Home Blog Page 5834

விஜயகாந் ‘த்தூ’ விவகாரம் : வழக்கு பதிவு செய்ய காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு !

 
சென்னையில் கடந்த டிசம்பர் 27-ம் தேதி பேட்டி அளித்த தே.மு.தி.க. தலைவர், செய்தியாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில், எதிர்கேள்வி கேட்டு துப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் எழுந்தது.
இந்நிலையில்,செய்தியாளர் ஜி.தேவராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் விஜயகாந்த் மீது வழக்கு தொடர்ந்தார் அவர் தனது மனுவில், விஜயகாந்த் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றும், வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த வழக்கு குறித்த விசாரணை இன்று நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயகாந்த் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க போதுமான ஆதாரங்கள் இருப்பதாக கூறிய நீதிபதி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இல்லை என்றால், இதுபற்றி புகார் தாரருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

அடுத்த ரவுண்ட் கொள்ளைக்காக ஆலாய்ப் பறக்கும் ஓட்டுப் பிச்சைக்காரர்கள்!

தமிழகத்தில் பெரும்பாலானோர் அரசியல் வாதிகள், அரசியல் கட்சியினர், , ஊடகங்கத்தினர், அரசாங்கம், போன்றவற்றின் செயல்பாடுகள் பிடிக்காமல் மிகுந்த வெறுப்பு அடைந்துள்ளனர்.
விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வெறுப்பு அடைந்துள்ளவர்கள் எவரையும் விட்டுவைக்காமல் அவர்களுக்கு எதிரான பல்வேறான பதிவுகளை சமூக ஊடகங்களின் அதிகமாக தற்போது பதிவிட தொடங்கி விட்டனர் என கூறினால் அது மிகையாகது.
இந்த நிலையில் புஷ்கின்-Pushkin எனும் முகனூல் குழுவின் பக்கத்தில் #‎அடுத்தரவுண்டு_கொள்ளைக்காக‬
‪#‎ஆலாய்பறக்கும்_ஓட்டுப்பொறுக்கிகள்‬ எனும் தலைப்பில் நேற்று( 29-01-2016 )பதிவிடப் பட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது :-
#‎அடுத்தரவுண்டு_கொள்ளைக்காக‬
‪#‎ஆலாய்பறக்கும்_ஓட்டுப்பொறுக்கிகள்‬
கடந்த 30,40ஆண்டுகளில் இல்லாத முறை,தேர்தலில் ஓராண்டுக்கு முன்பே “தேர்தல்பரபரப்பை” தொடங்கிவிட்டனர் ஊடகமும் அரசியல்வாதிகளும்.
கட்சிகளுக்கும் நடக்கும் அதிகார வெறி, பதவி அரிப்பு, பணவெறி போட்டி வெடித்துக் கிளம்புகிறது.
குதிரைப்பேரம், ஜாதி,கூட்டணிக் கணக்கு, கருப்புப்பணப் புழக்கம்
குழிபறிப்பால்தான் அந்த பரபரப்பு தெரிகிறது.
மக்களோ அன்றாடப் பொழப்புக்கு ஆளாகப் பறந்து கொண்டிருக்கிறார்கள்.அதுதான் இப்படி வெளிப்படுகிறது
பழ. கருப்பையா நீக்கம், நாஞ்சில் சம்பத் பீசைப் பிடுங்கியது,
தேமுதிகவிலிருந்து அதிமுக மாறிய 7பேர் புலம்புவது என வெடிக்கிறது.
சீட் கொடுக்க வேண்டியிருக்குமோ என பயந்து அதிமுகMLAவினர், தேமுதிக MLA7பேரிடம் 4மாதமாக யாரும் பேசவில்லை என புலம்புகிறார்கள்.
எல்லா ஜாதிகட்சிகளும் மாநாடு நடத்தி கட்சிகளை மிரட்டுகிறார்கள்.
ஆட்சியில் பங்கு வேண்டுமென்கிறார்கள்
பாமக ஒன்றரையாண்டுக்கு முன்பே முதல்வர் வேட்பாளராக தனது மகனை அறிவித்து தேர்தல் காமெடி ஷோவை தொடங்கினர்.
கூட்டணியில் பங்கு கேட்ட திருமா, EVKS கும்பல், இதெல்லாம் கதைக்காகாது என திருமா 3வது அணி கடையைத் திறந்துள்ளனர்.
காங்கிரசோ திமுக அழைப்புக்காக அறிவாலய படிகட்டில் படுத்துக் கிடக்கிறது
விலையைக் கூட்டுவதற்காக எல்லாருக்கும் கையைக் கொடுக்காமல், பல்லை மட்டும் இளித்தபடி பேரம் பேசும் விபச்சாரம் செய்கிறார் விஜயகாந்த்.
சரத்குமாரும், வேல்முருகன், தனியரசு, செ.கு தமிழரசு போன்ற அல்லக்கை அடிமைகள் நாங்கள் அதிமுகவோடுதான் இருக்கிறோம் என்று மாதம் ஒரு முறை தமிழக மக்களுக்கும் ஜெயாவுக்கும் நினைவூட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.
கதவு திறந்தே இருக்கிறது
மதவாத கட்சிகளைத் தவிர யார் வேண்டுமானாலும் கட்சிக்கு வரலாமென கூவிக்கூவி அழைத்த திமுக,
இப்போது ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள கட்சிகள் யாராக இருந்தாலும் வரலாமென பிஜேபி கட்சிக்கும் பொறி வைக்கிறார்.
தனியாக நிற்போம் என MPதேர்தலில் சவடால் அடித்த சாராய ராணி, இப்போது தேர்தல் நேரத்தில் தகுந்த முடிவெடுக்கப் படுமென வலை விரிக்கிறார்.
