Home Blog Page 348

மதுரை அருகே… குரங்குகளுக்கு உணவளிக்கும் கூலித் தொழிலாளி!

man feeding monkeys - 2026

மதுரை: திண்டுக்கல் மாவட்டம் , கொடைரோட்டை சேர்ந்தவர் ஆனந்தன் இவர் சிறு வயது முதல் வனப் பகுதியில் உணவின்றி, சுற்றித் திரியும் குரங்குகளுக்கு தன்னால் முயன்ற அளவு உணவு ப் பொருட்களான பழங்கள் காய்கறிகள் மற்றும் சாப்பாடு போன்ற உணவுப் பொருள்களை வழங்கி வருகிறார்.

குறிப்பாக, பாலமேடு அருகே சாத்தையாறு அணை அழகர் கோவில் மலைப்பகுதி, நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு செல்லும்போது, அங்கு உணவுக்காக சுற்றி திரியும் குரங்குகளுக்கு தனது வருமானத்தின் ஒரு பகுதியில் பழங்கள் காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களை வாங்கி வழங்கி வருகிறார்.

இது குறித்து, ஆனந்தன் கூறுகையில்: எனது சொந்த ஊர் கொடை ரோடு. நான் வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் போது, அங்கு தண்ணீர் மற்றும் உணவுக்காக குரங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியில் வந்து சாலை ஓரங்களில் இருப்பதை பார்க்கும் போது மிகுந்த மனவேதனை தந்தது.

இதனால் எனது வருமானத்தில் ஒரு பகுதியை இது போன்ற குரங்குகளுக்காக செலவு செய்ய முடிவு செய்து, அதன்படி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குரங்குகளுக்கு உணவளித்து வருகிறேன். இந்த வகையில் இன்று பாலமேடு அருகே உள்ள சாத்தையார் அணை பகுதிக்கு வந்தபோது சுமார் 50க்கும் மேற்பட்ட குரங்குகள் கோடை வெப்பம் தாங்காமல் தண்ணீர் மற்றும் உணவுக்காக சாலை ஓரங்களில் இருப்பதை கண்டு உடனடியாக ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆப்பிள், மாதுளை உள்ளிட்ட பழங்களை சாக்குப்பையில் வாங்கி வந்து சாலை ஓரங்களில் வைத்து குரங்குகளுக்கு வழங்கினேன்.

முதலில் ஒரு குரங்கு பழத்தை வழங்கியதைப் பார்த்து மற்ற குரங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து பழங்களை வாங்கிச் சென்றன. மனசுக்கு மிகுந்த மகிழ்ச்சியும் மன நிறைவையும் தந்தது …என்றார்.

மதுரையில் பலத்த காற்றுடன் கனமழை; மரம் விழுந்து கார், பைக் வாகனங்கள் சேதம்!

madurai heavy rain tree fallen - 2026

மதுரை மாநகர் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மதுரை புது ஜெயில் ரோடு சாலையில் திடீரென ராட்சச மரம் ஒன்றும், தொடர்ந்து அப்பகுதியில் சுமார் 7 க்கும் மேற்பட்ட மரங்கள் மழையின் காரணமாக வேருடன் சரிந்து விழுந்தது.

madurai rain vehicle damage - 2026

இதில் நான்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம் உள்ளிட்டவைகள் சேதமடைந்துள்ளது. தொடர்ந்து அந்த பகுதியில் வாகன போக்குவரத்து பாதிப்பு அடைந்ததை தொடர்ந்து நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மரம் ஒன்று அங்கிருந்த டிரான்ஸ்பார்மரில் விழுந்ததை தொடர்ந்து அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மதுரை அருகே விளாங்குடி, பரவை, கருப்பாயூரணி, சக்கி மங்கலம், வண்டியூர், திருநகர், அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

மதுரை தமிழ் சங்கம் சாலை, மதுரை அண்ணாநகர், பெரியார் பஸ் நிலையம் பகுதிகளில், மழைநீர் சாலையில் தேங்கின.

நெல்லை-மதுரை இரட்டை ரயில் பாதைப் பணிகள் நிறைவு : புதிய ரயில் இயக்கப்படுமா?..

