தமிழக மக்கள் காதில் பூ சுற்றும் முதலமைச்சர் ஜெயலலிதா : மு.கருணாநிதி
வதந்தி.! வதந்தி.! திமுகவில் மு.க.அழகிரி மீண்டும் இணையப் போவதாக வெளியான தகவல் வதந்தி.! : மு.க.ஸ்டாலின்
உலக தரத்திற்கு இணையாகவும், தேசிய கல்வி திட்டத்திற்கு இணையாகவும் பாடங்களை உருவாக்க குழு அமைக்க விஜயகாந்த் வலியுறுத்தல்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்
உலக தரத்திற்கு இணையாகவும், தேசிய கல்வி திட்டத்திற்கு இணையாகவும் பாடங்களை உருவாக்கி, வருங்கால சந்ததிகளான இளைய சமுதாயத்தை அறிவுத்திறன் மிக்கவர்களாக உருவாக்க தமிழக அரசு முயற்சி எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு 10 மற்றும் +2 வகுப்பு தேர்ச்சி விகிதம் அதிகரித்தாலும், கல்வியின் தரம் குறைந்ததால் உயர்கல்விக்கு செல்லும் விகிதாச்சாரம் மிக மிக குறைந்துள்ளது. அதே ஆண்டில் ஐ.ஏ.எஸ் தேர்வில் தமிழகத்தில் மட்டும் 118 பேர் தேர்ச்சியடைந்துள்ளார்கள் என பெருமை கொள்ளலாம். ஆனால் அவர்கள் அனைவருமே சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பே பள்ளிப்படிப்பை முடித்தவர்கள். மேலும் 2015 ஆம் ஆண்டில் +2 வகுப்பில் தேர்ச்சியடைந்து ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டும், வெறும் 33 பேர் மட்டுமே அதில் தேர்ச்சியடைந்துள்ளனர். இதே நிலைதான் மருத்துவம் மற்றும் பட்டைய கணக்காளர் படிப்பிலும் உள்ளது. தேசிய கல்வித்தரத்திற்கு இணையாக 9, 10, +1, +2 பாடத்திட்டங்கள் தமிழகத்தில் இல்லை என்றும், அதனால் பள்ளிகல்வியின் தரம் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளதென கடந்த 09.07.2015 அன்றே நான் அறிக்கையின் வாயிலாக சுட்டிக்காட்டியிருந்தேன். தற்போது அது உண்மையாகி இருக்கிறது.
மத்திய அரசிற்கும், மாநில அரசிற்கும் கல்வித்துறையில் நல்லபல ஆலோசனைகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட, மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம், சமீபத்தில் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் பள்ளிக்கல்வித்துறை குறித்து மிகப்பெரிய ஆய்வை நடத்தி அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்கள் ஆங்கிலம், கணக்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைவாக உள்ளதென்றும், தேர்ச்சி விகிதத்தில் இந்திய சராசரியைவிட தமிழ்நாட்டின் சராசரி மிக மிக குறைவாக உள்ளதென்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் தமிழக மாணவ, மாணவியர்கள் ஆங்கில பாடத்தில் 2 சதவிகிதமும், கணித பாடத்தில் 4 சதவிகிதமும், அறிவியல் பாடத்தில் 2 சதவிகிதமும், சமூக அறிவியலில் 4 சதவிகிதமும் என மிக மிக குறைந்த எண்ணிக்கையிலேயே சரியான விடையை அளிக்கிறார்கள் எனவும் இவ்வறிக்கை தெரிவித்துள்ளது.
