
மைசூரில் இருந்து தூத்துக்குடி ரயிலில் வருபவர்கள், ஒரு வழியாக, மதுரையில் இருந்து செங்கோட்டை செல்லும் பயணிகள் ரயிலை, காலை 07:25க்குப் பிடித்து, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசிக்கு நேரடியாக உடனே செல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
காரணம், மைசூர்-தூத்துக்குடி ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளதால், இந்த ரயில் 5 நிமிடம் முன்கூட்டியே மதுரைக்கு வந்து, செங்கோட்டை செல்லும் ரயிலைப் பிடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது ஒரு மகிழ்ச்சியான செய்தி.
மைசூர்-தூத்துக்குடி-மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் காலையில் விரைவாக தூத்துக்குடியை வந்தடைய வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் மைசூரில் இருந்து தூத்துக்குடி வரும் ரயில் (16236) வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி மைசூரில் இருந்து மாலை 6.20-க்கும் புறப்படும் ரயில் வேகம் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் திண்டுக்கல்லுக்கு 6.17-க்கு பதிலாக 6.03-க்கே வந்து சேருகிறது. இதனால் மதுரைக்கு தற்போது 7.35க்கு வந்து கொண்டிருக்கும் இந்த ரயில், 7.20க்கு மதுரை வரும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இருக்கின்ற 5 நிமிட நேரத்தில் மதுரையில் பயணிகள் ரயில் மாறி செங்கோட்டை பாசஞ்சர் ரயிலைப் பிடித்து தங்கள் ஊர்களுக்குச் செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பயணிகளின் வேண்டுகோளைப் பொறுத்து, இனி வருங்காலங்களில், இந்த ரயில் சற்று தாமதமாக கிளம்புவதற்கும் ஏற்பாடு செய்யப்படக்கூடும்.
இந்த ரயில் தற்போதைய நேரத்தில் இருந்து 20 நிமிடம் முன்னதாக, தூத்துக்குடிக்கு 10.35-க்கு பதிலாக 10.15 மணிக்கு வந்து சேரும். இந்த நேர மாற்றம் 11.7.2025 முதல் அமலுக்கு வரும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.





