Home Blog Page 5683

ஆளுநரை மிரட்டிய சசிகலா: ஓரளவுக்குதான் பொறுமை காக்க முடியுமாம்!

சென்னை:
‛ஆளுநர் காலம் தாழ்த்துவது கட்சியை பிளவுபடுத்தும் நடவடிக்கையோ என சந்தேகிக்கத் தோன்றுகிறது’ என ஆளுநரை குறை கூறிய சசிகலா, ஓரளவுக்கு மேல்தான் தங்களால் பொறுமைகாக்க முடியும் என்றும் கூறினார்.
கூவத்தூரில் இருந்து போயஸ் கார்டன் திரும்பிய அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” எம்.எல்.ஏ.,க்கள் எல்லோரையும் சந்தித்தேன். அவர்கள் மன உறுதியுடன் உள்ளனர். குடும்ப உறுப்பினர்களை சந்தித்த திருப்தி கிடைத்தது. இன்று (பிப்.,11) வரை பொறுமை காத்தோம். நாளை முதல் எங்கள் போராட்டம்  வேறு விதமாக இருக்கும். ஆளுநர் காலம் தாழ்த்துவது கட்சியை பிளவுபடுத்தும் நடவடிக்கையோ என சந்தேகிக்க தோன்றுகிறது.” என்று கூறினார்.

ஜனநாயகத்துடன் நம்பிக்கையுடன் இருப்பதால் கொஞ்சம் அமைதி காக்கிறோம். ஓரளவுக்கு மேல்தான் நாம் பொறுமையைக் கையாள முடியும். அதற்கு மேல் நாம் ஒன்று சேர்ந்து நாம் செய்ய வேண்டியதைச் செய்வோம் என்று அவர் கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ரவுடிகள் பலர் சென்னையில் பல இடங்களில் தங்கியிருப்பதாகவும், போலீஸார் அதுகுறித்து விவரங்கள் சேகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அவரது பேட்டியில் ஒரு பகுதி…

தொழிலதிபர் வி.கே.என் கண்ணப்பன் திருச்சியில் காலமானார்

பெரியார் மணியம்மை பல்கலைக்கழக இணைவேந்தரும்,தொழிலதிபருமான வி.கே.யென். திரு. கண்ணப்பன் உடல் நலக்குறைவால் திருச்சியில் இன்று காலமானார்.

அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11.30 மணிக்கு அவரது இல்லத்திற்கு வர உள்ளார்.

பன்னீர்செல்வம் ராஜினாமா கடிதம்: ஆளுநர் ஏற்றதில் தொடரும் சிக்கல்

சென்னை:

முதல்வர் பன்னீர்செல்வம் கொடுத்த ராஜினாமா கடிதத்தில், அவரது கையெழுத்து மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட சட்டச் சிக்கல் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், ஆளுநர் ஆலோசனை கேட்டுள்ளார்.

முதல்வர் பன்னீர்செல்வத்தின் ராஜினாமா தொடர்பாக, புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில், என்ன முடிவு எடுப்பது என, ஆளுநர் அலுவலகம் சட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

பன்னீர்செல்வம், ராஜினாமா கடிதம் கொடுத்த நாளில், ஆளுநர் மும்பையில் இருந்தார். அப்போது, முதல்வரின் ராஜினாமா கடிதத்தை, ‘பேக்ஸ்’ அனுப்பி விட்டு, ஒரிஜினலை, ஒரு கவரில் வைத்து, சசிகலா தரப்பினர், ஆள் மூலமாக ஆளுநர் அலுவலக அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர். அதை அதிகாரிகள் பெற்ற நிலையில், உடனடியாக ராஜினாமாவை ஏற்றதாக, கடிதம் வேண்டும் என, ஆளுநர் அலுவலகத்துக்கு அழுத்தம் தரப்பட்டுள்ளது.

