Home Blog Page 304

போலீஸ் ரோந்து வாகனம் மோதி இந்திய மாணவி உயிரிழந்த விவகாரம்: நடவடிக்கை கோரும் 6,700 பேர்!

student died in accident by police vehicle in usa - 2026
#image_title

அமெரிக்காவில், போலீஸ் ரோந்து வாகனம் இடித்து இந்திய மாணவி உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரியை பணியில் இருந்து நீக்க வலியுறுத்தி, 6,700 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

அமெரிக்காவின், வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட்டில் நகரில், ஆந்திராவின் கர்னுால் மாவட்டத்தைச் சேர்ந்த ஜானவி கண்டூலா, 23, என்ற மாணவி, முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார்.

சியாட்டில் நகரில் மாணவி ஜானவி சாலையை கடந்தபோது, மணிக்கு 120கி.மீ., வேகத்தில் வந்த போலீஸ் ரோந்து வாகனம், அவர் மீது மோதியது.

இதில், 100 மீ., தொலைவுக்கு துாக்கி வீசப்பட்ட மாணவி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அந்த வாகனத்தை, கெவின் டேவ் என்ற போலீஸ் அதிகாரி ஓட்டினார். அவருடன், டேனியல் ஆடரெர் என்ற மற்றொரு போலீஸ் அதிகாரி யும் இருந்தார்.

விபத்துக்கு பின், சியாட்டில் போலீஸ் சங்க தலைவரை தொலைபேசியில் அழைத்த அதிகாரி டேனியல், இது குறித்து அவரிடம் தகவல் தெரிவித்தார்.

அப்போது மாணவி குறித்தும், அந்த விபத்து குறித்தும் கேலியாக பேசி அவர் சிரித்துள்ளார்.

இந்த உரையாடல், போலீஸ் அதிகாரி டேனியலின் உடம்பில் இருந்த கேமராவில் பதிவானது. அந்த, ‘ஆடியோ’ சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

விபத்து ஏற்படுத்தியதுடன், கேலி பேசிய அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என இந்திய வம்சாவளி எம்.பி.,க்களும், அமெரிக்க வாழ் இந்தியர்களும் கோரிக்கை விடுத்தனர்.

இந்திய தொழில் வளர்ச்சி வங்கியில் பணி வாய்ப்பு!

employment career opportunities - 2026
#image_title

இந்திய தொழில் வளர்ச்சி வங்கியில் காலியாக உள்ள 600 Junior Assistant Manager பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம் : ஐடிபிஐ வங்கி

பதவி : Junior Assistant Manager

காலியிடங்கள் : 600

கல்வித்தகுதி : பட்டப்படிப்பு

சம்பளம் : அறிவிப்பை பார்க்கவும்

வயது வரம்பு : 20-25

பணியிடம் : இந்தியா முழுவதும்

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

தேர்வு முறை: நேர்காணல், ஆன்லைன் தேர்வு

விண்ணப்பக்கட்டணம் : SC/ST/PWD Candidates – Rs.200/-

All Other Candidates – Rs.1000/- Mode of Payment – Online
இணையதள முகவரி : https://www.idbibank.in/

கடைசி தேதி : செப்டம்பர் 30,2023

500 கிலோ காய்கறிகளால் உருவான மணமேடை!

vegetable wedding stage - 2026
#image_title

500 கிலோ காய்கறிகளால் உருவான மணமேடை : உழவை போற்றும் விழிப்புணர்வு திருமணம்!

பல்லடம் அருகே நடைபெற்ற திருமணத்தில், 500 கிலோ காய்கறிகளால் அமைக்கப்பட்ட மணமேடை பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

கோவை மாவட்டம், அரசூரைச் சேர்ந்த ராமசாமி – ஆனந்தி தம்பதியர் மகன் முத்துக்குமார், திருப்பூர் மாவட்டம், பல்லடம் வேலம்பாளையத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் – சரஸ்வதி தம்பதியர் மகள் கீர்த்தனா ஆகியோருக்கு பல்லடம் அருகே சுல்தான்பேட்டையில் திருமணம் நடந்தது.

விவசாய குடும்பத்தைச் சேர்ந்த கீர்த்தனாவின் பெற்றோர், உழவு தொழிலை முன்னிறுத்தும் வகையில், காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்ட மணமேடையை அமைத்திருந்தனர்.

மண்டபத்தின் நுழைவாயில் வாழைமரம் மற்றும் தென்னங்கீற்றுகளால் முழுமையாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. மணமேடை, பூசணி, முட்டைகோஸ், காலிபிளவர், வெண்டை, முருங்கை, கேரட், பாகல், புடலை உள்ளிட்ட பல்வேறு வகை காய்களில், 500 கிலோ எடையிலும், கரும்பு மற்றும் வாழை இலைகளாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தது.

