Home Blog Page 5984

பிரபல சினிமா இயக்குநர் கவுதம் மேனன் நடிகராகிறார்

பிரபல சினிமா இயக்குநர் கவுதம் மேனன் ஒரு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் மலையாளப் படவுலகில் நடிக்கவிருக்கிறார்.

மலையாளப் படவுலகில்.வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவரான வினித் சீனிவாசன் இயக்கும் ஜாக்கோபிண்டே ஸ்வர்கராஜ்ஜியம் படத்தில் கவுதம் மேனன் நடிக்கிறார்.
இப்படத்தில் நிவின்பாலி மற்றும் கவுதம் மேனனுடன் இணைந்து ,சாய்குமார், லட்சுமி ராமகிருஷ்ணன், ஸ்ரீநாத் பாசி உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர்.

மலையாளத்தில் சினிமா இயக்குநர் கெளதம் நடிக்கவிருக்கும் முதல் படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கான அறிவிப்பை வினித் எழுதி புகைப்படம் எடுத்து அவருடைய முகனூல் பக்கத்தில்வெளியிட்டிருக்கிறார்.

கவுதம் மேனன் நடிக்கவிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகி வருகிறது. 2016ம் வருடம் கோடை விடுமுறைக்குள் படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கலாம் .

 

தீபாவளி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவெளி மாநில 600 மது பாட்டில்கள் பறிமுதல் : 2 பேர் கைது

திருச்சி மாவட்டத்தில் பல பகுதிகளில் வெளி மாநில மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக கடந்த வெகு நாட்களாக மாநகர காவல் ஆணையர் சஞ்சய்மாத்தூருக்கு ஏராளமான புகார்கள் சென்றது.

இதையடுத்து மது விலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மயில் சாமி தலைமையில் இரவு நேரங்களில் வாகனங்களில் மது பாட்டில்கள் கடத்தப்படுகிறதா? மேலும் வேறு எங்காவது பதுக்கி வைத்து விற்கப்படுகிறதா? என்று தீவிர சோதனை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு மதுவிலக்கு காவல்துறை ஆய்வாளர் மயில்சாமி தலைமையில் போலீசார் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பட்டவர்த் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த சோமரசம் பேட்டை சீரா தோப்பு பகுதியை சேர்ந்த சிவசங்கரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர் வந்த இரு சக்கர வாகனத்தை சோதனை செய்த போது அதில் மறைத்து வைத்து மது பாட்டில்களை கடத்தி கொண்டு வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் பேரில் அந்த பகுதியில் உள்ள ஒரு அறையில் தீபாவளி விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 750 மி.லி கொள்ளளவு கொண்ட 600 கர்நாடக மாநில மது பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் அந்த மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த அருள்முருகன், கணேசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உண்டா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி காவல்துறையினர் வருகிறார்கள்.

ஆம்னி பஸ் கவிழ்ந்து சிறுமி பலி : 15 பேர் படுகாயம்

 

இன்று அதிகாலை 4.30 மணி அளவில் செஞ்சி அருகே உள்ள பாலப்பட்டு பகுதியில் வந்தபோது,ஆம்னி பஸ் பஸ் திடீரென நிலை தடுமாறி கவிழ்ந்தது.

இதில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பெங்களூரை சேர்ந்த ஜீவிதா (4) என்ற சிறுமி பஸ்சின் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

அவரது தாயார், நிகிலா (39), தந்தை சுரேஷ் பாபு (45)
அக்கா மணிஷியா (8) மற்றும் பயணிகள் தனபால் (25), அய்யப்பன் (27), சர்மா (25), பஸ் டிரைவர்கள் சேகர், சந்திரசேகர் உள்பட 15 பேர் படுகாயமடைந்தனர்.

