Home Blog Page 5687

விஷம் வைத்துக் கொல்லப்படுவோம் என அஞ்சினார் ஜெயலலிதா: மனோஜ் பாண்டியன் பகீர்

சென்னை:

தன்னை விஷம் வைத்து கொன்று விடுவார்கல் என்ற அச்சம் தனக்கு உள்ளதாக ஜெயலலிதா தன்னிடம் தெரிவித்தார் என்று, அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., மனோஜ் பாண்டியன் கூறினார்.

தமிழக முன்னாள் சபாநாயகர் பிஎச்.பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ., மனோஜ் பாண்டியன் இருவரும் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். தமிழகத்தின் தற்போது நடைபெற்று வரும் அசாதாரண சம்பவங்களின் பின்னணி குறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் விளக்கினர்.
அப்போது, மனோஜ் பாண்டியன் கூறியதாவது:

2011 டிச.19க்கு ஒரு வாரத்திற்கு முன்பு தலைமைச் செயலகத்தில் 45 நிமிடம் என்னிடம் பேசினார். அப்போது, நான் முதல்வராக இருக்கிறேன். ஒரு பெருங் கூட்டம் முதல்வர் பதவியில் இருந்து என்னை நீக்க சதி செய்கிறது. அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றப் போகிறேன் என்றார்.

அதனைத் தொடர்ந்து சில நாட்களில் அந்தக் கும்பலை கட்சியிலிருந்தும் வீட்டிலிருந்தும் நீக்கினார். அதன் பின்னர், கட்சியின் சட்டப்பிரிவுச் செயலாளர் என்ற முறையில், கட்சிக்கு தேவையான ஆலோசனைகளை நான் வழங்கினேன்.

மார்ச் 30க்குப் பிறகு, சசிகலா மன்னிப்புக் கடிதம் ஒன்று கொடுத்து விட்டு, மீண்டும் உள்ளே வந்தார். அவர் ஜெயலலிதா ஆசி பெற்று உள்ளே சென்றார். அப்போது 5 பேரை மாடிக்கு ஜெ., அழைத்தார். அதில் நானும் ஒருவன். அப்போது என்னிடம், அவர்களை அரசியலில் ஈடுபடுத்த மாட்டேன். பெங்களூருவில் அவர்கள் செய்த சதியை மறக்கவில்லை. ஆனால், எனக்கு ஒரு உதவியாளர் தேவை. அதனால் அவர்களை நான் அனுமதித்தேன்.

பிறகு, துக்ளக் ஆசிரியர் சோவையும் என்னையும் அழைத்த ஜெயலலிதா, எனக்கு பயமாக உள்ளது. இந்தக் கும்பல் என்னை விஷம் வைத்துக் கொன்றுவிடுவார்கள் என்று பயமாக உள்ளது என்றார். அதற்கு 1.5 கோடி தொண்டர்களும் உங்களுக்குச் சொந்தமானவர்கள். மக்கள் உங்களைப் பாதுகாப்பார்கள். உங்களுக்கு அச்சுறுத்தல் வராது எனக் கூறினேன்.

தற்போது அதிமுக., சட்டவிதி 19 – 8 என்ற விதியின் கீழ் சசிகலாவை பொதுச் செயலாளராகத் தேர்வு செய்ததாகக் கூறுகின்றனர். அதிமுகவின் கொள்கைகளை வகுப்பதுதான் பொதுக்குழு. அது தொண்டர்களைக் கட்டுபடுத்தும் எனக் கூறப் பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி தற்போது அவர்கள் பொதுச் செயலாளராகத் தேர்வானதாகக் கூறுகின்றனர். 20 – 2 என்ற விதியில் பொதுச் செயலாளர் என்பவர், தொண்டர்களால் மட்டுமே தேர்வு செய்யப்பட முடியும்.

தற்காலிகப் பொதுச் செயலாளரைத் தேர்வு செய்யக்கூடிய எந்த அதிகாரமும் இதில் வழங்கப்படவில்லை. சட்ட விதிகள் 205 என்ற விதிப்படி, பொதுச் செயலர் காலியாக இருந்தாலும், தாற்காலிகமாகத் தேர்வானவர் நிரந்தரமாகத் தேர்வு செய்யப்படுவார் என்பது விதி. ஜெயலலிதா, சசிகலாவை கவுன்சிலர் ஆக்கியதுகூடக் கிடையாது.

போயஸ் கார்டன் அதிமுக தொண்டர்களுக்கு கோயில் போன்றது. அதனை நினைவிடமாக மாற்ற வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் எண்ணம். போயஸ் கார்டன் வீடு, விருது, கார் ஆகியவற்றை ஜெயலலிதாவின் நினைவாக, தமிழக மக்கள், தொண்டர்கள் வணங்க வேண்டும் என்பதற்காக அங்கே நினைவகம் அமைக்கப்பட வேண்டும்.