IMG 20230709 WA0092 - 2026

திருநெல்வேலி -மதுரை இரட்டை ரயில் பாதைப் பணிகள் நிறைவடைந்து.இந்த புதிய இரட்டை பாதையில்
புதிய ரயில்களை இயக்காத தெற்கு ரயில்வே . புதிய ரயில் இயக்க பொது மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த திருநெல்வேலி-மதுரை இடையேயான இரட்டை ரயில் பாதைப் பணிகள் நிறைவடைந்த போதும், பயணிகளுக்குப் போதுமான புதிய ரயில்களை இயக்கிட ரயில்வே நிர்வாகம் அக்கறை காட்ட வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்னக ரயில்வேயில் கடந்த 2018 முதல் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த மதுரை-திருநெல்வேலி இரட்டை ரயில் பாதைப் பணிகள் நிறைடைந்து கடந்த மார்ச்.,7 முதல் அனைத்து ரயில்களும் இரு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், ரயில் நிலையங்களில் முன் கூட்டி வந்த ரயில்கள் எதிரே வரும் ரயிலுக்காக காத்திருந்த நிலை மாறியுள்ளது. மேலும், பயண நேரமும் குறைந்துள்ளது. தற்போது ரயில் நிலையங்களுக்கு பல ரயில்கள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தென் மாவட்ட மக்கள் மற்றும் ரயில் பயணிகள் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, செங்கோட்டை ஆகிய பகுதிகளிலிருந்து சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இயக்கிட வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் முதல் தேதியில் ரயில்வே கால அட்டவணை வெளியிடுவது வழக்கம். ஆனால், சமீபத்தில் சில ஆண்டுகளாக ரயில்வே நிர்வாகம் அக்டோபர் மாதம் கால அட்டவணையை வெளியிட்டு வருகிறது. கால அட்டவணைகள் தயாரிப்பதற்கு ரயில்வே நிர்வாகத்தில் உயர்மட்ட குழு உள்ளது. அக்குழு கூடி முடிவு செய்து, அதன் பரிந்துரைகளை இரயில்வே மண்டல மேலாளர் மூலம் ரயில்வே வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
2020-21 ரயில்வே வாரியத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு பரிந்துரைக்கப்பட்ட பல புதிய ரயில்கள் இயக்கப்படவில்லையென கூறப்படுகிறது. எனவே, புதிய ரயில்களை இயக்கிட ரயில்வே வாரியம் அறிவித்திட வேண்டுமென பொது மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
குறிப்பாக,மதுரை-நெல்லை இடையே இரட்டை ரயில்பாதை பணிகள் முடிவு பெற்றதால், வடமாநிலங்களில் இருந்து மதுரை வரை வரும் ரயில்களை நெல்லை வரை நீட்டிப்பு செய்யவும், வடமாநிலங்களில் இருந்து கேரளா வழியாக நெல்லை வரை வந்து செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தையும் மதுரை சந்திப்பு ரயில் நிலையம் வரை நீட்டிப்பு செய்திட வேண்டும் என ரயில் பயணிகள் மற்றும் பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல், சேலம் கோட்டம், திருச்சி கோட்டத்திலிருந்து தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டை வரை கூடுதலான ரயில்களை இயக்கிட வேண்டும். நீண்ட நாட்களாக சிறப்பு ரயில்களாக இயங்கும் ரயில்களை நிரந்தரமாக இயக்க வேண்டும் என தென் மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஏற்கனவே, தெற்கு ரயில்வேயில் மதுரை கோட்டத்தின் மூலம் இரயில்வே நிர்வாகத்திற்கு அதிக அளவிலான வருவாய் கிடைத்து வருகிறது. தென் மாவட்டங்களுக்கு நீட்டிப்பு ரயில்களை இயக்கிடும் பட்சத்தில் மேலும் கூடுதலான வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
சிறப்பு ரயிலை தினசரி ரயிலாக : சிறப்பு ரயிலாக வாரத்தில் ஒரு நாள் மட்டும் இயக்கப்பட்டு வரும் நெல்லை-தாம்பரம் ( அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி, இராஜபாளையம், விருதுநகர் வழியாக இயக்கப்படுகிறது) சிறப்பு ரயிலை தினசரி ரயிலாக இயக்கிட வேண்டும்.
வாரத்தில் ஒரு நாள் மட்டும் வரும் மேட்டுப்பாளையம் -நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாக இயக்கிட வேண்டும்.
கொல்லம்-விருதுநகர்-மானாமதுரை-இராமேஸ்வரம் இடையே புதிய ரயில்களை இயக்க வேண்டும்.
புதிய வந்தே பாரத் ரயில்கள் : சென்னை-கன்னியாகுமரி வரையும் திருநெல்வேலியிலிருந்து -பெங்களூரு வரையும் செல்லும் வகையில் வந்தே பாரத் ரயில்களை இயக்கிட வேண்டும் என மத்திய அரசுக்கும் ரயில்வே அமைச்சகத்திற்கும் ரயில் பயணிகள் மற்றும் தென் மாவட்ட பொது மக்கள் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீட்டிப்பு ரயில்கள் : திண்டுக்கல் -மதுரை வரை இயங்கும் பயணிகள் ரயிலை நெல்லை வரையும், மதுரை-ஜெய்ப்பூர் வரை இயங்கும் பிகானியர் எக்ஸ்பிரஸ் ரயிலை நெல்லை வரையும், சண்டிகர்-மதுரை வரை இயங்கும் சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரயிலை தூத்துக்குடி வரையும், மதுரை-சென்னை செல்லும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை திருநெல்வேலியிலிருந்து புறப்படும் வகையிலும் நீட்டிப்பு செய்திட வேண்டும். விழுப்புரம்-மதுரை பயணிகள் ரயிலை செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். சேலம்-கரூர்-திருச்சி வரை இயங்கும் பயணிகள் ரயிலை திருச்செந்தூர் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். போடி-மதுரை வரை இயங்கும் பயணிகள் ரயில் வண்டியை தூத்துக்குடி மற்றும் செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். கோவை-மதுரை வரை இயங்கும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரசை தூத்துக்குடி வரை நீட்டிப்பு செய்திட வேண்டும்.
டெமு ரயில்கள் : மானாமதுரை-மன்னார்குடி வரை செல்லும் டெமு ரயிலை விருதுநகர் சந்திப்பு வரை நீட்டிப்பு செய்திட வேண்டும்.
புதிய இணைப்பு ரயில் : செங்கோட்டை-மதுரைக்கு அதிகாலை நேரத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு புதிய இணைப்பு ரயில் விட வேண்டும்.
தினசரி ரயில்கள் : கேரள மாநிலம் எர்ணாகுளம்-வேளாங்கன்னி வரை இயங்கும் சிறப்பு ரயிலை தினசரி ரயிலாக மாற்றி இயக்க வேண்டும். குருவாயூர்-புனலூர் வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை மதுரை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. ரயில்வே நிர்வாகம் தினசரி ரயிலாக இயக்கப்படும் என அறிவித்தபோதும் மின்மயமாக்கும் பணியை காரணம் காட்டி அதை நடைமுறைப்படுத்த சுணக்கம் காட்டி வருகிறது.
அறிவிக்கப்பட்ட ரயில்கள் : அறிவிக்கப்பட்ட திருப்பதி-கொல்லம் விரைவு ரயிலை உடனே இயக்கிட வேண்டும். 2018இல் அறிவிக்கப்பட்ட தாம்பரம்-செங்கோட்டை அந்தியோதயா ரயிலையும் காலதாமதமின்றி இயக்கிட வேண்டும்.
கேரளா வழியாக செல்லும் ரயில்கள் : நெல்லையிலிருந்து குஜராத் மாநிலம் ஜாம் நகருக்கு செல்லும் விரைவு ரயிலை மதுரையிலிருந்து புறப்படச் செய்திட வேண்டும்.
நெல்லையிலிருந்து பிளாஸ்பூர் வரை செல்லும் விரைவு ரயிலை மதுரை சந்திப்பிலிருந்து இயக்கிட வேண்டும்.