ஊட்டி ராஜ்பவனில் இருந்த ஆளுநரை தொடர்பு கொண்டு, ராஜினாமா தகவலை தெரிவித்துள்ளனர். பின், அவரிடம் இருந்து ஒப்புதல் கடிதம் வேண்டும் என, அதிகாரிகள் கேட்டுள்ளனர். அவரும், அங்கிருந்தபடியே ராஜினாமா ஏற்பு கடிதம் வழங்க, ஆளுநரின் முதன்மை செயலர் ரமேஷ் சந்த் மீனாவுக்கு
உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், சென்னைக்கு வந்த ஆளுநர், சீலிட்ட கவரில் இருந்த ராஜினாமா கடிதத்தை பிரித்து பார்த்த போது, அதில், பன்னீர்செல்வத்தின் கையெழுத்தில் மாற்றம் இருந்துள்ளது. அதாவது, கையெழுத்தின் அருகே, பிற்பகல், 1:41 மணி என, ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளது. அதை, அவசரத்தில் தேதி என நினைத்து, சசிகலா தரப்பினர் அனுப்பி விட்டனர்.

இதற்கிடையில், தன் கையெழுத்துடன், நேரம் குறிப்பிடும் பழக்கம் இல்லை என்பதால், ராஜினாமா கடிதமாக, அதை ஏற்கக்கூடாது என, பன்னீர்செல்வம் தரப்பில், ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், இந்திய அரசியல் சட்டத்தின்படி, முதல்வர், தன் ராஜினாமா கடிதத்தை, ஆளுநரை நேரில் சந்தித்து தந்தால் மட்டுமே, அதை ஏற்றுக்கொள்ள முடியும் என்ற விதி உள்ளது.

ராஜினாமா கடிதத்தை, பன்னீர்செல்வம், ஆளுநரிடம் நேரில் வழங்கவில்லை. இதிலும், பன்னீர்செல்வத்தின் பக்கமே, சாதகமான சூழல் உள்ளது.
அதனால், பன்னீர்செல்வத்தின் ராஜினாமா கடிதமே செல்லாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சசிகலா, ஆளுநரிடம் வழங்கியுள்ள எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு கடிதத்தில், பன்னீர்செல்வம் பெயரும் உள்ளது.

அவர் தான் முன்மொழிந்ததாக கூறப்பட்டுள்ளது. சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர், ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அவரது பெயரையும், சசிகலா தரப்பினர் சேர்த்துள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ததாக, வெளியான கடிதத்தில், ‘பேக்ஸ்’ நேரம், 7:22 மணி என்றும், தேதி, ஜன., 1, 2013 என்றும் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, கடிதத்தை, ஆளுநர் ஏற்க முடியாத நிலை உள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரம் கூறுகிறது.

சட்டத்துக்கு நானும் உட்பட்டவன்தான்; எனக்குன்னு விதிவிலக்கு கிடையாது: மகாபெரியவர்

“சட்டத்துக்கு நானும் உட்பட்டவன்தான்.
எனக்குன்னு விதிவிலக்கு கிடையாது”-பெரியவாள்.

(சுங்கச் சாவடி சோதனை சம்பவம்)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-74
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்

பல வருஷங்களுக்கு முன், தமிழ்நாட்டில் அரிசித்
தட்டுப்பாடு நிலவியிருந்தது. அதனால், மாவட்ட
எல்லையில் சுங்கச் சாவடி அமைத்து, அரிசி
கடத்தலைத் தடுக்க முயன்றது அரசு. எல்லையைக்
கடந்து, வேறு மாவட்டத்துக்குள் செல்பவர்களின்
உடைமைகளைப் பரிசோதனை செய்த பின்னரே
போவதற்கு அனுமதித்தார்கள், சுங்கத்துறைப்
பணியாளர்கள்.

அந்த சமயத்தில், காஞ்சிபுரத்திலிருந்து கலவைக்கு
யாத்திரையாகப் போனார்கள் பெரியவாள்.
காஞ்சிபுரம் – வேலூர் (அப்போது செங்கல்பட்டு –
வட ஆற்காடு) மாவட்ட எல்லையைக் கடந்து செல்ல
வேண்டும்.அங்கே ஒரு சுங்கச் சாவடி இருந்தது.

வழக்கம்போல, பெரியவாளுக்கு முன் செல்லும்
ரிக்‌ஷாவில்,பெரியவாளின் தண்ணீர்ப்
பாத்திரமான கடம்.மடிசஞ்சி,ஒரு குடம்,விபூதி,ஒரு
சின்ன மூட்டையில் நெற்பொரி முதலியன வைக்கப்
பட்டிருந்தன. சுங்கச்சாவடி தடுப்பு வேலியருகே,
ரிக்‌ஷாவை நிறுத்தச் சொன்னார்கள்
பெரியவாள்.

