Home Blog Page 311

இன்று திருநெல்வேலி தினம்..

Tirunelveli city - 2026
#image_title

இன்று திருநெல்வேலி தினம் தென் பொதிகையில் பிறந்த மொழி தென்நாடே வளர்ந்த மொழி . வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்தே இயங்கும் பழமையான நகரம் திருநெல்வேலி.

திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி’ எனச் சம்பந்தரும், “தண் பொருநைப் புனல்நாடு’ எனச் சேக்கிழாரும், “பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி’ என்று கம்பரும் பாடிய பூமி, திருநெல்வேலி ஆகும்

“திருநெல்வேலி” என கம்பீரமாகவும், “நெல்லை” என செல்லமாகவும் அழைக்கப்படும் இம்மாவட்டம், பரந்து விரிந்து இருந்த மாவட்டமாகும். 3 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த இந்த பூமிக்கு வணிகம் செய்ய வந்த பிரிட்டீஷ் கிழக்கிந்திய கம்பெனியார், 1790 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி “திருநெல்வேலி மாவட்டத்தை உருவாக்கினர்.

பிரிப்பு

அன்றைய தினத்தில் திருநெல்வேலி மாவட்டத்துடன் இன்றைய தூத்துக்குடி, (இளைய) தென்காசி மாவட்டங்களும், விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களின் சில பகுதிகளும் இணைந்து இருந்தன. காலப்போக்கில் விருதுநகரும், ராமநாதபுரமும் பிரிந்து, புதிய மாவட்டங்களாக உருவாயின. பின்பு, தூத்துக்குடியும் தனியாகப் பிரிக்கப்பட்டு, வ உ சிதம்பரனார் மாவட்டமாக உதயமானது.
திருநெல்வேலிக்கு “திருநெல்வேலி கட்டபொம்மன் மாவட்டம்” எனப் பெயரிடப்பட்டது.
1997-ம் ஆண்டு, மாநில அளவில் உருவாக்கப்பட்ட சர்ச்சைகளின் காரணமாக, மாவட்டங்களில் இருந்து தலைவர்களின் பெயர்கள் விடைபெற்றன. சமீபத்தில் திருநெல்வேலியில் இருந்து தென்காசி பிரிக்கப்பட்டு, தனி மாவட்டமாக இயங்கி வருகிறது. என்னதான் தனித்தனி மாவட்டங்களாகி விட்டாலும், தூத்துக்குடியும், தென்காசியும் இன்னும் நெல்லையின் சகோதர மாவட்டங்களாகவே பின்னிப்பிணைந்துள்ளன.

திருநெல்வேலி என்றதும், உலகின் எந்த மூலையில் இருப்போருக்கும் நினைவுக்கு வருபவை, திருநெல்வேலி அல்வாவும், தாமிரபரணி ஆறும் தான். திருநெல்வேலியின் அடையாளங்களாக இவையிரண்டும் காலங்காலமாக நிலைத்திருக்கின்றன.

நெல்லுக்கு வேலி

வேணுவனம், திருநெல்வேலியான கதை
வயல்வெளிகள் நிரம்பிய திருநெல்வேலியின் பண்டைய பெயர் “வேணுவனம்” என்றும், கொட்டித்தீர்த்த மழை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படாமல் “நெல்லுக்கு வேலியிட்டு நெல்லையப்பர் (இறைவன்) காத்ததால் நெல்வேலி என்று பெயர் பெற்று, அதுவே பின்பு “திருநெல்வேலி” என நிலைத்திற்று” என்றும் பெயர்க்காரணம் வழங்கப்படுகிறது.

நெல்லையின் பிரதான அடையாளம், நெல்லையப்பர்-காந்திமதியம்மன் ஆலயம். ஆனி மாதந்தோறும் நடைபெறும் நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் சிறப்பு வாய்ந்தது. தமிழகத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், திருவாரூர் தியாகராஜர் தேர்களுக்கு அடுத்து 3-வது பெரிய தேர், நெல்லையப்பர் தேராகும்.

பொதிகைமலை – தமிழ்மொழி பிறந்த திருநெல்வேலி மாவட்டம் :

தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் பொதிகை மலையில் தான் இயற்றப்பட்டது. இமயமலைக்கு நிகரானது தென்னிந்தியாவின் கைலாயம்தான் அகஸ்தியர் வாழும் பொதிகை மலை.தமிழ் தோன்றிய இடமாக கருதப்படுவதால் பொதிகை தமிழ் கூறும் நல்லுலகின் தனிக் கவனம் பெறுகிறது. அருவிகள் ஆர்த்தெழும் திருக்குற்றாலம் அடங்கலாக பொதிகை மலைத் தொடர் அகன்று அமைந்திருக்கிறது. இத்தொடரின் முத்தாய்ப்பாக அகத்தியர் தங்கிய ஏக பொதிகை விலங்குகிறது. குற்றாலம் தேனருவிக்கு மேலே உள்ள பரதேசி புடவு தமிழ் தோன்றிய இடம் இது என்பதற்கு சான்றாக உள்ளது. இங்கு பொறிக்கப்பட்டுள்ள 15 எழுத்துக்களை இதுவரை யாராலும் படித்தறிய முடியவில்லை. அந்த எழுத்துக்கள் தமிழின் வட்டெழுத்து, தமிழிக்கு முந்தைய ஆதி எழுத்துக்களாக அறியப்பட்டுள்ளன

“தென்னகத்து ஆக்ஸ்போர்டு”

திருநெல்வேலி மாநகரப்பகுதிக்குள், திருநெல்வேலியும், பாளையங்கோட்டையும் ஒட்டிப்பிறந்த இரட்டை நகரங்களாக விளங்குகின்றன.
நடுவில் ஓடும் தாமிரபரணி ஆறு, புவியியல்ரீதியாக இரு நகரங்களையும் பிரித்தாலும், தன் நீர் வளத்தால் இணைத்தே வைத்திருக்கிறது. அதோடு, திருநெல்வேலியையும், பாளையங்கோட்டையையும் இணைக்கும் 178 ஆண்டு பழமை வாய்ந்த “சுலோசனா முதலியார்” ஆற்றுப்பாலமும் இம்மாநகரின் தன்னிகரில்லா தனித்த அடையாளமாக விளங்குகிறது.

நெல்லையோடு இணைந்த பாளையங்கோட்டைக்கு தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்ற சிறப்புப் பெயரும் உண்டு. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கல்விப்பணியில் தமிழகத்திலேயே சிறந்து விளங்கி வருகிறது, பாளையங்கோட்டை.

இங்கு சாலைகள் தோறும் கல்விச்சாலைகளை காண முடியும். ஒரு நகரத்தில் பள்ளி, கல்லூரிகள் இருப்பது இயல்பு. ஆனால் பள்ளி, கல்லூரிகளுக்காகவே ஒரு நகரம் இருப்பது இங்கே நெல்லையில் தான். 55 ஆண்டு பெருமை வாய்ந்த திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரியும், அதனுடன் இணைந்து சமீபத்தில் தொடங்கப்பட்ட உயர் சிறப்பு மருத்துவமனையும் (Super Speciality Hospital) அமைந்திருப்பது, பாளையங்கோட்டையில் தான்.