உழவுத் தொழிலை முன்னிறுத்தும் வகையில் ஓவியங்களும், மணமேடையின் மேற்புறம், ‘உழவு என்பது தொழில் மட்டுமல்ல உயிரின் ஆதாரம்’ என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தன.

வண்ண விளக்குகள், பல வகையான மலர்கள் மற்றும் பேனர்களால், ஆயிரக்கணக்கில் செலவு செய்பவர்கள் மத்தியில், விவசாய தொழிலை முன்னிறுத்தும்படி நடந்த இத்திருமணம், பலராலும் பாராட்டு பெற்றது.

மதுரை: கழிவறை, குப்பைத் தொட்டியில் பிடிபட்ட ஒன்றேகால் கோடி மதிப்பு தங்கம்!

madurai airport - 2026

மதுரை: மதுரை விமான நிலையத்தில், ஒரு கோடியே 17 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கழிவறை மற்றும் குப்பைத் தொட்டியில் கைப்பற்றிய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர். சந்தேகத்தின் பேரில் இலங்கைச் சேர்ந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

மதுரை விமான நிலையத்திற்கு நேற்று பிற்பகல் துபாயில் இருந்து மதுரைக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் வந்தது.
அந்த விமானத்தில், தங்கம் கடத்தி வருவதாக சுங்க இலாக வான் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து, சுங்க இலாக வான் நுண்ணறிவு பிரிவினர் துபாயில் இருந்து மதுரை வந்த பயணிகள் இடம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் .

அப்போது தங்கம் ஏதும் கைப்பற்றப்படவில்லை. இதனை அடுத்து, விமானத்தின் உள்பகுதியிலும் கழிவறை பகுதிகளிலும் சோதனைகளில் ஈடுபட்டனர். அப்போது, கழிவறை எண் 7ல் தங்கத்தை பேஸ்ட் களிமண் கொண்ட கலவையில் ஒரு கிலோ 124 கிராம் கைப்பற்றப்பட்டது. மேலும், அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் 800 கிராம் மதிப்புள்ள தங்க களிமண் பேஸ்ட் கைப்பற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் கழிவறை பகுதிக்குச் சென்ற இலங்கையைச் சேர்ந்த இரண்டு
பயணிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.

கழிவறையில் ஒரு கோடியே 17 லட்சம் மதிப்பிலான 1 கிலோ 924 கிராம் தங்கத்தை களிமண்ணில் மறைத்து வைத்து மர்ம நபர்கள் போட்டுச் சென்றுள்ளனர். இது குறித்து, மதுரை விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் விசாரணை மேற்கொண்டதில் துபாயில் இருந்து மதுரை வழியாக இலங்கை செல்ல இருந்த பயணி இருவர் என்பது தெரிய வந்தது.

சுங்க இலாகா வான் நுண்ணறிவுப் பிரிவினில் விசாரணையில் இலங்கைப் பயணிகள் இருவர் துபாயில் இருந்து மதுரை வந்து மதுரையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு செல்கின்றனர் என்று தெரியவந்தது.

இதை அடுத்து, தங்கத்தை கைப்பற்றி இருவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இலங்கை குடியுரிமை பெற்றவர்கள் என்பதாலும் அவர்கள் மீது இந்தியாவில் வழக்கு பதிய முடியாது என்பதாலும் அவர்கள் குறித்து தகவல் இலங்கைக்கு அனுப்பப்பட்டது.

பயணிகள் இருவரும் இலங்கை அனுப்பி வைக்கப்பட்டனர். கைப்பற்றப்பட்ட தங்கம் ஒரு கிலோ 924 கிராம் இந்திய சந்தை மதிப்பில் ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய் என தெரிகிறது.

பெருமை வாய்ந்த பிள்ளையார்!

vinayaka chathurthi wishes - 2026
#image_title

கட்டுரை: திருப்பூர் கிருஷ்ணன்

இப்போது நாடெங்கும் விமரிசையாகக் கொண்டாடப் படுகிற விநாயக சதுர்த்தி விழாவில் இத்தகைய உற்சாகமான போக்கு தோன்றக் காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கீதைக்கு உரையெழுதிய பால கங்காதர திலகர். அவருக்கு மதப்பற்றும் ஆன்மிகப் பற்றும் மிகுதி.

