Home Blog Page 5688

பூரண மதுவிலக்கு எப்போது? : உயர் நீதிமன்றம் கேள்வி


தமிழகத்தில் பூரண மதுவிலக்கு எப்போது அமல்படுத்தப்படும்? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு எப்போது அமல்படுத்தப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுவிலக்கு குறித்த வழக்கு விசாரணையின் போது உயர்நீதிமன்ற மதுரை கிளை இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் மதுவிலக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பிப்ரவரி 24ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மும்பை பற பற; சென்னை பர பர: தயங்கும் வித்யாசாகர் ராவ்

புது தில்லி:
புது தில்லிக்கு வந்திருந்த தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், சென்னைக்கு இன்றோ நாளையோ வர வாய்ப்பு இருப்பதாகவும், அதன் பின்னர் அவர் சசிகலாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என்றும் கூறப்பட்டது.

ஆனால், சசிகலா நாளை பதவியேற்பதில் திடீர் சிக்கல் முளைத்துள்ளது. தமிழக முதலமைச்சராக சசிகலா நாளை பதவியேற்க மாட்டார் என தகவல் வெளியானது. அவர் பிப்.9ம் தேதி பதவி ஏற்கக் கூடும் என்று கூறப்பட்டது.

இருப்பினும், ஆளுனர் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ், சசிகலாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க தயங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அவர் சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் தில்லியில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், அவர் தில்லியில் இருந்து  மும்பைக்குச் செல்வதாகவும், அவர் சென்னைக்கு இன்று வர வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆளுநரை சந்திக்கிறார் சசிகலா: 9ஆம் தேதி பதவியேற்பு?

சென்னை:

வரும் 9ஆம் தேதி வியாழன் அன்று சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்கலாம் என்று தெரிகிறது.

நேற்று நடைபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், சட்டமன்ற குழு தலைவராக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தேர்வுசெய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுநருக்கு கடிதம் அனுப்பினர். அவரது ராஜினாமா ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், நாளை அதிமுக சட்டமன்றகுழு தலைவர் சசிகலா  ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க உள்ளார். அதையடுத்து நாளை மறுநாள் முதல்வராக பதவி ஏற்கிறார்.

அப்போது, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவராகதான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதம் மற்றும் புதிய அமைச்சரவை பட்டியலை அவர் கொடுப்பாராம்.

பின் சசிகலாவை முதல்வராக பதவி ஏற்க ஆளுநர் அழைப்பு விடுப்பார் என்றும், வரும் வியாழக்கிழமை (9ஆம் தேதி) சசிகலா பதவி ஏற்பார் என்றும் தெரிகிறது. அதற்காக நூற்றாண்டு விழா மண்டபம் தயார் செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப் பணித் துறை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஆகியோர் போயஸ்கார்டன் சென்று சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், ஆளுநர் இன்று இரவோ அல்லது நாளையோ தான் சென்னை வருகிறார்.
எனவே, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வெளியே செல்லாதவாறு சென்னையிலேயே தங்கி இருக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 7ம் தேதியான நாளை இந்தப் பதவி யேற்பு விழா நடப்பதாக இருந்தது. ஆனால், நாள் சரியில்லை என்று ஜோதிடர்கள் சொன்னதால், அது 9ம் தேதிக்கு தள்ளிப் போயுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜெ., சிகிச்சை குறித்த விளக்கம் ஐயத்தை அதிகரிக்கிறது: ராமதாஸ்

சென்னை:

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விளக்கம் கேட்டபின், அது ஐயத்தை அதிகரிக்கிறது, மர்மம் நீடிக்கிறது என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பேல், அப்பல்லோ மருத்துவர் பாபு ஆப்ரஹாம் மற்றும் தமிழக அரசு மருத்துவர்கள் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த விளக்கம் சிகிச்சை குறித்த ஐயங்களை போக்குவதற்கு பதிலாக மேலும் அதிகரித்திருக்கிறது.

அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போதே அவருக்கு செப்டிசீமியா எனப்படும் கிருமித் தொற்று தாக்கியிருந்ததாகவும், அவர் இன்னும் சில நாட்களுக்கு முன்பே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ரிச்சர்ட் பேல் கூறியிருக்கிறார்.
மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்பே ஜெயலலிதாவுக்கு வீட்டில் வைத்து சசிகலாவின் உறவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்பாக அவரது இல்லத்தில் வைத்து எந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது? ஜெயலலிதாவுக்கு செப்டிசீமியா தாக்குதல் இருந்தது அப்போதே தெரியுமா? தமிழகத்தின் முதல்வரான ஜெயலலிதாவுக்கு வீட்டில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து யாருக்கும் தெரிவிக்கப்படாதது ஏன்?
ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போதே அவருக்கு செப்சிஸ் தொற்று இருந்திருந்தால்  அது குறித்து உடனடியாக தெரிவிக்கப்படாதது ஏன்?  ஜெயலலிதாவுக்கு காய்ச்சலும், நீர்ச்சத்துக் குறைவும் மட்டுமே இருந்ததாகவும், அதுவும் உடனடியாக குணப்படுத்தப்பட்டதால் அவர் வழக்கமான உணவுகளை உட்கொள்ளத் தொடங்கி விட்டதாகவும் மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டது ஏன்? ஜெயலலிதாவுக்கு செப்சிஸ் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காகத் தான் அக்டோபர் முதல் வாரத்தில் ரிச்சர்ட் பேல் சென்னை வந்திருப்பதாக  ஊடகங்களில் செய்தி வெளிவந்த போதும் கூட, அடுத்தடுத்து அப்பல்லோ மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கைகளில் செப்சிஸ்  கிருமித் தாக்குதல் குறித்து குறிப்பிடப்படாதது ஏன்? என்ற வினாக்களுக்கு விடையளிக்கப்படவில்லை.
ஜெயலலிதாவுக்கு செப்சிஸ் உள்ளிட்ட அனைத்து நோய்களும் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாகவும்,   மாரடைப்பு மட்டும் ஏற்படாவிட்டால் வீடு திரும்பியிருப்பார் என்றும் ஓரிடத்தில் ரிச்சர்ட் பேல் கூறினார். மற்றொரு இடத்தில் செப்சிஸ் கிருமித் தொற்று இதயத்தைத் தாக்கியதால் தான் மாரடைப்பு ஏற்பட்டதாக கூறுகிறார். ரிச்சர்ட் பேல் கூறும் இந்த இரு விஷயங்களும் முன்னுக்குப் பின் முரணாக இல்லையா?
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த மர்மங்களை போக்கும் வகையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவுகளை வெளியிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், ஜெயலலிதா மருத்துவம் பெற்று வந்த அறையில் காணொலி பதிவுக் காமிரா எதுவும் பொருத்தப்படவில்லை என்று மருத்துவர் ரிச்சர்ட் பேல் கூறியிருக்கிறார். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு கடந்த ஜனவரி மாதம் 9&ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, அப்பல்லோ மருத்துவமனை சார்பில் நேர்நின்ற வழக்கறிஞர், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளின் விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யத் தயார் என்று கூறினார்.
அப்போது கூட ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அறையில் காமிரா பொருத்தப்படவில்லை என்று அவர் கூறவில்லை. அத்தகைய சூழலில், ஜெயலலிதா அறையில் காமிரா இல்லை என ரிச்சர்ட் பேல் இப்போது கூறுவது விந்தையாக உள்ளது;  நம்பும்படியாக இல்லை.
மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் கண்காணிப்பு காமிராக்கள் இருப்பது கட்டாயம் ஆகும்.  ஒருவேளை நோயாளிகளின் தனிமையுரிமை குறித்து  ஏதேனும் வினா எழுந்தால், அறையின் நடைபாதைகளிலாவது பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, ஜெயலலிதாவுக்கு உடல்நிலை தேறிய நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண அறைக்கு மாற்றப்படும்போது அக்காட்சிகள்  தாழ்வாரங்களில் பொருத்தப்பட்டிருக்கும் காமிராக்களில் பதிவாகியிருக்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளில் எந்த சர்ச்சையும் இல்லை என்றால் இந்த பதிவுகளை வெளியிடுவதில் தயக்கம் ஏன்? ஜெயலலிதாவுக்கு சிகிச்சை தொடங்கியதுமே அது குறித்த சர்ச்சைகளும் தொடங்கி விட்டன. அவ்வாறு இருக்கும் போது எதிர்காலத்தில் சர்ச்சை எழுந்தால் அவற்றை களைவதற்காவது ஜெயலலிதாவின் தனியுரிமையை பாதிக்காத வகையில் சில வீடியோ பதிவுகளை செய்திருக்க வேண்டும். ஆனால், அத்தகைய பதிவுகளைக் கூட செய்யாத அளவுக்கு அப்பல்லோ நிர்வாகத்தை தடுத்தது யார்?
மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகளின் காரணமாக சில அடி தூரம் நடக்கும் அளவுக்கு  ஜெயலலிதா தேறியிருந்தார் என்று மருத்துவர் பாபு ஆப்ரஹாம் கூறியுள்ளார். மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தவர் இந்த அளவுக்கு தேறினால், மருத்துவமனையின் சாதனை என பதிவு செய்வதற்காகவாவது, அதை வீடியோ பதிவு செய்வது வழக்கம். அதுவும் ஒரு முதலமைச்சரின் உடல்நிலை இந்த அளவுக்கு தேறியிருந்தால் அது நிச்சயம் ஆவணப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதை செய்ய அப்பல்லோ நிர்வாகம் தவறியது ஏன்? என்ற வினாவும் கூடுதலாக எழுகிறது.
ஜெயலலிதாவின் உடலில் இருந்த காயங்கள், அவரது கால்கள் அகற்றப்பட்டதாக கூறப்படுவது குறித்த ஐயங்களுக்கும் மருத்துவர்கள் அளித்துள்ள விளக்கம் மனநிறைவு அளிக்கும்படியோ, ஏற்றுக் கொள்ளும் வகையிலோ இல்லை. ஜெயலலிதாவின் மரணம் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த அனைத்து ஐயங்களும் தீர்க்கப்பட வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி மத்திய புலனாய்வுப் பிரிவு, மருத்துவ வல்லுனர்கள், நீதிபதிகள் அடங்கிய பல்துறை விசாரணைக்குழுவை (Multi Disciplinary Investigation Team)அமைத்து விசாரணை நடத்த ஆணையிடுவது தான். எனவே, அத்தகைய விசாரணைக்கு அரசு உடனடியாக ஆணையிட வேண்டும்.