புலிகளின் பொற்காடு பொதிகைமலை :
இந்த மலைகளில்தான் இந்தியாவிலேயே அதிக புலிகள் இருந்தது. இது புலிகளின் பொற்காடு என்றும் கூறப்பட்டது. புலிகள் உள்பட காட்டு விலங்குகள் அதிகம் இருப்பதால் இம்மலை ஒன்றும் அந்த அளவுக்கு சுலபமாக ஏறக்கூடியது அல்ல.
கடல் மட்டத்திலிருந்து 6200 அடி உயரத்தில் உள்ளது பொதிகை மலை. இது ஆனை மலையின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. இந்த மலை மகேந்திரகிரி , பாபநாசம் உள்ளிட்ட மலைகளையும், முண்டந்துரை காடுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

அதிக மழை பெறும் பொதிகைமலை :
ஆனைமலைத் தொடரின் ஒரு பகுதியாகவும், மகேந்திரகிரி மலை, முண்டந்துறை வனப்பகுதியின் தலையைப் போலவும் விளங்கும் பொதிகை மலை உச்சியில் திடீர் திடீரென வெயிலும் சில நேரங்களில் உடலை நடுநடுங்கச் செய்யும் அளவுக்கு பலத்தக் குளிர்காற்றும், சில நேரம் மழையும், சாரலும் பெய்யும்!. பொதிகை மலையில் அமைந்திருக்கும் மாஞ்சோலை இந்தியாவில் மிக அதிக மழைபெறும் பகுதிகளில் ஒன்று.

பள்ளத்தாக்கில் வற்றாத ஜீவநதியான “பொருநை” என்று அழைக்கப்படும் தாமிரபரணி உற்பத்தியாகும் “பூங்குளம்” என்ற சுனை பொதிகைமலையில் உள்ளது.திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் என 4 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஜீவநாடியாக விளங்கும் அகத்தியர் தந்த தாமிரபரணி இங்குதான் பிறக்கிறது. இந்தச் சரணாலயம் 14 ஆறுகள் மற்றும் நீரோடைகளுக்கு நீர்ப்பிடிப்பு பகுதியை உருவாக்குகிறது. இந்த ஆறுகள் மற்றும் நீரோடைகளில், தாமிரபரணி, ராமநதி, கடனா நதி, காரையார், சேர்வலார், மணிமுத்தாறு, பச்சையாறு, கோதையாறு மற்றும் கல்லாறு ஆகியவை திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் மக்களுக்குத் தேவையான நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு முதுகெலும்பாக அமைகின்றன. காரையார், லோயர் அணை, சேர்வலார், மணிமுத்தாறு, ராமநதி, கடனா நதி ஆகிய பெரிய அணைகள் இந்த வனப்பகுதியில் அமையப்பெற்றுள்ளன.

இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தாமிரபரணி நதிக்கரையில் துவங்குகிறது -தமிழ்நாடு அரசு

இயற்கை நமக்கு அளித்த பெருங்கொடை:
அபூர்வ மூலிகைகள் மனதை கவரும் அருவிகள் சிற்றோடைகள் ஆறுகள் எங்கு காணினும் இயற்கையின் கொடையான பசுமையான அடர்ந்த மரங்கள் நிறைந்த காடுகள் புல்வெளிகள் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டுள்ள இப்பொதிகைமலை இயற்கை நமக்கு அளித்த பெருங்கொடை.

தென்னிந்தியாவிலே மிக உயரமான இடத்தில் இருக்கும் கோவில். பொதிகைமலை அகத்தியர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இப்பொதிகைமலை வரலாற்று சிறப்பு மிக்கது. இமயமலை பயணத்தை தோற்கடிக்கும் பொதிகைமலை (6132 அடி)
அகத்திய மலை
இந்த மலையில்தான் தனது பெரும்பான்மையான காலத்தை அகத்தியர் கழித்தார் என்பதால், இம்மலை அகத்தியர் மலை என்றும் அழைக்கப்படுகிறது

உலகின் பாரம்பரிய சின்னம் பொதிகைமலை யுனெஸ்கோ :

பொதிகைமலையில் காணப்படும் அடர்த்தியான, இருண்ட வனப்பகுதி ஒவ்வொரு மூலையிலும் ஒரு ஆச்சரியத்தின் வாக்குறுதியுடன் நமக்குப் பரபரப்பை ஏற்படுத்துகிறது. இது இந்திய நாட்டில் அறிவிக்கப்பட்ட 17 வது புலிகள் காப்பகமாகும். உலகின் வெப்பமண்டல ஈரப்பதமான பசுமையான காடுகளைக் குறிக்கும் வகை -1 புலி பாதுகாப்பு பிரிவு (டி.சி.யு) எனக் களக்காடு – முண்டந்துறை புலி இருப்பு வகைப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையில் அமைந்துள்ள அகத்திய மலைத்தொடர் வனவிலங்கு சரணாலயத்தின் முக்கிய பகுதியை உள்ளடக்கிய இந்தச் சரணாலயம் இந்தியாவில் பெயரிடப்பட்ட ஐந்து பல்லுயிர் மற்றும் எண்டெமிசம் மையங்களில் ஒன்றாகும். இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகவும் விளங்கி வருகிறது

இன்னும் எண்ணற்ற பெருமைகள், நெல்லைக்கு உண்டு. பக்கம் பக்கமாக சொல்லிக்கொண்டே போகலாம்.

மாவட்டமாக உருவெடுத்து இன்று 233 -வது பிறந்தநாள் காணும் “திருநெல்வேலிச்சீமை” யின் புகழ் திக்கெட்டும் பரவட்டும்.

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஆதித்யா எல்-1: சூரியன் குறித்த ஆராய்ச்சியில் உத்வேகம்!

aditya l1 launched - 2026
#image_title

திட்டமிட்டபடி இன்று முற்பகல் 11.50க்கு ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி 57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்தியா முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வுசெய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையையும் ஆதித்யா எல்-1 விண்கலம் பெறுகிறது.

இதில் பெங்களூவில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் வடிவமைத்த 7 பே லோட்ஸ் எனப்படும் ஆய்வுக்கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. பூமியில் சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் ‘லெக்ராஞ்சியன் புள்ளி ஒன்று’ எல்-1 என்னும் இடத்தில் இந்த விண்கலம் நிலை நிறுத்தப்படும்.

குறிப்பாக, சூரியனை நோக்கிய கோணத்தில் இது நிறுத்தப் படும். இந்தக் கருவிகள் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வுசெய்ய இருக்கிறது.

முன்னதாக, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வுமையத்தில் பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்ததை அடுத்து, ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று முற்பகல் 11.50 மணிக்கு தொடங்கியது.

தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் திட்டமிட்டப்படி இன்று பகல் 11.50 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.

அதித்யா எல் 1 விண்ணில் பாய்வதை முன்னிட்டு, ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், சூலூர்பேட்டையில் உள்ள செங்கலம்மா பரமேஸ்வரியம்மன் கோவிலில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஆதித்யா எல்-1 மாதிரியை வைத்து சிறப்பு பூஜை செய்து சாமி தரிசனம் செய்தார்.

இதனை தொடர்ந்து அவர் கூறியதாவது: ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் முன் அம்மனின் அருள் பெறுவது வழக்கம். சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்டபோது அனைவரது ஆசீர்வாதமும் இருந்தது. சூரியனை ஆய்வு செய்ய பி.எஸ்.எல்.வி.சி-57 ராக்கெட்டில் ஆதித்யா எல்-1 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது.

சுமார் 1,470 கிலோ எடை கொண்ட ஆதித்யா எல்-1 விண்கலம் 125 நாட்கள் பயணம் செய்ய உள்ளது. பூமியில் இருந்து சூரியனை நோக்கி 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாங்ரேஜியன் பாயின்ட்-1(எல்-1) சுற்று வட்டப்பாதையில் செலுத்தப்படும்.