25 நாளில் பொதுச் செயலாளர், 60 நாளில் முதல்வர் என்ற எண்ணம் கொண்டவர்கள் ஜெயலலிதாவிடம் எப்படி அன்பாக இருந்திருக்க முடியும்? ஆசையில்லாதவர்களாக இருக்க முடியும்? ஜெயலலிதாவுடன் ராஜம் என்பவர்தான் நீண்ட வருடங்கள் உடன் இருந்தார். அவர் ஜெயலலிதாவின் 13 வயதில் இருந்து மரணமடையும் வரை ஜெ.,வுடன் தான் உள்ளார். அவர் தான் தாயாக உள்ளார்

மக்கள் அனைவரின் விருப்பத்துக்கு மாறாக நடக்கிறது. தொண்டர்களை வஞ்சித்தும் நடக்கிறது. பொருளாதாரக் குற்றங்கள் செய்தவர்கள் நாடாண்டால் என்னாகும். இவர்கள் முதல்வராக தமிழகத்தை எங்கே கொண்டு செல்வார்கள். மக்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தற்காலிக பொதுச் செயலாளருக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கக்கூட அதிகாரம் கிடையாது. நிர்வாகிகள் யாரையும் நீக்கவும் முடியாது. நியமிக்கவும் முடியாது. பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு என்பதுகூட தேர்தல் ஆணையம் முன்பு கேள்விக்குறியாகத்தான் உள்ளது.
– இவ்வாறு அவர் கூறினார்.

ஜெயலலிதாவுக்கு அப்பல்லோவில் நடந்தது என்ன?: மௌனம் கலைத்த பி.எச். பாண்டியன்

சென்னை:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு செப்டம்பர் 28ம் தேதி போயஸ் கார்டனில் என்ன நடந்திருக்கும்? அப்பல்லோவில் என்ன நடந்தது என்பது குறித்து பி.எச். பாண்டியன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

தமிழக முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் இன்று அண்ணா நகர் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்,

”ஜெயலலிதாவின் இழப்பு பேரிழப்புதான். அவரை நம்பித்தான் தமிழக மக்களும், அதிமுக தொண்டர்களும் இருந்தனர். கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற நிகழ்வுகளை எல்லாம் பார்க்கும் போது அடுத்த 24ஆம் தேதி மௌனம் கலைக்கலாம் என்று நினைத்து இருந்தேன். ஆனால், இன்று உங்களைச் சந்தித்து எனது மௌனத்தைக் கலைத்துவிட்டேன்.

செப்டம்பர் 28ஆம் தேதி இரவு முதல்வர் ஜெயலலிதா மயக்கம் அடைந்த நிலையில், நீர்ச்சத்து இல்லாமல், நினைவிழந்த நிலையில் அப்பல்லோ மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அன்று மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் போது என்ன நடந்திருக்கும் என்பதை எல்லோரும் யூகிக்கிறார்கள்.

அடுத்த நாள் காலை பத்திரிகைகளில் செய்தி வெளியான போது ஜெயலலிதா போயஸ் கார்டனில் மன அழுத்தத்தோடு இருந்ததாகவும், வாக்குவாதம் நடந்தபோது கைகலப்பில் முடிந்து அவர் கீழே விழுந்ததாகவும், ஆனால் அவரைத் தூக்க யாரும் முன்வரவில்லை என்பதையும் தான் நான் அறிந்தேன்.

தடய அறிவியல் படித்த மருத்துவர்களும், வழக்குரைஞர்களும் இதனை அறிவார்கள். வீட்டில் அசம்பாவிதம் ஏதும் நடந்தால், அவர்கள் மீது குற்றம் சுமத்தப்படும் என்பதால்தான் அவர்கள் மருதுவமனைக்குக் கொண்டு சென்றார்கள். ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் பேசும் போது, அம்மாவுக்கு ஒன்றுமில்லை, மூச்சு விடுவதில் சிரமம், மாலை வீடு திரும்புவார் என்றுதான் சொன்னார். அடுத்த நாளும் இதையேதான் சொன்னார்கள்.

இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்டு, அடுத்த நாளே நான் அப்பல்லோ சென்றேன். நுழைவாயிலில் காவல்துறையினர் இரண்டு விதமாக அமர்ந்திருந்தார்கள். பிரவுன் மற்றும் நீலநிற காவலர்கள் மட்டுமே மருத்துவமனைக்குள் இருந்தனர். காக்கி காவலர்கள் வெளியே நின்றிருந்தார்.

ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட அறை இருந்த அதே தளத்தில் உள்ள மருத்துவர்கள் அறைக்குச் சென்று அவர்களிடம் விளக்கம் கேட்கச் சென்றேன். ஆனால், ஜெயலலிதாவின் உடல் நன்றாக இருப்பதாகக் காவலர்கள் கூறினார்கள். அதனால் வீடு திரும்பி விட்டேன். தினந்தோறும் இதுவே நடந்தது.