ஆளுநர் வித்யாசாகர் ராவ் கோவை பயணம் ரத்து

புது தில்லி :
கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவிருந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ் பயணம் ரத்து  செய்யப்பட்டுள்ளது.

சில தவிர்க்க முடியாத காரணங்களால் பங்கேற்க இயலவில்லை என பாரதியார் பல்கலை.,க்கு  விளக்கம் அளித்துள்ளார் ஆளுநர்.  இருப்பினும், பாரதியார் பல்கலை. விழா  திட்டமிட்டபடி நாளை நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழ்நிலையில், ஆளுநரின் பணி அதிகரித்துள்ளதால், இந்த முடிவு இருக்கக் கூடும் என்று தெரிகிறது.

சசிகலாவும் ஒரு நாள் முதல்வர் ஆவார்!” : அன்றே சொன்ன வலம்புரிஜான்

சசிகலாவும் ஒரு நாள் முதல்வர் ஆவார் என்று 20 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டுரையில் வலம்புரி ஜான் எழுதியுள்ளார்.

பிரபல வார இதழ் ஒன்றில் அவர் எழுதிய கட்டுரையில் இப்படி சொல்லியிருந்தார் வலம்புரிஜான்.

“ஒரு நடிகையாக இருந்து தனது சக குருவின் அரசியல் வாழ்வில் இணைந்து ஜெயலலிதா இன்று தமிழகத்தின் முதல்வராக ஆனதையே நம்மால் ஜீரணித்துக்கொள்ளமுடியாமல் இருக்கிறோம். ஆனால் ஜெயலலிதா முதல்வரானது கூட அதிக ஆச்சர்யம் அடையவேண்டிய விஷயமில்லை. திறமையான நிர்வாகி, படிப்பாளி, ஒரு கட்சியில் பெருந்தலைகளுடன் போராடி இந்த இடத்திற்கு வந்தார். ஆனால் இதையெல்லாம் விட ஒரு ஆச்சர்யமும் அதிர்ச்சி தரக்கூடிய விஷயம் ஒன்று. இன்று இல்லையென்றாலும் என்றேனும் ஒருநாள் நடந்தே தீரும். அது சசிகலா முதல்வராகும் நாள்!…