“சாமான்களை நன்றாகப் பரிசோதிச்சுக்கோ.
பொரி எடுத்துக் கொண்டு போகலாமா, கூடாதான்னு
தெரியல்லே. அரிசி மாதிரி இதுவும் நெல் சம்பந்தப்
பட்டதுதான்.பொரி கொண்டு போகக்கூடாதுன்னா….
மூட்டையை இங்கேயே போட்டுடறேன்.கவர்ன்மென்ட்
சட்டத்துக்கு நானும் உட்பட்டவன்தான். எனக்குன்னு
விதிவிலக்கு கிடையாது”-பெரியவாள்.

சுங்கச்சாவடி அலுவலர்கள்,அப்படியே பிரமித்துப் போய்
நின்றார்கள்.

குழந்தையைப் போல, என்ன எளிமை!
என்ன சட்ட பரிபாலனம்!

“சுவாமி, மூட்டைக் கணக்கில் அரிசி கடத்துகிறார்கள்.
அதைத் தடுப்பதற்காகத்தான் சுங்கச்சாவடி.  பொரி
எடுத்துக் கொண்டு போகத் தடை விதிக்கப்படவில்லை.
பெரியவா ரிக்‌ஷாவுக்குச் சோதனை கிடையாது”
என்று விநயமாகக் கூறினார்கள்.சுங்கத்துறை அலுவலர்கள்.

அதன் பின்னரே, யாத்திரை தொடர்ந்தது.

நான் மயிலாப்பூர் எம்எல்ஏ அலுவலகத்தில்தான் இருக்கிறேன்! நட்ராஜ்

 சென்னை,

அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதலையடுத்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் முதல்வர் பன்னீருக்கு ஆதரவாகவும், பலர் சசிகலாவுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏவான, முன்னாள் சென்னை கமிஷனர் நட்ராஜ்-ஐ காணவில்லை என பொதுமக்கள் சமூக வலைதளங்களில் கலாய்த்தனர்.

இந்நிலையில், நான் மயிலாப்பூரில்தான் இருக்கிறேன் என எம்எல்ஏ நட்ராஜ் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் நான் நியாயமாக நடக்க விரும்புகிறேன்.மக்களுக்காக சேவையாற்றுவதை நிறுத்தப் போவதில்லை. மக்களுக்கு சேவை செய்ய ஜெயலலிதா அளித்த பரிசுதான் இந்த எம்எல்ஏ பதவி என எழுதியுள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் மக்கள் சேவைக்கே முதலிடம் தருவேன். என்னை யார் வேண்டுமானாலும் வந்து சந்திக்கலாம் எனவும் அவர் முகநூலில் கூறியுள்ளார்.