நீண்ட நாட்களாக அப்படியே ஆனது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு என்ன நடக்கிறது என்பதே யாருக்கும் தெரியவில்லை. மருத்துவமனைக்குச் சென்றாலே காவலர்கள் ஓடி வந்து அம்மா நன்றாக இருக்கிறார், சாப்பிடுகிறார், பேசுகிறார் என்று அவர்களாகவே சொல்வார்கள். ஆனாலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

ஆனால், டிசம்பர் 5ம் தேதி மாலை எங்களிடம் வந்து பிரதாப் ரெட்டி உள்ளிட்ட மருத்துவர்கள், எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள். இனி இறைவனிடம் பிரார்த்திப்போம். செயற்கை சுவாசக் கருவியை பொருத்தியுள்ளோம் என்று கூறிவிட்டுச் சென்று விட்டார். ஆனால், அப்போது அமைச்சர்கள் யாரும் கண்ணீர் விடவில்லை. கதறவில்லை. இதை கண்ணால் பார்த்தேன். சசிகலா உறவினர்களுடன் ஐசியுவுக்குள் சென்று உடனடியாக அங்கிருந்து திரும்பினார்.

பிறகு எய்ம்ஸில் இருந்து மருத்துவர்கள் வருகிறார்கள். ஜெயலலிதாவுக்கு மூளைச் சாவு ஏற்படவில்லை. எனவே அவரை உயிர்ப்பித்து விட முடியும் என்று சொன்னதும் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை. அவர் மரணம் அடைந்து விட்டார். மருத்துவர்கள், செவிலியர்கள் என எல்லோரும் சென்று பார்த்தார்கள். அப்போதும் எங்களைப் பார்க்க அனுமதிக்கவில்லை. ஐசியுவில் இருந்து போயஸ் தோட்டத்துக்குக் கொண்டு செல்ல லிப்டுக்கு வந்த போதுதான் ஜெயலலிதாவின் உடலைப் பார்த்தோம்.

அங்கிருந்து ராஜாஜி மண்டபத்துக்குச் சென்றோம். அங்கு ஜெயலலிதாவின் உடலைச் சுற்றி, 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் எனக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்று கூறி யாரை எல்லாம் வெளியே அனுப்பினாரோ, அவர்கள் எல்லாம் அங்கே நின்று கொண்டிருந்தார். இதைப் பார்த்து கடுமையாக அதிர்ச்சி அடைந்தேன்… என்று கூறினார் பி.எச்.பாண்டியன்.

 

பொதுமக்கள் முன்பே செய்தியாளர் மீது கொலைவெறித் தக்குதல்

ஆந்திராவில் பொதுமக்கள் முன்னிலையில் செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது, அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ., அமாஞ்சி கிருஷ்ணா பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிர்லா நகரை சேர்ந்த செய்தியாளர் ஒருவர் உள்ளூர் பத்திரிக்கையில் கட்டுரை எழுதியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ., அமாஞ்சி கிருஷ்ணாவின் உறவினர் அவர் மீது உருட்டுக்கட்டையால் நடு வீதியில் கொலைவெறித் தாக்குதல் நடத்தினார். இவ்வாறு பொதுமக்கள் முன்பே செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய தெலுங்கு தேச எம்.எல்.ஏ.,வின் உறவினர் மீது ஆந்திர மாநில பிரகாசம் மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மக்கள் இந்தச் சம்பவத்தை வேடிக்கைதான் பார்த்தனர். இந்த வீடியோக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஆந்திராவில் உள்ள பத்திரிக்கையாளர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.

[embedyt] https://www.youtube.com/watch?v=qKt1XuC5Bo8[/embedyt]

சசிகலா பேனர் கிழிப்பு: செங்கோட்டை அருகே பதற்றம்

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகிலுள்ள கட்டளை குடியிருப்பு பகுதியில்செங்கோட்டை ஒன்றிய அதிமுக கற்குடி கிளை சார்பில் அதிமுகவின் பொது செயலாளர், முதல்வர் பொறுப்பை ஏற்க உள்ள சசிகலா வை வாழ்த்தி அக் கட்சியின் சார்பில் அதிமுகவினரால் நேற்று இரவு 9மணியளவில் வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனரில் இன்று அதிகாலையில் யாரோ சில மர்ம ஆசாமி கள் டிஜிட்டல் பேனரில் சசிகலாவின் படத்தை மட்டும் கிழித்து உள்ளனர்.இதனை இன்று காலையில் கண்ட அதிமுக பிரமுகர்கள் புளிய ரை போலீசில் தகவல் தெரிவித்தார் கள் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு.. உருவாகியுள்ளது.