மதிமுகவிலிருந்து ஒவ்வொருவராக நழுவுகிறார்கள்,
தொண்டர்களோ கூட்டம்கூட்டமாக இடம் பெயர்கிறார்கள்.
சரத்குமார் கட்சியில் இருந்த 1MLAவும் ஓடிவிட்டார். கட்சியில் பலரை நீக்கியுள்ளார்.
நாங்கள் பிஜேபி கூட்டணியில் இல்லை ,3வது அணியும் ஜெயிக்கப் போவதில்லை அதிமுக,திமுக இரண்டில் ஏதாவதொன்றுதான் ஜெயிக்கும் என்று மறைமுகமாக தூதுவிடுகிறார் கொமஜக கட்சி ஈஸ்வரன்.
பச்சமுத்துவும்,வாசனும் அதிமுக பக்கம் போகவே ஆர்வம் காட்டுகிறார்கள்.
மீண்டும் கட்சியில் சேர அழகிரி முயற்சிக்கிறார்.
காங்கிரஸ் உடைந்து கொண்டே இருக்கிறது. இப்போது விஜயதரணி பிரச்சனை.
ஜவாகிருல்லா கட்சி உடைகிறது.
அவரும் ஜெயா பக்கம் போகத் துடிக்கிறது.
70முஸ்லீம் அமைப்புகள் அவர்களுக்குள் நடக்கும் நாய்சண்டை அது தனிக்கதை
7%அல்லது 10%இடஒதுக்கீடு தந்தால் பிஜேபியைக்கூட ஆதரிக்கத் தயார் என TNTJ கும்பல் அறிவிக்கிறது.
இன்னும் 2மாதத்தில் இன்னும் இதுபோல பல கூத்துகள் நடக்கவிருக்கிறது
பழைய MLA,MPகள், பதவியிலிருக்கும் MLA,MPகள் எப்படியாவது மீண்டும் சீட்டை வாங்கவேண்டும் எப்படியாவது ஜெயிக்க வேண்டும்.
இதில்லாமல் அவர்களது மனைவி,பிள்ளைகள்,பினாமிகளுக்கு சீட்டுக்காக நாயாய் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
மக்களுக்காக மக்களின் முன்னேற்றத்துக்காக நாட்டின் வளர்ச்சிக்காக பொதுச் சேவை செய்யவா இப்படி தேர்தலில் போட்டியிடத் துடிக்கிறார்கள்
கொஞ்சம்வாய் கொஞ்சம் பணம் போட்டு கோடிகோடியாக கொள்ளையடிக்கும் தொழிலாக அரசியல் ஆகிப்போனதன் அடையாளமே இந்த நிலை.
மக்கள் எல்லோர் மீதும் அவநம்பிக்கை, அதிருப்தியில் இருப்பதால் அது அரசியலில் தெரிகிறது.
எது ஜெயிக்கும் என்பதில் குழப்பமுள்ளதால்தான் மேற்கூறிய குழப்பங்களெல்லாம் எல்லாக் கட்சியிலும் நிகழ்கிறது.
இது முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியின் பிரதிபலிப்பே,அது அரசிலும் எதிரொலிக்கிறது.
இது முதலாளித்துவத்தை, ஏகாதிபத்தியத்தை,உலகமயத்தை காக்கும் இந்திய போலி ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட கடும் நெருக்கடிதான் இந்த நிலைக்கு காரணம்.
அரசு ஆளும்தகுதியை இழந்ததன் அறிகுறி.
நாட்டை உலகமயம் நேரடியாக ஆளத் தொடங்கியதால் தற்போதிருக்கும் அரசு நிர்வாகம் செயலிழந்து கொண்டிருக்கிறது.
பேச்சளவில்கூட கொள்கை கிடையாது கோட்பாடு கிடையாது,
ஜெயிப்பதற்காக ஜாதிபலம், மதவெறி,ரவுடிபலம்,
மாபியாக்கூட்டு
கருப்புப்பணம்,கேவமான சந்தர்ப்ப வாதம், பிழைப்புவாதம்
இதுதான் எல்லாக் கட்சிகளின் நிலைமையும் கூட. ஏறக்குறைய தொண்டர்களின் நிலவரம் இதுதான்.
கட்சியில் சேரு என்றால் என்னா கிடைக்கும்?
ஓட்டுப் போடு என்றால் எவ்வளவு கிடைக்கும் என்கிற அளவுக்கு மக்களையும் கெடுத்து விட்டனர்.
குறைந்த முதலீடு போட்டு கோடிகோடியாய் கொள்ளையடிக்கும் பிசினஸாக அரசியல், அதிகாரம்,பதவி மாறிப் போனதால் இது மக்களுக்கானதல்ல என்பதை மக்கள் உணர வேண்டும்.
MLAசீட்டின் தற்போதைய விலை 2கோடி 5கோடி.
அது போக 3மாத சரக்கு,பேனர்,கட்டவுட், பொதுக்கூட்டச் செலவு என 20கோடி வரை செலவாகும்.
அதாவது 50கோடி சொத்தும் அதில் 20கோடியாவது செலவு செய்யும் தகுதியுடையபணக்காரர்கள்,
பழைய ஜமீன், மன்னர்கள், முதலாளிகள், மாபியாக் கும்பல்களைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் தேர்தலில் நிற்க முடியும் வெற்றி பெற முடியும்.
ஆனால் சொல்லிக்கொள்வது இது ஜனநாயக நாடு.எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்.
யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம் என்பது.
நடைமுறையோ பணக்காரன் மட்டும்தான் போட்டியிடக்கூடிய நிலை.
தினம் 30ரூபாய் வருமானம் இல்லாத வறுமைக்கோட்டுக்கு கீழே மக்கள் வாழும் நாட்டில் 30கோடி செலவு செய்யும் தகுதியுள்ளவர்கள் மட்டுமே போட்டியிடும் நாட்டில்
எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்
இது ஜனநாயக நாடு, வாக்களிப்பது ஜனநாயகக் கடமை
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதெல்லாம் மக்களை ஏய்க்கும் ஜால வார்த்தைகள்தான். என்று புஷ்கின்-Pushkin எனும் முகனூல் குழுவின் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளது.
தற்போது ந்த பதிவு சமூக ஊடகங்களின் வைரலாக பரவி வருகிறது.

