Home Blog Page 178

இம்முறை சபரிமலை நிலக்கல் பார்க்கிங் கட்டணம் எவ்வளவு…?

sabarimalai nadai open - 2026
#image_title

சபரிமலை மண்டல-மகரவிளக்கு யாத்திரையின் போது நிலக்கல்லில் 26 அல்லது அதற்கு மேற்பட்ட இருக்கைகள் கொண்ட பேருந்துகளுக்கான பார்க்கிங் கட்டணம் ரூ.100 நிர்ணயம்.

உங்களிடம் FAStag டேக் இல்லையென்றால், நீங்கள் 25 சதவிகிதம் அதிகமாகச் செலுத்த வேண்டும். அதாவது 125 ரூபாய். 15 முதல் 25 இருக்கைகள் கொண்ட மினி பஸ்சில் கட்டணம் ரூ.75.

ஐந்து முதல் 14 இருக்கைகள் கொண்ட வாகனங்களுக்கு ரூ.50,
நான்கு இருக்கைகள் கொண்ட கார்களுக்கு ரூ.30,
ஆட்டோரிக்ஷாவுக்கு ரூ.15 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பார்க்கிங் கட்டணம் 24 மணி நேரம். கட்டணம் வசூலிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நபரால் fastag கேட் நிறுவப்பட வேண்டும்.

நிலக்கல்லில் தற்போது 8000 வாகனங்கள் நிறுத்தும் வசதி உள்ளது. மேலும் 2000 வாகனங்கள் நிறுத்தும் இடம் தயாராகி வருகிறது. இதற்காக 690 ரப்பர் மரங்கள் வெட்டப்பட்டன. இந்த மாதம் 260 ரப்பர் மரங்களும், அடுத்த மாதம் 200 ரப்பர் மரங்களும் வெட்டப்படும்.

கேரள அரசு மற்றும் பிற மாநிலங்களின் உத்தியோகபூர்வ வாகனங்கள், தேவசம் போர்டு மற்றும் மாநில போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் கிடையாது.

பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது ஒப்பந்ததாரரின் பொறுப்பு. பார்க்கிங் கட்டணமாக வசூலிக்க டெண்டருக்கு குறைந்தபட்ச தொகையாக ரூ.2,98,89,366 என தேவசம் போர்டு நிர்ணயித்துள்ளது.!!

6 செ.மீ மழைக்கே இப்படி: அரசு மீது சென்னை மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்!

pmk ramadoss - 2026

6 செ.மீ மழைக்கே பல இடங்களில் தண்ணீர் தேக்கம்: தமிழக அரசு, சென்னை மாநகராட்சி மீது சென்னை  மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் என்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

சென்னையில் இன்று காலை 8.00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில்  அதிகபட்சமாக 6 செ.மீ அளவுக்கு மட்டுமே மழை பொழிந்துள்ள நிலையில், அதையே சென்னை மாநகரத்தால் தாங்க முடியவில்லை. சென்னை மாநகரின்  பல பகுதிகளில் ஓரடி உயர்த்திற்கும் கூடுதலாக மழை நீர்  தேங்கி நிற்கிறது.

பல இடங்களில்  வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. சென்னையில் தமிழக அரசாலும்,  சென்னை மாநகராட்சியாலும் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் உள்ளிட்ட  வெள்ளத்தடுப்புப் பணிகள் போதிய அளவுக்கு பயனளிக்கவில்லை என்பதையே  6 செ.மீ மழையின் விளைவுகள் காட்டுகின்றன. அப்படியானால்,  20 செ.மீ  மழை பெய்தால் சென்னை என்னவாகும்? என்ற அச்சம் மேலும் அதிகரித்திருக்கிறது.

சென்னையில்  மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் 90% முடிவடைந்து விட்டன, 95%  முடிவடைந்து விட்டன என்று ஊடகங்களின் உதவியுடன் வீண் விளம்பரம் செய்து கொண்டிருந்தால் மட்டும் போதாது. உண்மையான அக்கரையை களப்பணிகளில் காட்ட வேண்டும். அவ்வாறு காட்டியிருந்தால் 6 செ.மீ மழைக்கு சென்னையின் பல இடங்களில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டிருக்காது.