சசிகலா குழு நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள்: ராமதாஸ்

சென்னை:
ஜெயலலிதா மர்ம மரணத்தில், சசிகலா குழு மேற்கொண்டு வரும் நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று கூறியுள்ளார் பாமக நிறுவுனர் ராமதாஸ்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பேல் மற்றும் தமிழ்நாட்டு மருத்துவர்கள் விளக்கமளிப்பதற்காக தேர்வு செய்த காலக்கட்டத்தை வைத்துப் பார்க்கும்போது நன்கு ஒத்திகை பார்க்கப்பட்டு ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆனாலும், உண்மையற்ற இந்த நாடகம் மக்கள் முன் எடுபடாமல் அம்பலமாகிவிட்டது.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22&ஆம் தேதி  சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே அவரது உடல்நிலை குறித்து ஐயம் எழுந்தது. மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த அவரை சந்திக்க யாரும் அனுமதிக்கப்படாத போது அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஐயம் எழுந்தது. ஜெயலலிதா மர்மமான முறையில் உயிரிழந்தபோது அவரது இறப்பு குறித்தும் ஐயங்கள் எழுந்தன. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. அப்போதெல்லாம் ஐயங்களுக்கு விளக்கமளிக்காத தமிழக அரசு, இப்போது புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலாவுக்கு எதிராக மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவசர, அவசரமாக மருத்துவர் ரிச்சர்ட் பேலை அழைத்து வந்து விளக்கமளிக்க வைத்ததில் இருந்தே அதன் நோக்கத்தையும், பின்னணியில் இருப்பவர்களையும் புரிந்து கொள்ள முடிகிறது.
வழக்கமாக முதலமைச்சர் ஒருவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது அவரது உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் அல்லது சுகாதாரத்துறை செயலர் தான் விளக்கமளிக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யாதது ஏன்? என்று பலமுறை வினா எழுப்பியிருந்தேன். ஆனால் அப்போதெல்லாம் அதை கண்டுகொள்ளாமல் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மூலமாகவே அனைத்து விவரங்களையும் வெளியிட்ட தமிழக அரசு, இப்போது லண்டன் மருத்துவரை அழைத்து வந்து அனைவருக்கும் நற்சான்றிதழ் வழங்குவதற்கு முயல்வது ஏன்?
சென்னையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், இவ்வளவு தாமதமாக விளக்கம் அளிப்பது ஏன்? என்று ஒரு செய்தியாளர் கேட்ட போது, ‘‘நாங்கள் பலவாரங்களுக்கு முன்பே பேலை அழைத்தோம். அவரால் இப்போது தான் வரமுடிந்தது’’ என்று அரசு மருத்துவர் கூறியதும், அப்போது குறுக்கிட்ட பேல்,‘‘இல்லையில்லை… எப்போது அழைத்திருந்தாலும் நான் வந்திருப்பேன். அவர்கள் இப்போது தான் அழைத்தார்கள்’’ என்று அவசரமாக மறுத்ததும்  இந்த நாடகத்தின் திரைக்கதையில் உள்ள ஓட்டைகள்.
அதிலும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவம் குறித்து மட்டுமே பேச வேண்டிய லண்டன் மருத்துவர் பேல், அதைத் தாண்டி,‘‘ ஜெயலலிதா மரணத்தில் எந்த சதித்திட்டமும் இல்லை. அவருக்கு விஷம் எதுவும் தரப்படவில்லை. உடலை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட வில்லை. சசிகலாவுடன் நான் பலமுறை பேசியிருக்கிறேன். அவர் தான் ஜெயலலிதாவை மிக நன்றாக கவனித்துக் கொண்டார்’’ என்றெல்லாம் பாராட்டுப் பத்திரம் வாசிப்பதைப் பார்க்கும் போது இந்நாடகத்தை இயக்குவது அப்பல்லோவில் அமர்ந்திருக்கும் தில்லை நடன அரசர் தான் என்பதை உணர முடிகிறது.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து மருத்துவர்கள் அளித்த விளக்கங்கள் பற்றி சில ஐயங்களை நேற்று எழுப்பியிருந்தேன். இன்று இன்னும் கூடுதலாக ஐயங்கள் எழுந்திருக்கின்றன. ஜெயலலிதாவால் ஒரு கட்டம் வரை பேச முடியவிலை. அதன்பின் அவர் பேசியது தெளிவாக இல்லை என்று கூறிய ரிச்சர்ட் பேல்,‘‘ ஜெயலலிதாவும் நானும் பல விஷயங்களை பேசியிருக்கிறோம். டிவியில் பார்த்த நிகழ்ச்சிகள், சினிமாக்கள் பற்றி பேசினோம். உணவு வகைகள் குறித்தும் பேசினோம். எனது குழந்தைகள் பற்றி நான் பேசினேன். அவர் எனது குடும்பத்தைப் பற்றிக் கேட்டார். என்னை ‘பாஸ்’ என்று தான் ஜெயலலிதா அழைப்பார்’’ என்றெல்லாம் கூறியது ஒரு ஃபேண்டசி திரைப்படத்தைப் பார்ப்பது போல இருந்தது. உலகப் புகழ் பெற்ற மருத்துவரான ரிச்சர்ட் பேல் அவரது  புகழ், பெருமை, நம்பகத்தன்மை ஆகியவற்றை அடகு வைத்து இந்த நாடகத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது  ஏன்? எனத் தெரியவில்லை.
அப்பல்லோ மருத்துவர் பாபு ஆப்ரஹாம் பேசும் போது,‘‘டாக்டர்கள் தவிர ஜெயலலிதாவுடன் அவரின் குடும்பத்தினர் இருந்தனர். அவர்களுடன் தினமும் ஜெயலலிதா உரையாடி வந்தார். சசிகலா மட்டும்தான் ஜெயலலிதாவுடன் இருந்து வந்தார் என்பது உண்மையல்ல. அவருடன் பேசிய அனைவரையும் எனக்கு தெரியாது. ஜெயலலிதாவிடம் கேட்டுவிட்டுத்தான், அவர் சரி என்றால் அவர்களை அனுமதிப்போம்’’ என்று கூறியிருக்கிறார். அவர் கூறுவது உண்மையென்றால் குறைந்தது 3 முதல் 5 பேராவது ஜெயலலிதா அறையில் இருந்திருக்க வேண்டும். இது உண்மை என்றால், சசிகலா குடும்பத்தினரை அனுமதித்த மருத்துவர்கள் மத்திய அமைச்சர்களையும், மாநில ஆளுனர்கள் மற்றும் முதலமைச்சர்களையும், அரசியல் தலைவர்களையும் அனுமதிக்க மறுத்தது ஏன்? சசிகலா உறவினர்களிடமிருந்து நோய் தொற்றாத நிலையில், மற்ற தலைவர்களிடமிருந்து மட்டும் எப்படி தொற்றும்? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதா மீதும், அவரது அணுகுமுறை மீதும் எனக்கு ஆயிரம் விமர்சனங்கள் உண்டு. ஆனால், அதையும் தாண்டி மக்களின் ஆதரவு பெற்ற தலைவரின் கடைசிக் காலம் இப்படி அமைந்திருக்கக் கூடாது என்ற வருத்தம் எனக்கு உள்ளது. இதற்குக் காரணமானவர்களை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்ள நடத்தப்படும் நாடகங்களையும் நம்பமாட்டார்கள்.
– என்று கூறியுள்ளார்.