நடுஇரவில் எந்த விளக்கும் இன்றி பேட்டிங் செய்து ரன் அடிக்கும் திறமை பெற்றவர் கோலி: கவாஸ்கர் பாராட்டு

விராத் கோலியால் நடுஇரவில் எந்த விளக்கும் இன்றி பேட்டிங் செய்து ரன் அடிக்க முடியும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் கிரிக்கெட் தொடரில் விராத் கோலியின் ஆட்டம் சிறப்பாக உள்ளது. இன்று நடந்த 2-வது T-20 போட்டியில் அவர் வேகமாக விளையாடி அரை சதம் அடித்தார். அவரது ஆட்டம் எதிர்கால வீரர்களுக்கான இலக்கை அதிகரித்து கொண்டே போகிறது. கோலியால்  நடுஇரவில் எந்த விளக்கும் இன்றி பேட்டிங் செய்து ரன் அடிக்க முடியும்” என்றார். 

கதகளி படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி நீக்கம்!!

நடிகர் விஷால் நடித்த கதகளி என்ற திரைப்படம் பொங்கல் நாளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் சிறுபாண்மை சமுதாயத்தை இழிவுபடுத்தும் வண்ணம் வசனங்கள் அமைந்துள்ளதாகவும் அதை நீக்க வேண்டும் என்றும் கோரி தமிழ்நாடு வண்ணார் பேரவை பொது செயலாளரான கே.பி.மணிபாபா மதுரை ஐகோர்டு கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

மேலும் பல சிறுபான்மை அமைப்பினரும் விஷாலிடம் நேரடியாகவும், பிறர்மனம் புண்படும்படியாக உள்ள வசனங்களை நீக்க வேண்டும் என்று வேண்டுகோள்விடுத்தனர். அதனை தொடர்ந்து விஷால் தன்னிச்சையாகவே முன்வந்து திரைப்பட தணிக்கை அதிகாரிகளின் ஒப்புதலுடன் கதகளியிலுள்ள வில்லன் விஷாலிடம் பேசும் 2௦ நொடி நீளமுள்ள அந்த காட்சி நேற்று முதல் தியேட்டரில் நீக்கப்பட்டுவிட்டது.

சூர்யா, ஜோதிகாதான் எனக்கு பிடிக்கும்… சனியாதாரா

அழகு, திறமை இருந்தாலும் சினிமாவில் ஒரு பிரேக் கிடைக்க வேண்டும் என்பார்கள். அப்படி ஒரு பிரேக் வேண்டும் என்று ஒரு திருப்பு முனையான படத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறார் நடிகை சானியாதாரா. இவர் சுந்தரத் தெலுங்கு தேசத்திலிருந்து தமிழ்த்தேசம் வந்திருப்பவர். பிறந்தது ஹைதராபாத் என்றாலும் தமிழ் நன்றாகப் பேசுகிறார் இவருக்கு நல்ல திருப்பு முனை அமையாத காரணம், இவர் தமிழ் பேசக் கற்றுக் கொண்டது கூட காரணமாக இருக்குமோ? இவரிடம் நடிப்பாற்றல், நடனத் திறமை, அழகான தோற்றம், அணுக எளிமை அனைத்தும் இருக்கின்றன. குறையொன்றுமில்லைதான். கையில் சில படங்கள் இருக்கின்றன. ஆனாலும் நல்லதொரு திருப்பு முனைக்குக் காத்திருக்கிறார். யாரிந்த சானியா தாரா ? 2015-ல் வெளியான ‘ஜிகினா’ படத்தின் நாயகி, ‘வாராயோ வெண்ணிலாவே’ படத்தில் குட்டி கவிதையாக சின்ன பாத்திரத்திலும் கவர்ந்தவர். சுசீந்திரன் இயக்கிய ஜீவாவில்​ இன்னொரு நாயகியாக​ நடித்திருக்கிறார். இயற்பெயர் சானியா ஷேக், பிடித்த நடிகை நயன்தாரா என்பதாலோ என்னவோ எண் கணிதப்படி பெயரும் சானியாதாரா என்று அமைந்து விட்டது. சிறுவயதிலேயே சினிமா ஆர்வம். நடனம் கற்றார். சில விளம்பரப் படங்களில் நடித்தவருக்கு சினிமா வாய்ப்பு வரவே ​ சினிமாப் பக்கம் வந்து விட்டார். சானியாதாராவுக்கு என்னென்ன பிடிக்கும்? “நடிகர்களில் சூர்யா நடிகைகளில் ஜோதிகா பிடிக்கும். இந்தியில் ஹிருத்திக், ஐஸ்வர்யாராய் பிடிக்கும். இயக்குநர்களில் ராஜமௌலி, மணிரத்னம், ஷங்கர் என் ​ஃ​ பேவரைட். டிவி​ ​பார்ப்பது நடனம் ஆடுவது மட்டும் அல்ல எனக்குச் சமைக்கவும் பிடிக்கும்.” என்கிற இவர் ஒரு சிக்கன் பிரியையாம். சிக்கன் உணவு வகை என்று வந்து விட்டால் சிக்கனம் காட்ட மாட்டாராம். ஒரு பிடி பிடிப்பாராம். அது மட்டுமல்ல சிக்கன் அயிட்டங்களைச் சமைத்தும்கூட அசத்துவாராம். சானியாவுக்கு எப்படிப்பட்ட படங்கள் பிடிக்கும்? “பேய்ப்படங்கள் திகிலூட்டும் திரில்லர் படங்கள் எனக்கு பிடிக்கும். ‘சந்திரமுகி’ ஜோதிகா என்னை கலங்க வைத்தவர்” என்கிறார். ‘சானியாதாரா’ என்கிற பெயரில் இவருக்குப் பிடித்த நயன்தாரா பெயர் இருப்பதில் மகிழ்கிறார். தான் நய​ன்​ தாராவில் பாதி என்று இந்த வகையிலாவது மகிழ முடியும் அல்லவா? அழகு, திறமை இருந்தாலும் சானியாவுக்கு ஏன் சரியான படம் வரவில்லை? “எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வரவேண்டும் அது வந்துவி​ட்​டால் தடுத்தாலும் நிற்காது. வருகிற ஏனோதானோ படங்களில் நடிக்கலாம், வருஷம் முழுக்க படப்பிடிப்பு போகலாம். அதில் எனக்கு விருப்பமில்லை.​ அவசரமில்லை; சரியான படத்திற்காக காத்திருக்கிறேன்​.​ ​ இந்த சானியா’வின் திறமைக்குத் ‘தீனியா’ வரும் வாய்ப்புக்காக நல்ல பிரேக்கிற்காக காத்திருக்கிறேன்”. என்கிறார் நம்பிக்கையுடன்.