அசாம் மாநிலம் திப்ருக்கரிலிருந்து கேரளா வழியாக கன்னியாகுமரி வரும் எக்ஸ்பிரஸ் ரயிலை மதுரை சந்திப்பிலிருந்து இயக்கிட வேண்டும் என்றும் புதிய கால அட்டவணை வெளியிடும் போது தென் மாவட்ட மக்களவை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து புதிய ரயில்களை இயக்கிட வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட்(4): 1983- மானம் காத்த கபில்!

world cup cricket 1983 - 2026

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கட் போட்டிகள்
பகுதி 4 – மானங்காத்த கபில்

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இந்தியா ஜிம்பாபே ஒரு நாள் போட்டி ஜூன் 18ஆம் தேதி நடந்தது. இது ஒரு சிறந்த ஒரு நாள் போட்டியாகும். கபில்தேவின் உண்மையான சிறந்த இன்னிங்ஸ் இந்தியாவுக்கு ஒரு அற்புதமான வெற்றியைக் கொடுத்தது.

இந்தப் போட்டி டன்பிரிட்ஜ் வெல்ஸ் என்ற ஒரு சிறிய மைதானத்தில் நடந்தது. ஆனால் அந்த மைதானம் ஒரு பெரிய கூட்டத்தால் நிரம்பியிருந்தது. மைதானத்தின் எல்லைக்கோட்டிற்கு அருகே உள்ள பெரும்பகுதியைச் சுற்றியிருந்த விருந்தோம்பல் கூடாரங்களுக்கு இடையே மக்கள் கூட்டம் நெருக்கியடித்தது.

இதற்கான காணொளி நேரடி ஒளிபரப்பை பிபிசி ஏதோ பிரச்சனை காரணமாக ஒளிபரப்பவில்லை. ஒரு இந்திய இரசிகர் கபில்தேவின் ஆட்டத்தை விடியோ எடுத்திருந்தார். ஆனால் அதனை தருவதற்கு மாபெரும் தொகையைக் கேட்டார்.

அண்மையில் வெளியான ‘1983’ என்ற திரைப்படம் இந்த மேட்சை மிக அழகாகக் காட்டியிருந்தது.

நான் அப்போது பெங்களூரில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். என் அறையில் அதிகாரி ஒருவர் அச்சமயத்தில் என்னோடு இருந்தார். அவரிடம் ட்ரான்ஸ்சிஸ்டர் இருந்தது. நாங்கள் கிரிக்கட் வர்ணனை கேட்டுக் கொண்டிருந்தோம்.

இந்தியா ஒரு கட்டத்தில் 17/5. அப்போது இரவு 10.00 மணி. இனி இந்தியா தோற்றுவிடும் என எண்ணி நாங்கள் இருவரும் உறங்கச் சென்றுவிட்டோம். அடுத்தநாள் காலை செய்தித்தாளில் முதல் பக்கத்தில், முழுப் பக்கத்திலும் கபிலின் படம்; இந்தியா வெற்றி என்ற செய்தி; வேறு தகவல்கள் இல்லை.

நான் ஓடிச் சென்று அந்த அதிகாரியிடம் சொல்கிறேன். அவர் தியானத்தில் இருந்தார்; அவர் எழுந்து ட்ரான்ஸ்சிஸ்டரை எடுத்துக் கொண்டு வெளியே சென்று நியூஸ் கேட்க ஆரம்பித்தார். இந்தியா வென்றிருக்கும் என எங்களால் நம்ப முடியவில்லை.

இந்தப் போட்டியில் ஜிம்பாபே தொடர்ந்து ஐந்தாவது முறையாக டாஸ் இழந்தது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்ய முடிவு செய்தது. ஜிம்பாபே அணியின் பீட்டர் ராவ்சன் மற்றும் கெவின் குர்ரான் பேய் பிடித்தது போல் பந்துவீசினார்கள். பந்தை சீமில் இருந்து கூர்மையாக நகர்த்தி, ஆடுகளத்தில் நிறைய லிப்ட் கண்டுபிடித்து இந்திய டாப் ஆர்டரை சின்னாபின்னமாக்கினர்.

கவாஸ்கர் (2 பந்துகள், பூஜ்யம் ரன்), ஸ்ரீகாந்த் (13 பந்துகள், பூஜ்யம் ரன்), மொஹிந்தர் அமர்நாத் (20 பந்துகள், 5 ரன்), சந்தீப் படீல் (10 பந்துகள், 1 ரன்), யஷ்பால் ஷர்மா (28 பந்துகள் 9 ரன்) என ஒருவர் பின் ஒருவராக அவுட் ஆகி பெவிலியன் சென்றனர். இந்தச் சமயத்தில் கபில் விளையாட வந்தார்.

இப்போட்டியின் ஏற்பாட்டாளர்கள் இச்சமயத்தில் கவலையடைந்து, போட்டி இந்தியாவின் படுதோல்வியோடு மதிய உணவு நேரத்திற்குள் முடிந்துவிடுமோ என்று பயந்தனர். அவர்கள் ஜிம்பாபே அணியின் மேலாளர் டேவ் எல்மேன்-பிரவுனிடம் தங்கள் அச்சம் பற்றித் தெரிவித்தனர். அவர் – காத்திருங்கள், நிலைமை மாறலாம் – என்று சொன்னார்.

பிபிசி, ஒரு தடாலடி ஜிம்பாப்வே வெற்றியை எதிர்பார்த்து, அவரிடம் வந்து ஒரு நேர்காணல் செய்ய எண்ணி அவருக்கு போன் செய்தது. அவர்களிடமும், “விளையாட்டு முடிவடையவில்லை” என்று அவர் கூறினார்.

