
கேரள மாநிலம் கொல்லத்திலிருந்து செங்கோட்டை தென்காசி வழியாக சென்னை செல்லும் கொல்லம் ரயிலில் எஸ்3 பெட்டியின் கீழ்பகுதியில் பெரிய விரிசல் ஒன்று, கடந்த ஜூன் 4ம் தேதி கண்டறியப்பட்டது. இதை அடுத்து, செங்கோட்டை ரயில் நிலையத்தில் அந்தப் பெட்டி ரயிலில் இருந்து கழற்றப்பட்டது. அதில் பயணித்த பயணிகள் எஸ் 2 பெட்டிக்கு மாற்றப் பட்டார்கள். அந்தப் பெட்டிக்குப் பதிலாக வேறு பெட்டி மதுரை ரயில் நிலையத்தில் இணைக்கப்பட்டு பின்னர் சென்னை சென்றது. ரயில் பெட்டியில் விரிசல் கண்டறியப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், செங்கோட்டை ரயில் பயணிகள் நல சங்கத்தின் சார்பில் பிஆர்ஓ ராமன், ஜூன் 5 திங்கள்கிழமை அன்று, செங்கோட்டை ரயில் நிலைய சீனியர் செக்ஷன் இன்சினியர் ( Carriage & Wagon) ஷிஜு ராஜூவை அவரது செங்கோட்டை ரயில் நிலைய அலுவலகத்தில் சந்தித்து பாராட்டினார்.
கொல்லம் – சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் செங்கோட்டையில் வைத்து சிலீப்பர் பெட்டியில் உள்ள விரிசல் குறைபாடைக் கண்டறிந்த கிரேடு ஒன் டெக்னீசியன் Carriage & Wagon ரகுபதியின் செயலைப் பாராட்டினார். ரகுபதி மதுரை சென்றதால் அவருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்ட இயலவில்லை என்றும், அவர் வந்ததும் அவரது பணி ஈடுபாட்டுக்கு பாராட்டு தெரிவிக்கப் படும் என்றும் கூறிய பயணிகள் நல சங்கத்தினர், விரிசலைக் கண்டறிந்த உடனே உரிய தகவலைப் பெற்றதும் ஆவன செய்து உதவிய சீனியர் செக்ஷன் இன்சினியருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தனர்.