எத்தகைய இடர்ப்பாடுகள் வந்தாலும்,  எத்தகைய பேரிடர்கள் வந்தாலும்  நம்மை ஆளும் அரசு நம்மைக் காக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு வர வேண்டும். சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள மக்களுக்கு அரசின் மீது அந்த நம்பிக்கை இல்லை  என்பதையே  பொதுமக்கள் தங்களின் மகிழுந்துகளை வேளச்சேரி பாலத்திலும், பள்ளிக்கரணை பாலத்திலும்  நிறுத்தி வைத்திருப்பது காட்டுகிறது.

மகிழுந்துகளை நிறுத்தி வைத்த மக்களில் ஒருவர் கூட தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளால் தங்கள் பகுதிகளில்  மழை நீர் தேங்காது என்று கூறவில்லை. மாறாக காவல்துறையினர் ஆயிரக்கணக்கில் அபராதம் விதித்தாலும் பரவாயில்லை; எங்கள் மகிழுந்துகளை பாலத்தில் தான் நிறுத்துவோம் என்று கூறியிருப்பதன் மூலம் அரசின் மீதான  அவர்களின் அவநம்பிக்கை வெளிப்பட்டிருக்கிறது.

பாலங்களின் மீது மகிழுந்துகளை நிறுத்துவது போக்குவரத்தின் வேகத்தைக் குறைக்கும் என்பது தான் உண்மை. ஆனாலும், வேளச்சேரி, பள்ளிக்கரணை பாலங்களில் மகிழுந்துகள் நிறுத்தப்படுவதை எவரும் எதிர்க்கவில்லை. அதன் பொருள், தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சியின் கையாலாகத்தனத்தை மக்கள் புரிந்து கொண்டு விட்டனர் என்பது தான்.

தொடக்கத்தில் மகிழுந்துகளை நிறுத்தும் மக்களை மிரட்டியும், அபராதம் விதித்தும் அவற்றை அப்புறப்படுத்தும்படி அச்சுறுத்திய சென்னை மாநகரக் காவல்துறை  மக்களின் எதிர்ப்பைக் கண்டு அஞ்சி, இப்போது பாலங்களில் நிறுத்தப்படும் மகிழுந்துகளுக்கு நாங்கள் அபராதம் விதிக்கவில்லை என்று பல்டி அடித்துள்ளனர்.

எனவே, தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் வீண் விளம்பரங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து  எவ்வளவு மழை பெய்தாலும் சென்னையில் வெள்ள நீர் தேங்காது என்ற நிலையை உருவாக்கும் அளவுக்கு களப்பணிகளை செய்ய வேண்டும்.  இது நம்மைக் காக்கும் அரசு என்று எண்ணும் அளவுக்கு மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும்.

தமிழகத்தில்… வெளுத்து வாங்கும் கனமழை! தத்தளிக்கும் தலைநகரம்!

heavy rain in chennai - 2026
#image_title

வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள சூழலில், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிகனமழை பெய்யும் என்பதால், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு இன்று, ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் நாளை, 21 செ.மீ.,க்கு மேல் மழை கொட்டும் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழகம் முழுதும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது:

தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. இன்று அது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். மேலும் வலுவடைந்து, நாளை வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, தெற்கு ஆந்திர மாவட்டங்களை நோக்கி நகரக்கூடும்.

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல சுழற்சியும், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சியும் காணப்படுகிறது.
இதற்கு இணையாக, அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, ஏமன் நோக்கி நகர்கிறது.

வளி மண்டல சுழற்சி மற்றும் இரு காற்று இணைவு காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த ஐந்து நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில், 20 செ.மீ.,க்கு மேல் அதி கனமழைக்கான ‘ரெட் அலெர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், அரியலுார், பெரம்பலுார், தஞ்சாவூர் மாவட்டங்கள்.

புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில், 12 முதல் 20 செ.மீ., வரை மிக கனமழை பெய்வதற்கான ‘ஆரஞ்ச் அலெர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை: திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், சில இடங்களில் நாளை அதி கனமழை பெய்யலாம் என ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலுார், பெரம்பலுார் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தாலும், அது மெதுவாக நகர்வதால், எதிர்பார்த்ததை விட மிக கனமழை, அதி கனமழை சற்று தாமதமாக வாய்ப்புள்ளது. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவ்வாறு பாலசந்திரன் கூறினார்.

நாளை முதல் 3 நாட்கள் மெட்ரோ ரயில்கள் கூடுதலாக இயக்கம்.

கனமழை எச்சரிக்கை காரணமாக அக்.15, 16, 17ம் தேதிகளில் சென்னையில் கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு.

வண்ணாரப்பேட்டை முதல் ஆலந்தூர் வரை 3 நிமிட இடைவெளியிலும், விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை 6 நிமிட இடைவெளியிலும், சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை 5 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.

தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று காலை உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகராமல் அதே இடத்தில் நீடிக்கிறது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதிகளில் நிலவ கூடும் என்று, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

மேலும்,, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தஞ்சை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தகவல் வெளியிட்டது.

திருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து

கனமழை அறிவிப்பால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 16ம் தேதி விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவிப்பு!

புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை

மழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை (அக்.15) விடுமுறை அறிவிப்பு.

கனமழை: பி.எட் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஒத்திவைப்பு!

கனமழை எச்சரிக்கையைடுத்து, சென்னையில் நாளை(அக். 15) நடைபெறவிருந்த பி.எட் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

பி.எட் (தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல்) மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதியினை மாற்றம் செய்து கல்லூரிக் கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக கல்லூரிக் கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னை, லேடி வில்லிங்கடன் கல்வியியல் கல்லூரியில் நாளை (அக். 15) நடைபெற இருந்த பி.எட் (தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல்) மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கனமழை காரணமாக வரும் அக். 21 (திங்கள் கிழமை) அன்று நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து.

கடலூர்: கன மழை எச்சரிக்கை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு நாளை (15.10.2024) விடுமுறை.

நாளை நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வுகளும் ரத்து.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள உறுப்பு கல்லூரி தேர்வுகளும் ஒத்திவைப்பு.

ஒத்திவைக்கப்படும் தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று, பல்கலைக்கழக பதிவாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (15/10/2024) விடுமுறை- ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார்.

கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை -மாவட்ட ஆட்சியர் பழனி.

மீனவர்கள் கவனத்திற்கு!

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் இன்றுமுதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறும் மாவட்ட மீன்வளத்துறை அறிவிப்பு

தபால் துறையில் 344 பணியிடங்கள்; வேலைவாய்ப்பு தவறவிட்டுடாதீங்க!

employment career opportunities - 2026
#image_title

போஸ்ட் ஆபிஸ் 344 காலியிடங்கள்

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் 344 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 31.

இந்திய அஞ்சல் துறையின் கீழ் உள்ள இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் எக்ஸிக்யூடிவ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்தம் 344 பணியிடங்கள் உள்ளன. இதில், டில்லியில் 6 பணியிடங்களும், கர்நாடகாவில் 20 பணியிடங்களும், கேரளாவில் 4 பணியிடங்களும், தமிழகத்தில் 13 பணியிடங்களும், தெலுங்கானாவில் 15 பணியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி என்ன?

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்வது எப்படி?

எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம் ரூ.750.

விண்ணப்பிப்பது எப்படி?

https://www.ippbonline.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

10,12ம் வகுப்பு தேர்வு தேதிகள் அறிவிப்பு!

school exams - 2026

பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 28 ல் தொடங்குகிறது. பனிரெண்டாம் வகுப்பு தேர்வு மார்ச் 3 ல் தொடங்குகிறது. 10.11.12ம் வகுப்பு தேர்வுகள் அட்டவணை இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை
தேதி – கிழமை — பாடம்
28-03-25 – வெள்ளி — தமிழ்
02-04-25 – புதன் — ஆங்கிலம்
04-04-25 -வெள்ளி — விருப்ப மொழி
07-04-25 – திங்கள் –கணிதம்
11-04-25 – வெள்ளி — அறிவியல்
15-04-25 – செவ்வாய்– சமூக அறிவியல்
தேர்வு முடிவுகள் 19.05.2025 அன்று வெளியாகிறது!