பெங்களூரில் இருந்து புதுவைக்கு நேற்று இரவு 11 மணி அளவில் படுக்கை வசதிகளுடன் கூடிய ஆம்னி சொகுசு பஸ் புறப்பட்டது. அதில் 31 பயணிகள் பயணம் செய்தனர். திருவண்ணாமலையை அடுத்த காஞ்சியை சேர்ந்த டிரைவர் சத்தியசேகர் (வயது 38) பஸ்சை ஓட்டினார்.

இன்று அதிகாலையில் திருவண்ணாமலை வந்தவுடன் சந்திரசேகர் பஸ்சை நிறுத்தி ஓய்வெடுத்தார். எனவே, மாற்று டிரைவரான செங்கத்தை சேர்ந்த சேகர் (41) பஸ்சை ஓட்டினார்.

விபத்தை அறிந்ததும் அந்த வழியாக வாகனத்தில் வந்த சிலர் நல்லான்பிள்ளை பெற்றாள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே காவல் துறையினர் விரைந்து வந்தனர். விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு செஞ்சி, திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக காயமடைந்தவர்களில் பலர் புதுவை ஜிப்மர் மற்றும் சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சிறுமி ஜீவிதாவின் உடலை காவல் துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.சிறுமி ஜீவிதா தனது பெற்றோர் மற்றும் சகோதரியுடன் சேர்ந்து புதுவைக்கு சுற்றிப்பார்க்க பஸ்சில் பயணம் செய்த போது விபத்தில் சிக்கி குடும்பத்தினர் கண்முன்பு பலியானது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

விபத்தால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் பாதித்திருந்த போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.விபத்து குறித்து நல்லான் பிள்ளைபெற்றாள் காவல் நிலையத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேவர் குருபூஜையை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை

 தேவர் குருபூஜையை முன்னிட்டு, இன்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கோடநாடு முகாம் அலுவலகத்தில் உள்ள தேவர் படத்திற்கு மலர் தூவி முதல்வர் ஜெயலலிதா மரியாதை செலுத்தினார்.இருவருடன் அமைச்சர்களும் மலர் தூவி மரியாதை செய்தனர்.

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திலும், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அனிவித்தும்பலர், மலர் வளையம் வைத்தும் மரியாதை மரியாதை செலுத்தினார்கள்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தமிழகத்தின் போற்றத்தக்கத் தலைவர்களில் ஒருவர் ஆவார். இந்திய விடுதலைக்கு போராடிய நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பியதில் தொடங்கி தலித்துகளின் ஆலய நுழைவுக்கு உதவியது& நிலம் வழங்கியது என பல நன்மைகளை செய்துள்ளார். தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடியது, தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என முழங்கியது என ஏராளமான சிறப்புகளுக்கு சொந்தக்காரராக அவர் திகழ்கிறார். அவரது சிறப்பை போற்றும் வகையில் தான் ஆண்டு தோறும் தேவர் குருபூஜை அரசு நிகழ்வாக நடத்தப்பட்டு வருகிறது.

பசும்பொன்னில் நடைபெறும் 53-வது தேவர் குருபூஜையை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அசம்பாவிதங்களை தடுக்க பசும்பொன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அக்டோபர் 31-ம் தேதி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு உள்ளதால் தேவர் குருபூஜை விழாவில் கலந்துகொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது.

.

தேவர் நினைவு இடம் பசும்பொன்னில் ரூ.5 கோடி செலவில் அன்னதான மண்டபம் ஏற்பாடு : மருத்துவர் சேதுராமன்

 

தேவர் நினைவிடம் பசும்பொன்னில் 08–வது தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக நிரந்தர அன்னதான மண்டபம் ரூ.5 கோடி செலவில் கட்டப்படுகிறது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று 30–ந் தேதி நடைபெறுகிறது.இந்த நிகழ்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மூவேந்தர் முன்னணி கழக நிறுவனர் மருத்துவர் சேதுராமன் அழைப்பிதழ் அனுப்பி உள்ளார்.

இதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்தி செய்தி அனுப்பி உள்ளதாகவும், 7 அமைச்சர்கள் விழாவில் பங்கேற்க இருப்பதாகவும்மருத்துவர் சேதுராமன் கூறினார்.