நான் இதை சொல்வதால் என்னை பைத்தியக்காரன் என்று கூட சொல்லலாம். ஆனால் தனது பலஹீனங்களை எல்லாம் பலமாக்கிக்கொண்டு ஜெயலலிதா ஒருநாள் முதல்வரானதுபோல் அவருடைய நிழலாகவே இருக்கிற சசிகலாவும் ஒருநாள் முதல்வராவார். அதற்கான பால பாடங்களை ஜெயலலிதாவிடமிருந்தே அவர் கற்றுக்கொண்டிருக்கிறார்.

சசிகலா முதல்வராவதற்கு இன்று ஜெயலலிதாவால் விரட்டி விரட்டி அடிக்கப்படும் நடராஜனே முக்கிய பங்கு வகிப்பார். தமிழகம் இந்த துயரையும் சந்தித்துத்தான் தீரவேண்டும். அப்படி ஒருநாள் வரும்போது என்னை நினைத்துப் பார்ப்பார்கள் தமிழர்கள்” –

‘கல்லறைகள் பிளக்கும் நாற்காலிகள் நடுங்கும்’ என்ற தலைப்பில் அந்த வார இதழில் தனது அரசியல் பயணத்தையும் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வின் ஏற்ற இறக்கங்களையும் எழுதிய தொடரில்தான் இப்படி பதிவு செய்திருந்தார் வலம்புரிஜான்.

சசிகலாவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம்: ஆன்லைனில் எகிரும் எதிர்ப்பு அலை

சென்னை:
தமிழக முதல்வராக சசிகலா பதவி ஏற்பதற்கு எதிராக ஆன்லைனில் கையெழுத்து இயக்கம் ஒன்றை எதிர்ப்பாளர்கள் நடத்தி வருகின்றனர்.

சசிகலாவுக்கு எதிராக change.org இணையதளத்தில் ஆன்லைன் மூலம் கையெழுத்துகள் பெறப்பட்டு வருகிறது. பிப்ரவரி 05ல் இந்தக் கையெழுத்து இயக்க லிங்க் உருவாக்கப்பட்டது. இதுவரை சுமார் 75,000 க்கும் அதிகமான கையெழுத்துக்கள் சசிகலா முதல்வராவதற்கு எதிராகப் பெறப்பட்டுள்ளது. இந்தக் கையெழுத்து லிங்க் துவங்கப்பட்ட 15 நிமிடத்திற்குள் 10,000 பேர் தங்களின் கையெழுத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

ஆன்லைன் மூலம் பெறப்படும் இந்தக் கையெழுத்துக்களை குடியரசுத் தலைவர், தமிழக ஆளுநர் மற்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு அனுப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாட்ஸ் அப் மூலமும் இந்த இணையதள லிங்க் அனுப்பப் பட்டு கையெழுத்து பெறப்படுகிறது.

சசிகலா முதல்வரானால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும்: சசிகலா புஷ்பா மனு

புது தில்லி:

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்க வி.கே.சசிகலா தயாராகி வரும் சூழ்நிலையில், இதனை எதிர்த்து, சசிகலா புஷ்பா பிரதமர் நரேந்திர மோடிக்கும், ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கும் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

சசிகலா புஷ்பா அனுப்பியுள்ள அந்த மனுவில்,

அதிமுக பொதுச்செயலராக தேர்வுசெய்யப்பட்ட சசிகலா, அதிமுக-வின் சட்டசபைக் குழுத் தலைவராகவும் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்பார் எனக் கூறப்படுகிறது. இது கண்டிக்கத்தக்கது.

சசிகலா மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அடிப்படையில் அவர் எந்தக் கட்சிப் பணியும் செய்ததில்லை. மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறை சென்றபோதும், உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட போதும், தாற்காலிக முதல்வராகவி, அவர் நியமிக்கப்படவில்லை.

சசிகலா, தமிழக முதல்வராகப் பதவியேற்றால், தமிழகத்தில் குற்றங்கள் அதிகரிக்கும். இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பிரதமர், ஆளுநர் ஆகியோர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, சசிகலா முதல்வர் பதவியில் அமர்வதை தடுக்க வேண்டும்..