சந்திரயான்-3 தொடர்பான லேண்ட் ரோவர்கள் நிலவில் வெற்றிகரமாக செயல்படுகிறது. ககன்யான் திட்டம் செயல்படுத்த தயார் நிலையில் உள்ளது. அக்டோபர் முதல் அல்லது 2-வது வாரத்தில், இன்சாட்-3டிஎஸ் ஜி.எஸ்.எல்.வி-மார்க்-2 மூலம் ஏவப்படும். எஸ்.எஸ்.எல்-வி ராக்கெட் அடுத்த மாதம் ஏவப்படும் என்றார்.

ஆதித்யா எல் 1 வெற்றிகரமாக ஏவப்பட்டதை அடுத்து, இஸ்ரோவுக்கு அனைவரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

FTII- இந்திய திரைப்பட, தொலைக்காட்சி நிறுவன தலைவராக மாதவன்..!

madhavan 1 - 2026

இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் – FTIIணன் தலைவராக நடிகர் மாதவன் பொறுப்பேற்கிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் கால் நூற்றாண்டு காலம் நடித்து, திரைப்படத்தை இயக்கி அனுபவமும் பல்வேறு விருதுகளும் பெற்றுள்ள மாதவன், இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவன தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். அண்மையில் மாதவன் இயக்கிய ராக்கெட்ரி படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

நடிகர் மாதவன் எஃப்டிஐஐ தலைவராக நியமிக்கப் பட்டது குறித்து மத்திய அமைச்சர் அனுராக்தாக்கூர் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், எப்.டி.ஐ.ஐ., தலைவராக- நிர்வாகக் குழு தலைவராக பரிந்துரைக்கப்பட்டு உள்ள நடிகர் மாதவனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் பரந்த அனுபவமும் வலுவான நெறிமுறைகளும் இந்த நிறுவனத்தை வளப்படுத்தும், நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வந்து, மேலும் உயர் நிலைக்குக் கொண்டு செல்லும் என்று நான் நம்புகிறேன். உங்களுக்கு எனது நல்வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

அவரது டிவிட்டை மறுபதிவிட்டுள்ள மாதவன், அதில் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவரது டிவிட்டர் பதிவில், “கௌரவத்திற்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி . எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல்! ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு! 

new parliament buliding - 2026
#image_title

ஒரே நாடு ஒரே தேர்தல் | குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைத்தது மத்திய அரசு

’ஒரே நாடு ஒரே தேர்தல்’ விவகாரத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களுக்கு இது தொடர்பான விவரம் பின்னர் தெரிவிக்கப்படும் எனத் தெரிகிறது. 

வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் செப்டம்பர் 22 ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்ட மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. 

இதனையொட்டியே அந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

முன்னதாக கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதியுடன் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நிறைவடைந்தது. 

ஒருவேளை, ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமலுக்கு வந்தால் அனைத்து மாநிலங்களுக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறும். வாக்குப்பதிவும் ஒரே நேரத்தில் நடைபெறும்.

9 ஆண்டுகளில் முதன்முறை… !

நாடாளுமன்றத்தில் கடந்த 9 ஆண்டுகளில் இதுபோன்று சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறுவது இதுவே முதல் முறை. முன்னதாக, கடந்த 2017 ஜூன் 30-ல் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டம் கூட்டப்பட்டு ஜிஎஸ்டி சட்டம் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது.

ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டுவர வேண்டும் எனச் சொல்லப்படுதற்கு முதல் காரணம் செலவினக் குறைப்பு. தேர்தல்கள் அடிக்கடி நடப்பதால், நாட்டின் வளர்ச்சி பாதிக்கப் படுகிறது என்றும், தேர்தல்களின் செலவினங்களை நாட்டின் சமூகத் திட்டங்கள், வளர்ச்சிப் பணிகளுக்குத் திருப்பி விட்டால் நாடு வளர்ச்சி அடையும் என்றும் ஆளும் தரப்பு கூறுகிறது.

2019 மக்களவைத் தேர்தலில் 60 ஆயிரம் கோடி செலவழிக்கப்பட்டது. இது அரசியல் கட்சிகள் தேர்தல் செலவினங்களையும் உள்ளடக்கியது. இந்நிலையில் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தினால் செலவுகள் குறையும் என்று இதனை ஆதரிக்கும் தரப்புகள் தெரிவிக்கின்றன.

ஆனால் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்தினால் தங்களால் செலவுகள் அடிப்படையில் தேசியக் கட்சியை எதிர்கொள்ள முடியாது என்பதே மாநில உள்ளூர் கட்சிகளின் வாதம். மேலும் அவ்வாறு ஒரே தேர்தல் நடத்தும்போது உள்ளூர் பிரச்னைகள் கவனம் பெறாமல் போய்விடும் என்கின்றன உள்ளூர் கட்சிகள்!

சம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் (32): ஸ்வஸ்ருர் நிர்கச்சோக்தி ந்யாய:

samskrita nyaya - 2026

தெலுங்கில் :பி.எஸ் சர்மா
தமிழில் : ராஜி ரகுநாதன்

ஸ்வஸ்ருர்நிர்கச்சோக்தி ந்யாய: – (ஸ்வஸு – மாமியார். நிர்கச்சோக்தி – விரட்டுவது)

மனித இயல்பை புரியும்படி விளக்கும் நியாயம் இது. தன் சொல்லே வெல்ல வேண்டும் என்ற பிடிவாதம் உள்ளவர்களின் இயல்பை விவரிக்கும் நியாயம் இந்த ஸ்வஸ்ருர்நிர்கச்சோக்தி ந்யாயம். இதில் ஒரு பிரசித்தமான கதை உள்ளது.

ஒரு ஊரில் ஒரு பிச்சைக்காரன் பிச்சை கேட்டு ஒரு வீட்டுக்குச் செல்கிறான். ‘பவதி பிக்ஷாம் தேஹி’ என்று உரக்க குரல் கொடுக்கிறான். உள்ளிருந்து ஒரு இளம்பெண் வந்து, “எதுவும் இல்லை. போ, போ” என்று கூறி, உள்ளே சென்று கதவை மூடி விடுகிறாள்.

பிச்சைக்காரன் முக வாட்டத்தோடு அங்கிருந்து நகர்ந்து விடுகிறான். அதற்குள், ஒரு முதியவள், கோவிலுக்குச் சென்றவள் திரும்பி வந்து, தன் வீட்டிலிருந்து அந்த பிச்சைக்காரன் வருவதை கவனிக்கிறாள்.

தன் புது மருமகள் அவனுக்கு என்ன தானம் செய்தாளோ என்று சந்தேகம் வருகிறது. அவனிடம், “எங்கள் வீட்டுக்குச் சென்றாயே, என் மருமகள் என்ன கொடுத்தாள்?” என்று வினவினாள்.

அதற்கு அவன் துயரத்தோடு, “எதுவும் இல்லம்மா. போ போ என்று விரட்டிவிட்டாங்க” என்றான்.

அதனால் கோபம் கொண்ட மாமியார், அவனிடம், “அப்படியா சொன்னாள்? அவள் யார் அப்படி சொல்வதற்கு? நான் வீட்டுக்குப் பெரியவள். நீ வா எங்கள் வீட்டுக்கு” என்று அழைத்தாள்.

சிறிது ஆசையோடு பிச்சைக்காரன் அந்த முதியவளின் அழைப்பை ஏற்று அவள் பின்னால் சென்றான். உள்ளே சென்ற அவள், நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை. மீண்டும் பிச்சைக்காரன், ‘பவதி பிக்ஷாம் தேஹி’ என்று குரல் கொடுத்தான். மாமியார் வெளியில் வந்து, “எதுவும் இல்லை. போ போ” என்றாள்.