தேவர் ஜெயந்தி அன்னதான விழாவில் 50 ஆயிரம் பேருக்கு நெய், பாயாசம், அப்பளத்துடன் அன்னதானம் வழங்கப்படுகிறது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை மூவேந்தர் முன்னணி கழகத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ஆர்.தேவர், பொருளாளர் செந்தில், இணைப் பொதுச் செயலாளர் இரா.பிரபு, வைகை பத்மநாபன், கழுவன், வி.பி.பாண்டியன், குருசாமி, பகவதி, துரைசிங்கம் மற்றும்  செய்தி தொடர்பாளர் மருத்துவ எஸ்.மனோகரன் முன்னின்று செய்து வருகின்றனர். என மருத்துவர் சேதுராமன் வெளிட்யிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மாணவியின் ஆபாச படம் பேஸ்புக்கில் வெளியானதால் மாணவி தற்கொலை: மாணவன் கைது

 

மும்பையில் 10ம் வகுப்பு மாணவியின் ஆபாச படம் பேஸ்புக்கில் ஆபாச படம் வெளியானதால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆபாச படத்தை வெளியிட்டதாக அம்மாணவியின் சக வகுப்பு மாணவனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

மும்பை நகர் மிரா சாலையை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவரை, அவருடைய வகுப்பில் படிக்கும் மாணவர் ஒருவர் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் சக மாணவனை அழைத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.

அதனால்அந்த மாணவர் மாணவி மீது கோபத்தில் இருந்துள்ளார். மாணவியைப் பழி வாங்கும் விதத்தில் போலி பேஸ்புக் பக்கத்தைத் துவக்கிய மாணவர், அந்த பக்கத்தை பயன்படுத்திஅந்த மாணவி குறித்து ஆபாசமான படங்களை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அறிய வந்த அந்தமாணவி, அவமானம் தாங்காமல் தனது குடியிருப்பு கட்டிடத்தின் 7-வது மாடியில் இருந்து கீழே குதித்து கடந்த 20-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அந்தமாணவனின் செல்போன், கம்யூட்டர் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றி போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்

இந்நிலையில், மாணவியின் தற்கொலைக்கு காரணமாக இருந்த மாணவனின் செல்போன், கம்யூட்டர் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றி போலீசார் ஆராய்ந்து வருகின்றனர் மாணவனை மும்பை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கைது செய்யப்பட்ட மாணவனை இளம் சிறார் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அந்த மாணவனை காவல் துறையினர் மும்பை இளம் சிறார் சிறையில்அடைத்தனர்.

 

பிரபல தமிழ் சினிமா நடிகர் விவேக்கின் மகன் பிரசன்ன குமார் மரணம்

  பிரபல தமிழ் சினிமா நடிகர் விவேக் பல படங்களில் காமெடி, குணச்சித்திரம் உள்ளிட்ட பல வேடங்களில் நடித்துள்ளார், நடித்தும் வருகிறார்.

இந்நிலையில், விவேக்கின் மகன் பிரசன்ன குமார்(13) இன்று மூளைக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.

சமீபத்தில்தான் விவேக்கின் அப்பா காலமானார். அந்த சோகம் மறைவதற்குள்ளாகவே விவேக்கின் மகனும் இறந்தது, அவரது குடும்பத்தினரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

பிரசன்னா கடந்த 40 நாட்களாகவே மூளைக் காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்துள்ளார்.

விவேக் மகன் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டிட தொழிலாளிகளாக மாற்றப்பட்ட தமிழக காவல் துறை ஊழியர்கள்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் துறைகளில் மிகவும் முக்கியமானது காவல் துறை. மேலும் தமிழக காவல் துறையை ஸ்காட்லாண்ட் காவல் துறைக்கு இணையாக ஒப்பிட்டு உலக அளவில் அனைவரும் பேசும் அளவுக்கு புகழ் பெற்றது.

