டனர்.
சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, நாமக்கல் தொகுதி எம்எல்ஏ பெ.ராமலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் பார்வையிட்டு உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர். மோகனூர் காவல் ஆய்வாளர் தங்கவேல் பட்டாசு வெடி விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.





