
நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சேரன்மாதேவி சப் கலெக்டர் விசாரணைக்கு அழைத்த நிலையில், ஆவணங்களை வாங்காமல் ஒருதலைப் பட்சமாகப் பேசியதால் கூட்டத்திலிருந்து வெளியேறினார், இந்து முன்னணி மாநில துணை தலைவர் V.P.ஜெயக்குமார். இது குறித்து இந்து முன்னணியினர் கூறியதாவது…
திருநெல்வேலி மாவட்டம் உவரி அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் மிகவும் புகழ் பெற்றது.
கிறிஸ்தவ மதத்தைப் பெருமையாகவும் இந்து மதத்தை இழிவுபடுத்தியும் பேசி வரும் தமிழக சபாநாயகர் அப்பாவு தேரோட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள், ஆலய பக்தர்கள் சார்பில் இந்து முன்னணி புகார் அளித்தது.
இந்நிலையில் பிப்.10 இன்று காலை திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி சப் கலெக்டர் அலுவலகத்தில் விசாரணைக்காக ஆவணங்களுடன் ஆஜராக வேண்டும் என்று, இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமாருக்கு சேரன்மகாதேவி சப் கலெக்டர் சம்மன் அளித்திருந்தார். அதன்பேரில், சப் கலெக்டர் முன்பு ஆஜராகி உரிய விளக்கம் அளிக்கப்பட்டது.
அதில் சபாநாயகர் அப்பாவு கிறிஸ்தவர்களை உயர்வாகப் பேசியதையும் இந்து மதம் குறித்து இழிவாகப் பேசியதையும் ஒரு பென்டிரைவில் பதிவு செய்து சார் ஆட்சியரிடம் அளிக்கப்பட்டது. அதைப் பெற்றுக்கொள்ள அவர் மறுத்துள்ளார். “இந்த வீடியோ பதிவு எனக்கு தேவையில்லை. இது பொது கோவில். யார் வேண்டுமானாலும் போகலாம்” என்று பேசினார்.
அதற்கு இந்து முன்னணி நிர்வாகி, “பொதுக் கோவில் என்றால் சமுதாய பாகுபாடின்றி இந்துக்கள் செல்லலாமே தவிர, வேற்று மதத்தவர்கள் செல்லக்கூடாது என்று அறநிலையத்துறை சட்டமே உள்ளது என்றும், பல கோவில்களில் வேற்று மதத்தினருக்கு அனுமதி இல்லை என்று அறிவிப்பு பலகைகளே வைக்கப்பட்டுள்ளது. இந்து மதத்தை ஏற்று நம்பிக்கையோடு வழிபடுவதாக அலுவலகத்தில் கையொப்பமிட்டால் தான் ஆலய மரபு படி விழாவில் பங்கேற்க முடியும்” என்று கூறியபோதும், அதை ஏற்றுக் கொள்ளாமல், “அவரை நீங்கள் தடுக்க கூடாது” என்பதை மட்டுமே சார் ஆட்சியர் சொல்லிக் கொண்டிருந்தார்.
“நாங்கள் கொடுக்கும் ஆவணங்களைப் பார்த்தால் தானே இந்து மதம் பற்றி இழிவாகப் பேசியது தெரியும். அதை வாங்கவே மறுத்தால் இது எப்படி நியாயமான விசாரணையாக இருக்க முடியும்?” என்று இந்து முன்னணி நிர்வாகிகள் கேட்டனர்.
இதை அடுத்து, சார் ஆட்சியரின் விசாரணையைப் புறக்கணித்து இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் நிர்வாகிகளுடன் வெளியேறினார். விசாரணை என்று அழைத்து விட்டு இந்துக்கள் தரப்பின் விளக்கத்தைக் கூட முறையாக கேட்காத சேரன்மகாதேவி சப்-கலெக்டரின் இச்செயலை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது… – என்று இந்து முன்னணியினர் தெரிவித்தனர்.
இந்துக்களின் எதிர்ப்பையும் மீறி, சபாநாயகர் அப்பாவுவை நாளை தேர் இழுக்க அனுமதித்தால் இந்துக்களைத் திரட்டி இந்து முன்னணி போராட்டம் நடத்தும் என அதன் மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் தெரிவித்தார். இந்த நிகழ்வில் நெல்லை மாவட்ட பொதுச் செயலாளர் க.பிரம்ம நாயகம் , நெல்லை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் குணா, கார்த்திக், கொம்பையா உட்பட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் இருந்தனர்.