உலகிலேயே மிகவும் சிறந்த காவல் துறை தமிழக காவல் துறைதான் என்ற புகழைப் பெற வேண்டும் என்பதற்காக அதில் பணியாற்றும் அனைவரையும் சுதந்திரமாக செயல்பட விட்டு அதிகமான வசதிகளையும் செய்து கொடுத்து தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பேணி பாதுகாத்து வருகிறார் முதல்வர் ஜெயலலிதா.

அவரது ஆட்சியில் மட்டுமே காவல் நிலையத்திற்குள் கரை வேட்டிகள் புகுந்து அதிகாரிகளை மிரட்டி கட்டப் பஞ்சாயத்து செய்ய முடியாது என்கிற நிலை உள்ளது. ஆனால் காவல் துறையில் மிகப் பெரிய உயர்ந்த பதவியில் அதிகாரியாகப் பணியில் அமர்ந்து கொண்டு, கீழ் நிலையில் மிக நேர்மையாகவும் நியாயமாகவும் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு மிகுந்த தலைவலி குடைச்சலை தொடர்ந்து கொடுத்து வரும் அதிகாரிகளும் உள்ளனர்.

அது தவிர காவல் துறை அதிகாரிகள் அவரது கீழ் நிலையில் பணியாற்றும் காவலர்களை அவர்களது வீட்டில் சொந்த பணிகளை செய்ய
நிர்ப்பந்தப்படுத்துவதால் சமையல் வேலை உள்ளிட்ட பல்வேறு வேலைகளை கட்டாயமாகச் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு அதிகாரிகளின் சொந்த பணிகளை காவலர்கள் சிலர் செய்து கொண்டு இருப்பதாக காவல் துறை வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.

அதிகாரிகள் கொடுக்கும் தொந்தரவுகளால் சில தமிழக காவல் துறை ஊழியர்கள் பணியை நேர்மையாகவும் நியாயமாகவும் செய்ய முடியாமல் மனமுடைந்து தற்கொலை போன்ற முடிவுளை எடுத்து தற்கொலை செய்து கொண்ட சில துயர சம்பவங்களும் கடந்த காலங்களில் தமிழகத்தில் நடைபெற்றுள்ளன.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் சென்னை சிறப்பு காவல் படை 10ம் அணியின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பெருமாள் என்பவர் காவல் துறை ஊழியர்கள் சிலரை கட்டட வேலை செய்ய நிர்ப்பந்தப்படுத்தி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

அதனால் பாதிக்கப்பட்டு மனமுடைந்த காவலர்கள் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பெருமாள் என்பவரின் புகைப்படம் எனக் கூறி ஒருவரின் புகைப்படத்தையும், அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும்,காவல் துறை ஊழியர்கள் கட்டட வேலை பார்க்கும் வீடியோவையும் வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவ விட்டுள்ளனர்.அவ்வாறு வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவும் தகவலில் சொல்லப்படும் கீழ்க்காணும் செய்தி தகவலும் கூறப்படுகிறது.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய எங்களை, சென்னை ஆவடி 13ம் பட்டாலியன் டெபுடி கமாண்டன்ட் பெருமாள் அவருக்கு சொந்தமான ஆவடி, சோலைநகர் 3-வது தெருவில் உள்ள வீட்டில் கட்டிட வேலைக்கு பயன்படுத்துகிறார். அதேபோல் பெருமாள் தனசேகர் ஏ.சி வீட்டை விரிவாக்கம் செய்ற வேலையையும் போலீஸ்காரங்க எங்களைத்தான் செய்ய சொல்றார். பெருமாள் காவலராக பணியில் சேர்ந்து பல லட்சக்கணக்கான பணத்தை செலவு செய்து ADSP பதவியை வாங்கியவர். இப்ப பணத்தால் SP பதவியை வாங்க முயற்சி செய்றார். டி.சி. பெருமாள்க்கு ஆல்ரவுண்டராக இருப்பவர் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன். இவர்களெல்லாம் கூட்டு சேர்ந்து எங்களை கொடுமைப்படுத்தறாங்க. இந்த கொடுமையில் இருந்து முதல்வர் எங்களை மீட்டு, உயர்அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ரிப்போர்ட்டர் உதவி செய்யுங்க. இதோ வீடியோ ஆதாரம். மராமத்து பணியில் போலீசார், செம்மண் அள்ளும் போலீசார், பெருமாள் போட்டோ, இப்படிக்கு பாதிக்கப்பட்ட சென்னை கடைநிலை காவலர்கள்” என கூறப்பட்டுள்ளது.