ஏனென்றால் இதற்கு முன்னர் முதல் முறை ஜிம்பாபே அணியும் இந்திய அணியும் விளையாடியபோது 155 ரன்களை இந்திய அணி 37.3 ஓவரில் எடுத்திருந்தது.

ரோஜர் பின்னி கபில்தேவ் உடன் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு மேல் விளையாடினார். 48 பந்துகளைச் சந்தித்து 22 ரன் எடுத்தார். அதன் பின்னர் ரவி சாஸ்திரி சரியாக விளையாடவில்லை. அவருக்குப் பிறகு வந்த மதன்லாலும் கிர்மானியும் கபிலுக்கு கம்பனி தந்தனர்.

கபில் ஒரு அபாரமான இன்னிங்ஸை விளையாடினார், 138 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 175 ரன். டன்பிரிட்ஜ் வெல்ஸில் மைதானம் ஒருவகையில் அவருக்கு சில நன்மைகளைச் செய்தது.

இந்த மைதானத்தின் ஒரு பக்க எல்லைக்கோடு தூரத்திலும் மற்றொரு பக்க எல்லைக் கோடு அருகேயும் இருந்தது. கபில் தேவ் குறுகிய எல்லையை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார். கபில் 16 ஃபோர், 6 சிக்சர் என 100 ரன்கள் இதிலேயே எடுத்தார்.

ஜிம்பாபே அனியின் தலைவர் செய்த பந்து வீச்சு மாற்றங்களும் இந்த அதிரடி ஆட்டத்திற்கு உதவியது. கபில் 72 பந்துகளில் சதமடித்தார். கபில் தன்னுடைய இன்னிங்க்ஸை முடித்துவிட்டு வரும்போது சுனில் கவாஸ்கர் கபிலுக்கு குடிக்க ஒரு கோப்பை குடிநீருடன் வந்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

கவாஸ்கர் கபிலுக்குப் பதிலாக அணித் தலைவராகியிருக்க வேண்டியவர். ஜிம்பாபே அணி பல ஆண்டுகளுக்கு கபிலின் இந்த இன்னிங்க்ஸை மறக்கவில்லை.

ஜிம்பாபே அணி பதிலுக்கு 57 ஓவரில் 235 ரன் எடுத்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்து தோல்வியைச் சந்தித்தது. கபிலின் இந்த வெறித்தனமான ஆட்டம் இந்திய அணிக்கு ஒரு புதிய உத்வேகத்தைத் தந்தது.

அதன் பின்னர் ஆடிய ஆஸ்திரேலியாவுடனான லீக் ஆட்டம், இங்கிலாந்துடனான அரையிறுதி ஆட்டம், மேற்கு இந்தியத் தீவுகளுடனான இறுதி ஆட்டம் என அனைத்திலும் இந்திய அணி வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நின்றிருந்த வேன் மீது மற்றொரு வேன் மோதல்; தென்காசியைச் சேர்ந்த இருவர் மதுரையில் உயிரிழப்பு!

crime scene - 2026

திருப்பரங்குன்றத்தில் நின்றிருந்த வேன் மீது மற்றொரு வேன் மோதி… பெண் உள்பட இருவர் உயிரிழப்பு!

மதுரை: திருப்பரங்குன்றத்தில் நின்ற வேன் மீது மற்றொரு வேன் மோதியதில் பெண் உள்பட இரண்டு பேர் உயிரிழந்தார்கள்.

தென்காசியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மனைவி ஜெயஸ்ரீ (50), சண்முகராஜா (40), கிருஷ்ணன் (38), வைரமுத்து (29), செந்தில் இசக்கி (28) ஆகியோர் கோயம்புத்தூருக்கு ஒரு வணிக அமைப்பின் கூட்டத்துக்காகச் செனறிருந்தனர். அங்கிருந்து கிளம்பி நள்ளிரவு சொந்த ஊருக்குத் திரும்பினர்.

அவர்கள் சென்ற வேன் திருப்பரங்குன்றம் மொட்டமலை பாரதி நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலை ஓரம் நின்று கொண்டிருந்த மற்றொரு வேன் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்தானது. இதில் படுகாயம் அடைந்து, வேனில் பயணம் செய்த ஜெயஸ்ரீயும் சண்முகராஜாவும் உயிரிழந்தார்கள். கிருஷ்ணன், வைரமுத்து, செந்தில் இசக்கி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த விபத்து குறித்து ஆஸ்டின்நட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


ஜெய்ஹிந்த்புரத்தில் முன்விரோதத்தில் இளைஞருக்கு கத்திக்குத்து: மூவர் கைது!

மதுரை , ஜெயந்த்புரத்தில் முன் விரோதத்தில் இளைஞரை வழிமறித்து கத்தியால் குத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

ஜெய்ஹிந்த்புரம் சோலை அழகுபுரம் முதல் தெரு ராமமூர்த்தி முதல் தெருவை சேர்ந்தவர் சேட் மகன் பாதுஷா (20). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் சூர்யா (21) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் சோலையழகுபுரம்பு திருப்பதி நகர் வழியாகச் சென்று கொண்டிருந்த பாதுஷாவை மூன்று பேர் வழிமறித்தனர். அவர்கள் அவரை ஆபாசமாக பேசி வழிமறித்து தாக்கி கத்தியால் குத்தி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து பாதுஷா ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சோலை அழகுபுரம் முதல் தெரு முத்துக்குமார் மகன் சூர்யா 21, துரைச்சாமி மகன் மதன் என்றமந்தாரு 20, லெனின் அழகர்சாமி மகன் கார்த்திக் என்ற மிச்சர் கார்த்தி22 ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.


செல்போனில் பேசி பெண்ணுக்கு டார்ச்சர்; தட்டிக்கேட்ட கணவன் மனைவி மீது தாக்குதல்! இருவர் கைது!

