தமிழக அரசின் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார் தங்கம் தென்னரசு. இதில் குறிப்பிடப்பட்ட முக்கிய அம்சங்கள்:
4 வழிச்சாலைகள், மேம்பாலங்கள் என தமிழ் நிலப்பரப்பு முன்னேறி வருகிறது.
திருக்குறளை அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நமது திட்டங்களை பிற மாநில அரசுகளும் பின்பற்றத் தொடங்கியுள்ளன; மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை ஒரு புறம் இருக்கிறது.
நாட்டிலேயே முதன் முறையாக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டம் திருத்தப்பட்டுள்ளது.
மிகப்பெரும் அளவில் வெளிநாட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் அதே நேரத்தில் சிறு, குறு தொழிலுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது
உணவு உற்பத்தியில் வரலாறு காணாத சாதனையை நிகழ்த்தி காட்டியுள்ளோம்
செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அறிவுசார் பொருளாதாரத்தில் தமிழக இளைஞர்கள் சிறந்து விளங்கிடும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளோம்
மாவட்டம் தோறும் தொழில் பூங்காக்கள், மேம்பாலங்கள், பறவைகள் சரணாலயங்கள், பசுமை வழிப்பயணத்திற்கு உரிய கவனம் செலுத்தப்பட்டு வருகிறது
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை இன்று தாக்கல் செய்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் நிலையில், இந்த நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் குறிப்பிட்டதாவது…
தமிழகத்தின் வளர்ச்சி முதல்வர் ஸ்டாலினால் வழி நடத்தப்படுகிறது. நாட்டிற்கே வழிகாட்டும் கடமையினை மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்படுத்தி வருகிறோம். ஏஐ உள்ளிட்ட துறைகளில் இளைஞர்கள் வளர திட்டங்கள் தீட்டப்படும். உணவு உற்பத்தியில் தமிழகம் வரலாறு காணாத வளர்ச்சி பெற்றுள்ளது. இந்தியாவின் 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 1 கோடியே 31 லட்சம் பேருக்கு ஒரே நேரத்தில் ரூ. 5 ஆயிரம் வீதம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட போது இந்த நாடே திரும்பிப் பார்த்தது.
தமிழர் பெருமையை பறை சாற்றும் வகையில் பல்வேறு அருங்காட்சியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஐ நா சபை அங்கீகரித்த மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பிறமொழி ஆதிக்கத்திலிருந்து தமிழை பாதுகாக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்படுகிறது. சோழர் அருங்காட்சியகம், நவாய் அருங்காட்சியகம், நொய்யல் அருங்காட்சியகம் என மொத்தம் ரூ.285 கோடியில் அருங்காட்சியங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. உலகத் தரத்தில் கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டு பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.
தமிழகம் இரட்டை இலக்கு பொருளாதார வளர்ச்சியை அடைய பல்வேறு நல்ல திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது. விடியல் பேருந்து திட்டத்தில் 888 கோடி முறை மகளிர் பயணம் செய்து பயனடைந்துள்ளனர். 6 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41 சதவீத பெண்கள் தமிழகத்தில் பணிபுரிகின்றனர்.
முதல்வரின் காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது. 19.34 லட்சம் பேர் பயன் பெறும் இந்தத் திட்டத்திற்கு ரூ.1889 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. 10,637 குழந்தைகள் அன்புக் கரங்கள் திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர்.
மூத்த குடிமக்களுக்கு 25 அன்பு சோலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தாயுமானவர் திட்டத்தின் கீழ் 27 லட்சம் மூத்த குடிமக்கள் பயன் பெற்றுள்ளனர்.
கப்பல் கட்டுமானம், கப்பல் இயந்திரங்கள் உற்பத்தி ஆகிய துறைகளில் முதலீடுகளை ஈர்க்க தமிழகம் கப்பல் கட்டும் கொள்கை விரைவில் வெளியிடப்படும். இதனால் கப்பல் கட்டுமானத்திற்கான உலகளாவிய மையமாக தமிழகம் உருவெடுக்கும். தூத்துக்குடியில் ரூ.5,200 கோடி மதிப்பில் புதிய கப்பல் கட்டும் தளம் கட்டப்படும்.
கடந்த 5 ஆண்டுகளில் ஆட்சேபனையற்ற அரசு நிலங்களில் வசிப்போருக்கு ஒரு முறை சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தில் 77,800 இணையவழி பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கை தமிழர்களுக்கு 3 கட்டங்களாக ரூ.630 கோடியில் வீடுகள் கட்டித்தரப்படும்.
நெல்லை, கோவை, திருச்சியில் ரூ.902 கோடியில் நவீன நூலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் இதுவரை 5,40,511 மாணவர்கள் ரூ.1000 பெறுகின்றனர். புதுமைப்பெண் திட்டத்தில் 6,95,296 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 38 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மக்கள் நல்வாழ்வு துறைக்கு ரூ.22,090 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.500 கோடி மதிப்பீட்டில் தமிழக செமிகண்டக்டர் இயக்கம் நடைமுறைப்படுத்தப்படும். தரமணியில் மேம்பட்ட செமிகண்டக்டர் தொழில்நுட்ப மையம் அமைக்கப்படுகிறது. திருச்சி, மதுரை, ஓசூரில் ரூ.1,070 கோடியில் புதிய டைடல் பார்க் பூங்கா நிறுவப்பட்டும்.
துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விவரம்:
1. மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.1,471 கோடி ஒதுக்கீடு 2. பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு 3. உயர்கல்வி துறைக்கு ரூ.8,505 கோடி ஒதுக்கீடு 4. சிறப்பு திட்ட செயலாக்கத்துறைக்கு ரூ.17,088 கோடி ஒதுக்கீடு 5. ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.28,687 கோடி ஒதுக்கீடு 6. சமூக நலத்திட்டங்களுக்கு ரூ.5,463 கோடி ஒதுக்கீடு 7. நகராட்சி நிர்வாகம் மற்றும் நலன் துறைக்கு ரூ.28,827 கோடி ஒதுக்கீடு 8. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு 9. தொழிலாளர் நலத்துறைக்கு ரூ.1,996 கோடி ஒதுக்கீடு 10. நதிகள் மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.374 கோடி ஒதுக்கீடு 11. மக்கள் நல்வாழ்வு துறைக்கு ரூ.22.090 கோடி ஒதுக்கீடு 12. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு 13. தகவல் தொழில்நுட்ப துறைக்கு ரூ.219 கோடி ஒதுக்கீடு 14. நீர்வளத்துறைக்கு ரூ.10,076 கோடி ஒதுக்கீடு 15. எரிசக்தி துறைக்கு ரூ.18,091 கோடி ஒதுக்கீடு
முன்னதாக, மாபெரும் காது குத்தும் விழா என அதிமுக. அழைப்பிதழுடன் வந்தது. சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கலையொட்டி ‘காது குத்தும் விழா‘ அழைப்பிதழுடன் பேரவைக்கு வந்தனர் அதிமுகவினர். பட்ஜெட் என்னும் பெயரில் தமிழக மக்களுக்கு திமுக அரசால் காது குத்தும் விழா நடைபெறுவதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.
ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி பத்தாம் நாள் 16.02.2026
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
இன்று (16.06.2026) முதல் ஆட்டம் டெல்லியில் காலை 1100 மணிக்கு ஆஃப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கிடையேயும் இரண்டாவது ஆட்டம் கொல்கொத்தா, ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மதியம் 0300 மணிக்கு, இங்கிலாந்து இத்தாலி அணிகளுக்கிடையேயும் மூன்றாவது ஆட்டம் இலங்கையில், பல்லகலேயில் இரவு 0700 மணிக்கு ஆஸ்திரேலியா இலங்கை அணிகளுக்கு இடையேயும் நடைபெற்றது.
ஆஃப்கானிஸ்தான் அணி அபார வெற்றி
பூவாதலையா வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் முதலில் மட்டையாட வந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் ஆலிஷான் ஷரஃபு (40 ரன்), சோயிப் கான் (68 ரன்) இருவரும் சிறப்பாக ஆடினர்.
பிற மட்டையாளர்கள் ஜொலிக்கவில்லை. இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டு இழப்பிற்கு 160 ரன் எடுத்தது.
இரண்டாவதாக விளையாடவந்த ஆஃப்கானிஸ்தான் அணியின் இப்ராஹிம் சர்தான் (53 ரன்), டார்விஷ் ரசோதி (33 ரன்), அஸ்மத்துல்லா ஒமர்சாய் (ஆட்டமிழக்காமல் 40 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடியதால் அந்த அணி 19.2 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 162 ரன் எடுத்து வெற்றி பெற்றாது. இது ஆஃப்காணிஸ்தான் அணியின் முதல் வேற்றி.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி ஏற்கனவே ஒரு வெற்றி பெற்று 2 புள்ளிகளைப் பெற்றிருந்தது. இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்ததால் அந்த அணி சூப்பர் 8 கட்டத்திற்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி (6 புள்ளிகள்) சூப்பர் 8 கட்டத்திற்கு முன்னேறியது.
இங்கிலாந்து அணி தடுமாறி வென்றது
கொல்கொத்தாவில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பூவாதலையா வென்ற இங்கிலாந்து அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியின் வில் ஜேக்ஸ் (53 ரன்) மட்டும் சிறப்பாக ஆடினார்.
பிற மட்டையாளர்களான பில் சால்ட் (28 ரன்), பெதேல் (23 ரன்), டாம் பேண்டன் (30 ரன்), சாம் கரன் (25 ரன்) ஆகியோர் நன்றாக ஆடினர். இதனால் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 202 ரன் எடுத்தது.
இரண்டாவதாக விளையாடவந்த இத்தாலி அணியின் தொடக்க வீரர் ஜஸ்டின் மோஸ்கா (43 ரன்) நல்ல தொடக்கம் தந்தார். பென் மனேண்டி (60 ரன்), கிராண்ட் ஸ்டுவர்ட் (45 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடினர். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது.
எனினும் ஜாமி ஓவர்டன் (3 விக்கட்) மற்றும் சாம் கரன் (3 விக்கட்) ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டியின் இரண்டாவது அப்செட் –
இலங்கை அணி ஆஸ்திரேலிய அணியை வென்றது
பூவாதலையா வென்ற இலங்கை அணிமுதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மட்டையாட வந்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் மிட்சல் மார்ஷ் (27 பந்துகளில் 54 ரன்) மற்றும் ட்ராவிஸ் ஹெட் (29 பந்துகளில் 56 ரன்) இருவரும் சிறப்பான தொடக்கம் தந்தனர். இவர்கள் ஆட்டமிழந்தபினர் காமரூன் கிரீன் (3 ரன்) மற்றும் டிம் டேவிட் (6 ரன்) இருவரும் விரைவில் ஆட்டமிழந்துவிட்டனர்.
அதன் பின்னர் ஜோஷ் இங்கிலிஷ் (27 ரன்) மற்றும் கிளன் மேக்ஸ்வெல் (22 ரன்) இருவரும் நன்றாக ஆடினர். ஆனால் பிற மட்டையளர்கள் சரியாக விளையாடாததால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 181 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் ஆட வந்த இலங்கை அணியின் தொடக்க வீரர் பதுன் நிசாங்கா (52 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 100 ரன்) சதமடித்தார். அவருக்குத் துணையாக குசால் மெண்டிஸ் (38 பந்துகளில் 51 ரன்) மற்றும் பவன் ரத்னநாயகே (15 பந்துகளில் 28 ரன்) சிறப்பாக விளையாடியதால் இலங்கை அணி 18 ஓவர்களில் 2 விக்கட்டுகள் இழப்பிற்கு 184 ரன் அடித்து வெற்றி பெற்றது. பதுன் நிசாங்கா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இந்த வெற்றி மூலம் இலங்கை சூப்பர் 8க்குச் செல்வது உறுதியாகிவிட்டது. இந்த குரூப்பில் சூப்பர் 8 க்குச் செல்லும் மற்றொரு அணி ஜிம்பாபேயா ஆஸ்திரேலியாவா என்பதை வரப்போகின்ற ஆட்டங்கள் சொல்லும்.
நாளை (17.02.2026) முதல் ஆட்டம் சென்னையில் காலை 1100 மணிக்கு கனடா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும்.
இரண்டாவது ஆட்டம் பல்லேகலேயில் மதியம் 0300 மணிக்கு அயர்லாந்து, ஜிம்பாபே அணிகளுக்கு இடையே நடைபெறும்.
மூன்றாவது ஆட்டம் இரவு 0700 மணிக்கு மும்பை வான் கடே மைதானத்தில் நேபாளம், ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும்.
ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி | ஒன்பதாம் நாள் 15.02.2026
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
இன்று (15.02.2026) முதல் ஆட்டம் காலை 0700 மணிக்கு மும்பை வான்கடெ மைதானத்தில் நேபாளம், மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு இடையேயும் இரண்டாவது ஆட்டம் காலை 1100 மணிக்கு சென்னையில் நமீபியா, அமெரிக்க அணிகளுக்கு இடையேயும் மூன்றாவது ஆட்டம் கொழும்புவில் இரவு 0700 மணிக்கு இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயும் நடைபெற்றது.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி எளிதில் வெற்றி
பூவாதலையா வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் முதலில் மட்டையாட வந்த நேபாள அணியில் தீபேந்திர சிங் ஐரீ (47 பந்துகளில் 58 ரன்) மட்டும் சிறப்பாக ஆடினார். பிறர் மே.இ. தீவுகள் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், சரியாக விளையாடாததால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 133 ரன் எடுத்தது. இரண்டாவதாக ஆடிய மே.இ. தீவுகள் அணியில் பிராண்டன் கிங் (17 பந்துகளில் 22 ரன்), ஷாய் ஹோப் (ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 61 ரன்) மற்றும் ஷிம்ரோன் ஹெட்மயர் (ஆட்டமிழக்காமல் 32 பந்துகளில் 46 ரன்) ஆகியோ சிறப்பாக ஆடியதால் மே.இ. தீவுகள் அணி 15.2 ஓவர்களில் ஒரு விக்கட் இழப்பிற்கு 134 ரன் எடுத்து எளிதில் வெற்றி பெற்றாது. நான்கு விக்காட்டுகள் எடுத்த மேற்கு இந்தியத் தீவுகள் பந்துவீச்சாளர் ஜேசன் ஹோல்டர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
சென்னையில் அமெரிக்க அணி வெற்றி
பூவாதலையா வென்ற அமெரிக்க அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அதனால் முதலில் வந்த அந்த அணியில்முதல் ஐந்து மட்டையாளர்கள் மொனாங்க் படேல் (52 ரன்), ஷயான் ஜஹாங்கீர் (22 ரன்) முக்கமாலா (17 ரன்), சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி (68 ரன்) மிலிந்த் குமார் (28 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடியதால் அமெரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கட் இழப்பிற்கு 199 ரன் எடுத்தது. அடுத்து ஆடவந்த நமீபிய அணியில் ஸ்டீங்கேம்ப் (58 ரன்), ஸ்மிட் (31 ரன்), ஜான் நிக்கோல் (28 ரன்) ஆகியோர் நன்றாக ஆடியபோதும் ரன்ரேட் போதிய அளவிற்கு உயரவில்லை. அதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 168 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் அமெரிக்க அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றிப் பயணம் தொடர்கிறது
பூவாதலையா வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் இந்திய அணி மட்டையாட வந்தது. இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா முதல் ஓவ்வரிலேயே ஆட்டமிழந்தார். அதன் பின்னர் திலக் வர்மா (25 ரன்) உடன் இணைந்த மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிஷன் (40 பந்துகளில் 77 ரன், 10 ஃபோர், 3 சிக்சர்). இஷான் கிஷன் ஆட்டமிழந்த பின்னர் ஆடவந்த இந்திய மட்டையாளர்களை பாகிஸ்தான் அணியின் சுழல்பந்துவீச்சாளர்கள் அதிரடியாக ஆடவிடாமல் முடக்கினர். இதனால் சூர்யகுமார் யாதவ் (32 ரன்), ஷிவம் துபே (27 ரன்), ஹார்திக் பாண்ட்யா (பூஜ்யம்), ரிங்கு சிங் (11 ரன்) ஆகியோர் நன்றாக ஆடியபோதும் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 175 ரன் எடுத்தது. தொடக்கத்தில் 14 என இருந்த ரன்ரேட் முடிவில் 8.75 எனக் குறைந்துவிட்டது. பாகிஸ்தான் அணி 5 சுழல்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது.
இரண்டாவதாக் ஆடவந்த பாகிஸ்தான் அணிக்கு முதல் ஓவரில் (ஷாஹிப்சாதா ஃபர்ஹான்) ஒரு விக்கட், இரண்டாவது ஓவரில் (சயீம் அயூப், சல்மான் ஆகா) இரண்டு விக்கட்டுகள், ஐந்தாவது ஓவரில் (பாபர் ஆசம்) ஒருவிக்கட் என பவர் பிளே ஓவர்களுக்குள் நான்கு விக்கட்டுகள் வீழ்ந்தன. இந்தியப் பந்துவீச்சாளர்கள் ஒவ்வொருவரும் சிறப்பாகப் பந்துவீசினர். ஹார்திக் பாண்ட்யா, பும்ரா, அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கட் எடுத்தனர். குல்தீப் யாதவ், திலக் வர்மா ஆகியோர் தலா ஒரு விக்கட் எடுத்தனர். பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக இஷான் கிஷன் அறிவிக்கப்பட்டார்.
குரூப் A பிரிவில் இந்திய அணி சூப்பர் 8 கட்டத்திற்கு தேர்வாகியிருக்கிறது. தற்போதைய நிலையில் அமெரிக்க நாலு ஆட்டங்கள் முடிவில் 4 புள்ளிகளும், பாகிஸ்தான் 3 ஆட்டங்கள் முடிவில் 4 புள்ளிகளும் பெற்றுள்ளன. வருகின்ற 18ஆம் தேதி பாகிஸ்தான் அணி நமீபிய அணியோடு விளையாடும். அந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றால் சூப்பர் 8 கட்டத்திற்கு தகுதிபெறும். அதே 18ஆம் தேதி இந்திய அணி நெதர்லாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது.
நாளை (16.06.2026) முதல் ஆட்டம் டெல்லியில் காலை 1100 மணிக்கு ஆஃப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கிடையே நடைபெறும். இரண்டாவது ஆட்டம் கொல்கொத்தா, ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மதியம் 0300 மணிக்கு, இங்கிலாந்து இத்தாலி அணிகளுக்கிடையே நடைபெறும். மூன்றாவது ஆட்டம் பல்லகலேயில் இரவு 0700 மணிக்கு ஆஸ்திரேலியா இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெறும்.
ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி; எட்டாம் நாள் 14.02.2026
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
இன்று (14.02.2026) மூன்று ஆட்டங்கள் நடந்தன. முதல் ஆட்டம் காலை 1100 மணிக்கு கொழும்புவில் அயர்லாந்து ஓமன் அணிகளுக்கிடையே நடந்தது. இரண்டாவது ஆட்டம் மதியம் 0300 மணிக்கு கொல்கொத்தா, ஈடங்கார்டன்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையே நடந்தது. மூன்றாவது ஆட்டம் அகமதாபாத்தில் இரவு 0700 மணிக்கு நியூசிலாந்து தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடந்தது.