காவலர் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா காவல் துறையில் மிக பெரிய உயர்ந்த பதவி அதிகார இருக்கையில் அதிகாரியாக பணியில் அமர்ந்துகொண்டு, கீழ் நிலையில் மிக நேர்மையாகவும் நியாயமாகவும் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு மிகுந்த தலைவலி குடைச்சலை தொடர்ந்து கொடுத்து வரும் அதிகாரிகள்மீது கட்டாயம் நடவடிக்கை எடுப்பார் என அனைவரும் நம்புவோம்.

காப்பியடிக்கிறார் எங்கள் திட்டங்களை மு.க.ஸ்டாலின் : அன்புமணி ராமதாஸ்

 

சென்னை தியாகராயநகரில் சென்னை மாவட்ட பா.ம.க. புதிய அலுவலகத்தை முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

தமிழ்நாட்டில் 26 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது பா.ம.க. இன்று அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக வளர்ச்சி அடைந்து உள்ளது. அனைத்து தரப்பு மக்களும் எங்களை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதற்கு காரணம் 50 ஆண்டுகள் நடைபெற்ற திராவிட ஆட்சிகள் மீது மக்களுக்கு உள்ள வெறுப்புதான்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே பா.ம.க. பொதுக் குழுவில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று முடிவெடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி மாதம் என்னை கட்சியின் முதல்–அமைச்சர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தினார்கள். அதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து வருகிறேன்.

நாங்கள் யாரையும் நம்பி இந்த தேர்தலில் களம் இறங்கவில்லை. எங்களது பலம், கொள்கை மற்றும் இளைஞர்களை நம்பி இந்த முடிவை எடுத்துள்ளோம். அ.தி.மு.க., தி.மு.க. தவிர வேறு யார் வேண்டுமானாலும் எங்கள் கூட்டணிக்கு வரலாம். தற்போதைக்கு அ.தி.மு.க. ஆட்சியின் மீது மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள். நிர்வாகம் முறையாக நடைபெறவில்லை. ஊழல் இல்லாத துறையே இல்லை. ஆளும் கட்சி பணத்தை மட்டுமே நம்பி இருக்கிறது.

தி.மு.க. மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். 2011 தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை. கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. 7 தொகுதிகளில் 3–வது இடத்துக்கு தள்ளப்பட்டது. 50 ஆண்டு கால தி.மு.க. வரலாற்றில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு காரணம் 2ஜி ஊழல் வழக்கு, குடும்ப பிரச்சினை தான். அதை மக்கள் இன்னும் மறக்கவில்லை.

இப்போது மு.க.ஸ்டாலின் புதுப்புது உடையணிந்து புதுப்புது தோற்றத்துடன் நான் மாறிவிட்டேன். திருந்தி விட்டேன் என்று சொன்னாலும் மக்கள் ஏற்க மாட்டார்கள். காரணம் 50 ஆண்டு காலம் ஆட்சி செய்து விட்டீர்கள். அப்போது கொண்டு வந்த மாற்றம் என்ன? இப்போது உடையையும், நடையையும் மாற்றினால் போதாது. எண்ணங்களை மாற்ற வேண்டும்.