தனியார் பால் மறைமுக விலையேற்றத்தை தடுக்க முகவர் சங்க நிறுவனர் கோரிக்கை

சென்னை:
தமிழகத்தின் தனியார் பால் நிறுவனம் மறைமுகமாக விலை ஏற்றியுள்ளதாகவும், தமிழக அரசு இதற்கு ஆவன செய்ய வேண்டும் என்றும், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனரும் மாநிலத்தலைவருமான சு.ஆ.பொன்னுசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

அண்டை மாநிலமான ஆந்திராவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் பால் நிறுவனங்களில் முன்னணி தனியார் பால் நிறுவனமான ஹெரிடேஜ் நிறுவனம் கடந்த 01.02.2017 முதல் தங்களின் பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலையை உயர்த்துவதாக தன்னிச்சையான முடிவெடுத்து சுற்றறிக்கை வாயிலாக பால் முகவர்களுக்கு தெரிவித்தது.

இந்த தன்னிச்சையான பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு, அந்த விற்பனை விலை உயர்வு அறிவிப்பினை திரும்ப பெற வேண்டும் என சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்ததோடு நிற்காமல் ஹெரிடேஜ் நிறுவனம் பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும், தனியார் பால் நிறுவனங்களின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை தமிழக அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த வாரம் தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் தனிப்பிரிவிலும், பால் வளத்துறை அமைச்சர் மற்றும் பால் வளத்துறை செயலாளர் ஆகியோரது அலுவலகத்திலும் மனு அளித்து வந்தோம்.

அதனைத் தொடர்ந்து ஹெரிடேஜ் நிறுவனம் அன்றைய தினமே தங்களின் பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலை உயர்வு அறிவிப்பினை திரும்ப பெற்றுக் கொண்டது.

இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் (05.02.2017) முதல் எந்த ஒரு அறிவிப்பும் இன்றி 200கிராம் தயிர் பாக்கெட்டில் 25கிராம் அளவை குறைத்து 175கிராமாக மாற்றியுள்ளது. பாக்கெட்டில் தயிரின் அளவினை குறைத்த அந்நிறுவனம் விற்பனை விலையை குறைக்கவில்லை. அந்த வகையில் ஹெரிடேஜ் நிறுவனம் தயிருக்கான விற்பனை விலையை ஒரு லிட்டருக்கு 6.00ரூபாய் மறைமுகமாக உயர்த்தி பொதுமக்கள் தலையில் பெரும் பாரத்தை சுமத்தியுள்ளது.

பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலையை நேரடியாக உயர்த்த எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் ஹெரிடேஜ் நிறுவனம் தற்போது இந்த மறைமுக விலை உயர்வை மக்கள் மீது திணித்துள்ளதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு தயிர் பாக்கெட்டின் அளவினை வழக்கமான அளவிலேயே விநியோகம் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் ஹெரிடேஜ் நிறுவனத்தின் மறைமுக தயிர் விற்பனை விலை உயர்வை தொடர்ந்து தமிழகத்தின் முன்னணி தனியார் பால் நிறுவனமான ஹட்சன் நிறுவனம் பால் முகவர்களுக்கு எந்த ஒரு அறிவிப்பும் இன்றி, சுற்றறிக்கையும் வழங்காமல் தங்களின் தயிருக்கான விற்பனை விலையை இன்று (07.02.2017) முதல் லிட்டருக்கு 4.00ரூபாய் (ஒரு லிட்டர் 52.00ரூபாயில் இருந்து 56.00ரூபாயாக உயர்வு) தன்னிச்சையாக உயர்த்தியுள்ளது. எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி தயிருக்கான விற்பனை விலையை உயர்த்திய ஹட்சன் நிறுவனத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு இந்த தன்னிச்சையான விலை உயர்வை ஹட்சன் நிறுவனம் உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் அந்நிறுவனத்தை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

தற்போது தமிழக அரசியலில் ஸ்திரத்தன்மை இல்லாத இந்த நேரத்தில் தன்னிச்சையாக செயல்பட்டு வரும் தனியார் பால் நிறுவனங்களின் பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலையை தமிழக அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பால் வளத்துறை செயலாளர் அவர்கள் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தனியார் பால் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் தன்னிச்சையான முறையில் பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலையை மறைமுகமாக உயர்த்த தொடங்கி பொதுமக்கள் மீது பாரத்தை சுமத்தத் தொடங்கி விடுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சாந்தா ஷீலா நாயரும் பதவி விலகல்


சென்னை:

சாந்தா ஷீலா நாயர், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி. இவர், சிறப்பு பணிகளுக்கான அதிகாரியாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் பணி அமர்த்தப் பட்டார். அவர் திடீரென தாம் அந்தப் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். 

தற்போதைய அரசியல் நெருக்கடிகளில் சிக்கிக்கொண்டுள்ள ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், தாங்கள்  அமர்த்தப் பட்ட பணிகளில் இருந்து விலகி வருவது குறிபிடத்தக்கது. 

ஜெயலலிதாவின் உடல் பதப்படுத்தப் பட்டது உண்மை: டாக்டர் சுதா சேஷய்யன்

சென்னை:
ஜெயலலிதாவின் உடல் பதப்படுத்தப் பட்டது உண்மைதான் என்று கூறினார் டாக்டர் சுதா சேஷய்யன்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், நன்றாக நடமாடினார், இட்லி சாப்பிட்டார், நர்சுகளுடன் கலகலப்பாக உரையாடினார் என்றெல்லாம் அப்பலோ மருத்துவமனையில் இருந்து அறிக்கைகளாக வந்து கொண்டிருந்த நேரத்தில், திடீரென ஜெயலலிதா மரணம் அடைந்ததாக வெளியான தகவலால் பொதுமக்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் மக்களிடம் உள்ள சந்தேகத்தைப் போக்கும் விதமாக சுமார் 2 மாதங்கள் கழித்து திடீரென ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப் பட்டது. இது அப்பலோ நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது என்று அப்பலோ மருத்துவரும், இதனை ஏற்பாடு செய்துள்ளது அரசுத் தரப்பு என்று இந்த சந்திப்பில் கலந்து கொண்டவரும் ஜெயலலிதாவுக்கு மருத்துவம் செய்தவருமான லண்டன் டாக்டர் பீலேவும் கூறினர்.

இந்த சந்திப்பில் கலந்து கொண்ட டாக்டர் சுதா சேஷையன் கூறியபோது…

ஜெயலலிதாவின் உடல் பதப்படுத்தப்பட்டது என்பது உண்மைதான். நான் அப்போது அங்கிருந்தேன். டிசம்பர் 5–ந் தேதி இரவு 12.20 மணி அளவில் பதப்படுத்தும் நடவடிக்கை தொடங்கியது. அது 15 நிமிடங்கள் நீடித்தது. பொதுவாக முக்கியநபர்கள் இறந்துவிட்டால் அவரது உடலை பொதுமக்கள் அஞ்சலிக்காக வெளியே வைப்பார்கள். அப்படி வெளியே வைக்கும்போது நமது சீதோஷ்ண நிலையில் அந்த உடல் கெட்டுப்போக வாய்ப்பு அதிகம்.