ஒருமுறை ரயில் பயணத்தில் தற்செயலாக விவேகானந்தரைச் சந்தித்தார் அவர். விவேகானந்தரின் தோற்றமும் பேச்சும் அவர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன.

அவரைத் தம் இல்லத்தில் ஓர் அறையில் தங்குமாறு வேண்டினார். பத்து நாட்கள் திலகர் வசித்த இல்லத்தில் ஓர் அறையில் விவேகானந்தர் தங்கியிருந்தார்.

அந்த அறையை விவேகானந்தர் தங்கி தியானம் செய்த இடம் என்பதால், புனிதமானது என்று கருதியது திலகரின் மனம்.

இந்தியர்களை ஒருங்கிணைத்தால்தான் சுதந்திரம் பெற முடியும். விவேகானந்தர் வழிதான் சரியானது. இந்தியர்களை ஆன்மிக ரீதியாக ஒருங்கிணைப்பது தான் சாத்தியமானது.

மொழிகளாலும் மாநிலங்களாலும் இந்திய மக்கள் பிரிந்திருந்தாலும் ஆன்மிகம் அவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்திய ஆன்மிகம் மொழிப் பிரிவு, எல்லைப் பிரிவு கடந்து பரவியிருக்கிறது.

வடக்கே காசிக்குச் செல்பவர்கள் தெற்கே ராமேஸ்வரத்திற்கும் வருகிறார்கள். ராமாயணமும் மகாபாரதமும் எல்லா இந்திய மொழிகளிலும் இருக்கின்றன. கீதை எல்லா இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.

ஆன்மிகம் இந்தியர்களின் ஆழ்மனத்தில் வேரூன்றியிருக்கிறது. இந்தியாவில் நாத்திகச் சிந்தனைகள் மிக மிகக் குறைவு.

எனவே விவேகானந்தர் வழியில் ஆன்மிகத்தின் மூலம் இந்தியர்களை ஒன்றிணைப்பதே சரி, அதுவே எளிதில் சாத்தியமாகக் கூடியது எனத் திலகர் முடிவெடுத்தார்.

அப்படியானால் இந்தியர்களை எளிதில் ஒன்றிணைக்கக் கூடிய ஆன்மிகக் கொள்கை எது எனவும் யோசனையில் ஆழ்ந்தார்.

அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம் என்ற பலவகைத் தத்துவப் போக்குகள் பாரதம் முழுவதும் பரவியிருக்கின்றன.

எனவே ஒரு குறிப்பிட்ட தத்துவம் சார்ந்து இந்தியர்களை ஒருங்கிணைப்பது சிரமம். மற்ற தத்துவப் பிரிவினர் மனத்தால் இணைவதில் சங்கடம் எழும்.

ஆனால் மக்கள் போற்றித் துதிக்கும் ஏதேனும் ஒரு கடவுள் வடிவத்தின் மூலம் ஒற்றுமையை உண்டுபண்ணி விடலாம்.

அதிலும் ஒரு சிக்கல். இந்துமதம் எல்லா வகை வழிபாட்டுக்கும் இடம்தரும் பரந்த மனப்பான்மை கொண்ட மதம்.

சிவனை வணங்குபவர்கள், திருமாலை வணங்குபவர்கள் என தெய்வ வடிவங்களில் தங்களுக்கு உகப்பானதை ஏற்றுத் தொன்று தொட்டு அந்த மரபில் வழிபடுபவர்கள் பற்பலர்.

அவர்களை ஒரே தெய்வ வடிவத்தைப் போற்றுவதன் மூலம் இணைப்பது எப்படி? அந்த வகையில் இந்து மதத்தின் எல்லாப் பிரிவினரும் ஏற்கும் வகையில் ஒரு தெய்வ வடிவம் வேண்டுமே?

திலகர் மனத்தில் ஒளிவீசும் விநாயகர் உருவம் தோன்றியது. விநாயகர்தான் இந்து மதத்தின் எல்லாப் பிரிவினரும் ஏற்கும் கடவுள்.

வைணவர்களும் கூடத் தும்பிக்கை ஆழ்வார் என விநாயகரைக் கொண்டாடுகிறார்கள். இந்து மதத்தின் எந்தப் பிரிவைச் சார்ந்தவர்களும் எழுதும்போது பிள்ளையார் சுழி போட்டுத்தான் எழுதத் தொடங்குகிறார்கள்.

சத்ரபதி சிவாஜி காலத்தில் விநாயக சதுர்த்தி விழா ஓரளவு பிரபலமாகியிருந்தது.

`நாம் விநாயக சதுர்த்தி விழாவை தேசிய விழாவாக மறுபடி உருவாக்குவோம். மக்களை ஆன்மிக ரீதியாக ஒருங்கிணைப்போம்.