ஜெயலலிதா கோரிக்கை ஏற்பு: சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை பிப்.23க்கு ஒத்திவைப்பு

புதுதில்லி:

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 23-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்ற நீதிபதி பி.சி.கோஷ் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் வரும் பிப்.2 முதல் இறுதி விசாரணை நடக்கும் என உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை பிப்.23ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என ஜெயலலிதா தரப்பில் கோரப்பட்டது.

அந்த மனுவில், “அருணாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் நபம் துகி மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்துள்ள மனு பிப்ரவரி 1-ல் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு தொடர்பான உத்தரவின் தாக்கம் அடுத்த சில நாட்கள் நீதிமன்றத்தில் புதிய மனுக்கள் போன்ற வடிவில் எதிரொலிக்கலாம் என்பதால் சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்” என கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை வெள்ளிக் கிழமை இன்று விசாரித்த நீதிபதி பி.சி.கோஷ், ஜெயலலிதா தரப்பு கோரிக்கையை ஏற்று, வழக்கு விசாரணையை பிப்ரவரி 23-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளித்தது தி.மு.க அரசுதான்: அன்புமணி விளக்கம்

சென்னை:
இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளித்தது மத்திய அரசல்ல… தி.மு.க அரசுதான் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே 3 மாணவிகளின் மர்மசாவுக்கு காரணமான எஸ்.வி.எஸ் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்லூரிக்கு அனுமதி அளித்தது யார்? என்பது தொடர்பாக அடிப்படை ஆதாரம் இல்லாத தகவல்கள் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகின்றன. அவை அனைத்துமே இயற்கை மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி அளிக்கும் நடைமுறைகள் பற்றி எதுவும் அறியாதவர்களால் உள்நோக்கத்துடன் திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறு புகார்கள் ஆகும். அவை கண்டிக்கத்தக்கவை.

புதிய மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளிக்க வேண்டுமெனில் அந்த கல்லூரியை இந்திய மருத்துவக் குழு ஆய்வு செய்து மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு அறிக்கை அளிக்கும். அதன் அடிப்படையில் அக்கல்லூரிக்கு அனுமதி அளிப்பது குறித்து சுகாதார அமைச்சகம் முடிவு எடுக்கும். ஆயுர்வேதம், சித்தா, யுனானி போன்ற இந்திய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க வேன்டுமெனில் இந்திய மருத்துவத்துக்கான மத்தியக் குழுவும், ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியைத் தொடங்க வேண்டும் என்றால் ஹோமியோபதிக்கான மத்தியக் குழுவும் ஆய்வு செய்து ஆயுஷ் அமைச்சகத்திடம் அறிக்கை அளிக்கும். அதனடிப்படையில் அனுமதி அளிப்பது குறித்து அந்த அமைச்சகம் தீர்மானிக்கும். ஆனால், இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்லூரிகள் பெரிய அளவில் தொடங்கப்படவில்லை என்பதால் அவற்றை முறைப்படுத்த மத்திய அரசு இதுவரை எந்த அமைப்பையும் ஏற்படுத்தவில்லை. இந்த கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பதில் மத்திய அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. தமிழக அரசிடம் ஆட்சேபனையின்மை சான்றிதழ் பெற்று கல்லூரியை தொடங்கலாம். அதன்பின் தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்திடம் இணைப்பு நிலை (Affiliation) கோரி விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பித்தால் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அதிகாரிகள் குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும். அதனடிப்படையில் இணைப்பு நிலை குறித்து பல்கலை. முடிவெடுக்கும்.