அணி மாறும் யோசனையில் 12 அமைச்சர்கள்…

அணி மாறும் யோசனையில் 12 அமைச்சர்கள்… பெரும்பான்மையை இழக்கிறதா சசிகலா முகாம்?!*
யார் முதல்வர் என்பதில் சசிகலாவுக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்குமிடையே ஏற்பட்ட அதிகார மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. சசிகலாவை முன்னின்று ஆதரித்த அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் பொன்னையன், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் என அடுத்தடுத்து பன்னீர்செல்வம் முகாமுக்கு தாவி வருகிறார்கள். இதுவரை 6 எம்.எல்.ஏ.க்களும், சில எம்.பி.க்களும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இந்த பட்டியல் விரைவில் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.
அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார், கே.சி.வீரமணி, நிலோபர் கபில் என 12 அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கக் கூடும் என தகவல் வெளியாக அதிர்ந்து போயுள்ளது சசிகலா தரப்பு.இதையடுத்தே கூவத்தூர் சென்று எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார் சசிகலா. இந்த கூட்டத்தில் சசிகலாவுக்கு நேரடியாக ஆதரவு தெரிவிப்பவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்த பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்கள் 111 பேர் தான்.
மொத்தமுள்ள 135 பேரில் 117 பேர் ஆதரவு இருந்தால் தான் ஆட்சியமைக்க முடியும். ஆரம்பத்தில் 135 பேரின் ஆதரவையும் பெற்றிருந்த சசிகலாவின் முகாமில் இருந்து இதுவரை 7 பேர் அணி மாறியுள்ளனர். எம்.எல்.ஏ.க்களில் 17 பேர் யாருக்கு ஆதரவு என்பதை முடிவு செய்யாமல் உள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது இருக்கும் 111 பேரில் அமைச்சர்கள் சிலர் அணி மாறும் யோசனையில் இருப்பதால் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது சசிகலா தரப்பு.
தற்போதைய நிலையில் யாருக்கு ஆதரவு என முடிவெடுக்காமல் உள்ள எம்.எல்.ஏ.க்களும், அணி மாறும் முடிவில் உள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களும் பன்னீர்செல்வத்தை ஆதரித்தால் சசிகலா தரப்புக்கான ஆதரவு என்பது 100க்கும் குறையும் என சொல்லப்படுகிறது.
தமிழக சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது. 233 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் சபாநாயகர் தவிர 232 பேர் வாக்களிக்க தகுதியுள்ளவர்கள். பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க 117 பேர் தேவை. அ.தி.மு.க.வில் மொத்தம் 135 சட்டமன்ற உறுப்பினர்களும், தி.மு.க.வில் 89, காங்கிரஸில் 8, முஸ்லீம் லீகில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என மொத்தம் 233 பேர் உள்ளனர்.
135 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும் தனக்கு உள்ளதாக கூறி முதலில் ஆட்சியமைக்க கோரினார் சசிகலா. இது பின்னர் 131, 129 ஆக குறைந்து, இப்போது 111 ஆக மாறி இருக்கிறது. இதனால் சசிகலா தரப்புக்கு மிகுந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதே சூழலில் பன்னீர்செல்வம் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமானால் 117 உறுப்பினர்களின் ஆதரவு அவசியம். அ.தி.மு.க.வில் இருந்து 117 பேரின் ஆதரவை பெற முடியாத பட்சத்தில், பன்னீர்செல்வம் தி.மு.க., காங்கிரஸ் உதவியை நாட வேண்டும். இல்லாவிட்டால் ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத்தலைவர் ஆட்சி அமலாகும்.
இருக்கும் 111 பேரை தக்க வைக்கவும், யாருக்கு ஆதரவு எனமுடிவு செய்யாத 17 பேரை தங்கள் பக்கம் இழுக்கவும் முயன்று வருகிறது சசிகலா தரப்பு. அதேபோன்று தங்கள் பக்கம் இழுக்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் முயற்சித்து வருகிறது.
குதிரை பேரம் துவங்கி விட்டது. தாமதம் ஊழலுக்கு வழி வகுக்கும் என்பார்கள். இங்கே ஆளுநர் முடிவெடுப்பதில் செய்யும் தாமதம் குதிரை பேரத்தை ஊக்குவிக்கிறது.

இந்தக்காரியம் ஜெயலலிதாவால் வந்தது!