பிச்சைக்காரன் ஆச்சர்யமடைந்தான். இந்த நியாயத்தில் காணப்படும் கதாபாத்திரங்களை ஆராய்வோம். அந்த மாமியார் அனுபவம் மிக்க பெண்மணி. தன் வீட்டுக்கு வந்த வேறொரு தாய் பெற்ற பெண்ணை ஆதரவாக பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அவளுக்கு உள்ளது. அப்படியிருக்கையில், அந்த மருமகளின் சொல்லுக்கு மதிப்பு கொடுக்காததும், புது மருமகளைத் தன்னுடைய வாரிசாக ஏற்காததும் அநியாயம். இதுவே இந்த நியாயம் கூறும் செய்தி.

பிரம்மஸ்ரீ ஜடாவல்லபுல புருஷோத்தம், தன் ‘சித்ரசதகம்’ என்ற நூலில், இப்படிப்பட்ட மன இயல்பு கொண்ட மாமியார் குறித்து இவ்வாறு எழுதுகிறார்-

கதா ஸ்னுஷா மே க்ருஹவர்திநீ ஸ்யாத்
கதா ஸுபுத்ரஸ்ய தயா சுகம் ஸ்யாத் |
ஸ்வஸ்ரூர்விலப்யைவமனல்ப காலம்
ஸமாகதாம் தாம் ஸஹேத சித்ரம் ||

பொருள் – மருமகள் என் வீட்டுக்கு வந்து எப்போது நடமாடுவாள்? மருமகள் வந்து என் மகனை எப்போது சுகப்படுத்துவாள்? என்று நீண்ட காலம் காத்திருந்த மாமியாரே தன் வீட்டுக்கு வந்த மருமகளிடம் பகைமை பாராட்டுகிறாள். இது விசித்திரம் அல்லவா? என்று கேட்கிரார்.

ஒரு வேலையைச் செய்யும் ஒருவரை, திட்டி விமர்சித்துவிட்டு, தானும் அதே வேலையை அதே போல் செய்வதை இந்த ‘ஸ்வஸ்ருர் நிர்கச்சோக்தி ந்யாயம்’ மூலம் விளக்குவது வழக்கம். இது மாமியார் மருமகள் உறவுக்கு மட்டுமே பொருந்தும் என்பதல்ல.

• இதை அலுவலகங்களிலும் பார்க்க முடியும். (பாஸ் ஈஸ் ரைட் என்ற கர்வம்) அங்கு பணிபுரியும் அதிகாரிகளின் மனநிலைமையும் மேற்சொன்ன கதையில் வரும் மாமியாரைப் போலவே இருப்பதைப் பார்க்கலாம். தன் கீழ் பணியுரிவோர் ஏதாவது தீர்மானம் எடுத்தால் பொறுக்க மாட்டர்கள். அது சரியான முடிவு என்று மனசாட்சிக்குத் தெரிந்தாலும் அகம்பாவம் அதனை ஏற்காது. பொறாமையோடு தன் சக ஊழியர்களிடம் நடந்து கொள்ளும் அகங்காரம் கொண்ட அதிகாரிகள் பலரை தினசரி வாழ்க்கையில் நாம் சந்திக்க நேர்கிறது.

• இந்த மன இயல்பை அரசியல் வட்டாரத்திலும் பார்க்கிறோம். ஆளும் கட்சியில் இருப்பவர் எடுக்கும் முடிவை எதிர்கட்சியில் இருப்பவர் ஏற்காமல் எதிர்ப்பது. அதிர்ஷ்டவசமாக எதிர்கட்சி ஆளும்கட்சியாக மாறும் போது அதே முடிவை எடுப்பது போன்றவை செய்தித்தாள் படிக்கும் வாசகர்கள் அறிந்ததுதானே.

• ஏழ்மை, ஊழல், உறவுக்குப் பதவி, வேலை வாய்ப்பபின்மை போன்ற சொற்கள் ஒருவர் மேல் ஒருவர் எறிந்து கொள்ளும் பந்து போன்றவையே என்று எழுதுகிறார் ஒரு கவிஞர்.

• விவசாயச் சட்டங்களை ஆளும் கட்சி எடுத்து வந்தால் அநியாயம். நாங்கள் எடுத்து வந்தால் நியாயம் என்ற நிலையே இந்த நியாயத்தின் உட்பொருள்.

• பிறரை எதைச் செய்யக் கூடாது என்று கூறுவார்களோ, அதே வேலையை இவர்கள் செய்வார்கள் என்ற விசித்தரமான மன நிலையே இந்த நியாயம் கூறும் கருத்து.

சங்கீதம் கற்றுத் தரும் குரு ஒருவர், தன் சீடனின் திறமையைக் கண்டு பொறுக்காமல் அவனோடு போட்டி போடுவார். சோக முடிவோடு கூடிய இது போன்ற அசூயை மன இயல்பை ஒரு திரைப்படத்தில் கூட காட்டினார்கள்.

வீடு, அலுவலகம், தேசத்தின் அரசியல் இவை மட்டுமே அல்ல. பல நாடுகளின் இடையேயும் இது போன்ற பொறாமை, வெறுப்பு, போட்டி போன்ற பலவும் நிலவுவதைக் காண்கிறோம். சர்வ தேச மேடையிலும் எத்தனை அரசியல் நாடகங்கள்! மாமியார் மன இயல்புகள்! அகம்பாவ வெளிப்பாடுகள்! இவை அனைத்தும் இந்த ‘ஸ்வஸ்ருர் நிர்கச்சோக்தி’ ந்யாயத்திற்குப் பொருந்தும் உதாரணங்களே.

ரஷ்யா, உக்ரைன் நாடுகளின் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் இந்த நேரத்தில் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாதென்று நம் தேசத்திற்கு புத்தி கூறும் பணியில் சில நாடுகள் இறங்கின. அவ்வாறு நம்மை விமரிசனம் செய்த நாடுகளுக்கு நம் மத்திய வெளியுறவு அமைச்சர் சுரீர் என்று பதிலளித்தார். யுத்தம் தொடங்கிய முதல் நூறு நாட்களில் நாம் வாங்கிய எண்ணெயின் மதிப்பைவிட நமக்கு புத்தி கூறிய நாடுகள் ஒவ்வொன்றும் இரு மடங்கு, மும்மடங்கு எண்ணெய் வாங்கியுள்ள செய்தியை மத்திய அமைச்சர் திரு ஜெயசங்கர் அவர்கள் புள்ளி விவரத்தோடு கணக்கு காட்டி அவர்களை வாயை மூடச் செய்தார்.

தாமே உயர்ந்தவர், பிறர் குறைந்தவர் என்று கருதும் மனநிலை தவறானது. நல்ல விஷயம் யார் சொன்னாலும் கேட்கவேண்டும். ஒரே குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் இடையில் எப்படிப்பட்ட அகங்கார ஈகோ பிரச்சினைகளும் இருக்கக் கூடாது என்ற உட் பொருளையும் கருத்தையும் அளிக்கும் இந்த நியாயத்தின் சிறப்பை குறிக்கும் சுலோகம் இது –

யுக்தியுக்தம் வசோ க்ராஹ்யம் பாலாதபி சுகாதபி |
யுக்திஹீனம் வச: த்யாஜ்யம் வ்ருத்தாதபி சுகாதபி ||

யோகவாஸிஷ்ட்யம்

பொருள் – காரணத்தோடு கூடிய அறிவுள்ள சொல்லை யார் சொன்னாலும் கேட்கவேண்டும். வயதில் சிறியவர் கூறினாலும், பேச்சு பயிலும் கிளி (சுக) கூறினாலும் காது கொடுத்து கேட்க வேண்டும். காரணமற்ற, அறிவில்லாத சொல்லை வயதில் எத்தனை மூத்தவர் கூறினாலும் சாட்சாத் சுகர் கூறினாலும் விட்டுவிடவேண்டும்.