தமிழ்நாட்டில் சென்னையில் ஓர் அரசு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்லூரியும், சேலம், கோவை, குலசேகரம், கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்களில் 4 தனியார் இயற்கை மருத்துவம் – யோகா கல்லூரிகளும் செயல்படுகின்றன. இவற்றில் கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் கல்லூரி தவிர மீதமுள்ள 4 கல்லூரிகளுக்கும் 1996-2001 தி.மு.க. ஆட்சிக்காலத்திலும், கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் கல்லூரிக்கு 2008 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியிலும் தான் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை இடங்கள் எத்தனை? என்பதை தீர்மானிப்பது, இந்த இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் மாநில சுகாதார அமைச்சகத்திடம் உள்ளன. இதற்கும் மத்திய சுகாதார அமைச்சகத்துக்கும் இடையே எந்த சம்பந்தமும் இல்லை. அவ்வாறு இருக்கும் போது அப்பாவி மாணவிகள் 3 பேரை பலி கொண்ட கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் கல்லூரிக்கு நான் அனுமதி அளித்ததாக சிந்திக்கும் திறனற்ற சில தலைவர்கள் கூறுவதையும், அதை சரிபார்க்காமல் கூட சில ஊடகங்கள் செய்தி வெளியிடுவதும் முறையா? என்பதை சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும். ஆறாவது அறிவு உள்ள எவரும் இப்படி ஒரு அவதூறு புகாரை என் மீது சுமத்த மாட்டார்கள். பா.ம.க. மீதும், என் மீதும் பொருளற்ற பகை கொண்டுள்ள சிலரால் மட்டுமே இப்படி அவதூறு பரப்ப முடியும். இதன் பிறகாவது அவதூறு பரப்பியவர்கள் தங்கள் மனசாட்சியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

2008-ஆம் ஆண்டில் எஸ்.வி.எஸ். கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்ட போது தமிழகத்தில் கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சி தான் நடைபெற்றது. எஸ்.வி.எஸ். கல்லூரிக்கு அனுமதி வழங்குவதற்கு முன்பு சுகாதாரத்துறையும், இணைப்பு நிலை வழங்கப்படுவதற்கு முன் பல்கலைக்கழகமும் சம்பந்தப்பட்ட கல்லூரியில் அடிப்படை வசதிகள் உள்ளனவா? என்பதை ஆய்வு செய்திருந்தால் அங்கு படித்த, படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்காது. எஸ்.வி.எஸ். கல்லூரியில் இப்போதே எந்த கட்டமைப்பு வசதியும் இல்லை எனும்போது 8 ஆண்டுகளுக்கு முன்பு நிச்சயமாக கட்டமைப்பு வசதிகள் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. அப்படியென்றால் அந்த கல்லூரிக்கு எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து அப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த கலைஞரும், நிழல் முதலமைச்சராக செயல்பட்ட மு.க. ஸ்டாலினும் தான் விளக்க வேண்டும்.

எஸ்.வி.எஸ். கல்லூரிக்கு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அளித்துள்ள தற்காலிக இணைப்பு நிலை ஓராண்டு மட்டுமே செல்லுபடியாகும். அதனால் ஒவ்வொரு ஆண்டும் அதை புதுப்பிக்க வேண்டும். முந்தைய தி.மு.க. ஆட்சியிலும், இப்போதைய அ.தி.மு.க. ஆட்சியிலும் பலமுறை இணைப்பு நிலை புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம் கல்லூரியில் அடிப்படை வசதிகள் உள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். முறைப்படி ஆய்வு செய்யப்பட்டிருந்தால் நிச்சயமாக கல்லூரிக்கு இணைப்பு நிலை புதுப்பிக்கப்பட்டிருக்க முடியாது. ஆனால், எவ்வாறு இணைப்பு நிலை புதுப்பிக்கப்பட்டு வருகிறது என்பது சுகாதார அமைச்சர்கள் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கே வெளிச்சம்.

அதுமட்டுமின்றி, முந்தைய ஆட்சியிலும், இப்போதைய ஆட்சியிலும் இந்த கல்லூரியின் குறைகள் குறித்து அரசுக்கும், பல்கலைக்கழகத்திற்கும் மாணவர்கள் தரப்பிலும், பெற்றோர் தரப்பிலும் பலமுறை புகார் மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றின் மீது கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சில மாதங்களுக்கு முன் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்திய போது கூட மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டு கல்லூரியில் அடிப்படை வசதிகள் கூட இல்லை என அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. ஆனாலும், அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மோசடி கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கவிடாமல் எந்த சக்தி தடுத்தது என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும்.

எந்தவித கட்டமைப்பு வசதியும் இல்லாத எஸ்.வி.ஆர் கல்லூரிக்கு அனுமதி அளித்த முந்தைய தி.மு.க. அரசும், அக்கல்லூரிக்கு கடந்த 5 ஆண்டுகளாக பாதுகாப்பு அளித்து வரும் அ.தி.மு.க. அரசும் தான் 3 மாணவிகளின் சாவுக்கு பொறுப்பேற்க வேண்டும். மோசடி கல்லூரிக்கு துணை போன அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீதும் உடனடியாக வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும்.

ரஜினிமுருகன் – திரை விமர்சனம்

பல மாசங்களுக்கு பிறகு வியாழன் (14.01.2016) அன்று இரவு முதல் நாள் காட்சி இந்த படத்தை என் இனிய நண்பர்கள் அன்பின் அழைப்பினால் காணப்பெற்றேன் ..

மதுரை புகழ் பாடும் பாடலுடன் டைட்டில் … முதல் காட்சி .. பாய்ந்து வரும் லாரி மற்றும் காருடன் பாலத்தின் நடுவில் நின்று கொண்டு …ஆட்களை ஏற்றி கொல்ல பணம் அளிக்கும் ஏழரை மூக்கனாக வில்லனாக மிரட்டும் சமுத்திரக்கனி!!