இந்தக்காரியம் ஜெயலலிதாவால் வந்தது!
-க.கனகராஜ்
மாநில செயற்குழு உறுப்பினர் சிபிஐ(எம்)
அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது சட்டமன்றக்குழுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முடிசூட்டுவிழா மட்டும்தான் பாக்கி. சசிகலா முதல்வர் ஆவதை தமிழக மக்கள் பயத்தோடும், கவலையோடும் பார்க்கிறார்கள். அதிமுக கட்சி உறுப்பினர்கள் மிகக்கவலையோடு ஆனால் அமைதியாக இதை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவுக்கும் காரணம் மன்னார்குடி குடும்பம் என்று ஒற்றை வரியில் விமர்சனம் வைத்து பலர் கடந்து போகிறார்கள்.
ஆனால், அதிமுகவின் இன்றைய நிலைக்கும் சசிகலா முதல்வர் பொறுப்புக்கு முன்னிறுத்தப்பட்டிருப்பதற்கும் ஜெயலலிதாவே காரணம்.
முதல் கோணல்
ஒருவர் காலமாகி விட்டால் அவர் குறித்த விமர்சனங்கள் கூடாது என்கிற ஒரு அமைதி தொடர்ச்சியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஜெயலலிதா அதிமுக என்கிற கட்சியை மட்டுமன்றி தமிழக அரசியல் சூழலையும், மிக மோசமான பாதிப்புக்குள்ளாக்கிச் சென்றிருக்கிறார்.
முதல் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட 5 ஆண்டு காலத்திற்குள் மிகக்கடுமையான குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொண்டார். ஊழல் குற்றச்சாட்டுகள், பத்திரிகைச் சுதந்திரத்தின் மீதான அத்துமீறல்கள், சட்டமன்றத்திற்குள் ஜனநாயக மாண்புகளை தனக்கிருக்கும் எம்எல்ஏக்களின் செல்வாக்கால் கடுமையாக நசுக்குவது, அரசியல் எதிரிகளை – அவர்களின் கருத்துக்களை துச்சமென மதிப்பது, பொதுமக்களின் கருத்துக்களுக்கும், விருப்பங்களுக்கும் மதிப்பளிக்க மறுப்பது என்று மிகக்குரூரமாக அனைத்து நல்ல அம்சங்களையும் அவர் சிதைத்தார்.
காவல்துறையை ஆளும் கட்சி ஒரு அடியாள் கூட்டம் போல உருவாக்கி வைத்ததில் அவருடைய பங்கு முக்கியமானது. ஆயினும், தமிழகம் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதைவிட அந்த பிரச்சனைகளால் ஏற்படும் விளைவுகளை சமாளிக்க நிவாரணங்களை வழங்குவதன் மூலம் தனது செல்வாக்கை நிலை நிறுத்திக் கொண்டார். இதன் மூலமாக அனைத்து விமர்சனங்களையும், மக்கள் மன்றத்தில் நான் சந்தித்து¡ கொள்கிறேன் என்ற ஒற்றை வரியில் பதில் அளித்தார்.
1991-க்கும் 1996க்குமிடையே அவர் முதலமைச்சராக இருந்த போது ‘‘தமிழக மக்கள் தான் எனது குடும்பம்.நான் யாருக்காக சொத்து சேர்க்கப்போகிறேன், எனக்கு ஒரு ரூபாய் சம்பளம் போதும்’’ என்று சொல்லிக்கொண்டே 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களை உருவாக்கினார். அதில் சசிகலாவையும், இளவரசியையும் பங்குதாரராக்கி¡ கொண்டார். எந்த சொத்தும் வேண்டாம் என்று சொன்னவருக்கு இத்தனை சொத்து வாங்கும் ஆசை ஏன் வந்தது என்றோ, இவர் தங்களையெல்லாம் ஏமாற்றி விட்டார் என்றோ அதிமுகவினர் வருத்தப்படாத வகையில் திமுக எதிர்ப்பை மட்டும் முன்வைத்து அவர் முடிசூடா ராணியாக திகழ்ந்து வந்தார்.
கட்சிக்குள் எந்த எதிர்ப்புக்குரலும் மனதளவில் கூட நிகழாமல் அதிகாரத்தின் மூலமும் பணத்தின் மூலமும் அடியாட்கள் மூலமும் நிலைநிறுத்திக் கொண்டார். தூத்துக்குடியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தன் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவரையே அவர் ஆள் வைத்து அடித்தார் என்கிற குற்றச்சாட்டும் கூட அவர் மீது உண்டு.
இலவசங்களில் மறைக்கப்பட்ட ஊழல்கள்