ஆங்கிலேய ஆட்சி நீங்கி நல்லாட்சி மலர இது ஒன்றே வழி. இந்திய மக்களை ஒருங்கிணைத்து விட்டால் சுலபமாக சுதந்திரம் பெற்றுவிட முடியும்.`

சரியாகச் சிந்தித்த திலகர் சரியாகவே முடிவெடுத்தார். விநாயகர் சதுர்த்தி விழாவை தேசமெங்கும் பிரபலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.

இந்தியாவின் எல்லாப் பிரதேசங்களிலும் விநாயக சதுர்த்தியை விமரிசையாகக் கொண்டாட வேண்டும் எனப் பிரசாரம் செய்யலானார்.

தாம் முன்னின்று நடத்திய முதல் விநாயக சதுர்த்தி ஊர்வலத்தை ஒரு புனிதமான இடத்திலிருந்து தொடங்கி நடத்த விரும்பினார். அத்தகைய மிகப் புனிதமான இடம் அவர் இல்லத்திலேயே இருந்தது. விவேகானந்தர் பத்து நாட்கள் தங்கியதால் புனிதமடைந்த அறைதான் அது.

அந்த அறையிலிருந்தே தம் முதல் விநாயக சதுர்த்தி ஊர்வலத்தை அவர் தொடங்கினார். அவ்விதம் தொடங்கியதுதான் நாடெங்கும் நிகழும் இப்போதைய விமரிசையான விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டங்களுக்குத் தொடக்கத்தில் போடப்பட்ட பிள்ளையார் சுழி!…

*மகாபாரதத்தை, வியாசர் சொல்லச் சொல்ல தந்தத்தால் எழுதி நமக்களித்தவர் பிள்ளையார்தான். பலவகைப் பிள்ளையார்கள் இருக்கிறார்கள்.

கணிப்பொறியைக் கையில் வைத்து இயக்கும் கணிப்பொறி விநாயகர் கூட இப்போது காட்சிப் படுத்தப் படுகிறார். கணிப்பொறி விநாயகருக்கு ஒரு செளகரியம். அவரிடம் `மவுஸ்` ஏற்கெனவே உண்டு!

விநாயகரைப் பற்றிப் பல்வேறு தலங்களில் பற்பல கதைகள் உலவுகின்றன. `கடுக்காய்ப் பிள்ளையார் என்று ஒரு பிள்ளையார் திருவாரூருக்குத் தெற்கே திருக்காறாயில் என்ற திருத்தலத்தில் காட்சி தருகிறார்.

அந்தப் பிள்ளையாருக்குக் கடுக்காய்ப் பிள்ளையார் எனப் பெயர்வந்த கதை சுவாரஸ்யமானது.

அந்த ஊருக்கு ஒரு வியாபாரி ஜாதிக்காய் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக வாங்கிக் கொண்டு வந்தான். ஜாதிக்காய்க்கு வரி உண்டு. அதனால் அவன் டோல்கேட் என்கிற சுங்கச் சாவடியில் கடுக்காய் மூட்டை என்று பொய்சொல்லி ஏமாற்ற எண்ணினான்.

அதிகாரிகள் ஏமாற வேண்டுமே? அதற்காக வண்டியில் முன்னாலும் பின்னாலும் கடுக்காய் மூட்டைகளைப் போட்டுக் கொண்டு ஜாதிக்காய் மூட்டைகளை மறைத்து எடுத்துக் கொண்டு வந்தான்.

அந்த விதமாக வரி கொடுக்காமல் ஏமாற்றி ஜாதிக்காய் மூட்டைகளை ஊருக்குள் கொண்டுவந்து விட்டான் வியாபாரி.

பிள்ளையார் அநீதி செய்தால் தண்டனை கொடுத்து விடுவாரே? அதனால் உண்மையாகவே எல்லா மூட்டைகளிலும் இருந்த ஜாதிக்காயை இரவோடு இரவாக கடுக்காயாகவே மாற்றிவிட்டார்.

மறுநாள் மூட்டைகளைப் பிரித்துப் பார்த்த வியாபாரி, திகைத்துப் போனான். இனி என்ன செய்வது? ஏராளமான பண நஷ்டம் ஏற்படுமே?

கடுக்காய் மட்டும் மறுபடி ஜாதிக்காயாக மாறினால் அதற்குண்டான வரியும் அதற்குமேல் அபராதமும் கட்டுவதாக வேண்டிக் கொண்டான்.