மேலும் பலரும் வந்து அவரது உடலை சுற்றி வருவார்கள். அவர்களை கட்டுப்படுத்த முடியாது. அவர்களிடம் இருந்து வரும் தூசி போன்றவற்றால் உடல் மேலும் கெடக்கூடிய சூழ்நிலை வரும். அதை தவிர்ப்பதற்காகத்தான் உடல் பதப்படுத்தப்பட்டது. இது பெரியவர்கள் மரணத்தின் போது இயல்பாக செய்யக்கூடியதுதான். அதுதான் ஜெயலலிதாவின் சாவிலும் நடந்தது.

எம்.ஜி.ஆரின் உடலும் பதப்படுத்தப்பட்டது. எம்.ஜி.ஆரின் உடலை பதப்படுத்திய அதே எம்.எம்.சி. அனாட்டமி பிரிவினர்தான் ஜெயலலிதாவின் உடலையும் பதப்படுத்தினார்கள். ஆனாலும் ஜெயலலிதாவின் உடலை பதப்படுத்தியபோது அவரது முகத்தில் நான் எந்த துவாரத்தையும் பார்க்கவில்லை.

எக்கிமோட்டிக் புள்ளிகள் என்ற படுக்கையில் நீண்ட நாட்கள் இருப்பவர்களுக்கு நேரிடும் நிற இழப்பு நிலைதான் ஜெயலலிதாவுக்கு இருந்தது. மற்ற எல்லா உடலுக்கும் செய்வதைப் போல சாதாரண பதப்படுத்தல்தான் ஜெயலலிதாவுக்கும் செய்யப்பட்டது. அவரது முகத்தில் காணப்பட்ட புள்ளிகள் சாதாரணமானதுதான். ஆழமானது அல்ல. அவரது உதடுகள் மட்டும் தடித்திருந்தன. டிரக்கியாஸ்டமியில் வென்டிலேட்டர் போடும்போது உதடு தடிப்பது இயல்புதான். பொதுவாக பதப்படுத்தும்போது ஐந்தரை லிட்டர் ரசாயன திரவம் உடலுக்குள் செலுத்தப்படும். அது உடலுக்குள் இருக்கும் ரத்தத்துக்கு பதிலாக போய் இருந்துகொள்ளும்.

திசுக்கள் ஒருவேளை கெட்டுப்போய் இருந்தால் அந்த பகுதியில் மட்டும் அந்த திரவம் கசிந்து வெளியேறும். ஆனால் ஜெயலலிதாவின் உடலுக்கு அப்படிப்பட்ட நிலை ஏற்படவில்லை. பத்திரிகையாளர் கூறுவதைப்போல, முகத்தில் புள்ளிகள், ஓட்டைகள் இருந்திருந்தால், அதன் வழியாக திரவம் கசிந்திருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை. தானியங்கி எந்திரம் மூலமாகத்தான் திரவத்தை உடலுக்குள் ஏற்றினோம். அவ்வளவு வேகத்தில் ஏற்றும்போது, எந்த இடத்திலும் இயல்புக்கு மாறான திரவ கசிவு இருக்கவே இல்லை. மற்றவர்களுக்கு ஏற்படும் இயல்பான நிலைதான் இருந்தது. எனவே தேவையற்ற ஓட்டைகள், வெட்டி ஒட்ட வைக்கும் சம்பவம் எதுவும் ஜெயலலிதாவின் உடலுக்கு செய்யப்படவில்லை – என்று அவர் கூறினார்.

முன்னர், அவர் உடல் எம்பால்மிங் செய்யப் படவில்லை என்று அப்பலோ தரப்பில் கூறப்பட்டது.

ஜல்லிக்கட்டை பாரம்பரியத் தன்மையில் இருந்து பிரித்துவிடாதீர்

ஜல்லிக்கட்டு என்பது, தமிழர்களின் வீர விளையாட்டு என்று எவன் சொன்னானோ தெரியவில்லை! அது இன்றைய நவீன விளையாட்டு அல்ல… ஆன்மிகச் சடங்கு!

ஏறு தழுவுதல் எனும் பெயரில் நமக்காக உழைக்கும் காளைக்கும் மனிதனுக்குமான நெருக்கத்தைக் காட்டுவது. தட்டிக் கொடுத்து, கட்டித் தழுவி, அன்பைக் காட்டி, குழந்தைகளுடன் விளையாடுவதைப் போல் அன்புள்ளத்துடன் அணுக வேண்டிய ஒன்று – ஏறுதழுவுதல்.