தான் கூறியபடியே எல்லோரும் நடக்க வேண்டும் என்ற பிடிவாதம், அகங்காரத்திற்கு வழிவகுக்கிறது. கவனமாக இருங்கள் என்று எச்சரிக்கிறது இந்த நியாயம்.

அமெரிக்கா உலகத்திற்கு மனித உரிமை பற்றி சொற்பொழிவாற்றும். தனக்கென்று வரும்போது மட்டும் அந்த நியமங்களைக் கடைப்பிடிக்காது. அமெரிக்காவில் பெரிய பயங்கரவாதத் தாக்குதல் (11-9-2001) நடந்தபின், பின்லேடனுக்காக தேடுதல் வேட்டையைத் தொடங்கியது. பின்லேடனின் ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நூற்றுக்கணக்கானவர்களை அமெரிக்கா என்ன செய்தது தெரியுமா?

கியூபாவில் அமெரிக்காவின் பிடியில் இருக்கும் ஒரு தீவுக்கு இவர்களை அனுபிவைத்தது. அமெரிக்காவின் சட்ட நீதியோ, கியூபாவின் சட்ட நீதியோ பணி புரியாத அந்த தீவில் மனித உரிமை என்றால் என்னவென்றே தெரியாத ‘கௌன்டானமோ பே’ (Guantanamo Bay) என்ற இடத்தில் அவர்கள் தண்டனையை அனுபவித்து வருகிறார்கள். இதுதான் அமெரிக்காவின் வழிமுறை.

அமெரிக்காவில் அ என்றால் அசூயை. ம என்றால் மாமியாரின் மனநிலை. கதையில் உள்ள மாமியாரைப் போலவே, அமெரிக்கா யாரையும் நம்பாது. தன் சொற்படியே அனைவரும் நடக்க வேண்டும். அதற்கு, தானே லீடர் என்ற நினைப்பு. ஸ்வஸ்ருர்நிர்கச்சோக்தி ந்யாயத்திற்கு இது ஒரு உதாரணம்.


இந்த உணர்வு பெற்றால் மட்டுமே… புனர் நிர்மாணம் சாத்தியம்!

hinduism - 2026

அறிந்து கொண்டு, அறியச் செய்து, பாதுகாத்து, செயல்புரிய வேண்டும்!

தெலுங்கில் : பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் : ராஜி ரகுநாதன்

நம் சனாதன தர்மத்திற்கும், கலாசாரத்திற்கும், இலக்கியங்களும், கோவில்களும் மகான்களும் முக்கிய ஆதாரங்கள். அவற்றை அறிந்து கொண்டு, அறியச் செய்து, காப்பாற்றிக் கொண்டால்  நம் கடமையை நிறைவேற்றியவர்களாவோம். இந்த இயக்கத்தில் அனைவரும் பொறுப்பேற்கவேண்டும்.

இலக்கியங்கள்:

பேரிலக்கியங்களான வேதங்கள், ஸ்ம்ருதி நூல்கள், புராணங்கள், இதிகாசங்கள், காவியங்கள் மட்டுமின்றி ஆசாரியர்கள், அறிஞர்கள் படைத்த விரிவான நூல்கள் பல நமக்கு உள்ளன. கடல் போன்ற சமஸ்கிருத இலக்கியங்கள் மட்டுமே அன்றி, ஒவ்வொரு இந்திய மொழியிலும் அபாரமான இலக்கியங்கள் உள்ளன.

பல நூற்றாண்டுகளாக கிடைப்பவற்றின் மூலம் அனைத்து சந்தேகங்களுக்கும் விடைகளை மட்டுமின்றி, எந்த காலத்திற்கு எவ்விதம் கருத்தொருமை செய்து புரிந்து கொள்ள வேண்டும் என்று விளக்கிக் கூறும் மதிப்பு மிக்க கருத்துகள் பல உள்ளன. அவற்றை சேகரித்து இன்றைய தொழில்நுட்ப அறிவின் துணையோடு, இன்றைய வழக்கு மொழியில் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்வது தர்மத்தை மதிப்பவர்களின் முக்கியமான கடமை. படித்தறிந்து பயிற்சி செய்யும் (அத்யயனம்) குழுக்களாக ஒன்று கூடி, அவற்றைப்பற்றி விவாதித்து, அடுத்த தலைமுறைக்காக பாதுகாக்கவேண்டும். 

கோவில்கள்:

குமரி முதல் இமயம் வரை பல யுகங்களின் வரலாற்றைக் கூறும் தெய்வீகமான தீர்த்த க்ஷேத்திரங்களும், ஆகம சாஸ்திரங்களின்படி அமைக்கப்பட்ட கோவில்களும் பலப்பல உள்ளன. அவற்றின் புராண, வரலாற்று பெருமையை அறிந்து கொண்டு அவற்றை படித்தறியும் கருத்துகளாக பாதுகாக்கவேண்டும்.

பிறருடைய முற்றுகையால் அழிந்த உண்மைகளையும், அவர்கள் செய்த கொடுமைகளையும் கூட மறைக்காமல் சேகரித்து தெரியச் செய்ய வேண்டும். கோவில்களின் சுற்றுப்புறம், ஆலயங்களின் சொத்து விவரங்கள் போன்றவையும் சாமானியன் கூட அறியும்படி தெரியச் செய்ய வேண்டும். பண்டைய காலத்திலிருந்து பாரம்பரியமாக நடக்கும் ஆலய கைங்கர்யங்கள், உற்சவங்கள் போன்றவற்றின் விவரங்களையும் அறிந்து கொள்ளவேண்டும். அவற்றில் தவறுகள் நடந்தால் தேவஸ்தானங்களை கேள்வி கேட்கவேண்டும்.

அதே போல் கோவில் சொத்து, வருமானம் ஆகிய விவரங்களும் மக்களாட்சி அமைப்பில் வெளிப்படைத் தன்மையோடு  விளங்க  வேண்டும். கோவில்களை அரசாங்கங்கள் திசை திருப்பினால், நிற்கவைத்து கேள்வி கேட்க வேண்டும்.

இதற்காக தன்னார்வத்தோடு பக்தர் சங்கங்கள் அமைத்து  செயல்திட்டத்தோடு, மக்களுக்கு புரிதல் ஏற்படுத்தி, ‘நம் கோவில்களை நாம் காப்பாற்றிக் கொள்வோம்’  என்ற பொறுப்புணர்வை பலப்படுத்த வேண்டும். அரசாங்கங்களுக்கு பொறுப்பேற்பை (Accountability)  பழக்கமாக்க வேண்டும்.

கோவில்களை இடித்தாலோ, அவற்றுக்கு அபச்சாரம் செய்தாலோ, பாரம்பரியத்தை அவமதித்தாலோ அந்த தலைவர்கள் மீண்டும் அரசாட்சிக்கு வர விடாமல் செய்ய முடியவேண்டும். அத்தகு நிலைக்கு ஹிந்து பக்தர்கள் ஒன்றுபடாவிட்டால் சிறிது சிறிதாக ஆலய அமைப்பு சேதமடையும் ஆபத்து உள்ளது. தரிசனத்திற்காக கியூவில் நிற்பதும் உண்டியலில் காசு போடுவதும் மட்டுமே போதாது. நம் கோவில்களில் என்ன நடக்கிறது? கோவில் வருமானம் எங்கு மடை மாற்றப்படுகிறது? போன்ற விஷயங்களையும் சோதித்து அறிய வேண்டும்.