2024-2025 கல்வி ஆண்டுக்கான 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

செய்முறை தேர்வு

* 12-ம் வகுப்பு செய்முறை தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 7-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெறும்.

* 11-ம் வகுப்பு செய்முறை தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 15-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடைபெறும்.

* 10-ம் வகுப்பு செய்முறை தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 22-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடைபெறும்.

பொதுத்தேர்வு

* அடுத்தாண்டு மார்ச் 3-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கும்.

* அடுத்தாண்டு மார்ச் 5-ந்தேதி முதல் 27-ந்தேதி பிளஸ் 1 பொதுத்தேர்வு நடக்கும்.

* அடுத்தாண்டு மார்ச் 28-ந்தேதி முதல் ஏப்ரல் 15-ந்தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும்.

பொதுத்தேர்வு முடிவுகள்

* 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 9-ந்தேதி வெளியாகும்.

* 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19-ந்தேதி வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

உபதேச பலன் எப்போது கிடைக்கும்?

sringeri swamigal - 2026

வேதாந்தத்தின் தத்துவத்தை புரிந்து கொள்வதற்கு தன்னை அதற்கு தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்கு தகுதி ஏற்படாதவனுக்கு உபதேசத்தால் பயன் கிடைக்காது; மாறாக எதிரிடையான விளைவுகளே ஏற்படும்.

எல்லாமே பிரஹ்மம் என்று ஒரு மூடனுக்கோ அரைகுறையாக படித்திருக்கிறவனுக்கோ உபதேசித்தால், அவன் அதை தப்பாக புரிந்து கொள்வது மட்டுமல்லாமல் அவனை அந்த உபதேசம் தவறான செயல்கள் மூலம் நரகத்திற்கு அழைத்துச் செல்லும். ஆகவே தத்துவத்தை பெற்றுக் கொள்வதற்கும் ஒருவனுக்கு தகுதி இருக்க வேண்டும்.

அப்பொழுது அந்த தகுதிதான் என்ன? சாஸ்திரங்களிலும் குருவின் உபதேசங்களிலும் அசையாத நம்பிக்கை, லௌகீக விஷயங்களில் விரக்தி, ஆசையின்மை மற்றும் பகவானிடம் அஸாதாரண பக்தி ஆகியவை ஒருவனை தகுதியுள்ளவனாக்கும்.

ஆதலால், முதலாக இந்த குணங்களை வளர்க்க வேண்டும். இந்த முயற்சியில் ஒருவன் வெற்றி பெற்று, தன்னை தயாராகிக் கொண்டால் மட்டுமே அவனுக்கு வேதாந்த தத்வத்தை உபதேசிக்க முடியும்.

பழைய காலத்தில், ஒருவன் தத்துவோபதேசத்துக்காக குருவை அணுகினால், குரு அதற்கு அவன் தயாராக இருக்கிறானா என்று சோதித்துவிட்டு, அவன் தயார் நிலையில் உள்ளான் என்று உறுதியான பின் தான் அவனுக்கு உபதேசம் செய்வதுண்டு.

ப்ரசினோபநிஷத்தில், ஆறு சிஷ்யர்கள் (ஸுசேகர், சத்யகாமர் மேலும் சிலர்) குரு பிப்பலாதரை சிக்ஷையாரம்பத்திற்காக அணுகினார்கள். ஆனால் குரு அவர்களை தன்னிடம் வருவதற்கு முன் மற்றும் ஒரு வருடம் தபஸ் செய்ய போகவேண்டும் என்று உத்தரவிட்டார். காரணம் என்னவென்றால், அவர்கள் உபதேசத்திற்கு முற்றிலும் தயார் நிலையில் இருப்பதை உறுதிபடுத்த விரும்பினார். ஒரு வருடம் கழித்த பின் குரு அவர்களுக்கு உபதேசம் அளித்தார். அவர்களும் தத்துவத்தை நன்கு புரிந்துகொண்டு முக்தி அடைந்தார்கள்.