அயர்லாந்து சிறப்பான வெற்றி
பூவாதலையா வென்ற ஓமன் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் முதலில் மட்டையாட வந்த அயர்லாந்து அணியின் அணித்தலைவர் லோர்கன் டக்கர் (51 பந்துகளில் 94 ரன், 10 ஃபோர், 4 சிக்சர்) மிகச் சிறப்பாக ஆடினார். அவருக்குத் துணையாக கேரத் டிலானி (56 ரன்) மற்றும் ஜியார்ஜ் டக்கரல் (35 ரன்) நன்றாக ஆடினார்கள். இதனால் அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுகள் இழப்பிற்கு 235 ரன் எடுத்தது.
இதன் பின்னர் ஆடவந்த ஓமன் அணியில் தொடக்க வீரர் அமிர் கலீம் (50 ரன்), ஹமத் மிர்சா (46 ரன்), சூஃபியான் மெஹமூத் (10 ரன்) ஆகியோ மட்டுமே இரட்டை இலக்க ரன் அடித்தனர். பிறர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் 18 ஓவர்களுக்கு 139 ரன் எடுத்து அந்த அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து அவுட் ஆனது.
அயர்லாந்து அணியின் ஜோஷ் லிட்டில் 16 ரன்கள் கொடுத்து 3 விக்கட்டுகள் எடுத்தார். இதனால் அயர்லாந்து அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. லோர்கன் டக்கர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இங்கிலாந்து அணி ஸ்காட்லாந்து அணியை வென்றது
பூவாதலையா வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் முதலில் மட்டையாட வந்த ஸ்காட்லாந்து அணியின் மைக்கேல் ஜோன்ஸ் (33 ரன்), ரிக்கி பெர்ரிங்டன் (49 ரன்), டாம் ப்ரூஸ் (24 ரன்), ஆலிவெர் டேவிட்சன் (20 ரன்) நன்றாக ஆடினர். அதனால் 19.4 ஓவர்கள் முடிவில் அந்த அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 152 ரன் எடுத்தது.
இரண்டாவதாக ஆடவந்த இங்கிலாந்து அணியில் ஜேக்கப் பெதல் (32 ரன்), டாம் பேண்டன் (63 ரன்), சாம் கரன் (28 ரன்), வில் ஜேக்ஸ் (16 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடியதால் அந்த அணி 18.2 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 155 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக டாம் பேண்டன் அறிவிக்கப்பட்டார்.
தென் ஆப்பிரிக்க அணி எளிதில் நியூசிலாந்து அணியை வென்றது
பூவாதலையா வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் முதலில் மட்டையாட வந்த நியூசிலாந்து அணியின் முதல் நான்கு மட்டையாளர்கள் விரைவில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். மார்க் சாப்மன் (48 ரன்), டேரில் மிட்சல் (32 ரன்), ஜேம்ஸ் நீஷம் (ஆட்டமிழக்காமல் 23 ரன்) நன்றாக ஆடினர். அதனால் அந்த அணி 20 ஓவர்கல் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 175 ரன் எடுத்தது.
இரண்டாவதாக ஆடவந்த தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரரும் அணித் தலைவருமான எய்டன் மர்கரம் (86 ரன்) மிகச்சிறப்பாக ஆடினார். அவருடன் இணைந்து க்விண்டன் டி காக் (20 ரன்), ரியன் ரிக்கிள்டன் (21 ரன்), டிவால்ட் ப்ருவிஸ் (21 ரன்), டேவிட் மில்லர் (24 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடினர். அதனால் தென் ஆப்பிரிக்க அணி 17.1 ஓவர்களில் 3 விக்கட் இழப்பிற்கு 178 ரன் எடுத்து வெற்றி பெற்றது. நான்கு விக்கட்டுகள் எடுத்த தென் ஆப்பிரிக்க அணியின் மார்கோ யான்சென் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
நாளை (15.02.2026) முதல் ஆட்டம் காலை 0700 மணிக்கு மும்பை வான் கடெ மைதானத்தில் நேபாளம், மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு இடயே நடைபெறும்.
இரண்டாவது ஆட்டம் காலை 1100 மணிக்கு சென்னையில் நமீபியா, அமெரிக்க அணிகளுக்கு இடையே நடைபெறும்.
மூன்றாவது ஆட்டம் கொழும்புவில் இரவு 0700 மணிக்கு இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறும்.
அஸ்ஸாம் மாநிலத்தில் ரூ. 3,030 கோடியில் கட்டப்பட்ட ‘குமார் பாஸ்கர் வர்மா சேது’ பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கௌஹாத்தி மற்றும் வடக்கு கௌஹாத்தியைப் பிரிக்கும் பிரம்மபுத்திரா ஆற்றின் மேல் மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்ட இந்தப் பாலம் ஒரே நேரத்தில் 6 வழித்தடங்களில் வாகனங்கள் செல்லும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அஸ்ஸாாமின் திப்ருகர்க் மாவட்டத்தில் அவசர காலங்களில் விமானங்கள் தரையிறக்க ஏதுவாக வடிவமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் பிரதமர் மோடியின் விமானம் தரையிறக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.
அவசர காலங்களில் ராணுவம் மற்றும் பயணிகள் விமானம் பயன்படுத்தும் வகையில் பிரத்யேகமாக இந்த சாலை அமைக்கப்பட்டது. வடகிழக்கு மாநிலங்களில் அமைக்கப்பட்ட, அவசர காலங்களில் விமானம் தரையிறங்கும் முதல் தேசிய நெடுஞ்சாலை, இந்தியாவில் 11வது சாலை இது. சுமார் ரூ.100 கோடி செலவில், இந்திய விமானப்படை இந்த சாலையை வடிவமைத்து கட்டமைத்துள்ளது.
40 டன் வரையிலான போர் விமானத்தையும், 74 டன் எடை வரையிலான பயணிகள் விமானமும் இந்தச் சாலையை பயன்படுத்த முடியும். பேரிடர் மற்றும் அவசர காலங்களில் தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்த முடியும். இந்த நெடுஞ்சாலையில் தரையிறங்கிய பிறகு அங்கு நடந்த இந்திய விமானப்படை விமானங்களின் சாகசத்தை பிரதமர் பார்வையிட்டார்.