தி.மு.க. என்றாலே ஊழல் கட்சி என்று மக்களால் முத்திரை குத்தப்பட்டு விட்டது. கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் என்னென்ன திட்டங்களை கொண்டு வருவோம் என்று சொல்லி வருகிறோமோ அதை ஸ்டாலின் அப்படியே காப்பியடித்து வருகிறார். ஸ்டாலினுக்கு சுயசிந்தனை இல்லையா அல்லது தி.மு.க. வுக்கு சுயசிந்தனை இல்லையா என்று தெரியவில்லை.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்குதான் என்றேன். லோக் ஆயுக்தா சட்டத்தை கொண்டு வருவோம் என்றேன். ஸ்டாலின் அதை அப்படியே சொல்கிறார். இனி மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்றும் சொல்வார்கள். இந்த வேடிக்கைகளை மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அவரது நடிப்பு மக்கள் மத்தியில் எடுபடாது.

தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கிறது. தேர்தல் நெருங்கும் போது தான் கூட்டணிகள் முடிவாகும். ஆனால் இப்போதே 2 கட்சிகள்தான் களத்தில் இருப்பது போல் தோற்றத்தை உருவாக்க பார்க்கிறார்கள்.

நடிகர் சங்க தேர்தலுக்கு மிகவும் முக்கியத்துவம் தரப்பட்டது. அதில் ஒரு முக்கிய அம்சம் இளைஞர்கள் மாற்றத்தை கொண்டு வந்துள்ளார்கள். அதே போல் வருகிற தேர்தலிலும் மக்கள் மாற்றத்தை கொண்டு வருவார்கள்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் மத்தியில் நாங்கள் அங்கம் வகிக்கிறோம். ஆனால் மாநிலத்தில் வேறு முடிவை எடுத்துள்ளோம். மாற்று அணியை உருவாக்கி வருகிறோம். என்மீது மு.க.ஸ்டாலின் ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடியாது. ஊழல் வழக்கில் 6 மாதமோ அல்லது 1 வருடமோ அவர்களை போல் நான் திகார் சிறைக்கு செல்லவில்லை.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி, மகள் மீதும் ஊழல் வழக்கு உள்ளது. உலக அளவில் கின்னஸ் படைத்த ஊழல் வழக்கு, சர்க்காரியா கமிஷன் வழக்கு. என் மீது போடப்பட்டிருப்பது பொய் வழக்கு. அரசியல் காரணங்களுக்காக போடப்பட்டது. லஞ்சம் வாங்கியதாகவோ பணம் வாங்கினேன் என்றோ ஊழல் செய்ததாகவோ எதுவும் கிடையாது. முதல் தகவல் அறிக்கையில் கூட என் பெயர் கிடையாது.

குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதற்கு ஒரு நாளைக்கு முன்பு எனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதுபற்றி நான் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன். மருத்துவ கல்லூரிகளுக்கு அதிகாரிகளின் ஒப்புதலோடு துறை ரீதியாக அனுமதி வழங்கப்பட்டது. இதில் என் மீது எந்த தவறும் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு சொல்லி இருக்கிறது.

ஆனால் 2ஜி வழக்கில் மூட்டை மூட்டையாக பணம் பரிமாறப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இன்னும் வரப்போகிறது. எங்களது வளர்ச்சி தாங்க முடியாமல் தான் பொறாமையால் பேசுகிறார்கள். ஒரே மேடையில் விவாதம் செய்வதற்கு மு.க.ஸ்டாலினை அழைத்து 4 முறை கடிதம் எழுதி விட்டேன். ஆனால் அவர் விவாதத்துக்கு வர தயங்குகிறார். உண்மையிலேயே வளர்ச்சி திட்டத்தை கொண்டு வருவதாக இருந்தால் விவாதத்துக்கு வரலாமே. இப்போது நமக்கு நாமே என்பது தி.மு.க.வில் மு.க.ஸ்டாலினை திணிப்பதற்கு தான்.

விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்களை சந்தித்து அதை செய்வேன். இதை செய்வேன் என்கிறார். இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த போது அதையெல்லாம் ஏன் செய்யவில்லை. குடிசைக்குள் சென்று வருகிறார். தமிழ் நாட்டில் குடிசைகள் இன்னும் மாறாமல் இருப்பதற்கு அவரது தந்தை தானே காரணம். 50 ஆண்டுகளாகியும் குடிசைகளை ஒழிக்க முடியாதது வெட்கக்கேடு.

இந்த நிலையில் மாற்றத்தை கொண்டு வருவோம் என்று சொல்ல மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. மாற்றம், வளர்ச்சி பற்றி பேச அருகதை இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

விற்பனை பிரதிநிதிகள் மீது உருட்டுக்கட்டையால் தாக்குதல் நடத்திய கொங்கு இளைஞர் பேரவையினர் 7 பேர் சிறையில் அடைப்பு

கோவை மாவட்டம் ராம்நகர் சென் குப்தா சாலையில் கொங்கு இளைஞர் பேரவை கட்சியின் மாநகர் மாவட்ட தலைமை அலுவலகம் உள்ளது.

இந்த அலுவகத்தின்அருகில் தனியார் மருந்து நிறுவனத்தின் மொத்த விற்பனை அலுவலகம் உள்ளது.

நேற்று இந்த அலுவலகத்துக்கு 100–க்கும் மேற்பட்ட மருந்து விற்பனை பிரநிநிதிகள் வந்தனர். அவர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்களை மருந்து விற்பனை அலுவலகத்தின் முன்புறமும், கொங்கு இளைஞர் பேரவை அலுவலகத்தின் காம்பவுண்டு சுவர் ஓரமும் நிறுத்தி இருந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த கொங்கு இளைஞர் பேரவை கட்சியினர் உருட்டுக்கட்டைகளால் அங்கு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதைப் பார்த்த மருந்து விற்பனை பிரதிநிதிகள் கொங்கு இளைஞர் பேரவை அலுவலகம் முன்பு திரண்டு, இரு சக்கர வாகனங்களை சூறையாடியவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஆவேசமடைந்த கொங்கு இளைஞர் பேரவை கட்சியினர் அரிவாள், வாள் மற்றும் உருட்டுக் கட்டைகளால் மருந்து விற்பனை பிரதிநிதிகளை சரமாரியாக தாக்கினர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தாக்குதலில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயன்றனர்.

ஆனால் அந்த கும்பல் போலீசாரையும் மீறி மருந்து விற்பனை அலுவலகத்துக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவத்தில் மருந்து விற்பனை பிரதிநிதி சூர்ய காந்த் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். எனினும், கும்பல் விடாமல் வன்முறையில் ஈடுபட்டனர். மோதலை வேடிக்கை பார்த்த பொதுமக்களையும் கும்பல் தாக்கத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். பின்னர் மருந்து விற்பனை பிரதிநிதிகளை தாக்கிய 7 பேரை போலீசார் மடக்கிப் பிடித்து வேனில் ஏற்றிச் சென்றனர்.

இதுதொடர்பாக சூர்ய காந்த் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் மாவட்ட அமைப்பாளர் பரமசிவம்(39), கோவை காட்டூரை சேர்ந்த சங்கர்(31), கோபால்(27), சூலூரை சேர்ந்த மணிகண்டன்(26), கரூரை சேர்ந்த சக்திவேல்(30), கருமத்தம்பட்டியை சேர்ந்த விஜயகுமார்(25), சேலம் ஓமலூரை சேர்ந்த தினேஷ் குமார்(24) ஆகியோர் மீது கொலை முயற்சி, சட்ட விரோதமாக கூடுதல், ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் தாக்குதல், சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்பட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

பின்னர் காவல் துறையினர் 7 பேரையும் கோவை ஜே.எம்.2 நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கைது செய்யப்பட்ட7 பேரையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அவர்கள் 7 பேரையும் காவல் துறையினர்  கோவை சிறையில்அடைத்தனர்.