ஆதலால் தத்துவத்தை கற்றுக்கொள்வதன் முன் தேவைகளை எல்லாம் சரியாக கருத்தில் கொண்டு வேண்டிய தகுதியை அடைந்ததற்கு பின் குருவிடமிருந்து வேதாந்தம் பற்றிய உபதேசத்தைப் பெற்று கொள்வது தான் சரியானது. இதன் மூலம் எல்லோரும் குறைவற்ற வாழ்க்கையை நடத்த முடியும்.

தக்ஷிணாம்னாய சிருங்கேரி சங்கராசார்ய ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ பாரதீதீர்த்த மஹாஸ்வாமிகள்.

சரவெடி தடையை நீக்க சட்டப்படி நடவடிக்கை: எல்.முருகன் உறுதி!

l murugan in sivakasi fireworkers - 2026
#image_title

சரவெடி தடையை‌ நீக்க சட்டப்படி தீர்வு காண வழிவகை செய்யப்படும் என‌ சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்களிடையே கலந்துரையாடிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உறுதி அளித்தார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மாரனேரியில்‌ உள்ள தனியார் பட்டாசு ஆலை தொழிலாளர்களுடன் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் கலந்துரையாடினார்.

முன்னதாக அவரை ஆரத்தி எடுத்து பட்டாசு தொழிலாளர்கள் வரவேற்றனர். கலந்துரையாடலின் போது,பெண் பட்டாசு தொழிலாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி,கிராமப்புற ஏழைஎளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளதாகவும், குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் 3 கோடி வீடுகளும்,வரும் 5 ஆண்டுகளில் மேலும் 3 கோடி வீடுகளும் கட்டிக்கொடுக்க உத்திரவிட்டுள்ளதாகவும், அதிலும் குறிப்பாக வீட்டின் பட்டா தாய்மார்கள் பெயரில் இருக்க வேண்டும் என உத்திரவிட்டுள்ளார் என்றார்.

தாய்மார்கள் தன்னிரைவோடு இருக்க வேண்டும்‌சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்துகிறார் என்றும் பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்பதை உணர்ந்து தான் பிரதமர் இவ்வாறு உத்தரவிட்டதோடு,பெண்களுக்கு வீட்டுக்கு வீடு ஜல்ஜீவன் திட்டம், இலவச கேஸ் சிலிண்டர்,தனிநபர் கழிப்பறைகளையும் கட்டிக்கொடுத்துள்ளார். மேலும் 5 கிலோ அரிசி,1 கிலோ பருப்பும் ரேஷன் கடை மூலமாக தருகிறார் என்றார்.

பட்டாசு தொழிற்சாலையில் வேலைபார்ப்பவர்களுக்கு ஈ.எஸ். ஐ கார்டு மற்றும் மருத்துவ வசதியுடன் பென்ஷன் வசதியும் பிரதமர் செய்து கொடுத்துள்ளார் என்றார்.

தீபாவளி சீசன் நேரம் இது உங்களை பார்த்து வாழ்த்துவிட்டு,பிரதமரின் பல திட்டங்களை தங்களிடத்தில் சொல்ல வந்தேன். தங்களை சந்தித்தது மகிழ்ச்சி என்றார்.

இந்த கலந்துரையாடலின் போது பட்டாசு தொழிலில் சரவெடிக்கு தடை விதிக்கப்பட்டது குறித்தும் தங்களுக்கு அந்த தொழிலை தவிர வேறு தொழில் தெரியாது என தொழிலாளர்கள் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர், மத்திய அரசு தொழிலாளர்கள் பக்கம் இருந்து இதை சட்டப்படி தீர்வு காண வழிவகை செய்யும் என உறுதியளிந்தார்.