சுகோய் சு 30 எம்கேஐ, ரபேல் உள்ளிட்ட போர் விமானங்கள், பயணிகள் விமானம், ஹெலிகாப்டர் ஆகியவை இந்த நெடுஞ்சாலையில் தரையிறக்கப்பட்டு, இங்கிருந்து கிளம்பிச் சென்றன. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர், பிரதமர் மோடி கௌஹாத்தி கிளம்பிச் சென்றார்.
கௌஹாத்தியில் பிரதமர் மோடி, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு நடந்த கூட்டத்தில் பேசினார். அவரது உரையிலிருந்து…
இன்றைய தினம் இந்தியாவுக்கு அவசர காலத்தில் விமானம் தரையிறங்குவதற்கான நெடுஞ்சாலை மட்டும் கிடைக்கவில்லை. இது இந்தியா தனது பாதுகாப்புக்கு புதிய வழிகளை கண்டறிந்து வருகிறது என்பதற்கான சான்றாக அமைந்திருக்கிறது.
இந்நாளில் புல்வாமா தாக்குதலின் 7 வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்கு காரணமானவர்களை இந்தியா எப்படி தண்டித்தது என்பதை உலக நாடுகள் பார்த்தன. இதனால் சிலர் இன்னும் பயத்தில் உள்ளனர். ஆப்பரேஷன் சிந்தூரின் சக்தியை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
நாட்டின் நலனுக்காக காங்கிரஸ் முடிவு முடிவு எடுக்கும் என்பதை நாம் எதிர்பார்க்க முடியுமா? முன்னர் அக்கட்சி அதனைச் செய்துள்ளதா? வெறும் அறிக்கை மட்டுமே வெளியிடும்; ஆனால் ஒன்றுமே செய்யாது. இந்தியாவை ஒரு நாடாக காங்கிரஸ் இன்னும் அங்கீகரிக்கவில்லை! அன்னை பாரதம் என்றால் என்ன என அக்கட்சி கேள்வி எழுப்புகிறது. பாரதத்தின் நலனுக்கு அக்கட்சி ஒன்றும் செய்யவில்லை. அன்னை பாரதம் எனக்கூட காங்கிரஸ் சொல்லாது. அதற்கு மரியாதை கொடுக்காது. நாட்டின் பாதுகாப்புக்கு எப்போதும் காங்கிரஸ் முக்கியத்துவம் அளித்தது இல்லை!
காங்கிரஸ் நாட்டை எப்போதும் அச்சத்திலேயே வைத்து இருந்தது. காங்கிரசின் எதிர்மறைச் சிந்தனை காரணமாக வடகிழக்கு மாநில மக்கள் பயத்துடனும் பாதுகாப்பற்ற சூழ்நிலையிலும் வாழ்ந்து வந்தனர். காங்கிரஸ் ஆட்சியில் எப்போதெல்லாம் ஆயுதங்கள் வாங்கப்படுகிறதோ அப்போதெல்லாம், கோடிக்கணக்கில் ஊழல் நடக்கும்.
இன்று ராணுவத்தை பாரதம் பலப்படுத்தி வருகிறது. மிகப்பெரிய நெடுஞ்சாலைகள், சுரங்கங்கள், பாலங்கள் மற்றும் நவீன ஓடுபாதைகளை அமைத்து வருகிறது. நாட்டைப் பிரிக்க நினைப்பவர்களையும், வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவில் இருந்து பிரிக்க நினைப்பவர்களையும் காங்கிரஸ் ஆதரிக்கிறது. அவர்கள், காங்கிரசின் ஆதரவாளர்களாக மாறிவிட்டனர்.
சுதந்திரத்தின் போது முஸ்லிம் லீக் நாட்டைப் பிரித்தது. தற்போது காங்கிரஸ், முஸ்லிம் லீக் மாவோயிஸ்ட் காங்கிரஸாக மாறிவிட்டது. இதனால், காங்கிரஸிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தில்லி அல்லது அஸ்ஸாமில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அக்கட்சி அஸ்ஸாமை கைவிட்டுவிட்டது. அஸ்ஸாமின் வளர்ச்சியிலும், மக்களின் வாழ்வாதாரத்திலும், பிரம்மபுத்ரா முக்கியமானதாக இருந்தது. ஆனால், காங்கிரஸின் 70 ஆண்டு கால ஆட்சியில், இந்த நதியைக் கடப்பது பெரிய சவாலாக இருந்தது.
இதுபோன்ற சூழ்நிலையில் அஸ்ஸாமின் வளர்ச்சி எப்படி சாத்தியம். 2014 ல் நாட்டிற்கு சேவை செய்ய உங்களால் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு 2, 3 ஆண்டுகளில் பாஜக தொண்டர்கள் இரட்டை இன்ஜின் அரசை உருவாக்கினார்கள். இதனால், கடந்த 10, 11 ஆண்டுகளில் பாஜக தலைமையிலான தேஜ கூட்டணி அரசு, பிரம்மபுத்ரா நதியில் 5 பெரிய பாலங்களைக் கட்டியுள்ளது. அஸ்ஸாமுக்கு காங்கிரஸ் தொந்தரவை மட்டுமே கொடுத்தது; ஆனால் பாஜக தீர்வை வழங்குகிறது – என்று பேசினார் பிரதமர் மோடி.
It is a matter of immense pride that the Northeast gets an Emergency Landing Facility. From a strategic point of view and during times of natural disasters, this facility is of great importance. pic.twitter.com/eGaJIcptrf
ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி: ஏழாம் நாள் 13.02.2026
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
இன்று (13.02.2026) முதல் ஆட்டத்தில் காலை 1100 மணிக்கு கொழும்புவில் நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ஜிம்பாபே அணிகளும் இரண்டாவது ஆட்டத்தில் மதியம் 0300 மணிக்கு டெல்லியில் கனடா ஐக்கிய அரபு எமிரேட்டு அணிகளும் மூன்றாவது ஆட்டத்தில் இரவு 0700 மணிக்கு சென்னையில் நெதர்லாந்து அமெரிக்க அணிகளும் விளையாடின.