மணல் கொள்ளையைத் தடுக்க அரசு குவாரிகளை உருவாக்குகிறேன் என்கிற பெயரில் அத்தனை அரசு குவாரிகளிலும் அவரது கையாட்கள் புகுந்து விளையாட அவர் வழிவகுத்துக் கொண்டார். அரசுடைமை ஆக்கி விட்டேன் என்ற ஒரே ஒரு வரியை முன்வைத்து நடக்கும் கொள்ளை, ஆறுகள் மொட்டையடிக்கப்பட்டது, விவசாயம் பாதிக்கப்பட்டது, மணல் விலைஆகாயத்தை தொட்டது- என்ற அனைத்தையும் மறைத்தார். மடிக்கணினி, இலவச அரிசி, ஆடு,மாடுகள் என்பவற்றை போர்வையாகக் கொண்டு ஆறுகள் முழுவதும் ஒட்டச்சுரண்டப்பட்டன. தமிழக கடற்கரையோரங்களில் இருந்த தாதுமணல் முழுவதும் கொள்ளையடிக்கப்பட்டதும், அதற்குரிமை பெற்ற வைகுண்டராஜன் ஜெயா டிவியில் பங்குதாரராக இருந்ததும், அவரை எதிர்த்துக் கேள்வி கேட்டவர்கள் அடித்து நொறுக்கப்பட்டதும், காவல்நிலையங்களுக்குச் சென்றால் காவல்துறையினரே அடியாட்களாக இருந்ததும் ஜெயலலிதாவின் காலத்தில்தான் என்பதே, தமிழகத்தின் வரலாறு.
கிரானைட் கொள்ளைக்கு பேர்போன பி.ஆர்.பழனிச்சாமி குடும்பம் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அவர் மூலம் ஜெயலலிதாவுக்கும் நெருக்கமாக இருந்ததும் , மதுரை மாவட்டத்தின் மலைகள் முழுவதும் துண்டுகளாக்கி விற்பனை செய்யப்பட்டதும், கடத்தப்பட்டதும் ஜெயலலிதாவின் ஆசியோடு நடந்தவைதான்.
சர்வமும் ‘சசி’ மயம்
தமிழகத்தில் எந்த ஒரு பணிக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டாலும் – நியமனத்திற்கும், இடமாறுதலுக்கும், பதவி உயர்வுக்கும் – பணமற்று எதுவும் அசையாது என்கிற நிலை அதிமுக காலத்தில்தான் உருவாக்கப்பட்டது. இவற்றில் சுரந்த பணமும், கறந்த பணமும்தான் தன்மீதான வெறுப்புகள் தேர்தலில் பிரதிபலித்து விட முடியாதபடி மக்களின் வாயடைக்கப் பயன்படுத்தப்பட்டது. இவற்றிலெல்லாம் அவருக்குத் துணையாக – அவருடைய ஏஜெண்டாக செயல்பட்டவர்தான் சசிகலா. அமைச்சர்களுக்குத் தெரியாத ரகசியங்கள் சசிகலாவுக்கு தெரிந்திருந்தது. அமைச்சர்களின் உதவியாளர்களை நியமிப்பதில் சசிகலா ஆதிக்கம் செலுத்தினார். இந்தக்காரணங்களால்தான் ஜெயலலிதாவின் உடன்பிறவா தோழியானார். ஒவ்வொரு தொழிலிலும் பங்குதாரரானார். ஜெயா பப்ளிகேசன்ஸ், சசி என்டர்பிரைசஸ் தொடர்பான டான்சி வழக்கில் நீதிமன்றம் கொஞ்சமும் கூச்சமின்றி பிராயச்சித்தம் தேடிக்கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டது. பாவங்களுக்கும் , தவறுகளுக்கும்தான் பிராயச்சித்தம் தேடுவார்கள். டான்சி வழக்கில் செய்யப்பட்ட தவறுகளுக்கும், புரியப்பட்ட பாவங்களுக்கும் ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் சமமான பங்குண்டு.
அதன் பிறகும் கூட, சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஜெயலலிதாவின் சொத்துக்கள் ஆயிரக்கணக்கான கோடிகளில் பெருகியதைப் போலவே, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் அதிகாரப்பூர்வ சொத்துக்கள் பல்கிப் பெருகின.
‘சின்னம்மா’ என்கிற வார்த்தை புதிதாக முளைத்ததல்ல. அதை அவருக்கு ஏற்படுத்தும்படி சூழலை அமைத்துக் கொடுத்தவர் ஜெயலலிதா. தினகரன், வெங்கடேசன், சுதாகரன் இவர்களையெல்லாம் அதிமுகவின் முக்கியப் பொறுப்புகளிலும், தன் குடும்பத்தின் வாரிசு என்றும் ஜெயலலிதா அறிவித்தார். சசிகலாவின் நிர்ப்பந்தத்தால் இவர்கள் எல்லாம் நியமிக்கப்பட்டார்கள் என்று ஒருவர் சொன்னால், அந்த நிர்ப்பந்தத்திற்கு ஆளாகும் நிலையில்தான் ஜெயலலிதா இருந்தார் என்பதும் உண்மை. இருவரும் ஒரேமாதிரியான பட்டுச்சேலை உடுத்தி, உடல் முழுவதும் தங்க நகைகள் போட்டுக் கொண்டு எடுத்த புகைப்படங்கள், நீயும் நானும் வேறல்ல என்று ஜெயலலிதா சசிகலாவுக்கு சொல்வதற்காக மட்டும் எடுக்கப்பட்டவையல்ல, அந்த கட்சியினருக்கும் அதைத்தான் அவர் செய்தியாகச் சொன்னார். ஊழல் வழக்கில் இரண்டு பேரும்தான் ஜெயிலுக்குப் போனார்கள். ஊழல் செய்தவரோடு ஒட்டுமில்லை, உறவுமில்லை என்று அதிமுகவினர் எவரும் கலகக்கொடி