வீட்டை விற்று எல்லா புள்ளைகளுக்கு சொத்தை குடுக்க துடிக்கும் தாத்தாவாக அயங்க்காளை…ராஜ்கிரண் … இவரின் பேரன் சிவகார்த்திகேயன் … ரஜினி முருகன் .. அவரின் ஒரே வேலை தாதாவுக்கு மூணு வேலை சாப்பாடு கொண்டுவந்து கொடுப்பது .. அப்பறம் பொண்ணுங்களை சுற்றுவது.. அண்ணன் அமெரிக்காவில் இருந்து அனுப்பிய பணத்தை நலசங்க விழாவிற்கு மொய் வைத்து பெயர் வாங்கி விட்டு நண்பன் சூரியுடன் டான்ஸ் ஆடுவது

சூரி ..எப்போதும் போல ஆங்கில அறிவு குறைவான (அதையே எல்லா படத்திலும் வைத்திருப்பது) காட்சி அமைப்புடன் நடிப்பது அலுப்பு தட்டுகிறது..

கதாநாயகி …கீர்த்தி சுரேஷ் .. அன்றைய கால மேனகா (தலைவர் ரஜினி கூட நெற்றிக்கண் படத்தில் நடித்தவர் ) மகள் .. அவரை போலவே ஒரு பாந்தமான முகம் .. மதுரை என்பதால் படம் முழுதும் பாவாடை தாவணியில் வருகிறார்.. ..

மாட்டுத்தாவணி என்கிற பஸ்ஸ்டான்ட் மட்டும் மதுரையில் இருக்கு, அங்கே யாரு இப்போ இப்படி எப்போதும் தாவணி போட்டு கிட்டு இருக்காங்க என்று தெரியவில்லை !!

கதைகளம் வீட்டை விற்க பார்க்கும் தாத்தாவிற்கு கொடச்சல் குடுக்கும் வில்லன் ஏழரை மூக்கன் மற்றும் அவனை சமாளிக்கும் முருகன் ..

சிவகார்த்திகேயன் பாத்திரத்தை .. ஒரு சூப்பர் ஹீரோ போன்று ஒரே அடியில் ஆளுங்க வானத்தில் பறப்பது போல காட்டாமல் .. வீரமுள்ளவனாக எதார்த்தமாக, அப்பப்ப பயந்து இருப்பது போல காட்டி இருப்பது சிறப்பு ..

கதாநாயகிக்கு நிறைய வேலை இல்லை ..எல்லா காட்சியிலும் தாவணியில் வந்து.. சில க்ளோசப் காட்சிகளில் காமெராவை பார்த்துகிட்டே நடங்க என்று சொல்லி விட்டாங்க ..

மிக சிறந்த வில்லன் நடிப்பு சமுத்திரக்கனி ..

உடல் அமைப்பிலே அந்த கெத்து மற்றும் மிரட்டல் ..(வார்த்தையில் சவுண்ட் விட்டு நடிக்கும் நடிகர்கள் மத்தியில் இது புதுமை .. ) பஞ்சாயத்தில் இரக்கத்தை சம்பாரிக்க கண்ணீர் விட்டு பேசும் காட்சி அவரின் பல பரிமானங்கள் ஸ்டாக் இருப்பதை சொல்லுது ..

காட்சி அமைப்புகளில் .. கதாநாயகி வீட்டு வாசலில் காலையில் இருந்து மாலை வரை நிற்கும் காட்சிகள் .ஆமாம் whatsapp காலத்தில் இது என்ன மடமை ???

ஒரு பிளாஸ்பேக் ..

கதாநாயகனுக்கு பேர் வச்சதே கதாநாயகியின் தந்தை .. அவர் கதாநாயகனின் தந்தையின் உயிர் தோழன் .. சிறிய சண்டையில் அவர்கள் பிரிவால் .. என்று ஒரு ட்விஸ்ட் !!

படத்தில் நகைச்சுவை காட்சி.. ஆடி காரை வைத்து சிவாவும் சூரியும் செய்வதுதான் .. 200 ரூபாய் கடன் குடுக்க முடியாத டீ கடைகாரரிடம் ஷோரூம் இருந்து டெஸ்ட் டிரைவ் வண்டியை எடுத்துகிட்டு … அப்பா வந்த “ஆடி காரில் ஆராம்பாலயம் நான் போய் இருக்கேன் என்று சொல்லு “ என்கிற இடம் ..

கதாநாயகி வீட்டு வாசலில் ஒரு டீ கடை போட்டுக்கிட்டு அங்கிருந்து சினிமா பாடல் போட்டு (“மாமா உன் பொண்ணை கொடு) .. அசத்துவது .. அடிவாங்குவது ..

பாடல் மற்றும் பின்னணி இசை ..இமான் …

டைட்டிலில் ஓடும் மதுரை பற்றி ரெண்டு வரி பாடலில் தெரிந்து விடுகிறது .. அவரின் உழைப்பு .. அருமை ..

ரஜினி முருகன் ..கன் கன் .. பாடல் மற்றும் ..

என்னமா இப்படி பண்ணிரீறேன்களே மா!!…

பாடல்கள் படம் வரும் முன்னே சூப்பர் ஹிட் .. ஆமாம் ஏப்ரல் 2015 முடிஞ்சு ,, வெள்ளத்தாலே டிசம்பர் மாசம் இல்லாமல் 2016 பொங்கலுக்கு வந்தா??

ஏலா ஏலா .. என்று கதாநாயகனும் கதாநாயகியும் மன ஓட்டத்தை காட்டும் காட்சிகளில் ஒரு கிராமத்து இசை ஓடி மனதை கொள்ளை கொள்கிறது பின்னணி இசை !!

பாலசுப்ரமணியம் கேமரா ..

நல்ல ரிச்சா மதுரையை காண்பித்து இருக்கிறார் .. டைட்டில் கார்ட் புதுமையாக ப்ரீஸ் ஆனா படங்கள் த்ரீ டீ போல நகர்வது புதுமை .. மதுரை வீதிகளில் சிவகார்த்திகேயனை வைத்து படம் இரவில்தான் எடுக்க முடியும் என்பதால்.. உறங்காத அந்த நகரை இரவில் வெளிச்சம்போட்டு பாடல் காட்சிகள் எடுத்து இருக்கிறார் !!

