பாதிரியார்களுக்குள் காப்பகம் வைத்து கல்லா கட்டுவதில் ஏற்பட்ட சண்டையால் பணகுடி காப்பக முறைகேடு அம்பலமாகியுள்ளது. காப்பகத்தில் மது பாட்டில்கள் ஏராளமானவற்றை அதிகாரிகள் கைப்பற்றி, காப்பகத்தின் பெண் நிர்வாகியைக் கைது செய்துள்ளனர்.
பணகுடி அருகில் உள்ளது ரெகுநாதபுரம். கிறிஸ்துவ பாதிரிகளின் ஆதிக்கத்தால் ரோஸ்மியாபுரம் என்று அழைக்கப் படும் அந்தப் பகுதியில், ‘தனியார்’ ஆதரவற்றோர் இல்லம் மற்றும் முதியோர் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு முதியோர், மாற்றுத் திறனாளிகள், குடும்பத்தினரால் கைவிடப்பட்ட பெண்கள், சிறுவர்கள் என 26 பேர் உள்ளனர். காப்பக பொறுப்பாளராக ஜெயலெட்சுமி என்பவர் செயல்பட்டு வருகிறார்.
இங்கு இரு பாதிரியார்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் ஒருவர் மீது ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் ஒருவர் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து காப்பகத்தை ஆய்வு செய்ய உத்தரவு இடப்பட்டது.
இதை அடுத்து, ராதாபுரம் தாசில்தார் ஜேசுராஜன், மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் சந்திரகுமார், குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சரஸ்வதி ஆகியோர் கொண்ட குழு ஆட்சியர் உத்தரவின் பேரில் ஆய்வுக்குச் சென்றது.
ஆட்சியர் உத்தரவில் ஆய்வுக்கு வந்தவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்து காப்பக பொறுப்பாளர் ஜெயலெட்சுமி தகராறில் ஈடுபட்டார். இதனால், அரசு அலுவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக பணகுடி போலீஸில் புகார் அளிக்கப்பட்டு, ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டார்.
போலீஸார் துணையுடன் ஆய்வுக் குழுவினர் காப்பகத்தின் உள்ளே சென்று ஆய்வு செய்தனர். அப்போது, காப்பகத்தில் ஆவணங்கள் சிலவற்றுடன், பெருமளவில் மது பாட்டில்களும் கைப்பற்றப்பட்டன.
இந்தக் காப்பகத்தில் சிறார்கள், கைவிடப்பட்ட முதியவர்களை தங்க வைக்க முறையான அனுமதி பெறாத நிலையில், எப்படி இத்தனை காலம் அவர்கள் தங்க வைக்கப் பட்டனர் என்பது ஆய்வுக் குழுவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதை அடுத்து, அங்கிருந்த மாற்றுத் திறனாளிகள், சிறுவர்கள், பெண்கள் மற்றும் முதியோர் அனைவரும் நாங்குநேரியிலுள்ள அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆய்வுக் குழுவின் அறிக்கை ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. அவரது முடிவின்படி மேல் நடவடிக்கைகள் தொடரும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக கடந்த ஜனவரி 30-ஆம் தேதி பணகுடி ஸ்ரீரகுநாதபுரத்தில் உள்ள காப்பக நிர்வாகி பாதிரியார் ஜோசப் இசிதோர் மீது புகார் கூறப்பட்டது. காப்பக பெண் ஊழியர் ராஜம்மாள் என்பவர், பணியிலிருந்து நீக்கப்பட, அது குறித்துக் கேட்பதற்காக காப்பகத்திற்கு வந்த ராஜம்மாளை பாதிரியார் ஜோசப் இசிதோர் தாக்கியதாகக் கூறப் பட்டது. ராஜம்மாள், ராதாபுரம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று, இது குறித்து பணகுடி போலீஸில் புகார் அளித்தர்.
அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீஸார், அப்போது பாதிரி ஜோசப் இசிதோர், ஜெயலட்சுமி ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் காப்பகத்துக்கு வந்த ராஜம்மாள் தரப்பு, ஜோசப் இசிதோருடன் கைகலப்பில் ஈடுபட்டது. இதை அடுத்து, தன் மீது தாக்குதல் தொடுத்ததாக, ஜெயலட்சுமியும் பணியில் இருந்த பெண் ஊழியர்களும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காப்பகத்திற்கு போலீஸார் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் ராஜம்மாள் தரப்பினர் தப்பிச் சென்றனர். போலீஸார் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டிருந்தனர்.
ஆனால் இந்தச் சம்பவம் குறித்து அந்தப் பகுதியினர் கூறிய போது, பாதிரியார் காப்பக பெண்களிடம் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், காப்பகத்தில் பணிபுரிந்த பெண்ணுடன் பாலியல் தொடர்பில் இருந்த போது, காப்பகத்தின் 60 வயது மதிக்கத்தக்க சமையல் பெண்மணி அதைக் கண்டு கூச்சலிட்டதாகவும், அதனால் அந்தப் பெண்மணியை தாக்கி தனியறையில் அடைத்து வைத்து, இது குறித்து வெளியில் சொல்லக்கூடாது என்று பாதிரி மிரட்டியதாகவும் கூறுகின்றனர்.
ஆனால் அங்கிருந்து தப்பித்து வந்த அந்தப் பெண்மணி, பின்னர் போலீசில் புகாரளித்ததாகக் கூறப்படுகிறது.