தூக்கவில்லை. மாறாக, தங்களுக்கு கிடைத்த தேர்தல் நேர பரிசுகளும், தாராளமாய் புழங்கிய பணமும் இதன்மூலம்தான் வந்தது என்பதை அதிமுகவினர் ஒவ்வொருவரும் புரிந்து வைத்திருந்தார்கள். இந்த ஊற்றின் கடைமடையில் தாங்கள் இருக்கக்கூடாது; எப்படியாவது தலைமடைக்குப் போய்விட வேண்டும் என்பதற்காக ஒவ்வொருவரும் முதலீடு செய்ய ஆரம்பித்தார்கள். இந்த முதலீடுகளுக்கு எல்லாம் தகுதி, திறமை, விசுவாசம் என்பவற்றையெல்லாம் தாண்டி கடைக்கண் பார்வைக்கு மட்டுமே மரியாதை என்றானது. அந்தப்பார்வைகள் யார்பக்கம் திருப்ப வேண்டும் என்பதை முடிவு செய்கிற இடத்திலும், முடிவுகளை மாற்றுகிற இடத்திலும் ஜெயலலிதா, சசிகலாவை அலங்கரித்து வைத்திருந்தார். இதை அந்தக்கட்சியினர் அனைவரும் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
பந்தலிலே பாவக்காய்…
அதன் விளைவுதான் அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி தமிழகம் முழுவதும் துக்கம் அனுஷ்டித்துக் கொண்டிருந்த போது, பெயர் சொல்லாமல், முகம் காட்டாமல், தமிழகத்து பத்திரிகை தர்மங்களுக்கு தலைக் குனிவு ஏற்படுத்தும் வகையில் பக்கம் பக்கமாக சின்னம்மா பொதுச்செயலாளர் பதவி ஏற்க வேண்டும் என்ற விளம்பரங்கள்… கொஞ்சமும் கூச்சநாச்சமின்றி தமிழக பத்திரிகைகள் அதை வெளியிட்டு மகிழ்ச்சியடைந்து கொண்டன. அல்லது, அந்தப் பணபலத்தின் முன்னால் நிற்க முடியாமல் வருத்தத்தோடு விளம்பரங்களை பிரசுரித்தன. இதன் அடுத்த நிலைதான் இப்போது அவர் முதல்வர் பொறுப்பிற்கு முன்மொழியப்பட்டிருப்பது. சரி, தவறு என்று சொல்வதற்கான மனச்சாட்சிகளை முற்றிலும் துறந்து விட்டு, எது லாபம் என்பதற்காக மட்டுமே பழக்கப்படுத்தப்பட்ட கட்சியாக அதிமுகவை ஜெயலலிதா மாற்றி வைத்து விட்டுப் போனதுதான் இன்றைக்கு சசிகலா முதல்வர் பொறுப்புக்கு முன்னிறுத்தப்பட்டிருப்பது.
ராமாயணத்திலும், மகாபாரதத்திலும் வரம் கேட்ட கைகேயி, சூதாடிய துரியோதனன் ஆகியோரை விட மிக அதிகமாக வெறுக்கப்பட்டவர்களும், சபிக்கப்பட்டவர்களுமாக கூனியும், சகுனியுமே அறியப்படுகிறார்கள். கூனியும், சகுனியும் நேரடியாக ஆட்சிப்பொறுப்புக்கு வந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யாரும் எழுதியதில்லை. சசிகலா முதல்வர் பொறுப்புக்கு முன்னிறுத்தப்பட்டிருப்பதை தமிழக மக்கள் இப்படித்தான் பார்க்கிறார்கள்.
சிலர் சொல்வது போல சசிகலாவை, ஜெயலலிதாவோடு எல்லா வகையிலும் ஒப்பிட முடியாதுதான். ஆனால் ஜெயலலிதாவின் எல்லா தவறுகளிலும் எல்லா நிறுவனங்களிலும் இவரும் பங்குதாரராகவே இருந்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால், ஜெயலலிதா என்கிற அந்த மரத்தில் தானே விரும்பி மிகவும் சத்தூட்டப்பட்டு வளர்க்கப்பட்ட கனியே சசிகலா. எனவே, சசிகலாவை முன்னிறுத்துவது என்பது ஜெயலலிதா, கட்சியை நடத்திய வழிமுறையின் விளைவே.
ஜெயலலிதா இருந்த போதே கட்சி-ஆட்சி இரண்டிலும் தலையிடவும், செல்வாக்கு செலுத்தவும் முடிவுகளை மாற்றி அமைக்கவும் சசிகலாவுக்கு வழங்கப்பட்டிருந்த உரிமையின் விளைவே இன்றைய நிகழ்வு.
எனவே, சசிகலா போன்ற ஒருவர் – இப்படிச் சொல்கிற போது அவருடைய படிப்பு, அவருடைய பணி என்பது பற்றிய விமர்சனங்களை நாம் புறந்தள்ளி விட்டே சொல்கிறோம் – இந்தியாவின் மிக முக்கியமான மாநிலங்களில் ஒன்றில் முதலமைச்சர் பொறுப்பிற்கு முன்னிறுத்தப்பட்டிருப்பது, ஜெயலலிதாவால் நீண்ட நெடிய காலம் திட்டமிட்டு ஜனநாயகம் சீர்குலைக்கப்பட்டதன் விளைவே.
எனவே, இந்தக்காரியங்கள் ஜெயலலிதாவால்தான் வந்தது.
இப்போது ஜெயலலிதா இல்லை. அவரது தவறான பாரம்பரியமும் முடிவுக்கு வரட்டும்.
தமிழகத்திற்கு அதுதான் நல்லது.