பிற மத நம்பிக்கை நிலையங்ககளின் வருமானம் அவர்களின் மதத்தைப் பரப்புவதற்கும், அவர்களின் நலன்களுக்கும் மட்டுமே உபயோகிக்கப்படும்போது, ஹிந்து கோவில்கள்   அரசாங்கத்தின் கைகளில் சிக்கி பல விதங்களில் நஷ்டமடைகிறது. பிற மதத்தவரை திருப்திப்படுத்தும் ஒட்டு வங்கி அரசியலுக்காக நம் கோவில்களின் வருமானத்தை   செலவு செய்கிறார்கள்.

ஓட்டுக்காக அறிவித்த தேவையற்ற இலவசங்களால் அரசு நிதி காலியாகிறது. அதனால்  கோவில் நிதி அந்தப்பக்கம் திருப்பி விடப்படுகிறது. கோவிலில் தெய்வத்திற்கு  வந்தனம் தெரிவிக்கும் கைகள், தலைவர்களுக்கு புத்தி புகட்டும் பணியையும் செய்ய வேண்டும்.

கோவில்கள், தீர்த்த க்ஷேத்திரங்கள் ஆகியவற்றின் புனிதத்தையும் தூய்மையையும் காப்பாற்றும் விதமாக மக்களிடம் விழிப்பையும் புரிதலையும் வளர்க்க வேண்டும். தன்னார்வத்தோடு கோவில் சேவைகளில் பங்குபெறும்படி இளைய பக்தர்களின் குழுக்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.

பஜனை, கீர்த்தனை போன்ற கைங்கர்யங்கள் மூலமாக அனைத்து இடங்களில் இருந்தும் அனைத்து கோவில்களுக்கும் தொடர்பு இருக்கும்படி சங்கங்களை அமைக்க வேண்டும். கோவில்களை மையாமாக வைத்து விரிந்து வளர்ந்த கலைகள், ஞானிகள், யோகிகள், அரசர்கள்… இவர்கள் அனைவரின் சரித்திரத்தையும் பாதுகாக்க வேண்டும்.

மகான்கள்:

புராண, இதிகாசங்களில் கூறப்படும் மகான்கள் மட்டுமின்றி, நம் வரலாற்றில் கிடைக்கும் சக்ரவர்த்திகள், தியாக சீலர்கள், தார்மிகர்கள், ஞானிகள், பக்தர்கள், யோகிகள், குருமார்கள் போன்ற எத்தனையோ பேர் நம் பரம்பரையில் உள்ளார்கள். எண்ணிக்கையற்ற வகையில் இத்தனை மகநீயர்கள் வேறெந்த தேச வரலாற்றிலும் இருக்கமாட்டார்கள் என்றே  தோன்றுகிறது. இவர்களின் சரித்திரம், உபதேசம், செய்த சிறந்த செயல்கள் ஆகியவற்றை சேகரித்து, அவற்றிலிருந்து பெற்ற உற்சாகத்தையும் ஸ்பூர்த்தியையும் இன்றைய மற்றும் நாளைய தலைமுறைக்கு கிடைக்கும்படி செய்யவேண்டும்.

வரலாற்று ரீதியாக நடந்த உண்மைகளை ஒன்று திரட்ட வேண்டிய பொறுப்பு மிகவும் முக்கியம். திட்டமிட்டு வரலாற்றைத் திரித்து எழுதிய தீயவர்களால் மறைக்கப்பட்ட சத்தியங்களை வெளியில் தோண்டி எடுத்து மகநீயர்களின் (உதாரணம் – சத்ரபதி சிவாஜி, ராணா பிரதாப், சாவர்கர்) பெருமைகளை அனைவருக்கும் கிடைக்கும் விதமாக கொண்டு வர வேண்டும்.

இந்த மூன்றடுக்கு பெருஞ்செயலை உள்நாடு மற்றும் வெளிநாடு வாழ் பாரதிய தலைமுறையினர் கையிலெடுத்தால், அது மிகப் பெரும் இயக்கமாக உருவாகி, நம் புராதன சிறப்புகளை புனர் நிர்மாணம் செய்து கொள்ள முடியும்.  


(ருஷிபீடம் தெலுங்கு மாத இதழ் தலையங்கம், செப்டம்பர், 2023)


சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1; இன்று கௌண்ட் டௌன் தொடக்கம்!

aditya l1 isro - 2026
#image_title

செப்.2 நாளை விண்ணில் பாய ஆதித்யா எல்-1-ன் தயார் நிலையில் உள்ளதாகவும், அதற்கான கௌன்ட் டௌன் இன்று தொடங்குவதாகவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்துள்ளார்.

சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்- 1 என்ற விண்கலம் முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம், புனேயில் உள்ள வானியல் ஆராய்ச்சி மையம் ஆகியவை, இந்த விண்கல வடிவமைப்பில் முக்கிய பங்காற்றியுள்ளன.

ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து செப்.2 ம் தேதி முற்பகல் 11:50 க்கு, சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 விண்கலம் செலுத்தப்பட உள்ளது. அதன் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டது.

இந்நிலையில் இன்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியனை ஆய்வு செய்வதற்காக திட்டமிட்டபடி செப். 02 காலை 11:50 மணிக்கு செலுத்தப்பட உள்ளது. இதற்கான கௌன்ட் டௌன் 1ம் தேதி தொடங்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

பரனூர் ஸ்ரீ ஸ்ரீ அண்ணா கிருஷ்ணப்ரேமி ஸ்வாமி விதேக முக்தி! அன்பர்கள் திரண்டு அஞ்சலி!

krishnapremi swami - 2026
#image_title

பக்தர்களால் ஸ்ரீ ஸ்ரீ அண்ணா எனவும், கிருஷ்ணபிரேமி ஸ்வாமிகள் எனவும் அன்புடன் அழைக்கப்பட்ட, பரனூர் ஸ்ரீ கிருஷ்ண பிரேமி ஸ்வாமிகள், ஆக.31 ஆவணி பௌர்ணமி இன்று அதிகாலை முக்தி அடைந்தார். அவரது வயது 89.

கிருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள், நாமசங்கீர்த்தனம் எனும் பக்தியைப் பரப்பியவர். அதன் மூலம் பக்தர்களை ஒருங்கிணைத்து கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக, ஆன்மிகப் பயிர் வளர்த்தார். அவரது சொற்பொழிவைக் கேட்பதற்கென இளைஞர் கூட்டம் ஒன்று உருவாகி, நாம சங்கீர்த்தனத்தில் தங்களை இணைத்துக் கொண்டு, பயிற்சி பெற்று, இன்று அவர் பெயரால் பல இடங்களில் நாம சங்கீர்த்தனங்களை நடத்திக் கொண்டிருக்கிறது.

ஸ்ரீ ஸ்ரீ அண்ணா, கடந்த சில நாட்களாக வயோதிகம் காரணமாக உடல் நலக்குறைவுடன் இருந்தார். இந்நிலையில், குரு வாரமான வியாழன் இன்று அதிகாலை, ஆவணி பௌர்ணமி திதியில், அவர் முக்தி அடைந்தார். இச்செய்தியறிந்து அவரது பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் உள்ள அவரது திருமாளிகையில் பெரும் எண்ணிக்கையில் கூடினர். அவருக்கு அஞ்சலி செலுத்த நீண்ட நேரம் வரிசையில் நின்று, அவரது திருமேனிக்கு அஞ்சலி செலுத்தினர். 1934 ஆக.31ம் தேதி பிறந்தவர், 2023 ஆக.31 அன்று முக்தி அடைந்தார் என்பதை பலரும் குறிப்பிட்டுக் கூறினர்.

ஸ்ரீஸ்ரீ அண்ணா குறித்து சமூகத் தளங்களில் பலரும் பகிர்ந்து கொண்டனர். அவரது நாம சங்கீர்த்தன, பாகவத பிரசார வாழ்க்கை குறித்து பலரும் பகிர்ந்து கொண்ட கருத்துகள்….