அவன் பிரார்த்தனை பிள்ளையார் மனதில் இரக்கத்தை ஏற்படுத்தியது. மறுபடி கடுக்காயை ஜாதிக்காயாக மாற்றிவிட்டார் பிள்ளையார்.

மகிழ்ச்சி அடைந்த வியாபாரி ஒப்பந்தப்படி வரி செலுத்திவிட்டு பக்தியுடன் பிள்ளையாரை வணங்கினான் என்கிறது கடுக்காய்ப் பிள்ளையார் கதை. பிள்ளையாருக்கு யாராலும் கடுக்காய் கொடுத்துவிட முடியாது!

இப்படியாக இனிக்கும் கொழுக்கட்டையைக் கையில் வைத்திருக்கும் பிள்ளையாருக்கு அந்த ஊரில் கசக்கும் கடுக்காய், பெயரில் அமைந்துவிட்டது!

*`அவ்வையாருக்குப் பிள்ளையார் மேல் மிகுந்த பக்தி. தனக்குத் திருமணம் நிச்சயிக்கப் பட்டபோது அதை விரும்பாத அவ்வையார் பிள்ளையாரை வேண்டித்தான் முதுமையைப் பெற்றார்.

அவ்வைப் பாட்டி ஊர் ஊராகச் சுற்றிப் பல்வேறு இடங்களுக்குச் சென்றாள். மன்னர்களைச் சந்தித்ததோடு மக்களையும் சந்தித்தாள்.

தமிழையும் ஆன்மிகத்தையும் எல்லா இடங்களிலும் பரப்பினாள். உயர்ந்த நீதிக் கருத்துகளை அழகிய வெண்பாக்களில் தொகுத்துத் தந்தாள்.

`வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்

நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு

துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு`

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலம்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்கு

சங்கத் தமிழ் மூன்றும் தா

என்றெல்லாம் அவ்வைப் பாட்டி தன் இஷ்ட தெய்வமான விநாயகரைப் பாடித் துதித்திருக்கிறாள்.

`சீதக் களப செந்தாமரை` எனத் தொடங்கும் அவ்வையார் எழுதிய விநாயகர் அகவல் யோக சாஸ்திரம் முழுவதையும் செய்யுளில் சொல்கிறது. தமிழையும் ஆன்மிகத்தையும் ஒருசேர வளர்த்த பெருமை அவ்வைக்குரியது.

பாரதியார் பிள்ளையார்மேல் `விநாயகர் நான்மணி மாலை` எழுதி அவரைத் தம் கவிதையில் போற்றுகிறார்.

பிள்ளையார் தொந்தியும் தொப்பையுமாக யானை முகத்துடன் அழகே வடிவாக ஒரே இடத்திலேயே உட்கார்ந்திருக்கிறார். அதனால்தான் கல்லுப் பிள்ளையார் மாதிரி ஏன் அசையாமல் இருக்கிறாய் என்று நாம் சிலரைக் கேட்கிறோம்.

சிவன் பார்வதியின் மூத்த பிள்ளையான பிள்ளையாரை மரியாதையோடு ஆர் விகுதி சேர்த்துப் பிள்ளையார் என வழங்குகிறோம். நமக்கு வரும் விக்கினங்களை அழிப்பதால், விக்னேஸ்வரர் என்கிறோம்.

எந்த பூஜை செய்தாலும் முதலில் அவருக்கு பூஜை செய்துவிட்டுத் தான் தொடங்குகிறோம். எப்போதும் முதல் பூஜை அவருக்குத்தான்.

தமிழகத்தில் அரச மரத்தடியிலும் தெரு மூலைகளிலும் என எல்லா இடங்களிலும் பிள்ளையார் எழுந்தருளியிருக்கிறார். இந்த அளவு பிள்ளையார் கோயில்கள் இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லை.

தமிழ் மக்கள் விநாயகர்மேல் அளவற்ற பக்தி உடையவர்கள். பல அரச மரத்தடிகளில் மேற்கூரை கூட இல்லாமல் பிள்ளையார் காட்சி தருகிறார்.

எதை எழுதினாலும் பிள்ளையார் சுழி போட்டுவிட்டுத்தான் எழுதத் தொடங்குகிறோம்.

மளிகைக் கடையில் வாங்க வேண்டிய பொருட்களை எழுதினால்கூட அந்தக் காகிதத்தில் பிள்ளையார் சுழிபோட்டுப் பிறகுதான் வாங்கவேண்டிய பொருட்களை எழுதுகிறோம்!

நம் சுழி எப்படியிருந்தாலும் பிள்ளையார் அதைச் சரிசெய்து விடுவார் என்பது நம் நம்பிக்கை.