இந்த கலந்துரையாடல் நிகழ்வின் முடிவில் மத்திய அமைச்சருடன் பட்டாசு தொழிலாளர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

சபரிமலை மண்டல மகரவிளக்கு சீஸன்; நவ.15ல் நடை திறப்பு!

sabarimala iyappan sannidhi opened - 2026
#image_title

வரும் நவ 16ல் துவங்கும் சபரிமலை மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதி திறக்கப்படுகிறது.

இந்த ஆண்டு சீசன் தொடக்கம் முதலே தினசரி 18 மணி நேரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் மண்டல, மகர விளக்கு சீசனின் போது சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் கட்டுகடங்காமல் இருந்தது. இதில் பாதுகாப்பு குளறுபடியும் இருந்ததாக அரசின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் உடனடி தரிசன முன்பதிவும் ஒரு பிரச்சினையாக கூறப்பட்டது.

எனவே இந்த வருடம் உடனடி தரிசன முன்பதிவை ரத்து செய்து விட்டு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டும் தினசரி 80 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கப்படும் என சமீபத்தில் நடந்த முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான உயர் மட்ட கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

அரசின் இந்த முடிவுக்கு பந்தளம் ராஜ குடும்பம் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்தது. மேலும் வழக்கம் போல் உடனடி முன்பதிவு தரிசனத்தை அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான அலுவலகத்தில் தலைவர் பிரசாந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் உடனடி தரிசன முன்பதிவு முறையை மீண்டும் கொண்டு வருவதற்காக அரசின் அனுமதியை பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த ஆண்டு சீசன் தொடக்கம் முதலே தினசரி 18 மணி நேரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்தார்.

இது தேவஸ்தானத்தின் முடிவு என்ற போதிலும் சபரிமலை கோவில் விவகாரத்தில் தந்திரியின் அனுமதிக்கு பின்னரே அனைத்து முடிவுகளும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

இதன் படி வரும் மண்டல-மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை தரிசன நேரம் மறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

எதிர்வரும் யாத்திரை காலத்திற்கு முன்னதாக சபரிமலையில் திருத்தப்பட்ட தரிசன நேரம். புதிய கால அட்டவணையின்படி, காலை 3 மணி முதல் 1 மணி வரையும், மீண்டும் 3 மணி முதல் 11 மணி வரையும் பக்தர்களை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஒவ்வொரு நாளும் 17 மணி நேரத்திற்கு வழிபாட்டுக்கு வாய்ப்பு அளிக்கிறது.

விருச்சிகம் கார்த்திகை நாள்-1 (நவம்பர்-17) தொடங்கி சபரிமலை சீசன் முழுவதும் புதிய நேரம் செயல்படுத்தப்படும். வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேவஸ்வக் வாரிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

திருத்தப்பட்ட நேரங்களுடன் கூடுதலாக, விர்ச்சுவல் வரிசையில் முன்பதிவு செய்பவர்களுக்கு 48 மணி நேர அருள் காலம் வழங்கப்படும்.

ஆன்லைனில் பதிவு செய்யாத பக்தர்களுக்கு தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்படும் என தேவஸ்வம் வாரியம் அறிவித்துள்ளது.இதனால் சபரிமலையில் கூடுதல் கூட்டம் தரிசனம் குளறுபடி இருக்கும்

மதுரை மாவட்டத்தில் கன மழை!

madurai heavy rain tree fallen - 2026

உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டி பகுதியில் பெய்த கனமழை காரணமாக சாலையோரம் இருந்த புளியமரம் தேசிய நெடுஞ்சாலையில் விழுந்ததால், சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவரமாக
பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்த சூழலில் சுமார் 56 மில்லி மீட்டர் மழை பெய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த கனமழை காரணமாக உசிலம்பட்டி அருகே
மாதரை கிராமத்தில் சாலையோரம் இருந்த பழமையான புளியமரம் சாய்ந்து மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் விழுந்தது.

இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, அப்பகுதி வழியாக மதுரை மற்றும் தேனி, கேரளா வரை செல்லும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் மரம் அறுக்கும் இயந்திரங்கள் உதவியுடன் சாலையில் விழுந்த மரங்களை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி அகற்றினர்.