இது தமிழர்களின் பண்டைய கிராமத்து தேவதைகளின் கால் தொட்டு, அனுமதி கேட்டு, மாலை அணிவித்து மரியாதை செய்து, பூஜை செய்து, வணங்கி வழிபட்டு பின்னர் நடத்தப் படும் ஆன்மிகச் சடங்கு. கோயில் காளையை முன்னிட்டு அதன் தொடர்ச்சியாக காளைகளைக் கட்டவிழ்த்து ஓடிப் பிடித்து விளையாடி அடக்கும் செயல்… சொல்லப் போனால் நம் வீட்டுக் குழந்தைகளுடன் விளையாட்டுக் காட்டி மல்லுக்கு நிற்பதைப் போலானது!

ஆனால், விளையாட்டு என்ற பெயரில், கோயில்களின் ஆன்மிக வழியில் இருந்து அதனைப் பிரித்தால்… விபரீதங்கள் ஏற்பட்டு விடுகின்றன. நாம் கோயில் காளைக்கு பழமும் பொங்கலும் இன்னும் பிற உணவுப் பொருட்களும் கொடுத்து வணங்குவோம். மனிதனை மிருகமாக்கும் சாராயத்தை அதற்குக் கொடுத்து உசுப்பேற்ற மாட்டோம். இங்கே தான் மிருக வதை வருகிறது. இந்து சமய கோயில் வழிபாட்டு முறைகளில் இருந்து இதனைப் பிரித்து, வேற்று மதப் பின்னணிகளில் வைக்கும் போது, இதன் தன்மை கெட்டு… இப்போது நாம் சந்தித்த அனைத்துப் பிரச்னைகளும் தலைதூக்குகிறது.

இன்னும் விளையாட்டு என்ற வகைப்பிரிவில் இறங்கிவிட்டால், நவீன விளம்பரதாரர்கள் காத்திருக்கிறார்கள். சென்னை சூபர்கிங்க்ஸ் போல் உலகம்பட்டி மாடர்ன் மாடூஸ், செவலம்பட்டி சேட்டை காளைஸ், அகிலம்பட்டி அடங்கா ரூடர்ஸ், பனையம்பட்டி பணியா பாய்ஸ், அலங்காநல்லூர் அசத்தல் தெறீஸ் என்றெல்லாம் டீம் போட்டு, டிவி பொட்டியில் விளம்பரம் செய்து, லைவ் ஷோவெல்லாம் வைத்து, நம் கலாசாரத்தின் விழுதுகளையே வெட்டி எறிந்து நாசப் படுத்தி விடுவார்கள்…

எனவே மீண்டும் ஒரு முறை வேண்டுகோள்…
என் இனிய தென்னாட்டு மக்களே!
காளைகளை இந்து சமய ஆன்மிக விழாவில் இருந்து பிரித்து விடாதீர்கள்.
டிவி.,க்காரர்களை உள்ளே விடாதீர்கள்.
நீங்களும் போதை ஏற்றி, மாடுகளுக்கும் போதை தராதீர்.
விளம்பர யுகம் இது எச்சரிக்கை எச்சரிக்கை!

தேனிக்காரரை துரத்திவிட்டு ஆண்டிப்பட்டியில் அடியெடுத்து வைக்கவா?

சென்னை:
முதல்வராக வேண்டும் என்ற தீர்மானத்துடன் காய் நகர்த்தி வெற்றி கண்டுள்ள சசிகலாவுக்கு, எந்தத் தொகுதியில் போட்டியிட்டால் எளிதில் வெற்றி பெறலாம் என்று மாநில உளவுப்பிரிவு போலீஸார் களஆய்வு செய்து அறிக்கை தயாரித்தனர்.

சசிகலா போட்டியிடுவதற்கு வசதியான தொகுதிகள் பட்டியலை அ.தி.மு.க. மூத்த தலைவர்களும் தயாரித்து வருகிறார்கள். அதில் உசிலம்பட்டி தொகுதி முதலிடத்தில் உள்ளது. ஆண்டிப்பட்டி, திருமங்கலம் தொகுதிகளும் பட்டியலில் அடுத்தடுத்த இடத்தில் உள்ளது.

உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி ஆகிய இரு தொகுதிகளும் தேனி மாவட்டத்தில் உள்ளது. கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கொடுத்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது ஆண்டிப்பட்டி தொகுதி. இந்தத் தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டையாக இருப்பதே காரணம் என்றும் ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தொகுதியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இதனால் சசிகலாவுக்கும் இந்தத் தொகுதியே சிறந்தது என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனால் ஆண்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ. விரைவில் ராஜினாமா செய்வார் என தெரிகிறது. இருப்பினும்,, தேனி மாவட்டத்துக்காரரான ஓ,பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து துரத்தி விட்டு, சசிகலா அங்கே போட்டியிட்டால் மாவட்டத்துக்காரர்களின் கோபத்தை சந்திக்க நேரிடும் என்றும் கட்சியினர் மத்தியில் பேசப்படுகிறது.