`நம்பிக்கை கொண்டிங்கு நாளும் தொழுவோர்க்கு

தும்பிக்கை நாதன் துணை!`

என்கிறது புகழ்பெற்ற ஈரடி வெண்பா ஒன்று. விநாயகரை வழிபடுவோம். விக்கினங்கள் நீங்கப் பெற்று வாழ்வில் உயர்வோம்!

எய்ம்ஸ் மதுரை திட்டம்: மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பி. சிங் பாகேல் ஆய்வு!

202204041148378549 Classes for Madurai Aims Medical College start today in SECVPF - 2026

எய்ம்ஸ் மதுரை திட்டம்: மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பி.சிங் பாகேல் எய்ம்ஸ் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்

எய்ம்ஸ் மதுரை திட்டத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை மேற்பார்வையிட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையில், சிங் பாகெல், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணை அமைச்சர், எய்ம்ஸ் மதுரை திட்ட செல் அலுவலகம் மற்றும் இடத்தை பார்வையிட்டார்.

வரவிருக்கும் எய்ம்ஸ் மதுரை வசதியின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதே அவரது பயணத்தின் நோக்கமாகும். எய்ம்ஸ் மதுரையின் கண்காணிப்புப் பொறியாளர் கர்னல் அலோக் தேவ்ராணி, இந்தத் திட்டம் மற்றும் அதன் பல்வேறு வளர்ச்சி நிலைகள் குறித்த விரிவான அறிவிப்பை வழங்கினார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனைக்கான மாஸ்டர் பிளானையும், அமைச்சரிடம் காண்பித்து, திட்டத்தின் முன்னேற்றம் குறித்து திருப்தி தெரிவித்தார்.
இந்த வசதியின் சாத்தியமான தாக்கத்தை எடுத்துக்காட்டி, எய்ம்ஸ் மதுரை, தமிழக மக்களுக்கு மட்டுமின்றி, தென்னிந்தியா முழுவதும் அதன் சேவைகளை விரிவுபடுத்தும் வகையில், அதிநவீன சுகாதார சேவையின் கலங்கரை விளக்கமாக செயல்படும் என்று கூறினார்.

தனது பயணத்தின் போது, ​​எய்ம்ஸ் மதுரையின் ஸ்தாபனத்தின் பின்னணியில் உள்ள தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்து, செய்தியாளர்களிட
மும், மதுரை மக்களிடமும் அமைச்சர் பேசினார். “எய்ம்ஸ் மதுரை, தென்னிந்தியா முழுவதும் சுகாதார சேவைகளை மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும் அதிநவீன மருத்துவ வசதியாக அமைக்கப்பட்டுள்ளது அதன் இருப்பு பிராந்தியத்தின் மருத்துவ நிலப்பரப்பை கணிசமாக மேம்படுத்தும், பலரின் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்யும்.

நாடு முழுவதும் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான அதன் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில், தற்போதைய அரசாங்கம் எய்ம்ஸ் மதுரை திட்டத்தின் சுமூகமான முன்னேற்றம் மற்றும் சரியான நேரத்தில் முடிக்க உறுதி பூண்டுள்ளது என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

எய்ம்ஸ் மதுரைக்கு, (ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம்) அதன் அதிகாரப்பூர்வ மேம்பாட்டு உதவி கடன் மூலம் நிதியளிக்கிறது. எய்ம்ஸ் மதுரைக்கான கட்டுமானப் பணிகள் 2023 டிசம்பரில் தொடங்கப்படும், மேலும், முதல் கட்டம் 18 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது, இது பிராந்தியத்தில் மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய படியாகும்.

அன்னைத் தமிழைக் காக்க ஆன்மீகத்தை வளர்ப்போம்: விநாயக சதுர்த்தி வாழ்த்து!

hindumunnani - 2026

“அன்னைத் தமிழைக் காக்க; ஆன்மீகத்தை வளர்ப்போம். அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கை:

இந்து முன்னணி பேரியக்கத்தின் சார்பாக “தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள்” என்ற அடிப்படையில், ஒரு இந்து மறுமலர்ச்சி விழாவாக வீரத்துறவி ராமகோபாலன் அவர்களால் கடந்த 1983 ம் ஆண்டு துவக்கப் பட்டு கடந்த 40 ஆண்டுகளாக வீதி தோறும் விநாயகரை வைத்து நடைபெற்று வருகின்ற ஒரு சீர்மிகு விழா விநாயகர் சதுர்த்தி விழா.

