
உத்தர பிரதேசத்தில் நிலவிவரும் கடும் குளிரால் கான்பூர் பகுதியில் மட்டும் ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. வடமாநிலங்களில் கடும் குளிர்வாட்டி வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வீடு இல்லாமல் சாலையோரம் வசிப்போருக்கு நிரந்தர தங்கும் இடமும், தற்காலிக கூடாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
உத்தரப் பிரதேசத்தை பொறுத்தவரை பல பகுதிகளில் மக்கள் கடும் குளிரை எதிர்கொண்டு வருகின்றனர். நொய்டா, காஜியாபாத், அயோத்தி, கான்பூர், லக்னோ, பரேலி மற்றும் மொராதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் பகலிலும் குறைந்த வெப்பநிலையே பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதிகளிலும், கிழக்குப் பகுதியில் சில இடங்களிலும் அடர்ந்த பனிமூட்டம் காணப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் நாளுக்கு நாள் குளிர் அதிகரித்து வரும் நிலையில், கான்பூரில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் காரணமாக 25 பேர் உயிரிழந்தனர்.
இவர்களில் 17 பேர் மருத்துவ சிகிச்சை கிடைப்பதற்கு முன்பே இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. கடும் குளிரால் ரத்த அழுத்த அதிகரிப்பு மற்றும் ரத்த உறைவதால் ஏற்படும் மாரடைப்பு, மூளை பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பேசிய லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலை. பேராசிரியர்; இந்தக் குளிர் காலத்தில் வயதானவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு வரும் என்று கருதக்கூடாது. மாரடைப்புக்கு உள்ளான சிறுவர்களும் எங்களிடம் வந்துள்ளனர். வயது வித்தியாசமின்றி அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். முடிந்தவரை வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இந்த நிலையில்வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. பனிப்பொழிவு காரணமாக டெல்லி, இமாச்சலபிரதேச மாநிலங்களில் குளிர் வாட்டி எடுக்கிறது. அதிகாலை நேரங்களில் கிராமங்கள் அனைத்தும் பனி மூடிக்கிடக்கிறது. சாலைகளிலும் பனிமூட்டம் காணப்படுவதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே செல்கிறது. அனைத்து வாகனங்களும் மெதுவாக செல்வதால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. டெல்லியில் நேற்று 7 டிகிரி செல்சியசாக இருந்த வெப்பநிலை இன்று அதிகாலை 5 டிகிரி செல்சியசாக இருந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத நிலை காணப்பட்டது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் இந்த நிலை வருகிற 11-ந்தேதி வரை நீடிக்கும் என்று கூறியுள்ளது. டெல்லியில் ஏற்பட்டுள்ள பனிமூட்டம் காரணமாக விமானங்களின் வருகை மற்றும் புறப்படுவது தாமதம் ஆவதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, தற்போது வரை எந்த விமானமும் ரத்து செய்யப்படவில்லை. அதே நேரம் விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை குறித்து பயணிகள் விமான நிலையத்தை தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று அறிவித்து உள்ளது.