-இவ்வாறு கூறியுள்ளார்.

 

நடராஜன் ஏன் அப்பலோவில் அட்மிட் ஆனார்: ஜே. அன்பழகன் பகீர்

சென்னை:
முதல்வராக அதிமுக., பொதுச் செயலர் சசிகலா பதவி ஏற்பதற்கான முன்னேற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், திடீரென உடல் நலக் குறைவு எனக் காரணம் காட்டி, சசிகலாவின் கணவர் நடராஜன், நேற்று இரவு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

நடராஜனுக்கு ரத்தக் கொதிப்பு இருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டன. இதனிடையே, அவர் ஏன் அப்பலோவில் அட்மிட் ஆனார் என்பதற்கு பல்வேறு யூகங்கள் உலா வந்தன. சசிகலாவின் குடும்பத்திற்குள் நடக்கும் தகராறு காரணமாக நடராஜன் மருத்துவமனையில் போய் படுத்துக் கொண்டார் என்று கூறப்பட்டது.

ஆனால் இன்று அப்பல்லோவில் நடத்தப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்புக்குப் பின்னர், இந்த பிரஸ் மீட்டில் என்ன பேச வேண்டும் என்று டாக்டர்களுக்கு நடராஜன்தான் கதை தயாரித்து கொடுக்க வாய்ப்புள்ளதாக திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார். இந்த பிரஸ் மீட், அரசால் நடத்தப் படுவதுதானே தவிர, அப்பல்லோவால் இல்லை என்று, லண்டன் மருத்துவர் பீலே வேறு கூறியதால், இந்த சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.

இது குறித்து அன்பழகன் தனது டிவிட்டில்,
படத்தின் பெயர்:-
“அப்போலோ Press Meet”
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் :- “நடராஜன்”
ஹீரோ : Apollo
வில்லன் : Richard Beale.
– என்று கூறி, சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளார்.

 

பிரஸ்மீட்டுக்கு ஏற்பாடு செய்தது அரசுதான்! : லண்டன் மருத்துவர் பளீர்!

சென்னை:
அரசுத் தரப்புதான் அப்பல்லோ பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடு செய்தது என்று கூறினார், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கிய லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே.

சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்பதாக அறிவிக்கப்பட்ட மறு நாளே, அவர் மீது விழுந்துள்ள சந்தேக நிழலைப் போக்குவதற்காக ஒரு பிரஸ்மீட் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை மேலும் கிளப்பியுள்ளது. இந்த திடீர் பிரஸ் மீட் குறித்து கருத்து தெரிவித்த அப்பலோ மருத்துவர்கள், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட்டுக்கு சென்னையில் வேலை இருந்ததாகவும் அதனால்தான் அவர் வந்ததாகவும் ஒரு தகவலைக் கூறி, குழப்பத்தை ஏற்படுத்தினார்.

ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கும் நிலையில், அப்பல்லோ மருத்துவமனை சார்பில் இந்த பிரஸ் மீட்டுக்கு மருத்துவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, டாக்டர் பாலாஜி, டாக்டர் பாபு உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் பேசினர்.

அப்போது ஏன் இவ்வளவு தாமதமாக இந்த பிரஸ் மீட் ஏற்பாடு செய்யப்பட்டது என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பாலாஜி, “டாக்டர் ரிச்சர்ட் இன்று சென்னையில் ஒரு நிகழ்வில் பங்கேற்க வந்தார். அவர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த நிபுணர் என்பதால் அவரும் இருக்கும்போது பிரஸ் மீட் ஏற்பாடு செய்யலாம் என்பதால் இன்று பிரஸ் மீட் செய்கிறோம். அரசுத் தரப்பில் இருந்து எங்களுக்கு பிரஸ் மீட் செய்ய எந்த அழுத்தமும் வரவில்லை” என்றார்.

அதேநேரம் வேறொரு கேள்வியின்போது ரிச்சர்ட் பீலே, இந்த பிரஸ் மீட் தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதே தவிர, அப்பல்லோவால் கிடையாது என்று பேச்சின் இடையே திடீரெனப் போட்டுடைத்தார்.