இந்த விநாயகர் சதுர்த்தி விழாவானது மக்கள் மத்தியில் ஜாதி வேறுபாடுகளை, இன வேறுபாடுகளை, மொழி வேறுபாடுகளை, பொருளாதார வேறுபாடுகளை அழித்து அனைவருக்குமான விழாவாக இன்று மாறி உள்ளது, அதற்கு காரணம் இந்து முன்னணி.

இந்துக்களை அவமானப்படுத்துவது, புறம் பேசுவது, இந்து நம்பிக்கையை; இந்து வழிபாட்டு முறைகளை, இந்து மதத்தை, சனாதன தர்மத்தை கேவலப்படுத்துவது போன்றவைகளை முறியடித்து தமிழகம் என்றும் ஆன்மீக பூமி என்பதையும் , தேசிய சிந்தனை கொண்ட மக்கள் வசிக்கும் பூமி என்பதையும் விநாயகர் சதுர்த்தி விழா மெய்ப்பித்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு தலைப்பை முன்னெடுத்து அதை மக்கள் மத்தியில் கொண்டு சென்று மக்களை விழிப்புணர்வு அடையச் செய்கின்ற பணியை விநாயகர் சதுர்த்தி மூலமாக இந்து முன்னணி பேர் இயக்கம் செய்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு “அன்னைத் தமிழைக் காக்க; ஆன்மீகத்தை வளர்ப்போம்” என்ற முழக்கத்தை முன்னிறுத்தி சுமார் இரண்டு லட்சம் விநாயகர்கள் தமிழகம் முழுக்க பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

தமிழை வைத்து பிழைப்பவர்கள் தமிழை வைத்து வயிறு வளர்ப்பவர்கள் யார் யார் என்பதை தோலுரித்துக் காண்பிக்கின்ற பணியை இந்த விநாயகர் சதுர்த்தி மூலமாக இந்து முன்னணி வெளிக் கொண்டு வர இருக்கிறது.

பக்தி பரவசத்தோடு விநாயகரை வணங்கும் அனைவரும், எல்லா வளமும் நலமும் பெற்று நல்ல ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளோடு சிறப்பான வாழ்க்கை அமைய பெற்று வாழ வேண்டும் என்று முழுமுதற் கடவுள் விநாயகரை பிரார்த்தனை செய்து கொள்கிறோம்.

தமிழக மக்கள் அனைவரும் பட்டிதொட்டி எங்கும் நடக்கின்ற இந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.

ஜனநாயக கூட்டணியிலிருந்து இதுவரை அழைப்பு வரவில்லை: ஒபிஎஸ்!

ops interview at madurai copy - 2026
#image_title

மதுரை: காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்,காவிரி நதிநீர் ஆணையம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றின் தீர்ப்பை செயல்படுத்தமல், கர்நாடக அரசு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை என்று ஓபிஎஸ்., செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.

சென்னையில், இருந்து பெரியகுளம் செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

கர்நாடக அரசு அனைத்து கட்சி தீர்மானம் குறித்த கேள்விக்கு:
உச்சநீதிமன்ற தீர்ப்பின் பிரகாரமும், காவிரி நடுவர் நீதிமன்ற இறுதி தீர்ப்பின் படியும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என்று சொல்வது சட்டவிரோதம். காவேரி பிரச்சனையை தீர்ப்பதற்கு தான் காவிரி நடுவர் மன்றம் நிறுவப்பட்டது.

17 ஆண்டுகளுக்குப் பின்பு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பு வந்த பிறகு அப்போதிருந்த முதல்வர் ஜெயலலிதா இந்த நீர் பத்தாது, அப்போது திமுக ஆட்சி நடைபெற்றது நீரை உறுதிப்படுத்த வேண்டும் அதன் பின்பு இந்த நீர் பற்றாது என்று உச்ச நீதிமன்றத்தின் வழக்கு தொடுக்க வேண்டும் என்று அறிக்கையின் மூலம் தெளிவுபடுத்தி இருந்தார்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பின் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாது என்று துரைமுருகன் தெரிவித்தார். ஆனால், அதன்பின் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்வதில் மற்ற மாநிலங்களுக்கு வழங்கிய நீரை குறைத்து பெங்களூருக்கு கூடுதலாக நீர் வழங்கப்பட்டது. அதன் பிறகு தமிழக அரசு வழக்கு தொடுத்து 172 டிஎம்சி நீர் வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை உறுதிப்படுத்த காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

காவிரி நடுவர் மன்றம் இது இறுதி தீர்ப்புக்கு அரசாணை பெறுவதற்கு உரிய முன்ன நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் பிறகு, அதிமுக ஆட்சியில் தான் உச்சநீதிமன்றம் எடுத்த சென்று 10 தேர்வு மூலமாக இறுதி தீர்புக்கு அரசாணை பெற்று தந்தார். காவிரி நீர் முறைப்படுத்தும் ஆணையம் அமைக்க வேண்டும் அப்போது ஜெயலலிதா கேட்டுக்கொண்டார். அதனையும் உச்ச நீதிமன்றம் எடுத்துச் சென்றார்.