ஒரு தனி நீதி பரிப்பாலனம் போன்று கிராமப்புற பஞ்சாயத்து பண்ணுவது பற்றி சொல்லி இருப்பது .. அதற்கு தனியாக காசு குடுத்த லாயர் மாறி பேசுவதற்கு ஆட்கள் இருப்பது பற்றி அழகாக நகைப்பாகவும் சொல்லிருப்பது அருமை ..

ரெண்டு முறை பஞ்சயாத்து ஆட்கள் பேசியும் சண்டை போட்டு ராஜ்கிரண் பட்டாப்பட்டி டவ்செர் தெரிய ஆள்கள் நெஞ்சில் உதைத்து .. அட போடா இந்த நீ குடுத்த லக்ஷம ரூபாய் என்று அவனிடம் கடைசியா குடுத்துதான் விரட்டி விட .. வில்லனை வென்று …

இது முன்பே சிவகார்த்திகேயன் நடித்த “வருத்தபடாத வாலிபர் சங்கம்” இரண்டாம் பாகம் என்பதாக சொல்லி முடித்து ..

பொங்கலுக்கு பாவாடை தாவணி போட்ட பொண்ணை அழகா காட்டி இருக்கிறார் (என் பழைய நினைவுகளை தூண்டிவிட்டது ..ம்ம்..ஸ் ).. .. கலகலப்பான காமடி இருக்கு .. முக்கியமாக வன்முறை இல்லை .. நிச்சியமாக அனைவரும் பார்க்கலாம் ..

விமர்சனம்: விஜயராகவன் கிருஷ்ணன்

வியாபாரியிடம் 123 பவுன் நகை, ரூ.25 லட்சம் பணம் கொள்ளை: முகமூடி கும்பல் கைது

திட்டக்குடி:

திட்டக்குடி அருகே நகைக்கடை வியாபாரியை வழிமறித்து 123 பவுன் நகை மற்றும் ரூ.25 லட்சத்து ஆயிரத்து 50 ரொக்கத்தை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர். இவ்வழக்கில் பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸார் இதுகுறித்து தெரிவித்ததாவது:

விழுப்புரம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 59). மொத்த நகை வியாபாரம் செய்து வரும் இவர் விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள நகை வியாபாரிகளுக்கு நகைகளை விற்பனை செய்வது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் ஜெயராமன் தனது காரில் விருத்தாசலம், பெண்ணாடம், திட்டக்குடி பகுதிகளில் உள்ள நகைக்கடைகளுக்கு சென்று நகைகளை வழங்கினார். பின்னர், மீதமுள்ள 123 பவுன் நகைகள் மற்றும் கடைகளில் வசூலித்த ரூ.25 லட்சத்து ஆயிரத்து 50 ரொக்கத்துடன் விழுப்புரம் நோக்கி காரில் புறப்பட்டார். காரை திருக்கோவிலூர் அருகே உள்ள டி.எடையார் பகுதியை தயாளன் மகன் ஜெய்ஹிந்த் (22) என்பவர் காரை ஓட்டிச் சென்றார்.

ராமநத்தத்தை அடுத்துள்ள அரங்கூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் இருந்து வேகமாக வந்த மற்றொரு கார் ஜெயராமன் சென்ற காரை முந்தி சென்று வழிமறித்து சாலையில் நின்றது. இதில் ஜெய்ஹிந்த் காரை உடனடியாக நிறுத்தினார்.

இந்நிலையில், முகமூடி அணிந்து 6 பேர் மற்றொரு காரில் இருந்து இறங்கினர். மேலும் அவர்கள் கையில் இரும்பு கம்பி, கத்தி போன்ற ஆயுதங்கள் வைத்திருந்தனர். இதில் நிலைகுலைந்து நின்ற ஜெயராமன் சற்றும் எதிர்பாராத நேரத்தில், அவர்கள் காரின் முன்பகுதியை சேதப்படுத்தி காரில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது ஜெயராமன், சதீஷ் ஆகிய 2 பேரும் அவர்களை தடுத்தனர். ஆனால் அந்த கும்பல் அவர்களை தாக்கிவிட்டு காரில் இருந்த 123 பவுன் நகை, ரூ.25 லட்சத்து ஆயிரத்து 50 ரொக்கத்தை கொள்ளையடித்துக் கொண்டு காரில் தப்பினர்.

இது குறித்து ஜெயராமன் ராமநத்தம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் நிலையங்களுக்கும், சென்னை– திருச்சி தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து ரோந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இதனிடையே திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் தலைமையிலான போலீசார் சிறுபாக்கம்–சேலம் சாலையில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, போலீசாரின் வாகனத்தை பார்த்தவுடன் ஒரு கார் வேகமாக சென்றது. இதில் சந்தேகமடைந்த போலீசார் அந்த காரை பின்தொடர்ந்தனர். சினிமா பாணியில் அந்த காரை போலீசார் துரத்தி சென்று மடக்கினர்.

அப்போது, காரில் இருந்து தப்பி ஓட முயன்ற 6 பேரையும் போலீசார் கையும், களவுமாக பிடித்தனர். தொடர்ந்து போலீசார் காரை சோதனை செய்த போது, காரில் ஜெயராமனிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் நகை, பணத்தையும், கொள்ளையர்கள் வந்த காரையும் கைப்பற்றினர். தொடர்ந்து, பிடிபட்ட 6 பேரையும் போலீசார் திட்டக்குடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் விழுப்புரம் கோலியனூர் காலனியை சேர்ந்தவர்கள் கந்தன் (27), அன்பழகன் (23), ஆனந்த் (25), ஜெயராமன் (25), கடலூர் பழைய நகரை சேர்ந்த திலிபன் (27), தேவனாம்பட்டினத்தை சேர்ந்தவர் ஆனந்த் (24) என்பது தெரியவந்தது.