செல்போனில் பேசி இளம் பெண்ணுக்கு டார்ச்சர் கொடுத்ததை தட்டிக் கேட்ட கணவன் மனைவியை தாக்கிய இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

மதுரை, காமராஜபுரம் என்.ஈம்.ஆர். ரோட்டை சேர்ந்தவர் சங்கர் மகன் கணேஷ் 34. இவருடைய நண்பர் மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு அடிக்கடி ஆபாசமாக பேசி டார்ச்சர் கொடுத்துள்ளார். இது குறித்து அந்த பெண் அவருடைய கணவரிடம் தெரிவித்துள்ளார் .

இதைத் தொடர்ந்து, கணவன் மனைவி இருவரும் கணேஷை கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கணேசன் அவரது நண்பர் தெற்கு வாசல் ஆண்டவர் முதல் தெருவை சேர்ந்த அப்துல்லா 44 இருவரும் சேர்ந்து தெற்கு வாசல் ஜெயவிலாஸ் பாலம் அருகே சென்று கொண்டிருந்த அந்தப் பெண்ணையும் அவர் கணவரையும் ஆபாசமாக பேசி தாக்கியுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணும் கணவரும் கீரைத் துறை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தாக்கிய கணேஷ் 34 அவருடைய நண்பர் அமானுல்லா 44 ஆகிய இருவரையும் கைது செய்தனர் .


வியாபாரத்தில் நஷ்டம் வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை!

மதுரை, பிபி குளம் வள்ளலார் தெரு காமராஜர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் செந்தில் குமார் 46. இவருக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்தார். அதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார்.

இதனால் மது பழக்கத்திற்கும் அடிமையானார்.மது அருந்த மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் மணமடைந்த செந்தில்குமார் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து மனைவி முத்துலதா தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில்குமாரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


அண்ணா நகரில் தனியாக நின்ற பெண்ணிடம் இரண்டரை பவுன் செயின் பறிப்பு: பைக் ஆசாமிகள் கைவரிசை!

மதுரை , அண்ணா நகரில் தனியாக நின்ற பெண்ணிடம் இரண்டரை பவுன் செயின் பறித்த பைக் ஆசாமிகளை, போலீசார் தேடி வருகின்றனர்.

அனுப்பானடி மகாத்மா காந்தி மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ரம்யா31. இவர் அண்ணாநகரில் ஒரு தியேட்டர் முன்பாக உள்ள ஸ்கேன் சென்டர் அருகே நின்று கொண்டிருந்தார். அவர் தனியாக நிற்பதை கண்ட இரண்டு பைக் ஆசாமிகள் அவர் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்கச்செயினை பறித்து சென்று விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து ரம்யா அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் செயின்பறித்த பைக் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

அம்மன் கோயில்களுக்கு ஆன்மீக சுற்றுலா: அறநிலையத் துறை ஏற்பாடு!

madurai meenakshi amman temple - 2026

மதுரை: மதுரை மாவட்டம், தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு ஆன்மீக சுற்றுலா வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து ஆன்மீக பயணிகள் பயன்பெறும் வகையில் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களை தரிசனம் செய்யும் வகையில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஒரு நாள் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா 17.07.2023 அன்று முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு ஆடி மாதத்தில் ஒவ்வொரு செவ்வாய் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், அழைத்துச் சென்று சிறப்பு தரிசனம் செய்யும் வகையில் இந்த ஒருநாள் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயில்

அருள்மிகு வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் திருக்கோயில்

அருள்மிகு மடப்புரம் காளியம்மன் தருக்கோயில்

அருள்மிகு தாயமங்கலம் முத்துமாரியம்மன் திருக்கோயில்

அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயில்

அருள்மிகு ராக்காயி அம்மன் கோயில் அழகர்கோயில்
அனைத்து கோயில்களிலும்
இந்து சமய அறநிலையத்துறை கோயில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறையும் இணைந்து பயணிகளை வரவேற்று சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் , சிறப்பு பூஜை நடத்தப்பட்டு அனைத்து கோவில்களிலும் அம்மன் பிரசாதங்கள் வழங்கப்பட உள்ளது.


இந்த ஆண்டு ஆடிமாதத்தை முன்னிட்டு , ஒரு நாள் ஆடி அம்மன் ஆன்மீக சுற்றுலா செல்ல விரும்பும் பக்தர்கள், என்ற இணையத்தின் மூலமாகவும் மற்றும் ஓட்டல் தமிழ்நாடு அழகர்கோவில் ரோடு மதுரை-2-வில் நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், விவரங்களுக்கு ஓட்டல் தமிழ்நாடு, அழகர்கோவில் ரோடு மதுரை. 6380699288 9176995841 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம் என, மாவட்ட சுற்றுலா அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓஸி பஸ் பயணத்துக்காக… ஜோக்கை உண்மையாக்கி… பர்தா அணிந்து சென்ற ஆண்!

man wearing burqa for free bus travel in Karnataka - 2026

சமூக வலைதளங்களில் சமூக வலைதளங்களில் அண்மையில், ஒரு ஜோக் வைரலானது. அதில், கட்டட வேலை செய்யும் ஒருவர், வேலைக்கு வந்து புடைவை உள்ளிட்ட ஆடைகளை அவிழ்த்து ஓர் அறையில் போட்டு விட்டு, பெண் வேடம் கலைத்த ஆணாக வேலையில் ஈடுபடுவார். ஏன்பா இப்படி என்று ஒருவர் கேட்கும் போது, இலவச பயணத்துக்காக பெண் வேடம் போட்டு தினமும் காசை மிச்சப் படுத்துகிறேன் என்பார். இந்த ஜோக் இப்போது உண்மையாகியிருக்கிறது கர்நாடகாவில்!

கர்நாடக சட்டமன்றத் தேர்தலின் போது பெண்களுக்கு கட்டணமில்லாப் பேருந்து சேவை வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது. அதன்படி காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த பின்னர் அங்கே மகளிருக்கான கட்டணம் இல்லா பேருந்து பயணத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு சக்தி யோஜனா என்று பெயரிடப்பட்டுள்ளது.