அதன் பிறகு காவிரி நதிநீர் ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவையும் அமைத்து நீண்ட நெடிய வரலாறு உள்ளது. போராடி பெற்ற இறுதி தீர்ப்பை அமல்படுத்த முடியாது என்ற கர்நாடக அரசு சொன்னால், இந்திய அரசியல் சட்டத்தை கர்நாடகா அரசு மதிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும் தமிழக மக்களால் இருக்கிறார்கள்.

திமுக அரசு இதை முறையான சட்டப் பிரச்சனை மூலமாகவோ அல்லது பேச்சு வார்த்தை மூலமாகவோ துரித நடவடிக்கை எடுத்து அம்மா பெற்று தந்த நீரை தர வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கையாக உள்ளது.

வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அழைப்பு வந்ததா என்ற கேள்விக்கு:
இதுவரை இல்லை. என்றார்.

சசிகலாவை சந்திப்பது குறித்த கேள்விக்கு:
இதுவரை பார்க்கவில்லை, எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்.

புரட்சிப் பயணம் மீண்டும் துவங்குவது குறித்த கேள்விக்கு:
மீண்டும் தொடரும் என்றார்.

கரூரில் விஸ்வகர்மா ஜயந்தி விழா! சிறப்பு பூஜைகள்!

vishwakarma jayanthi copy - 2026
#image_title

கரூரில் உள்ள விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்து.

ஸ்ரீ விஸ்வகர்மா தொழில் கடவுளாக அனைவராலும் பூஜிக்கப்பட்டு வருகிறார். இந்தியா முழுவதும் ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

கரூரில் தேர்வீதி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோயிலில் இன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு விஸ்வகர்மா ஜெயந்தி திருநாள் காரணமாக விஸ்வகர்மா ஹோமம், கணபதி ஹோமம், பஞ்சபிரம்ம ஹோமம், நவக்கிரக ஹோமம், காயத்ரி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் போன்றவை நடத்தப்பட்டன.

அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், அரிசி மாவு, கரும்பு சாறு, பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

பின்னர் பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சுவாமிகளுக்கு தீபாராதனை கும்பா ஆரத்தி, கற்பூர ஆரத்தி,மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.

இந்த சிறப்பு நிகழ்ச்சியானது விஷ்வகர்மா சித்தி விநாயகர் அறக்கட்டளை தலைவர் கருப்புசாமி மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நேசனல் சீட்ஸ் கார்ப்ரேசன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

employment career opportunities - 2026
#image_title

நேசனல் சீட்ஸ் கார்ப்ரேசன் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரம்…

ரூ.77,000 மாத சம்பளம்..

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!

நேசனல் சீட்ஸ் கார்ப்ரேசன் லிமிடெட் – மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நேசனல் சீட்ஸ் கார்ப்ரேசன் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்:

ஜூனியர் அதிகாரி
ஜூனியர் அலுவலர்
மேனேஜ்மென்ட் பயிற்சியாளர்
பயிற்சியாளர் (வேளாண்மை)
பயிற்சியாளர் (மார்க்கெட்டிங்)
பயிற்சியாளர் (க்வாலிட்டி கன்ட்ரோல்)
பயிற்சியாளர் (ஸ்டெனோகிராஃபர்)
பயிற்சியாளர் (வேளாண் ஸ்டோர்ஸ்)
மொத்த பணியிடங்கள்: 89

கல்வித் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு பி.எஸ்.சி. வேளாண் படிப்பு, இளங்கலை பொறியியல், பி.டெக். உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

ஜூனியர் அலுவலர் – ரூ.22,000 -77,000

மேனேஜ்மென்ட் பயிற்சியாளர் –  ரூ.55,680

பயிற்சியாளார் – ரூ.23,664

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

எப்படி விண்ணப்பிப்பது?

https://www.indiaseeds.com/ – என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 25.09.2023

வயது வரம்பு, தேர்வு தேதி உள்ளிட்டவை குறித்து கூடுதல் தகவலுக்கு https://www.indiaseeds.com/career/2023/NSC2023Rec/Rec202308.pdf