ஏனெனில் மத்திய அரசு நிறுவனத்தால் இந்தியா முழுவதும் 7,216 பள்ளிகளில் சுமார் 2,76,416 மாணவ, மாணவியர்களிடம் பல வினாக்களை கேட்டறிந்து, இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் 280 பள்ளிகளில் இந்த ஆய்வு நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டில் மாணவ, மாணவியர்கள் பாடங்களில் உள்ள பொருளை புரிந்து கொள்ளாமலும், அதுகுறித்து தெரிந்துகொள்ளாமலும், ஆர்வமற்ற தன்மையோடும் இருப்பதால்தான் இவ்வளவு மோசமான நிலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கு முன்பு எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியரின் கல்வித்தரம் குறித்து நடைபெற்ற ஆய்வில் தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு, எச்சரிக்கையும் விடப்பட்டது. ஆனால் அதை மாற்றியமைத்திட அதிமுக அரசு எவ்வித முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை.
தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பு வரை அனைவரையும் தேர்ச்சியடைய வைப்பதென்பது வரவேற்கக்கூடியது. ஆனால் அதே சமயத்தில் எட்டாம் வகுப்பு தேர்ச்சியடைந்து செல்லும் மாணவ, மாணவியர்கள், மேல் வகுப்பிற்கு சென்று கல்வி கற்கும் வகையில் அவர்களின் திறமையை வளர்ப்பதற்கு அதிமுக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமா? இல்லையா? அதை செய்திருந்தால் இந்த நிலையை தவிர்த்திருக்கலாம் அல்லவா? 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த காலத்தைவிட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தற்போதைய ஆட்சியில், 10 மற்றும் +2 வகுப்பில் அதிக அளவு மாணவ, மாணவியர் தேர்ச்சியடைந்தனர் என தமிழக மக்களுக்கு காண்பிக்கும் வகையில், ஒரு மாயத்தோற்றம் உருவாக்கப்பட்டு வருவதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதை உண்மையாக்கும் விதமாகவே மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமத்தின் ஆய்வு அறிக்கை அமைந்துள்ளது.
மேலும் 9, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழில் பிழை இல்லாமல் வார்த்தைகளை எழுதுவதற்கு தெரியவில்லை என்றும், ஆங்கில எழுத்துக்களையே எழுத தெரியவில்லை என்றும் கல்வியாளர்கள் கூறுவது அதிர்ச்சியளிக்கிறது. உண்மை நிலையை மறைத்து, தனது சுயலாபத்திற்கும், ஆட்சியாளர்களின் விளம்பரத்திற்காகவும் தமிழகத்தில் தேர்வு எழுதியயவர்கள் 10ஆம் வகுப்பில் 92.9 சதவிகிதமும், +2 வகுப்பில் 90.6 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றனர் என்ற புள்ளி விபரத்தை மட்டுமே கூறி அதிமுக அரசு சுய தம்பட்டம் அடித்துக்கொள்கிறது. கல்வியின் தரத்தைப் பற்றியும், ஏழை மாணவ, மாணவியரை பற்றியும் கவலைப்படாமல், இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை பற்றி சிறிதும் சிந்திக்காமல், வருங்கால சந்ததியினரின் வாழ்க்கையையே அழிக்கும் போக்கில் இந்த அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் 9, 10, +1, +2 ஆகிய வகுப்பு பாடத்திட்டங்கள் அகில இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்படவில்லை, அதற்குரிய பயிற்சிகள் வழங்கப்படுவதில்லை, பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வகங்கள் மற்றும் போதுமான பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் இல்லை என பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் வாயிலாக கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் பள்ளிக்கல்வித்துறையின் அவலம் குறித்து கடும் விமர்சனத்தை அவ்வப்போது தெரிவித்துவருகிறார்கள். தமிழக அரசின் கல்வித்துறை செயலாளர் உயர்நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டு, இரண்டு முறை ரூபாய் பத்தாயிரம் அபராதம் விதிக்கப்பட்டும் இந்த அரசு திருந்தியபாடில்லை. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, இதையெல்லாம் வழக்கம்போல பொருட்படுத்துவதே இல்லை. தமிழகத்தில் மதுக்கடைகளை மூடமாட்டோமென, சட்டமன்றத்திலேயே ஆணவத்துடன் கொக்கரிக்கும் அதிமுக அரசின் செயலால், மூன்று தலைமுறை மக்களையும் சீரழித்துவரும் நிலையில், பள்ளிக் கல்வித்துறையையும் பாழ்படுத்தி வருகிறதென்பது மத்திய அரசு நிறுவனத்தின் ஆய்வு அறிக்கை மூலம் “உள்ளங்கை நெல்லிக்கனியாக” தெரிகிறது.