அதே நேரம் தமிழகத்தைப் போலன்றி, கர்நாடகாவில் பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட பெண்கள் மட்டுமே இலவச பயணம் மேற்கொள்ளலாம். அவர்களுக்கு சக்தி கார்டு என்ற பயண அட்டை வழங்கப்படும். கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்டவர் என்ற அடையாள அட்டை இருந்தால் மட்டுமே சக்தி கார்டு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

karnataka bus travel ladies free bus pass - 2026

பெண்களுக்கு இலவசம் / இலவச பேருந்து என்று ஸ்டிக்கர் ஒட்டிய பேருந்துகளில் மட்டுமே கட்டணமில்லாமல் பயணிக்கலாம். மற்ற பேருந்துகளில் பெண்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இதில் மாநில அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் இலவசமாக பேருந்தில் பயணம் செய்வதற்காக ஒருவர் பர்தா அணிந்து பெண் வேடமிட்டுச் சென்றது தெரியவந்துள்ளது. பேருந்து நிறுத்தத்தில் பர்தா அணிந்து அமர்ந்திருந்த நபரின் உடல்வாகு மற்றும் செயல்பாடுகள் சந்தேகத்திற்கு உரிய வகையில் இருந்ததை அங்கிருந்த பொதுமக்கள் கவனித்தனர். இதை அடுத்து, அவரது முகத்தை திரை விலக்கிப் பார்த்தபோது அவர் ஓர் ஆண் என்று தெரியவந்துள்ளது.

58 வயதான அந்த நபர் பிச்சை எடுப்பதற்காக அந்த உடையில் வந்ததாகக் கூறி சமாளித்துள்ளார். ஆனால் அவரது பேச்சு நம்பும்படியாக இல்லை என்பதாலும், அவரிடம் பெண்கள் இலவசமாக பயணம் செய்வதற்கான சக்தி அடையாள அட்டை இருந்துள்ளதுள்ளதாலும், அந்த நபர் பேருந்தில் இலவசமாக பயணம் செய்வதற்காகத்தான் பர்தா அணிந்து வந்திருக்கிறார் என்பதை மக்கள் புரிந்து கொண்டனர். இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

ஊட்டியில் ஆர்எஸ்எஸ்., கூட்டம் இன்று தொடக்கம்: தேசியத் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்பு!

mohan bhagavat rss leader - 2026

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இன்று ஆர்எஸ்எஸ்., அமைப்பின் கூட்டம் தொடங்குகிறது. ஒரு வாரம் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், அந்த அமைப்பின் தேசியத் தலைவர் மோகன் பாகவத் கலந்து கொள்கிறார்.

ஆர்எஸ்எஸ்., அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் தேசிய நிர்வாகிகள், மாநில அமைப்பாளர்கள் கூட்டம், இந்த வருடம் ஊட்டியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறுகிறது. திங்கள் கிழமை இன்று தொடங்கும் கூட்டத்தில் பங்கேற்க ஆர்எஸ்எஸ்., அகில பாரதத் தலைவர் மோகன் பாகவத் தமிழகம் வந்தார்.

இன்று ஊட்டியில் நடைபெறும் ஆர்எஸ் எஸ்., கூட்டத்தில் கடந்த ஓராண்டில் ஆர்எஸ்எஸ்., இயக்கத்தின் செயல்பாடுகள்; சாதனைகள், எதிர் கொண்ட பிரச்னைகள் குறித்தும், அடுத்த ஓராண்டுக்கான செயல்திட்டங்கள் குறித்தும் விவாதிக்கின்றனர். வரும் 2024 மக்களவைத் தேர்தல், ஆர்எஸ்எஸ்., இயக்கத்தின் நூற்றாண்டு, அதற்கான செயல் திட்டங்கள் இவை குறித்தும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

முன்னதாக, நேற்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஆர்எஸ்எஸ்., அகில பாரத தலைவர் மோகன் பாகவத், பங்கேற்றுப் பேசினார்.

mohanbhagawat in coimbatore - 2026

கோவையில் நடந்த விழாவில் மோகன் பகவத் பேசியபோது… “இந்துக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். பொருளாதார ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது. உலகில் எல்லா பக்கங்களிலும் இந்து கோவில்கள் உள்ளன. இது நமது கருத்துகளை மதத்தின் சாரத்தை அங்குள்ள மக்களிடம் கொண்டு சேர்க்கிறது. தமிழகத்தின் ராஜராஜ சோழன் கடல் கடந்து சென்று கோவில்களை நிர்மாணம் செய்தான். அதன் மூலம் அங்கெல்லாம் நமது கருத்துகள் பரவி உள்ளது. யாரையும் வெற்றி கொள்ள வேண்டியதில்லை. மாறாக நமது கருத்துக்களை எடுத்துரைக்க வேண்டும்.

“வேற்றுமையில் ஒற்றுமை என்பது, ஹிந்து மதத்தின் தர்மம். ஹிந்து மதத்தில் உண்மை, துாய்மை, அன்பு, தவம் நான்கும் முக்கியமானது. இதை மேலும் வளர்க்க வேண்டும். யாரையும் வெற்றி கொள்ள நாம் போட்டியிடக் கூடாது. ஹிந்து மதத்தின் கருத்துகளையும், சிறப்பையும் எடுத்துச் சொல்லி, உற்றார், உறவினர் நண்பர்கள், மதம் மாறுவதை தடுக்க வேண்டும். மாற்றம் என்பது நம்மில் துவங்க வேண்டும்” என்றார்.

கோவை ஒண்டிப்புதூரில் உள்ள காமாட்சிபுரி ஆதீனத்தில் திரிசக்தி யாகம் நடந்தது. காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள் இதற்குத் தலைமை வகித்தார். மோகன் பாகவத் யாகத்தில் பங்கேற்றார். மேகாலயா மாநில முன்னாள் ஆளுநர் சண்முகநாதன், ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம், ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வரர் எழுதிய கம்போடிய பயணம் புத்தகம் வெளியிடப்பட்டது.