போட்டியின் முதல் அப்செட்; ஜிம்பாபே ஆஸ்திரேலியாவை வென்றது
பூவாதலையா வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் முதலில் மட்டையாடவந்த ஜிம்பாபே அணியின் தொடக்க வீரர்கள் ப்ரியன் பென்னட் (56 பந்துகளில் 64 ரன்) மற்றும் தடிவனஷே மருமணி (21 பந்துகளில் 35 ரன்) சிறப்பான தொடக்கம் தந்தனர். அதன் பின்னர் விளையாட வந்த ரியான் பர்ல் (30 பந்துகளில் 35 ரன்) சிக்கந்தர் ராசா (13 பந்துகளில் 25 ரன்) ஆகியோரும் சிறப்பாக விளையாடியதால் ஜிம்பாபே அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கட் இழப்பிற்கு 169 ரன் எடுத்தது. இரண்டாவதாக விளையாடவந்த ஆஸ்திரேலிய அணியில் மேட் ரென்ஷா (44 பந்துகளில் 65 ரன்), கிளன் மேக்ஸ்வெல் (32 பந்துகளில் 31 ரன்), ட்ராவிஸ் ஹெட் (15 பந்துகளில் 17 ரன்) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ஸ்கோரை எட்டினர். மற்ற பேட்டர்கள் சரியாக விளையாடவில்லை. இதனால் 19.3 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சித் தோல்வியடைந்தது. இதுவரை நடந்த டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி ஜிம்பாபே அணியை இதுவரை ஒருமுறை கூட வெற்றிபெறவில்லை.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்- கனடா அணிகள் ஆட்டம்; ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி வெற்றி
பூவாதலையா வென்ற கனடா அணி முதலில் மட்டையாட முடிவுசெய்தது. அந்த அணியின் ஹர்ஷ் தாக்கர் (41 பந்துகளில் 50 ரன்), நவனீத் தலிவால் (28 பந்துகளில் 34 ரன்) மற்றும் ஷ்ரேயாஸ் முவ்வா (21 பந்துகளில் 21 ரன்) ஆகியோர் மட்டுமே நன்றாக ஆடினர். பிறர் ஜொலிக்கவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 150 ரன் எடுத்தது. இரண்டாவதாக ஆடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் தொடக்க வீரர், ஆர்யான்ஷ் ஷர்மா (53 பந்துகளில் 74 ரன், 6 ஃபோர்கள், 4 சிக்சர்) மற்றும் ஷோஹிப் கான் (51 ரன்) இருவரும் சிறப்பாக ஆடினார்கள். இதனால் அந்த அணி 19.4 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 151 ரன் எடுத்து வெற்றிபெற்றது.
அமெரிக்க – நெதர்லாந்து ஆட்டம்; அமெரிக்க அணி அபார வெற்றி
பூவாதலையா வென்றா நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மட்டையாட வந்த அமெரிக்க அணியின் மட்டையாளர்கள் சிறப்பாக ஆடினர். அந்த அணியின் மொனாங்க் படேல் (27 பந்துகளில் 36 ரன்), ஷயான் ஜஹாங்கீர் (14 பந்துகளில் 20 ரன்), முக்கமாலா (51 பந்துகளில் 79 ரன், 5 ஃபோர், 4 சிக்சர்), ஷுபம் ரஞ்சனே (24 பந்துகளில் 48 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) ஆகியோர் வேகமாக ரன் குவித்தனர். அதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 196 ரன் எடுத்தது. அதன் பின்னர் ஆடவந்த நெதர்லாந்து அணியின் மட்டையாளர்கள் அமெரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 15.5 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 103 ரன் மட்டுமே எடுத்தனர். அதனால் அமெரிக்க அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அமெரிக்க அணியின் ஹர்மீத் சிங் 4 விக்கட்டுகளையும் ஸ்கால்வைக் 3 விக்கட்டுகளையும் வீழ்த்தினர். ஹர்மீத் சிங் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
“சேவா தீர்த்” – புதிய பிரதமர் அலுவலகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. தில்லியில் பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்கள் அடங்கிய “சேவா தீர்த்” கட்டடத்தை திறந்துவைத்து 4 கோப்புகளில் கையெழுத்திட்டார் பிரதமர் மோடி.
1) PM RAHAT திட்டம்: ஒவ்வொரு குடிமகனுக்கும் உயிர் காக்கும் பாதுகாப்பு 2) லட்சாதிபதி பெண்களின் இலக்கை 6 கோடியாக இரட்டிப்பாக்குதல் 3) விவசாயிகளுக்கு முக்கிய ஊக்கம்: விவசாய உள்கட்டமைப்பு நிதி ₹2 லட்சம் கோடியாக இரட்டிப்பாக்கப்பட்டது. 4) ₹10,000 கோடி நிதி திரட்டலுடன் கூடிய ஸ்டார்ட்அப் இந்தியா நிதி 2.0: புதுமையின் அடுத்த அலை – என நான்கு கோப்புகளில் கையெழுத்திட்டார்.
தில்லியில் புதிய பிரதமர் அலுவலகமான ‘சேவா தீர்த்’ ஐ பிரதமர் மோடி திறந்து வைத்தார். இங்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அலுவலகமும் செயல்பட உள்ளது.
2014 ல் பிரதமராக மோடி பொறுப்பு ஏற்ற பிறகு, காலனித்துவத்துக்கு அடையாளமாக விளங்கும் சின்னங்களையும், மக்கள் மனதில் உள்ள அடிமைத்தன எண்ணங்களை மாற்றவும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன்படி, மத்திய அமைச்சரவை செயலகமானது கர்தவ்ய பவன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ராஜபாதை சீரமைக்கப்பட்டு கர்தவ்ய பாதை என பெயர் சூட்டப்பட்டது. ரேஸ் கோர்ஸ் சாலைக்கு லோக் கல்யாண் மார்க் எனவும், ஆளுநர் மாளிகைகள் லோக் பவன்கள் – மக்கள் மாளிகைகள் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டன.
ஆங்கிலேயர் ஆட்சியின் போது 1900ம் ஆண்டில் அவர்களது தலைமைச் செயலகம் டில்லி சவுத் பிளாக்கில் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தை பிரிட்டன் கட்டட கலைஞர் ஹெர்பெர்டி பாகர் வடிவமைத்தார். இந்தக் கட்டடத்தில் பிரதமர் அலுவலகம், ராணுவம் மற்றும் வெளியுறவு அமைச்சகங்கள் செயல்பட்டன.