மேலும் இந்த ஆய்வு அறிக்கையில் தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.சி மற்றும் ஐ.சி.எஸ்.இ பாடதிட்டங்களில் பள்ளிக்கல்வித்தரம் சிறப்பாக உள்ளதென்றும், மாநில அரசின் பாடதிட்டம்தான் மிகவும் மோசமாக உள்ளதென்று கூறியுள்ளது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது அதிமுக அரசுக்கு, தமிழக மக்களின் மீது அக்கறை இருப்பதாக தெரியவில்லை. மீண்டும் தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடிக்கவேண்டும் என்கின்ற பேராசையும், சுயநலமுமே தெரிகிறது. எனவே தமிழக மக்கள் இனியாவது விழித்துக்கொண்டு நல்லாட்சி அமைய உறுதுணையாக இருக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
தமிழகத்தில் தற்போதுள்ள பாடத்திட்ட முறைகளே தொடர்ந்தால், தமிழக மாணவ, மாணவியரின் முழுத்திறமையும் வெளிப்படாது. “நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, இந்த நாடே இருக்குது தம்பி” என்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வரிகளை மனதில்கொண்டு, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தான் ஆட்சிக்கு வந்த பிறகு 10 மற்றும் +2 வகுப்பில் தேர்ச்சி சதவிகிதம் அதிகம் என புள்ளிவிபரங்கள் அளிப்பதை விட்டுவிட்டு, விருப்பு வெறுப்பின்றி, அரசியல் காழ்புணர்ச்சியின்றி, சிறந்த கல்வியாளர்களும். சமூக சேவகர்களையும் கொண்ட குழுவை அமைத்து, அவர்கள் மூலம் உலக தரத்திற்கு இணையாகவும், தேசிய கல்வி திட்டத்திற்கு இணையாகவும் பாடங்களை உருவாக்கி, வருங்கால சந்ததிகளான இளைய சமுதாயத்தை அறிவுத்திறன் மிக்கவர்களாக உருவாக்க தமிழக அரசு முயற்சி எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்
கோவை விழாவில் வணக்கம் என்று தமிழில் பேச்சை துவக்கினார் மோடி
கோவையில் இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, வணக்கம் என்று தமிழில் பேச்சை துவக்கி, கோவை வந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக கூறினார்.
மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் கூட்டாட்சி என்பதே தமது அரசின் கொள்கை. ஒத்துழைப்புடன் கூட்டாட்சி என்பதற்கு ஏற்ப இ.எஸ்.ஐ மருத்துவமனை கட்டப்பட்டுள்ளதாக கூறினார்.
இ.எஸ்.ஐ.யில் உறுப்பினராக உள்ளவர்களின் பிள்ளைகளுக்கு கல்லூரியில் 26 சதவீத இடம் ஒதுக்கப்படுவதாக குறிப்பிட்டார்.
மேலும் இ.எஸ்.ஐ.யில் உள்ள 6 கோடி தொழிலாளர்களுக்கு தனி அடையாள எண் தரப்பட்டுள்ளதாக மோடி கூறினார். காந்தி கொள்கையின் அடிப்படையில் இ.எஸ்.ஐ திட்டம் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் குறிப்பிட்டார்.
அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் பிரியங்கா மகள் அணி தோல்வி
அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் பிரியங்கா மகள் அணி தோல்வி அடைந்தது இதில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது அகில இந்திய சப்–ஜூனியர் கூடைப்பந்து போட்டி புதுவையில் இன்று தொடங்கி வருகிற 8–ந் தேதிவரை நடைபெறுகிறது. இதில் இந்தியா முழுவதும் இருந்து 20 அணிகள் பங்கேற்கின்றன. நேற்றிரவு அரியானா அணியுடன் தமிழக அணி மோதியது. அதில் அரியானா அணியில் பிரியங்கா மகள் மிரயா வதேரா விளையாடினார். இந்தப் போட்டியில் தமிழக அணி வெற்றி பெற்றது
வாட்ஸ்அப்பை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 100 கோடியாக உயர்வு
வாட்ஸ்அப்பை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை உலகளாவிய அளவில் நூறு கோடியாக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் கடந்த ஐந்து. மாதங்களில் மட்டும் சுமார் பத்து கோடி புதிய பயனாளர்கள் இணைந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு வாட்ஸ்அப்பை பேஸ்புக் குழுமம் ரூ.1.3 லட்சம் கோடிக்கு விலைக்கு வாங்கியது. தற்போது சுமார் நூறு கோடி குழுக்கள் (குரூப்) வாட்ஸ்அப்பை பயன்படுத்தி வருகின்றன.
பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவரின் மகன் இந்திய தேசிய கொடியை எரித்து முகனூலில் வெளியிட்டமைக்காக கைது
சீதையை காட்டுக்கு அனுப்பிய ராமர் வழக்குப்பதிவு செய்ய கோரிய மனு தள்ளுபடி
சீதையை காட்டுக்கு ராமர் வழக்குப்பதிவு செய்ய தாக்கல் செய்ய வேண்டுமென பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தன் குமார் சிங் என்பவர் சீத்தாமரி மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த சீதாமரி மாவட்ட தலைமை நீதிபதி, இந்த மனுவில் உண்மைக்கு மாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதால் இதை விசாரணைக்கு உகந்தது அல்ல என கருதி தள்ளுபடி செய்தார்.
விஜய்-பிரபு தேவா கூட்டணியில் இணைந்த தமன்னா!
பிரபுதேவா ஸ்டுடியோஸ் மற்றும் பாப் கார்ன் எண்டெர்டைன்மெண்ட் வழங்கும் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மும்மொழிகளில் தயாராகும் பிரம்மாண்டமான படம் பிரபுதேவா நடிக்க இயக்குனர் விஜய் இயக்குகிறார்.
தமிழ் திரை உலகின் திறமைமிக்க பிரபலங்கள் எல்லைக்கு அப்பாற்பட்டு, மொழிக்கு அப்பாற்பட்டு சென்று தங்களது வெற்றிக் கொடியை நாட்டுவது உண்டு. அந்த வகையில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என்று எல்லா வகையிலும் தேசமெங்கும் கொடிகட்டி பறக்கும் பிரபு தேவா என்றென்றும் தமிழ் நாட்டுக்கு பெருமை சேர்ப்பவர்.
தனக்கு பிடித்த, பொருந்திய வேடங்கள் கிடைத்தால் மட்டுமே நடிக்கும் பிரபு தேவா, இயக்குனர் விஜய் இயக்கத்தில் தமன்னா உடன் இணைந்து நடிக்க இருப்பதுக் குறிப்பிடத்தக்கது. கிரீடம், மதராசபட்டினம், தெய்வ திருமகள், தலைவா உள்ளிட்ட படங்களை தமிழில் இயக்கிய இயக்குனர் விஜய்க்கு இதுவே முதல் ஹிந்தி படமாகும். இவரது படங்கள் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் என்பதால் கூடுதல் கவனம் ஈர்க்கிறது.
பெயரிடப்படாத இந்தப் படத்தில் பிரபல வில்லன் நடிகர் Sonu Sood முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். ஷாரூக் கானின் ஹாப்பி நியூ இயர் திரைப்படம் மூலம் தேசிய அளவில் சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற பெயரை ஈட்டிய ஒளிப்பதிவாளர் மனுஷ் நந்தன் இந்த படத்தின் ஒளிப்பதிவு செய்கிறார்.
பிரபு தேவா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் முனைவர் கே.கணேஷ் மற்றும் மும்பையை சேர்ந்த பாப் கார்ன் எண்ட்யர்டைன்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.மற்ற நடிக நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைப் பெற்றுக் கொண்டு இருக்கிறது.
