
ஜூன் 22 ல் மதுரையில் மாபெரும் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் என்றும், அதற்கு அனைவரும் வர வேண்டும் என்றும் இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அழைப்பு விடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
சங்க இலக்கியங்கள் வணங்கும் குறிஞ்சி நில தெய்வம், தமிழ் கடவுள் முருகப்பெருமானின் லட்சக்கணக்கான பக்தர்களை ஒருங்கிணைக்கும் வகையில் வருகிற ஜூன் 22ஆம் தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது.
சுமார் 5 லட்சம் பக்தர்கள் பங்கேற்கும் முருக பக்தர்கள் மாநாடு நடத்திட இந்துமுன்னணி முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படைவீடான திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலையாக மாற்றுவதற்கு ஒரு கும்பல் சதி செய்ததை நாம் நன்கு அறிவோம்.
இரண்டாவது படைவீடான திருச்செந்தூர் கடல் அரிப்பால் காணாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த அபாயத்தை தடுக்க தமிழக அரசு உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மூன்றாம் படை வீடான பழனிமலை பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கு கூட தமிழகஅரசு தடை விதித்து வருகிறது.
இதுபோன்று முருகனின் அற்புத தலங்கள் பலவும் சீரழிந்து வருவது பற்றிய கவலை பக்தர்களிடம் எழுந்துள்ளது.
வேற்று மத பண்டிகைகளுக்கு தமிழக அரசு வாழ்த்து சொல்லும் நிலையில் தமிழ் தெய்வம் முருகப்பெருமானின் தைப்பூசத் திருவிழாவிற்கு வாழ்த்து சொல்வதற்கு கூட தற்போதைய தமிழக அரசுக்கும் ஆளும் கட்சிக்கும் மனமில்லை.
இத்தகைய சூழ்நிலையில் நமது தர்மத்தை காக்க, நமது ஆலயங்களை காக்க, நமது பண்பாட்டை காக்க உலகெங்கிலும் உள்ள, குறிப்பாக தமிழகத்தில் உள்ள முருக பக்தர்கள் ஒருங்கிணைந்திட வேண்டிய காலகட்டத்தில் இருந்து வருகிறோம்.
இந்நிலையில்தான் வருகின்ற ஜூன் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாட்டை நடத்திட இந்துமுன்னணி முடிவு செய்துள்ளது.
இதற்காக வீடுவீடாக சென்று முருகபக்தர்களை அழைப்பதற்கும் முருக பக்தர்கள் மாநாட்டின் நோக்கத்தை பொதுமக்களுக்கு விளக்கிடவும் வருகிற நான்கு மாதங்களும் பல்வேறு தொடர் நிகழ்ச்சிகளை நடத்திடவும் இந்துமுன்னணி முடிவு செய்துள்ளது.
இந்த மாபெரும் மாநாட்டிற்கு முருக பக்தர்களான பாதயாத்திரை குழுக்கள், இந்து ஆன்மிக குழுக்கள், மன்றங்கள், சிவனடியார்கள், வைணவ அமைப்புகள் என எல்லாரையும் இருகரம் கூப்பி அன்புடன் வரவேற்கிறோம்.
அதர்மத்தை சம்ஹாரம் செய்து தர்மத்தை நிலைநாட்டிய முருகப்பெருமானின் சேனைகளாக வருகிற ஜூன் 22ஆம் தேதி மதுரையில் அணி திரள்வோம் அனைவரும் வாரீர்.
அடுத்த மூன்று மாதங்களில் திட்டமிட்டு இம்மாநாட்டை வெற்றி மாநாடாக நடத்திட அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறோம்.