இறுதியாக நெடுஞ்சாலைத்துறையினர் ஜேசிபி இயந்திரம் கொண்டு வந்து சாலையில் விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.

மதுரை மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. சோழவந்தான், வாடிப்பட்டி, சமயநல்லூர், விளாங்குடி, அழகர்கோவில், மேலூர், திருமங்கலம், பூவந்தி, வரிச்சூர், கள்ளிக்குடி,பேரையூர், செக்கானூரணி, மேலக்கால்,தேனூர், துவரிமான், நாகமலைபுதுக்கோட்டை பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

மதுரை நகரில், விடிய, விடிய பலத்த மழை பெய்தால், மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர், சித்தி விநாயகர் கோயில் தெருவில், மழைநீர் குளம் போல சுற்றி வளைத்து நீர் வீட்டு வாசலில் நின்றது.
மருதுபாண்டியர் தெரு, ஆறாவது மெயின் ரோடு, சௌபாக்ய கோயில் தெருவில் சாக்கடை நீர் பெருக்கெடுத்து, சாலையில் கழிவு நீர் ஒடின.
மதுரை யாகப்ப நகர் எம்.ஜி.ஆர் தெருவில் தேங்கியுள்ள நீரில் இரண்டு வாகனத்தில் சென்ற இருவர் தவறி விழுந்தனர்.

மதுரை மணிநகரம் ரயில்வே தரைப்பாலத்தில் மழைநீரில் மூழ்கிய காரில் சிக்கிய இருவரை காப்பாற்றிய காவலர் மற்றும் பொதுமக்கள் போலீஸ் கூடுதல் டிஜிபி டேவிட்சன் பரிசுகள் வழங்கி பாராட்டு.

மதுரையில் நேற்றிரவு மூன்று மணி நேரத்திற்கு பெய்த கன மழையால் மணிநகரம் ரயில்வே தரைப்பாலத்தில் வெள்ள நீரில் மூழ்கிய தரைப்பாலத்தில் சிக்கி மூழ்கி கொண்டிருந்த காரில் சிக்கிய மதுரை கோச்சடை பகுதியை சேர்ந்த கோபி மற்றும் ரமேஷ் ஆகிய இருவரை துரிதமாக செயல்பட்ட காவலர் தங்கமுத்து மற்றும் மணிநகரத்தை சேர்ந்த கார்த்தி மற்றும் சந்திரசேகர் ஆகியோர் ஆள் உயர தண்ணீரில் இறங்கி
மீட்டனர். இதனைத் தொடர்ந்து, காவலர் தங்கமுத்து, மனிநகரத்தை சேர்ந்த கார்த்தி மற்றும் சந்திர சேகரின் நற்செயலை பாராட்டி தமிழ்நாடு காவல் துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் கூடுதல் இயக்குனர் டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் பரிசுகள் வழங்கி வெகுவாக பாராட்டினார்.

நவராத்திரி திருவிழா; முப்புடாதி அம்மன் திருவீதி உலா!

senkottai muppudathi amman - 2026
#image_title


செங்கோட்டையில் நவராத்திரி திருவிழா முப்புடாதி அம்மன் திருவீதி உலா.

செங்கோட்டை ஆரியநல்லுார் தெரு யாதவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீமுப்புடாதி அம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்தாண்டு நவராத்திரி திருவிழா கடந்த அக்டோபா் மாதம் 03ஆம் தேதி துவங்கியது விழாவில் 4ஆம் தேதி மாபெரும் திருவிளக்கு வழிபாடு நடத்தப்பட்டது. அதனைதொடா்ந்து நாள்தோறும் முப்புடாதி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

10ஆம் திருநாளான நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட மலர் சப்பரத்தில் வாணவேடிக்கை மேளதாளம் முழங்கிட கோவில் முன்பிலிருந்து துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

விழா ஏற்பாடுகளை விழாக்கமிட்டியினா், சமுதாய பெரியோர்கள், நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினா்கள், இளைஞரணி நிர்வாகிகள் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனா்.