பழனி: அறநிலையத் துறை அத்துமீறல்களை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்!

1783428 palani murugan temple - 2026

பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலில் அறநிலையத்துறை நடத்திவரும் அத்துமீறல்களை கண்டித்து, பழனி மலைக்கோயில் பாதுகாப்பு பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், ஜூலை 11 செவ்வாய்க் கிழமை நாளை மாலை 5.00 மணிக்கு, பழனி மயில் ரவுண்டானாவில் வைத்து நடைபெறவுள்ளது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், பாஜக., மூத்த தலைவர் ஹெச்.ராஜா, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

இது குறித்து பழனி மலைக்கோயில் பாதுகாப்புப் பேரவை வெளியிட்ட பிரசுரத்தில்,

பழனி கோயில் நுழைவு வாயில்களில் பல ஆண்டுகளாக இருந்து வந்த, “இந்துக்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்” என்ற வாசகம் பொருந்திய பதாகையை, தேவஸ்தான நிர்வாகம் அகற்றியதை கண்டித்தும்.

அந்த பதாகைகளை உடனடியாக மீண்டும் வைக்கக் கோரியும்,

பழனி மலைக்கோயில் வின்ச் ஸ்டேசனில் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த அதிகாரியை தகாத வார்த்தைகளால் மிரட்டல் விடுத்த இஸ்லாமியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளாத தேவஸ்தான நிர்வாகத்தை கண்டித்தும்,

தொடர்ச்சியாக பழனி மலைக்கோயில் இந்துக்களின் இறை நம்பிக்கை இழிவு படுத்திவரும் இந்து சமய அறநிலையத்துறையின் ஏதேச்சைய அதிகாரத்தை கண்டித்தும்,

வசதி படைத்தவர்கள் மட்டும் தரிசனம் செய்யும் பிரேக்கிங் தரிசன முறையை அமல்படுத்த நினைக்கும் அறநிலையத்துறையை கண்டித்தும்,

காலபூஜை கட்டணம் மற்றும் தங்கரத கட்டணம் போன்றவற்றை உயர்த்தக்கூடாது என்று வலியுறுத்தியும்,

பழனி மலைக்கு வரும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்கள் ஆகியோருக்கு சுவாமி தரிசனம் மற்றும் வின்ச், ரோப்கார்களில் முன்னுரிமை வழங்க மறுக்கும் நிர்வாகத்தை கண்டித்தும்.

தினமும் மலைக்கோயில் இராக்கால பூஜையானது குறித்த நேரத்தில் நடத்தாமல், அங்குள்ள அதிகாரிகள் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன், அவர்கள் இஷ்டத்திற்கு 9 மணி, 10 மணி, 11 மணி என்று ஆகமத்திற்கு புறம்பாக நடத்துவதை கண்டித்தும்,

கள்ளிமந்தையத்தில் உள்ள பழனி கோயிலுக்கு சொந்தமான கோசாலையில் பக்தர்கள் தானமாக கொடுத்த பசுமாடுகளைப் பராமரிக்காமல், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு தானமாக வழங்குவதாகக் கூறி கடந்த மூன்று நாட்களுக்கு முன் 220 மாடுகள் அடிமாடுகளாக விற்கப்பட்டுள்ளதை கண்டித்தும்,

இப்படி தொடர்ச்சியாக கோடான கோடி முருக பக்தர்களின் இறை நம்பிக்கையை இழிவுபடுத்தி வரும் பழனி தேவஸ்தான நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில் இந்து சமுதாய சொந்தங்கள், முருக பக்தர்கள் கலந்து கொண்டு ஆதரவு தர வேண்டும். நமது கோயில், நமது உரிமையை மீட்க ஒன்று பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

நித்ய பந்தம் என்பதை மறந்த மனிதன்!

hinduism - 2026

— குச்சனூர் கோவிந்தராஜன் —

இறைவனால் படைக்கப்பட்ட உலகம் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானதே!. இவ்வுலகம் மனிதன் தவிர்த்துப் பிற உயிர்களால் நிலை தடுமாறுவதில்லை மனிதனால் இயல்பினை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது. அதற்கு காரணம் இறைவனால் படைக்கப்பட்டவன் என்ற போதும் மனிதன் தன் சுயநலத்திற்காக சிதைக்க முயல்கிறான். அதற்கு காரணம் மனிதன் நித்திய பந்தம் எனும் சொற்களின் பொருள்களை மறந்து போனது தான் என்றால் மிகையில்லை.

நித்திய பந்தம் என்றால் என்ன? நித்தியம் என்றால்? இன்று நாம் பயன்படுத்துகிற ஏ டி எம் 24 × 7 என்பது போல் என எளிதில் புரிந்து கொள்ள உதவும் உதாரணமாக ச் சொல்லலாம். நாம் பயன்படுத்தும் இயந்திரங்கள் கூட பழுதுபட்டால் 24 × 7 வேலை செய்யாது , ஆனால், ஆன்மீகத்தில் நொடியல்ல நொடியை ஆயிரம் கூறிட்டு வரும் காலம் கூட விலகாது பிணைந்தே இருப்பது ஆகும்.

நித்தியம் என்றால் எப்பொழுதும் இணைந்து இருப்பது என்பதாகும். பந்தம் என்றால் என்ன? பந்தம் என்ற சொல்லிற்கு உறவு, முடிச்சு, பிணைத்தல், இணைத்தல், விளக்கு உட்பட மேலும் பல பொருள்கள் இருக்கின்றன. உறவு, பிணைத்தல், விளக்கு என்ற மூன்று பொருளோடு நம் வாழ்வியலுக்கு எப்படி பொருந்துகின்றன என்பதை அறிவோம்.

