சிரியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஷியா புனித தளம் ஒன்றில் இன்று குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில் 45 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 110 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த குண்டு வெடிப்பில் முதல் சம்பவம் கார் குண்டு வெடித்ததில் ஏற்பட்டது. மற்ற இரண்டு சம்பவங்களும் தற்கொலை குண்டு வெடிப்புகளால் நிகழ்ந்தவை என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய ஒபன்: பட்டம் வென்றார் ஜோகோவிச்
ஆஸ்திரேலிய ஒபன் ஆண்கள் இறுதி போட்டியில் செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இறுதி போட்டியில் ஆண்டி முரேவை எதிர்த்து விளையாடிய ஜோகோவிச் , 6-1,7-5,7-6 என்ற செட்களில் வீழ்த்தி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இது அவர் பெறும் ஆறாவது ஆஸ்திரேலிய ஒபன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
குறைந்தது 2 பெண்களைத் திருமணம் செய்யுமாறு எரித்ரியா அரசு சொன்னதா?
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எரித்திரியாவில் உள்ள ஒவ்வொரு ஆணும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும், மீறினால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அந்நாடு அதிரடியாக அறிவித்துள்ளதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவியது. மேலும், இந்தத் திருமணத்திற்கு ஆகும் செலவுகள் மற்றும் புதிய வீடுகளில் குடியேறுவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கமே செலவு செய்யும் எனவும் அந்த அரசு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சோமாலிய இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது.
அரசின் இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கவும் வாய்ப்புள்ளதாக விடுக்கப்பட்ட எச்சரிக்கை அந்நாட்டில் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. எரித்ரியாவில் போரினால் ஆண்கள் பலர் உயிரிழந்துவிட்டதால், ஆண்களை விட பெண்களே அதிக எண்ணிக்கையில் இருப்பதால் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக காரணம் கூறப்பட்டிருந்தது.
ஆனால், இந்தச் செய்தியில் உண்மையில்லை என்று எரித்ரிய அரசு செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தியை வைரலாகப் பரப்பிய சமூக ஊடகத்துக்கு மெமோ கொடுத்துள்ள அரசு, இது ‘ஏப்ரல் ஃபூல்” போல் மக்களை முட்டாளாக்கும் கதை என்று தெரிவித்துள்ளது.
மேற்கண்ட போலி அரசு உத்தரவு அரபியில் எழுதப்பட்டிருந்ததாகவும், இது டிவிட்டரில் ஹேஷ் டேக் போட்டு வைரலாகப் பரவியதாகவும் கூறப்படுகிறது. சில நாட்களாக உலவிய இந்த உத்தரவை பலர் அச்சுப் பிரதி எடுத்து வைத்ததாகவும், ஏற்கெனவே வழக்கத்தில் உள்ள சட்ட நடைமுறையான இருதார மணத்துக்கு எதிர்மாறாக இந்த உத்தரவு உள்ளதாகவும் மக்கள் கூறினர். ஆனால், தற்போதும், எரித்ரியாவைச் சுற்றியுள்ள நாடுகளிலும், எரித்ரியாவிலும் இருதார மணம் என்பது, பல்வேறு சட்ட நடைமுறைகளுக்கும், உட்பிரிவுகளுக்கும் உட்பட்டு அமல் படுத்தப் படுகிறது என்றும், தற்போது வெளியான தகவல் வேண்டுமென்றே விஷமிகளால் உலவவிடப்பட்டதாகவும் அரசுத் தரப்பு தெளிவாக்கியுள்ளது.
நாட்டில் ஆண்களுக்கு பஞ்சமில்லை என்றும், ஆண் பெண் விகிதாசாரம் சரி சமமாகவே உள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ள எரித்ரியா அரசு, இது போல் ஏற்கெனவே 2012, 2013, 2015களில் மேற்கத்திய ஊடகங்கள் வதந்திகளைப் பரப்பியதாகவும், முக்கியமாக, டிவிட்டர் சமூக ஊடகம் இதில் முக்கியப் பங்காற்றியதாகவும் கூறியுள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதி மீது வழக்குரைஞர் பரபரப்பு குற்றச்சாட்டு: வாட்ஸ்ஆப்பில் வைரலாகப் பரவும் ஒலிப்பதிவு !
சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் பணியாற்றும் நீதியரசர் மீது பீட்டர் ரமேஷ் எனும் வழக்குரைஞர் பல்வேறு குற்றச்சாட்டுகளை ஒலிப்பதிவின் மூலம் கூறி அதை வாட்ஸ்ஆப்பில் வெளியிட்டுள்ளார். வழக்குரைஞர் பீட்டர் ரமேஷ் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு சம்பந்தமான செய்திகளை செய்தி ஊடகங்கள் வெளியிடகூடாது என்று செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களிடம் உயர் நீதிமன்ற நீதியரசர் கூறி மிரட்டல் விடுப்பதாக பீட்டர் ரமேஷ் ஒலிப்பதிவின் மூலம் கூறியுள்ளார். மேலும் அந்த ஒலிப்பதிவில் உயர் நீதிமன்ற நீதியரசர் மீது வழக்குரைஞர் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் கூறியுள்ளார். அந்த ஒலிப்பதிவு வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவருகிறது. வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவரும் அந்த ஒலிப்பதிவுடன் வழக்குரைஞர் பீட்டர் ரமேஷின் புகைப்படம் இணைக்கப்பட்ட காணொளியாக மற்றப்பட்டு இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா T-20: ஆஸ்திரேலிய அணியை ஒயிட் வாஸ் செய்தது இந்தியா
இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையே அடிலெய்டில் நடந்த 3-வது T-20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் மூன்று போட்டிகள் கொண்ட T-20 தொடரில் ஆஸ்திரேலிய அணியை ஒயிட் வாஸ் செய்துள்ளது. மேலும் T-20 தரவரிசையில் முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 197 ரன்கள் எடுத்தது. ஷேன் வாட்சன் 71 பந்துகளில் 124 ரன்கள் அடித்தார். 198 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை ஆஸ்திரேலியாவின் வாட்சனும், தொடர் நாயகன் விருதை இந்திய வீரர் கோலியும் வென்றனர்.
இளம் பெண்களுக்கு இணையம் வழி பயிற்சி அளித்து தற்கொலை படையாக மாற்றும் ஐஎஸ் !
ரூ.1.34 கோடி நூதனமாக ஏ.டி.எம்களில் கையாடல் செய்த 3 ஊழியர்கள் கைது !
கடம்போடுவாழ்வு கிராமத்தை சீரழிக்கும் கிரானைட் குவாரி
நாங்கள் திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி தாலுகாவின் கீழ் வரும் கடம்போடுவாழ்வு என்னும் கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்திலும் சுற்று வட்டார கிராமங்களிலும் பல நீர்நிலைகளும், பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறைக்கு சொந்தமான இடங்களும் உள்ளன. மேலும் நாங்குனேரி – களக்காடு சாலையும் எங்கள் கிரமத்தின் வழியாகவே செல்கிறது. கிரமத்தின் அருகில் பல பள்ளிகளும் உள்ளன.
எங்கள் கடம்போடுவாழ்வு கிராமத்தில் மதுரை மேலூரைச் சேர்ந்த P.S.கிரானைட் நிறுவனர் P.S.பெரியசாமி அம்பலம் என்பவர் நிலங்கள் வாங்கியுள்ளார், அதில் 9 ஏக்கர் நிலம் சாலையின் ஒருபுறமும் 7 ஏக்கர் நிலம் சாலையின் மறுபுறமும் உள்ளது.
கடந்த 26.01.2016 அன்று P.S.கிரானைட் நிறுவனர்கள் மேற்படி நிலங்ளில் பூமிபூஜை செய்து பொக்லைன் இயந்திரங்கள், குழி தோண்டும் இயந்திரங்கள் மற்றும் இராட்சத இயந்திரங்கள் மூலம் எங்கள் கிராமமும் சுற்று வட்டார கிராமங்களும் அதிரும் படி நிலத்தில் துளையிட்டனர்.
எங்கள் ஊரைச் சேர்ந்த மக்கள் சென்று கேட்கையில் நிலத்தில் 20 அடி அழத்தின் கீழ் தோண்டி கிரானைட் கற்கள் எடுக்கும் தொழில் செய்ய போவதாக கூறினார்கள். எங்கள் கிரமத்தில் தனியார் நிறுவனம் கிரானைட் குவாரி தொழில் தொடங்க போவதாக விளம்பரமோ அல்லது அரசு சார்பில் முன்னறிவிப்போ ஏதுவும் செய்யப்படவில்லை.
கிரானைட் குவாரி நடத்தும் இடத்தின் அருகில் கடம்போடுவாழ்வு குளம், புளியங்குளம், வடுகச்சிமதில் ஆலங்குளம் ஆகிய குளங்களின் தண்ணீர் ஓடை சென்று கொண்டிருக்கிறது. அந்த இடத்தை சுற்றி விவசாய நிலங்கள் நிரம்பி உள்ளன.
கிரானைட் குவாரியால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, விவசாய நிலங்கள் முற்றிலும் பாழ்பட்டு, விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு, கிராம மக்களின் வாழ்வாதாரம் முடங்கிப்போகும் பேராபத்து ஏற்படும்.
P.S. கிரானைட் நிறுவனத்தினர் எங்கள் கடம்போடுவாழ்வு கிரமத்தில் கிரானைட் குவாரி நடத்துவதற்காக மத்திய மாநில அரசுகளிடம் முறையான அனுமதியோ உரிமமோ பெற்றதாக தெரியவில்லை, சுற்றுச்சூழல் அமைச்சகத்திலும் முறையான அனுமதி பெற்றதாக தெரியவில்லை, தமிழ்நாடு கனிம வளத்துறையின் அனுமதியையும் பெற்றதாக தெரியவில்லை.