இந்த அலுவலகங்கள் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ‘ சேவா தீர்த்’ என்ற புதிய இடத்துக்கு மாறின. தொடர்ந்து பிரதமர் அலுவலக புதிய கட்டடம் மற்றும் மத்திய செயலக கட்டடமான கர்தவ்ய பவன் 1 மற்றும் 2 ஆகியவற்றை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
கடந்த 1921 முதல் சவுத் மற்றும் நார்த் பிளாக்குகளில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் காலி செய்யப்படுகின்றன. பிரதமர் அலுவலகம் இருந்த சவுத் பிளாக் கட்டடம் தேசிய அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளது.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட சமூகதளப் பதிவுகளில் குறிப்பிட்டதாவது…
இந்திய மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உறுதியான உறுதியுடனும், ‘நாக்ரிக்தேவோ பவ’ (குடிமக்கள் சேவை) என்ற புனித உணர்வால் வழிநடத்தப்பட்டு, சேவா தீர்த்தம், பணிவுடன் தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
சேவா தீர்த்தம் எப்போதும் கடமை, இரக்கம், இந்தியா முதலில் என்ற கொள்கைக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் பிரகாசமான அடையாளமாக நிற்கட்டும். இது தலைமுறைகள் தன்னலமற்ற சேவையின் பாதையில் நடக்கவும், அனைவரின் நலனுக்காகவும் அயராத அர்ப்பணிப்புடன் நடக்கவும் ஊக்கமளிக்கட்டும்.
இன்று முன்னதாக சேவா தீர்த்தத்தில், ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், கடின உழைப்பாளி விவசாயிகள், இளைஞர் சக்தி மற்றும் பெண்கள் சக்தி ஆகியவற்றுடன் தொடர்புடைய கோப்புகளில் கையெழுத்திட்டனர். முக்கிய முடிவுகளில் பின்வருவன அடங்கும்:
விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 1.5 லட்சம் வரை பணமில்லா சிகிச்சை கிடைக்கும் வகையில் பிரதம மந்திரி ரஹத் திட்டத்தைத் தொடங்க ஒப்புதல் அளித்தல். பாதிக்கப்பட்ட எவருக்கும் உடனடி மருத்துவ உதவி வழங்கப்படுவதை இது உறுதி செய்யும்.
லக்பதி தீதி திட்டத்தின் இலக்கை 6 கோடியாக இரட்டிப்பாக்குதல். இது பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
வேளாண் உள்கட்டமைப்பு நிதி இலக்கு ரூ. 1 லட்சம் கோடியிலிருந்து ரூ. 2 லட்சம் கோடியாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இது நமது விவசாயிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் மற்றும் அவர்களின் வருமானத்தை அதிகரிக்க உதவும்.
ரூ. 10,000 கோடி நிதி திரட்டலுடன் கூடிய ஸ்டார்ட்அப் இந்தியா நிதி 2.0-க்கு ஒப்புதல் அளித்தல். இது ஆரம்ப கட்டங்களில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களையும் ஆழமான தொழில்நுட்ப ஆராய்ச்சியையும் ஊக்குவிக்கும்.
இந்த முடிவுகள் நாக்ரிக்தேவோ பவ (குடிமக்கள் சேவை) உணர்வை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன, மேலும் ஒரு விக்ஸித் பாரத்தை (வளர்ந்த இந்தியா) கட்டமைக்கும் நமது தொலைநோக்குப் பார்வைக்கு உத்வேகம் அளிக்கின்றன.
கோவில் உண்டியல் எண்ணிக்கை – அறநிலையத்துறை ஊழியர்களின் தொடர் திருட்டு – வேலியே பயிரை மேய்வதா? என்று குறிப்பிட்டு, இந்துமுன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது…
தமிழகத்தில் சமீப காலமாக உண்டியல் எண்ணிக்கையின் போது, அதில் ஈடுபடும் திருக்கோவில் செயல் அலுவலர்கள், அறநிலையத்துறை ஊழியர்கள் உண்டியல் காணிக்கையிலிருந்து பணம், தங்கம், வெள்ளி ஆகியவற்றை திருடிச் செல்வது தொடர்கதையாகி வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு சேலம் வெண்ணங்குடி முனியப்பன் கோவில் உண்டியல் எண்ணிக்கையின் போது தங்க நகைகள் திருடுபோய் உள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டும், காவல்துறை குற்றவாளிகளை கைது செய்யாமல் ஜாமினில் செல்வதற்கு காலஅவகாசம் வழங்கி இருப்பது வேதனையானது.
அதே போல கடந்த சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் கோவில் உண்டியல் எண்ணும் போது, கோயில் செயல் அலுவலர் தங்ககாசுகள் மற்றும் பணத்தை திருடி உள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் காவல்துறை அவரை சொந்த ஜாமினில் விடுதலை செய்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருத்தணி முருகன் கோவில் உண்டியல் எண்ணிக்கையின் போது, திருக்கோவில் பணியாளர்கள் இருவர் சுமார் 1.25 லட்சம் ரூபாய் கோவில் உண்டியல் பணத்தை திருடியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் எண்ணிக்கையின் போது, கோவில் செயல் அலுவலர் தங்கக்காசுகளை திருடி தலைமறைவான செய்தி அனைவரும் அறிந்தது.
இவையெல்லாம் வெளியில் தெரிந்த உண்டியல் எண்ணிக்கை திருட்டுகள். இன்னும் வெளியில் தெரியாமல் எத்தனை திருக்கோவில்களில் உண்டியல் திருட்டு நடைபெறுகிறதோ என்கிற வேதனை பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை என்பது இந்து ஆலயங்களின் சொத்துக்களையும், வருமானங்களையும் பாதுகாத்து கண்காணிப்பதற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு.
ஆனால் இந்து சமய அறநிலையத்துறை கண்காணிப்பு பணிகளை ஒழுங்காக செய்யாமல், ஆலயங்களின் நிர்வாகத்தில் தலையிட்டு பூஜை முறைகளில் முட்டுக்கட்டை போடும் வகையில் அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறது
அதேபோல், இந்து சமய அறநிலைத்துறை ஊழியர்களே கோவில் உண்டியல் பணத்தை திருடுவது அறநிலையத்துறை என்பதே அவசியம் தானா? என்று கேள்வி கேட்கும் நிலை தமிழகத்தில் உருவாகி வருகிறது.
அறநிலையத்துறையின் செயல்பாடுகள் அனைத்தும் கோவில் நலனுக்கு எதிராகவே அமைந்துள்ளது. எனவே தான் அறநிலையத்துறை ஆலயங்களை விட்டு வெளியேற வேண்டும் என இந்துமுன்னணி பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறது.