போலீஸாரின் விசாரணையில் மேலும் சில தகவல்கள் தெரியவந்தன.

விழுப்புரம் நகை வியாபாரி ஜெயராமனிடம் பல ஆண்டுகளாக அன்பழகன் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். சமீபத்தில் வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வேலையை விட்டு நின்று விட்டார். இந்த நிலையில், அன்பழகன் பணம், நகையை கொள்ளையடிக்க திட்டமிட்டு, அவருக்கு உதவியாக நண்பர்கள் 5 பேரையும் ஒன்று சேர்த்துள்ளார்.

இந்த நிலையில், ஜெயராமன் நேற்று முன்தினம் விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டார். இதைநோட்டமிட்ட அன்பழகன் தனது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து ஒரு வாடகை காரில் ஜெயராமனை பின்தொடர்ந்து வந்தனர். இரவு 11.30 மணி அளவில் நகை கடைகளில் வசூலை முடித்துவிட்டு ராமநத்தம் அருகே சென்ற ஜெயராமன் காரை அவர்கள் வழிமறித்து தாக்கி பணம், நகையை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிடிப்பட்ட 6 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த 2 மணி நேரத்தில் கொள்ளையர்களை பிடித்த போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பாராட்டினார்.

மாணவர்களே தற்கொலை எண்ணத்தைக் கைவிடுங்கள்; பிரச்னைகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்: கருணாநிதி

 

சென்னை:

மாணவர்கள் தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும். உங்கள் கோரிக்கைகளை என்னிடம் கூறிவிட்டு, படிப்பை தொடருங்கள் என்று கருணாநிதி அறிவுரை கூறியுள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. ஆட்சியில் குற்றங்கள் குறைந்துவிட்டதாகவும், தமிழகம் அமைதிப் பூங்காவாக நடைபோடுகிறது என்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறிய போதிலும், கொலை நடக்காத, கொள்ளைகள் நடக்காத நாளே தமிழகத்தில் கிடையாது. குறிப்பாக இந்த ஆட்சியில் தற்கொலைச் செய்திகள் என்பது வந்து கொண்டே இருக்கிறது.

திருவாரூரைச் சேர்ந்த பிரியங்கா என்ற மாணவி விழுப்புரம் கல்லூரியில் தற்கொலை செய்து கொண்டு மறைந்த அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு, அந்த மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.1 லட்சம் நிதியினை நான் அந்த பெண்ணின் தாயாரிடம் வழங்கிய போது, அந்தப் பெண்மணி என் கையைப் பிடித்துக்கொண்டு, ‘‘அய்யா எனக்கு என் பெண் வேண்டும், எனக்கு நீதி வேண்டும்’’ என்று கூறி கதறிய அந்தக் காட்சி தான் இன்னமும் என் நினைவில் ஓடுகிறது. அந்தப் பெண்மணிக்கு என்னால் அங்கே பதில் கூற முடியவில்லை.

மாணவிகள் தற்கொலை தான் செய்து கொண்டார்களா? அல்லது கொலை செய்யப்பட்டு கிணற்றிலே வீசப்பட்டார்களா? அதைக் கண்டுபிடிக்க முறையான சட்டப்படியான ஒரு நீதி விசாரணையை நடத்த இந்த அரசு முன் வராததற்கு என்ன காரணம்?

கடந்த ஆண்டு எத்தனை தற்கொலைகள்? மாணவிகள் மட்டுமல்ல. அரசில் பணியாற்றிய முத்துக்குமாரசாமி என்ற மூத்த அதிகாரி, ரெயில் முன் விழுந்து மாண்டு போனாரே? கண்துடைப்புக்காக அ.தி.மு.க. அரசு ஒரு அமைச்சரைக் கைது செய்து வழக்குப் போட்டதே தவிர, அந்த வழக்கு எந்தக் குப்பைக் கூடையிலே கிடக்கிறது?. விஷ்ணுப்பிரியா என்ற காவல்துறை அதிகாரி, தற்கொலை செய்து கொண்டு மாண்டு போனாரே, என்னவாயிற்று அந்த வழக்கு? எங்கே துங்குகிறது?.

2014-ம் ஆண்டு மொத்த தற்கொலை என்ற கணக்கைப் பார்த்தால், இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்திலும், மகாராஷ்டிரம் 2-வது இடத்திலும், மேற்கு வங்கம் 3-வது இடத்திலும் இருந்திருக்கிறது.

மாணவச் செல்வங்களே உங்களை நம்பி இந்த நாடு மட்டுமல்ல. உங்கள் பெற்றோர், உங்கள் குடும்பத்தினர், உங்கள் சகோதர-சகோதரிகள் இருக்கிறார்கள்.

நீங்கள் படித்து முடித்து, அவர்களையெல்லாம் வாழ வைப்பீர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையை தயவு செய்து நீங்கள் தகர்த்து விடாதீர்கள்.

தமிழகத்திலே உள்ள மாணவச் செல்வங்களையெல்லாம் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் கோரிக்கைகளை எல்லாம் என்னிடம் கூறிவிட்டு, நீங்கள் உங்களது படிப்பைத் தொடருங்கள். தமிழகத்திலே இனிமேல் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற செய்தி வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மாணவர்களைப் போலவே தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் குடும்பத்தினரின் வருங்காலத்தை எண்ணிப் பார்த்து தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை கை விட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.