வேலையிழந்த 300 பேர்: மன அழுத்தத்தில் செல்போன் டவரில் ஏறி பொறியாளர் போராட்டம்!
சென்னை:
உடன் பணி செய்த 300 பேர் வேலை இழந்த துயரத்தில், மன அழுத்தத்தில் இருந்த பொறியாளர் ஒருவர் சென்னையில் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினார். அவரைக் காப்பாற்றிய போலீஸார் பொதுமக்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினார். அவர் பின்னர் கைது செய்யப்பட்டார்.
சென்னை சைதாப்பேட்டை, ஐந்து விளக்கு பகுதியில் உள்ள உயரமான செல்போன் டவரில் நேற்று பகல் 12 மணி அளவில் இளைஞர் ஒருவர் ஏறி திடீர் போராட்டம் நடத்தினார். கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அவர் கூச்சல் போட்டார்.
இதனைக் கண்ட அந்தப் பகுதி இளைஞர்கள் திரண்டு வந்து, அவரைக் கீழே இறங்கச் சொன்னார்கள். இதனிடையே இளைஞர்கள் சிலர், செல்போன் டவரில் ஏறி, போராட்டத்தில் ஈடுபட்ட நபரைக் கீழே இறக்க முற்பட்டனர். ஆனால் அவர் கீழே இறங்க மறுத்தார். காப்பாற்ற முயன்ற இளைஞர்களை காலால் எட்டி உதைத்தார். இதை அடுத்து, இந்தச் செய்தி போலீஸாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டது.
செய்தி அறிந்து அந்த இடத்துக்கு சைதாப்பேட்டை உதவி காவல் ஆணையர் தங்கராஜ் தலைமையில் போலீஸாரும், தீயணைக்கும் வீரர்களும் விரைந்து வந்தனர். செல்போன் டவரில் ஏறி, போராட்டத்தில் ஈடுபட்ட நபரை கீழே இறக்கினர். வெகு நேரப் போராட்டத்துக்குப் பின் மாலை 4 மணி அளவில் இது முடிவுக்கு வந்தது.
கீழே இறக்கப்பட்ட அந்த இளைஞர், போலீசார் மீதும், பொதுமக்கள் மீதும் கல்வீசித் தாக்கினார். இதனால் பொதுமக்கள் அவரைத் திருப்பித் தாக்கினர். இதைக் கண்ட போலீசார் அந்த நபரை பத்திரமாக சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் திருச்சியைச் சேர்ந்த ஜெயபாலன் (வயது 24) என்றும், எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவில் என்ஜினீயரிங் படித்துள்ள அவர், சென்னை தரமணி டைட்டல் பார்க்கில் உள்ள நிறுவனம் ஒன்றில் மாதம் ரூ.10,500 சம்பளத்தில் வேலை பார்த்ததாகவும், சென்னையின் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, வேலைக்கு போக முடியாததால் கம்பெனி நிர்வாகம் வேலை நீக்கம் செய்து விட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் தனது தோழிக்கும் வேலை போய் விட்டதாகவும், அவருடன் வேலை செய்த 300 பேரின் வேலை பறிபோனதாகவும், தங்களுக்கு 1 மாத சம்பளமும் கொடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்த அவர், வேலை இழந்த தங்களுக்கு மீண்டும் வேலை கேட்டும், 1 மாத சம்பள பாக்கி தொகையை கேட்டும், செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியதாகக் கூறினார்.
இருப்பினும், பொதுமக்கள் மீதும், போலீசார் மீதும் தாக்குதல் நடத்தியதால், ஜெயபாலன் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜெயபாலன் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படுவார் என்று கூறிய போலீஸார், ஜெயபாலன், மிகுந்த மன அழுத்தத்துடன் காணப்படுவதாகவும், இதனால் நீதிமன்றம் அனுமதித்தால், அவரை சிகிச்சைக்கு உட்படுத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறினர்.

