
ராகுல் காந்தியின் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது என்பது குறித்த தகவலை தேர்தல் கமிஷன் வெளியிட்டது.
கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்கு மே மாதம் 10-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் புதன் கிழமை அறிவித்தார்.
அத்துடன் காலியாக உள்ள பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மக்களவை தொகுதிக்கும், ஒடிசாவின் ஜார்சுகுடா, உத்தரபிரதேசத்தின் சான்பே, சுவர் மற்றும் மேகாலயாவின் சோஹியாங் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கும் மே 10-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பால் வயநாடு மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
வயநாடு இடைத்தேர்தல் எப்போது? இதுபற்றி தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் கூறியுள்ளதாவது,
பிப்ரவரி மாதம் வரையில் காலியான தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு மேல்முறையீடு செய்வதற்கு சூரத் கோர்ட்டு 30 நாள் அவகாசம் வழங்கி உள்ளது. எனவே அங்கு தேர்தல் நடத்த அவசரம் இல்லை.
நாங்கள் காத்திருப்போம். விசாரணை நீதிமன்றம் வழங்கி உள்ள குறிப்பிட்ட அவகாசம் தீர்ந்துவிடும் முன் இடைத்தேர்தலுக்கு அவசரம் இல்லை.
எனவே வயநாடு தொகுதி தேர்தல் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். அங்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எஞ்சிய பதவிக்காலம் ஓராண்டுக்குள் இருந்தால் இடைத்தேர்தல் நடத்தப்படுவதில்லை. வயநாடு தொகுதியைப் பொறுத்தமட்டில் எஞ்சிய காலம் ஓராண்டுக்கு மேல் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.