ஆளுனருடன் சந்திப்பு: பின்வாசல் வழியே வெளியேறிய சு.சுவாமி

சுப்பிரமணியன் சுவாமிக்கு சாதகமான பதில் இல்லை
  
சென்னை: 
கவர்னரை சந்தித்த சுப்பிரமணியன் சுவாமிக்கு சாதகமான பதிலை கவர்னர் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
? கவர்னருடன் சந்திப்பு
சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்து வரும் சுப்பிரமணியன் சுவாமி, இன்று இரவு (7.00) கவர்னரை சந்தித்தார். சந்திப்பின் போது சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்து பேசியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, 30 நிமிடம் சந்தித்து பேசிய போதிலும் சுப்பிரமணியன் சுவாமிக்கு சாதகமான பதில் எதுவும் கவர்னர் தரப்பில் கூறப்படவில்லை.
? பின் வாசல் வழியாக வெளியேறினார்
இந்நிலையில் செய்தியாளர்களை சந்திக்காமல் பின் வாசல் வழியாக சுப்பிரமணியன் சுவாமி வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

களம் இறங்கியது வருமான வரித்துறை!

சசிகலாவை ஆதரிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் வங்கி கணக்குகள் மற்றும் அவரது குடும்பத்தினரின் நடவடிக்கைகளை கடந்த சில தினங்களாகவே வருமான வரித்துறையினர் தீவிரமாக  கண்காணித்து வரும் நிலையில் எந்த நேரத்திலும் வருமான வரி சோதனை நடக்ககூடும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

சசிகலாவுக்கு பதில் செங்கோட்டையன்: உறவினர்கள் தீவிர ஆலோசனை

சென்னை: அ.தி.மு.க., பொது செயலர் சசிகலாவின் முதல்வர் ஆசை கனவுக்கு, கவர்னர் முதல் கொண்டு, நிறைய தடங்கல் இருப்பதால், சசிகலாவுக்கு பதிலாக வேறு யாரையும் முதல்வராக கொண்டு வரலாமா என்ற ஆலோசனை, போயஸ் தோட்டத்தில் நடந்துள்ளது.
*யார் முதல்வர்?:*
இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு எதிராக வந்தால், சசிகலாவுக்கு பதில் வேறு ஒருவரை முதல்வராக்கி விடலாம் என்ற முடிவுக்கு, சசிகலா குடும்பத்தினர் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அப்படியொரு சூழல் வந்தால், யாரை முதல்வராக்குவது என்பது குறித்து ஆலோசித்துள்ளனர். அதில், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. இதில், செங்கோட்டையனை, பலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
அதன் முதல்கட்டமாகத்தான், மதுசூதனனுக்கு பதிலாக, கட்சியின் அவைத் தலைவர் பதவியை செங்கோட்டையனிடம் வழங்கி உள்ளனர். ஜாதக ரீதியிலும், செங்கோட்டையனுக்கு நல்ல சூழ்நிலை இருப்பதால், அவரை முதல்வராக்குவதில், சசிகலா தரப்பினருக்கு சிக்கல்கள் இல்லை என்றும் கூறுகின்றனர்.