பக்தர்களால் ஸ்ரீ அண்ணா என்று அழைக்கப்படும் ஸ்ரீஸ்ரீகிருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் பக்த கோலாஹலனின் திருவடியை நள்ளிரவு 1.40 மணிக்கு அடைந்தார்கள்.
இவர் திருச்சேங்கனூரில் ஸ்ரீவைஷ்ணவ பூர்வாசாரியரான ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையின் பெண் வயிற்றுப் பரம்பரையில் 31-08 –1934 ல் ஸ்ரீ ஜயந்தி அன்று அவதரித்தார்.

சிறு வயதிலேயே அவர் ஒரு மஹாபுருஷார் என்று விளையாட்டுகளின் மூலமாக வெளிப்படுத்தினார்கள்.
ஸ்ரீமத் பாகவதம் தான் அவர் மூச்சாக இருந்தது. பாரத நாடு எங்கும் ஸ்ரீ பாகவத ஸப்தாஹ ஞான வேள்வியை நடத்தினார். தமிழ்நாட்டில் அதற்குப் புத்துயிர் வழங்கினார் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் பஜன பத்ததிக்கும் புத்துயிர் வழங்கினார். நூற்றுக்கணக்கான பஜனை பாடல்களை ஸம்ஸ்க்ருதம், தமிழ், கன்னடம், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளில் பக்தியுடன் பாடியுள்ளார்.

108 திவ்யதேசத்து எம்பெருமான்கள் மீதும் ஸம்ஸ்க்ருதத்தில் கீர்த்தனைகள் பாடி உள்ளார். இதை தவிர ஸம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் நூற்றுக்கணக்கான நூல்கள் இயற்றி பேருபகராம் செய்துள்ளார்.

கிராமங்கள், நகரங்கள் தோறும் பாரத நாட்டு எல்லா வைணவ ஸம்ரதாயத்தை சேர்ந்த மஹான்களின் சரித்திரம், ஸ்ரீராமாயண, ஸ்ரீ பாகவத , ஸ்ரீ பாரத ப்ரவசனங்களை செய்துள்ளார்கள்.

அவருடைய ஆராதன பெருமாளான ஸ்ரீ பக்த கோலாஹலனுக்கு திருக்கோவலூர் அருகில் உள்ள பரனூர் என்னும் க்ராமத்தில் கோவில் கட்டி அனைத்து உத்ஸவங்களை நடத்தி வந்தார்கள். மேலும் ஸ்ரீ.ப்ருந்தாவனம், ஸ்ரீ அயோத்யா, ஸ்ரீ பண்டரிபுரம், ஸ்ரீ சேங்கனூர் திவ்யதேஸங்களில் கோவில்கள் கட்டி உத்ஸவங்கள் நடத்தி வந்தார்கள்.

பல்லாயிரக்கணக்கான மனிதர்களை நல்வழி படுத்தி ஆன்மீகத்தில் ஈடுபட செய்தார்கள். அன்பே வடிவடுத்தார் போல இருந்து பக்தர்களின் குடும்பத்தில் ஒருவராகவே திகழ்ந்தார்.

ஸ்ரீரங்க மஹாத்மியம் அதாவது திருவரங்க அருமை,பெருமைகளை இவரை போல பாமரனுக்கும் புரியுமாறு உரைக்க எவர் அவதரிப்பார்களோ?
கோடிக்கணக்கான ராம நாப ஜெப தவத்தை கொண்டு தம் எளிமையான வாழ்வால் லட்சகணக்கானவர்களுடைய வாழ்விலும் ஆத்மஜோதி ஏற்றிவைத்த நம் கண்முன் வாழ்ந்த மஹாத்மா ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் திருவரங்கன் திருவடியை அடைந்தது… ஹரே ராம ராமராம ஹரேஹரே..
ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே…!

ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி ஸ்வாமி, போதேந்திர தீர்த்தரை தம் மானசீக குருவாகப் போற்றினார். திருக்கோவிலூர் தபோவனத்தில் புகழ்பெற்றிருந்த ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகள் அவருக்கு பெரும் வழிகாட்டியாய் இருந்தார். கிருஷ்ணப்ரேமியின் திருமண வாழ்க்கைக்கு அடித்தளமிட்டு, அவரை ஸ்ரீமத் பாகவத ஸப்தாகம் எனும் ஏழு நாட்கள் கதைகளைச் சொல்ல உந்துதலாகவும் இருந்தார். ஸ்ரீ கிருஷ்ணர் மீது பெரும் காதல் கொண்டிருந்த கிருஷ்ணப் ப்ரேமி, பிரேமிகா சம்பிரதாயம் எனும் வழிபாட்டு முறையை பரப்பினார்.

அவருக்குப் பிடித்த இஷ்ட தெய்வமாக திருக்கோவலூரில் குடிகொண்டிருக்கும் கோலாகலன் ஆகிய ஸ்ரீ கிருஷ்ணன் விளங்கினார். கண்ணனையே தம் தெய்வமாக வழிபட்ட அவர், திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள பரனூரில் கிருஷ்ணருக்கு அழகான கோவில் ஒன்றையும் கட்டினார். அங்கேயே வாழத் தொடங்கிய அவர், காலையில் சுப்ரபாதம் தொடங்கி, மதியம் பூஜை, இரவு டோலோத்ஸவம் வரை ஸ்ரீ கிருஷ்ணருக்கு அனைத்து சேவைகளையும் தாமே செய்தார்.

ஸ்ரீ கிருஷ்ண உத்ஸவ க்ருதிகள் பல இயற்றி உள்ளார். அந்த க்ருதிகள், பரனூரில் ஸ்ரீ கிருஷ்ணரின் பூஜையின் போது பாடப்பட்டு வருகின்றன. ராகவ சதகம், ராதிகா சதகம், கோவிந்த சதகம், ரங்க சதகம் என்பன உள்ளிட்ட சதகங்களை இயற்றியுள்ளார்.

இந்தியர்களின் மனத்தில் பக்தி பற்றிய விழிப்புணர்வைப் பரப்ப, கன்னியாகுமரி முதல் இமயமலை வரை இந்தியா முழுவதும் பலமுறை சுற்றுப்பயணம் செய்துள்ளார். ஸ்ரீமத் ராமாயணம், மகாபாரதம், பக்தவிஜயம், பகவத் கீதை, ஆழ்வார்கள் வைபவம், ஸ்ரீமத் பாகவதம், உபநிடதங்கள், ஸ்ரீரங்க புராணம் போன்ற பல தலைப்புகளில், பல நகரங்களில் சொற்பொழிவுகளை நிகழ்த்தி உள்ளார்.

அவரது திருமேனிக்கான இறுதிக் காரியங்கள் இன்று ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, அஞ்சலி செலுத்தினர்.

கரூர் மாநகராட்சியில் ஆளும் திமுக.,வின் ஊழல் முறைகேடுகள்: அதிமுக.,வினர் நூதன போராட்டம்!

karur corporation coucillers - 2026
#image_title

கரூர் மாநகராட்சியில் பல்வேறு திட்டங்களுக்கு கூடுதலாக மதிப்பீடு தொகை உள்ளது என திமுக கவுன்சிலர் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எழுந்து நின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூரில் இன்று நடைபெற்ற மாமன்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் மாநகராட்சியில் பணிகளில் அதிக அளவு மதிப்பீட்டுத் தொகையை தீர்மானத்தில் இடம் பெற்றதை எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நின்றனர்.