எப்பொழுதும் இணைந்திருக்கும் சொந்தம் எது? எப்பொழுதும் நம்மை இணைக்கும் இணைப்பு எது? எப்பொழுதும் நம்முடன் இருக்கும் விளக்கு எது? (வழிகாட்டி, ஒளி) என்ற மூன்றினையும் நாம் புரிந்து கொண்டோமானால் நாம் இறைவன் படைத்த இவ்வுலகில் ஆனந்தமாய் எப்பொழுதும் வாழலாம். நம்மோடு இணைந்து இருக்கும் சொந்தங்கள் என்றால் அவை அப்பா, அம்மா, உடன்பிறந்தார், நண்பர்கள் அல்ல இவர்கள் எல்லாம் இந்த ஜென்மத்தில் இணைந்தவர்கள் முந்தைய ஜென்மத்திலும் பின்வரும் ஜென்மத்திலும் உடன் வருவார்களா என்றால்? தெரியாது சிலர் வரலாம் வராமலும் போகலாம். தவிர வாழும் போது கூட நம்மோடு எப்போதும் வருவதும் இல்லை .

ஆனால் ஒரு சொந்தம் எப்பொழுதும் எப்பிறவியிலும் எல்லா வடிவிலும் நம்மோடு வரும் சொந்தம் உண்டு என்றால் அது இறைவன் எனும் சொந்தமே. அதனால்தான் மகாகவி பாரதி கண்ணனை உலகில் உள்ள அனைத்து உறவுமாய் கருதி பாடினார். குழந்தையாய், தாயாய், தந்தையாய், குருவாய், சீடனாய், வேலைக்காரனாய், காதலியாய், நண்பனாய் என அனைத்து உறவுமாய் இறைவனைப் பார்த்து ஆனந்தப்பட்டார். எதிரியை கூட நேசிக்கச் சொன்னார். பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே என்ற பாடலில்….., இப்படி எக்காலமும் எல்லா உறவுமுறையுமாய் நம்மோடு எப்பொழுதும் பிணைந்திருக்கும் இறைவனை எண்ணி செயல்பட்டால் நம்மிடம் பிழை ஏற்படுமா? நிலை மாறுமா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

நம்மை எப்போதும் இணைக்கும் இணைப்பு
எது என்ற வினாவிற்கு விடை இறைவன் என்பதே அவன் தான் நம்மை எல்லாருடனும் எல்லாவற்றோடும் இணைக்கிறான். அவனோடு இணைந்தவர்கள் நான் என்பதை உணர வேண்டும். இறைவன் பஞ்சபூதங்களாய் இருக்கிறார் நமது செயல்கள் அனைத்திற்கும் வாழ்வதற்கும் இந்த பஞ்ச பூதங்கள் மிக அவசியம்.

பஞ்ச பூதங்கள் வேறு என்று நாம் எண்ணவே முடியாது இறைவன் அகத்தில் மட்டும் அல்ல நமது புறத்திலும் பஞ்ச பூதங்களாய் நம்மோடு இணைந்து இருக்கிறான். அதனால் நம்மோடு எப்போதும் இணைந்தே இருப்பது இறைவன் என்பதை உணர்ந்து செயல்பட்டால் , எந்த சுற்றுச் சூழலையும் நாம் வெறுக்க மாட்டோம். மாறாக போற்றுவோம், பாதுகாப்போம். நமது அன்றாட அலுவல்கள் ஆனந்தமாய் தொடரும்.

இறைவனை விளக்காய் விளக்கின் விளக்கம் யாது ? எனில் விளங்காததை விளக்குவதே விளக்கின் விளக்கமாகும் விளக்கு என்பது ஞான ஒளியின் குறியீடு.

‘அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக,
இன்புருகு சிந்தை யிடுதிரியா, – நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்.

இறைவன் ஒளியாய் ஒளியில் நிறைந்து இருக்கிறான். இத்தகைய இறைவன் நமக்கு தேவையான இடங்களில் வழிகாட்டியாய் விளங்குகிறான். ஆச்சாரியர்கள், ரிஷிகள், குருமார்கள் மூலம் உரையாய் உரைநடையாய் செயல்பாடுகளாய் நமக்கு விளக்கு இருளில் வழி காட்டுவது போல் வாழ்க்கையில் வழிகாட்டி விளக்குகிறார்கள். நம்மை வழி நடத்துகிறார்கள். அவர்களின் வழிகாட்டுதல்கள் இறைவனின் ஏற்பாட்டினால் ஏற்பட்டது என்பதை உணர்ந்து நாம் அவர்கள் வழி நடந்தால் வாழ்க்கை வளமாகும். நலமாகும். நாளும் நன்மை விளையும்.

நாமும் நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் இறைவன் என்பதை உணர்த்தவே நம் புராணங்கள் இதிகாசங்கள் சாஸ்திரங்கள் இவற்றினை வழிபடும் பொருளாக்கி நாம் வணங்கும் செடி, இலை, பூ, காய், கனி, மரம், பறவைகள், விலங்குகள் என அனைத்தும் இறைவன் நிறைந்திருக்கிறான் என உணர்த்தி அவற்றை பாதுகாக்க ஓர் அறம் அமைத்தார்கள். நாம் அவற்றை உடைத்ததாலேயே பல இயற்கை வேறுபாடுகள் ஏற்பட்டு நாம் பல துன்பங்களை சந்திக்கிறோம் நம்மோடு நித்திய பந்தத்தில் இருக்கும் இறைவனை இறைவனோடு இறைவனாய் உள்ள உலகத்தோடும் இணைந்து வாழ்வோம் வளம் பெறுவோம்.
மேலும் இவ்வுண்மையை நன்கு உணர திருமுறைகளையும் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தையும் பயின்று உணர்வோம்.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே

— மாணிக்கவாசகர்.திருவாசகம்

இலனது உடையனி தெனநினை வரியவன்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்
புலனொடு புலனலன் ஒழிவிலன் பரந்தவந்
நலனுடை ஒருவனை நணுகினம் நாமே.

— நம்மாழ்வார் திருவாய்மொழி