விதிமுறைகள் மீறி சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டு வரும் கிரானைட் குவாரிகள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் குடியிருப்புகள் நிறைந்துள்ள எங்கள் கடம்போடுவாழ்வு கிராமத்தில் P.S.கிரானைட் நிறுவனத்தினர் கிரானைட் குவாரி நடத்த எந்த விதத்தில் அரசு அதிகாரிகள் அனுமதி அளித்தார்கள் என்பது தெரியவில்லை.
மீனவர் மீதான துப்பாக்கிச் சூடில் இலங்கைப் படை மீது நடவடிக்கை தேவை: ராமதாஸ்
சென்னை:
தமிழக மீன்வர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டில் இலங்கைப் படையினர் மீது நடவடிக்கை தேவை என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:
வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மீது சிங்களப் படையினர் ரப்பர் குண்டுகளைக் கொண்டு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன்பிடி வலைகள் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த மீன்பிடி கருவிகளின் மதிப்பு பல லட்ச ரூபாய்க்கும் மேல் இருக்கும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, 9 மீனவர்களையும் சிங்களப் படையினர் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு சொந்தமான 2 விசைப்படகுகளையும் சிங்களப்படை பறிமுதல் செய்துள்ளது. இலங்கைப் படையினரின் இந்த வெறித்தனமான தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகள் சர்ச்சைக்குரிய கச்சத்தீவு பகுதியில் நடந்துள்ளன. புதுக்கோட்டை மீனவர்கள் மீதான இத்தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.
சிங்களப் படையினரால் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 104 மீனவர்கள் கடந்த வாரம் தான் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 66 விசைப்படகுகளை ஒப்படைக்க இலங்கை அரசு மறுத்துவிட்டது. அதுமட்டுமின்றி, அந்த படகுகளை இலங்கை மீனவர்களுக்கு வழங்கப்போவதாகவும் அறிவித்திருக்கிறது. 104 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட நிம்மதியை அனுபவிப்பதற்குள்ளாகவே கடந்த சில நாட்களுக்கு முன்பாக 6 மீனவர்களை அவர்களுக்கு சொந்தமான 2 படகுகளுடன் சிங்களப் படை கைது செய்தது. இப்போது மேலும் 9 மீனவர்களையும், அவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.
தமிழக மீனவர்களை கைது செய்து படகுகளை பிடித்து வைத்துக் கொள்வதும், ரப்பர் குண்டுகளால் துப்பாக்கிச்சூடு நடத்தி படகுகள் மற்றும் மீன்பிடி கருவிகளை சேதப்படுத்துவதும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை திட்டமிட்டு அழிக்கும் செயலாகும். இத்தகைய அட்டூழியம் தொடர அனுமதித்தால் தமிழக மீனவர்கள் மீன்பிடித் தொழிலை கைவிடும் நிலை ஏற்படும். மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்; தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும்; மீனவர்களைத் தாக்க கூடாது என்று இலங்கை அரசுக்கு இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வரும் போதிலும், இதுபோன்ற அத்துமீறல்களில் இலங்கை ஈடுபடுவது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் ஆகும்.
எனவே, தமிழக மீனவர்கள் மீதான அத்துமீறலை மத்திய அரசு இனியும் அனுமதிக்கக்கூடாது. தமிழக மீனவர்களிடம் அத்துமீறினால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும். இலங்கை சிறையில் வாடும் 15 மீனவர்களையும், 70 மீன்பிடி படகுகளையும் உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரையும் கை பற்றியது நியூசிலாந்து அணி
பாகிஸ்தான் – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே ஆக்லாந்தில் நடந்த 3-வது ஒரு நாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 47.3 ஓவர்களில் 290 ரன்கள் எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் 83 ரன்களும், மொஹமத் ஹபீஸ் 76 ரன்களும் அடித்தனர். நியூசிலாந்து பந்து வீச்சாளர்களில் மில்லன் 3 விக்கெட்டையும், போல்ட்(Boult), ஹென்றி இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஆண்டர்சன், சன்ட்னர் (Santner) இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைபற்றினர். 291 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய நியூசிலனது அணி 35.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்த நிலையில் மழை காரணமாக போட்டி தடை பட்டது. பின்னர் ஆட்டம் 43 ஓவராக குறைக்கப்பட்டது. 45 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி ஆட்டத்தை தொடர்ந்தது. 3 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அணி வெற்றி பெற்றது இரு அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட T-20 தொடரை நியூசிலாந்து அணி கைபற்றிய நிலையில் தற்போது ஒரு நாள் தொடரையும் கைபற்றியுள்ளது.