மேலும் மாநகராட்சியில் பணம் இல்லாத சூழ்நிலையில் அவுட்சோர்சிங் முறை என்ற தனியார் கம்பெனியின் மூலமாக பணியில் 1500 பேரை வேலைக்குச் சேர்த்து வருவாய் இழப்பு செய்வதை எதிர்ப்பு தெரிவித்த கவுன்சிலர்கள் எழுந்து நின்று தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்

மேலும் கடந்த கூட்டத்தில் பேப்பர் பேனா ஸ்டேஷனில் பொருட்கள் வாங்குவதற்காக 25 லட்சமும் இந்த முறையும் அதேபோன்று 25 லட்சம் மதிப்பீட்டுத் தொகை தீர்மானத்தில் இருந்ததை எதிர்ப்பு தெரிவித்து திமுக அதன் கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சியினர் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர்

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவுட்சோர்ஸின், குடிநீர் திறக்கும் தொழிலாளர்களையும் திட்டத்தையும் தனியாருக்கு தாரை பார்க்கும் செயலை ஈடுபட்டு வரும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதிகாரிகளிடம் வேலை வாங்க முடியாத நிலையில் தனியாருக்கு தாரை பார்க்கும் திட்டத்தில் ஈடுபட்டு வருகிறதா எனவும் கேள்வி எழுப்பினர்.

21 மாநகராட்சி நிர்வாகம் தனியார் மூலமாக தொழிலாளர்களை பணியமறுத்தி வருகின்றனர் குடிநீர் தொட்டியில் தண்ணீர் திறப்பதற்காக சம்பளமாக ரூ.7,100 வழங்கி வந்த நிலையில் இரவு பகலாக வேலை பார்த்து வந்தனர். 1300 பேர் வேலை பார்க்கிறார்கள் என்றால் அவர்களை மாநகராட்சியில் நிரந்தரபணியில் அமர்த்துங்கள்…

துப்புரவு தொழிலாளர்களை எண்ணிக்கை அதிகப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்பாடு செய்யாமல் தனியாருக்கு விற்பனை செய்யும் முயற்சியிலேயே தொடர்ந்து கரூர் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது என கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த கவுன்சிலர் தண்டபாணி கூட்டத்தில் புகார் தெரிவித்தார்.

அதிமுக., கவுன்சிலர்கள் இருவர் சஸ்பெண்ட்

கரூர் மாநகராட்சிக்கு பேப்பர், பேனா, பென்சில், நோட் வாங்க 50 லட்சம் ரூபாய் செலவு. அதிமுக கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பியதால் வாக்குவாதம். அதிமுக கவுன்சிலர்கள் இருவரை இரண்டு கூட்டத்திற்கு சஸ்பெண்ட் செய்து மேயர் உத்தரவு.

கரூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று மேயர் கவிதா கணேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக கவுன்சிலர்கள் கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் பேப்பர், பென்சில், பேனா வாங்குவதற்காக 25 லட்சம் மதிப்பீடு தொகையாக இருந்த நிலையில், இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் அதே பேப்பர், பென்சில், பேனா வாங்குவதற்காக 25 லட்சம் என மொத்தம் 50 லட்சம் ரூபாய் முறை கேடு நடந்திருப்பதாக அதிமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து மாமன்ற கூட்டத்தின் அஜந்தா காப்பியை வைத்து நேற்று செய்தித்தாள்களுக்கு பேப்பர் பேனா பென்சில் வாங்குவதற்கு ஊழல் நடந்துள்ளதாக பேட்டியளித்தனர்.

இதனை காரணம் காட்டி அதிமுக கவுன்சிலர்கள் இருவர் சுரேஷ் மற்றும் ஆண்டாள் தினேஷ் இரண்டு கூட்டங்களுக்கு சஸ்பெண்ட் செய்து மாநகராட்சி மேயர் உத்திரவிட்டார். இதனை அடுத்து அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

ஆதித்யா 1 – செயற்கைக்கோள் பற்றி சூப்பர் அப்டேட் கொடுத்த மயில்சாமி அண்ணாதுரை!

college fnction mayilsamy annadurai speech - 2026
#image_title

சூரியனின் மாற்றங்களை முன்கூட்டியே கண்டறிய, இந்தியா அனுப்பிய பல்லாயிரம் கோடி மதிப்பிலான செயற்கைக்கோள்களை பாதுகாக்கவும் மற்றும் பருவநிலை மாற்றம் கண்டறியவும் ஆதித்யா 1 செயற்கைக்கோள் உதவும் என்று தெரிவித்தார் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை.

குலசேகரப்பட்டினத்தில் இருந்து நிறைய செயற்கைக் கோள்களை குறைந்த செலவில் விண்வெளிக்கு அனுப்ப முடியும், சர்வதேச அளவில் முக்கிய இடமாக மாறும் என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கரூரில் பேட்டி:

கரூர் மாவட்டம் தளவா பாளையம் தனியார் பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர் வரவேற்பு விழா நிகழ்ச்சியில் முன்னாள் சந்திரன்-1 திட்டத்தின் திட்ட இயக்குனர் மற்றும் தற்போது தேசிய கட்டுமான ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்பு பின்னர் செய்தியாளர் சந்திப்பின்போது:

உலகம் வெப்பம்மாதல் அதிகரித்து கொண்டே வருகிறது இதில் பெட்ரோல் டீசல் பயன்படுத்த முடியாத சுழல் ஏற்படலாம் பல நாடுகள் நிலக்கரி பயன்படுத்த கூடாது என்று கூறி உள்ளது. இந்தியா அடுத்த கட்டமாக வெப்பமயம் இல்லாத எரிபொருளை உருவாக்குவதை முயற்சி செய்து வருகிறது.

சந்திராயன் மூன்று தென் துருவத்தில் செலுத்திய பின்பு உலக நாடுகள்இந்த இடத்திற்கு போட்டி போட்டு கொண்டு நகர்ந்து வருகிறது, அங்கே இருக்கக்கூடிய கனிம வளங்கள் குறித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. நிலவிலிருந்து ஒரு சில பொருட்கள் எடுத்து வருவதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கிறது என்ற தெரிவித்தார்.

குலசேகரபட்டினத்தில் இருந்து நிறைய செயற்கைக்கோள் அனுப்ப முடியும் பல்வேறு பகுதியில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்த கட்டமைப்புகளை ஒன்று சேர்த்து குலசேகரப்பட்டினத்தில் அமைத்து குறைந்த செலவில் அனுப்ப முடியும். சர்வதேச அளவில் முக்கிய இடம் பெறும்

மனிதனை பூமியிலிருந்து நிலவுக்கு அனுப்பி, நிலவில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப தேவையான மூலக்கூறுகள் இருக்கும் பட்சத்தில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்ப திட்டமிடல் நடைபெற வாய்ப்பு உள்ளது,அதற்காக உலகத்தின் முன்னணியாக இருக்க சந்திரன் 3 இடம் பெற்றுள்ளது. சந்திரன் 3 சென்ற இடத்தில் ஆக்ஸிஜன் உருவாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

ஆதித்யா ஒன் சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்டு இருக்கும்,ஒரு பக்கம் சூரியனை நோக்கி மறுபக்கம் பூமியை நோக்கியும் இருக்கும் இந்த ஆதித்யா ஓன் மின்கலம் சூரியன் உள்ள மாற்றங்களை நமக்கு முன்கூட்டியே அறிவிக்கும்.

இதன் அடிப்படையில், சூரியனில் ஏற்படக்கூடிய மாற்றங்களை முன்கூட்டியே கண்காணிக்கவும்,இந்தியா அனுப்பியுள்ள 60 ஆயிரம் கோடி மதிப்புள்ள செயற்கைக்கோள் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை பாதுகாக்க மற்றும் பருவ நிலை மாற்றம் கண்டறிய ஆத்தியா 1 செயற்கைக்கோள் பெறும் அளவு பயன் பெறும் என்றார்.