அதை ஊர்ஜிதம் செய்யும் வகையில் அறநிலையத்துறை அதிகாரிகளே, நகை திருட்டு, உண்டியல் பணம் திருட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த உண்டியல் திருட்டில் யார் யாருக்கெல்லாம் பங்கு பிரிக்கப்படுகிறது என்கின்ற கேள்வியும் எழுந்துள்ளது. காரணம் உண்டியல் திருட்டில் ஈடுபட்ட பலர் பெரிய அளவில் தண்டனைக்கு உட்படுத்தப்படாமல் காப்பாற்றப்பட்டுள்ளது இந்த சந்தேகத்தை எழுப்பி உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணியை நடத்த வேண்டும் என இந்துமுன்னணி கோரிக்கை விடுக்கிறது.
உண்டியல் பணத்தைக் கூட பாதுகாக்க தவறும் இந்து சமய அறநிலையத்துறை ஆலயங்களை விட்டு வெளியேற வேண்டும். பிற மதத்தினர் வழிபாட்டுத் தலங்கள் போல இந்து ஆலயங்களும் உள்ளூர் மக்களால், பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது..
ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி – ஆறாம் நாள் 12.02.2026
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
இன்று (12.02.2026) முதல் ஆட்டம் காலை 1100 மணிக்கு இலங்கை ஓமன் இடையே பல்லேகலே மைதானத்திளும் இரண்டாவது ஆட்டம் மதியம் 0300 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் இத்தாலி நேபாள் அணிகளுக்கிடையேயும் மூன்றாவது ஆட்டம் டெல்லியில் இந்திய நமீபிய அணிகளுக்கு இடையே இரவு 0700 மணிக்கும் நடைபெற்றது.
இலங்கை அணி எளிதில் வெற்றி பெற்றது
பூவாதலையா வென்ற ஓமன் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் இலங்கை அணி முதலில் மட்டையாட வந்தது. அந்த அணியின் குசால் மெண்டிஸ் (61 ரன்), பவன் ரத்னநாயகே (60 ரன்), தசுன் ஷனகா (50 ரன்) ஆகியோர் மிகச் சிறப்பாக ஆடியதால் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 225 ரன் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஓமன் அணியில் முகம்மது நதீம் (ஆட்டமிழக்காமல் 53 ரன்) வாசிம் அலி (27 ரன்) ஆகிய இருவர் மட்டுமே சிறப்பாக ஆடினர். மற்ற மட்டையாளர்கள் இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களைச் சமாளிக்க முடியாமல் விரைவில் ஆட்டமிழந்தன்ர். இலங்கை அணியில் மஹீஷ் தீக்ஷனா மற்றும் துஷ்யந்த் சமீரா இருவரும் தலா 2 விக்கட் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் ஓமன் அணி 9 விக்கட் இழப்பிற்கு 120 ரன் மட்டுமே எடுத்தது. அதனால் இலங்கை அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இத்தாலி அணி அபார வெற்றி
இரண்டாவது ஆட்டத்தில் பூவாதலையா வென்ற இத்தாலி அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் நேபாள அணி முதலில் மட்டையாட வந்தது. 19.3 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து நேபாள அணி 123 ரன் எடுத்தது. இத்தாலி அணியின் பென் மனெண்டி 2 விக்கட்டுகளும் கிரிஷன் கழுகுமகே 3 விக்கட்டுகளையும் எடுத்தனர். இரண்டாவதாக ஆடவந்த இத்தாலி அணி 12.4 ஓவர்களில் விக்கட் இழப்பின்றி 124 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜஸ்டின் மோஸ்கா 60 ரன்னும் அந்தோணி மோஸ்கா 62 ரன்னும் அடித்தனர். இவ்வாறு இத்தாலி அணி அபார வெற்றி பெற்றது.
எதிர்பார்த்தபடி இந்திய அணி விளையாடவில்லை; இருந்தாலும் வெற்றி
பூவாதலையா வென்ற நமீபிய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இந்திய அணியும் இதைத்தான் விரும்பியிருக்கும். முதலில் மட்டையாடி 300 ரன் அடிக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. ஆனால் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கட் இழப்பிற்கு 209 ரன் மட்டுமே எடுத்தது. இன்று அபிஷேக் ஷர்மா விளயாடவில்லை. அவருக்குப் பதிலாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் (8 பந்துகளில் 22 ரன், 3 சிக்சர்) சிறப்பாக ஆடினார்.
ஆனால் 2ஆவது ஓவரில் ஆட்டமிழந்துவிட்டார். அதன் பின்னர் இஷான் கிஷன் (24 பந்துகளில் 61 ரன், 6 ஃபோர், 5 சிக்சர்) திலக் வர்மா (21 பந்துகளில் 25 ரன்) இருவரும் மிகச் சிறப்பாக ஆடினர். பவர்பிளே ஓவர்களில் இந்த இருவரின் ஆட்டத்தால் இந்திய அணி 86 ரன் எடுத்தது. அதன் பின்னர் இந்திய அணியின் ரன் அடிக்கும் வேகத்தை நமீபிய பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினர். சூர்யகுமார் யாதவ் (12 ரன்), ஷிவம் துபே (23 ரன்) இருவரும் தாம்தூம் என அடித்து ஆடமுடியவில்லை. ஹார்திக் பாண்ட்யா (28 பந்துகளில் 52 ரன், 4 ஃபோர், 4 சிக்சர்) சிறப்பாக ஆடினார். ரிங்கு சிங் 6 பந்துகள் ஆடி 1 ரன் மட்டுமே எடுத்தார்.
இரண்டாவதாக ஆடிய நமீபிய அணிக்கு தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கம் தந்தனர். ஆனால் வருண் சக்ரவர்த்தி, பும்ரா இருவரும் பந்துவீச வந்தபின்னர் அவர்களது விக்கட்டுகள் மடமடவென விழத்தொடங்கின. அந்த அணி 18.2 ஓவர்களில் 116 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. அதனால் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நாளை (13.02.2026) முதல் ஆட்டத்தில் காலை 1100 மணிக்கு கொழும்புவில் நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ஜிம்பாபே அணிகள் மோதுகின்றன. இரண்டாவது ஆட்டத்தில் மதியம் 0300 மணிக்கு டெல்லியில் கனடா ஐக்கிய அரபு எமிரேட்டு அணிகள் விளையாடுகின்றன. மூன்றாவது ஆட்டத்தில் இரவு 0700 மணிக்கு சென்னையில் நெதர்லாந்து அமெரிக்க அணிகள் மோதுகின்றன.