Home Blog Page 6007

மோடியுடன் சிறீசேனா, பூடான் பிரதமர் சந்திப்பு

அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியை, இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன, பூடான் பிரதமர் ஷ்ரின் டொப்காய் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

அண்டை நாடுகளுடன் நட்புறவு பேணும் மோடி, நாட்டுக்கு வெளியிலும் அண்டை நாட்டுத் தலைவர்களை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். வியாழன் அன்று வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்துப்  பேசினார். நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா தனது பயணத்தை உள்நாட்டு எதிர்ப்புப் பிரச்னை காரணமாக ரத்து செய்தார். பாகிஸ்தான் பிரதமரைச் சந்திக்கும் திட்டம் இல்லை என்று முன்னரே இந்தியத் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை நேற்று, இலங்கை அதிபர் மைத்ரீபால சிறீசேன, பூடான் பிரதமர் டொப்காய் ஆகியோரை சந்தித்து உரையாடினார் மோடி.

இமாச்சல் முதல்வர் மீது ஊழல் வழக்கு பதிவு: சி.பி.ஐ. சோதனை

இமாச்சலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்கின் வீடு மற்றும் தில்லியில் உள்ள அவருக்கு சொந்தமான 11 இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை மேற்கொண்டது. மேலும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி இருந்து வருகிறது. அதன் முதல்வராக இருக்கும் வீரபத்ர சிங் மீது சொத்து சேர்ப்பு புகார்கள் குவிந்துள்ளது. இதைத் தொடர்ந்து சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இன்று காலை முதல் தில்லி மற்றும் இமாச்சல் பிரதேசம் உடபட 11 இடங்களில் சோதனை நடத்தினர்.

வீரபத்ர சிங், அவரது மனைவி பிரதிபா சிங், மகன் விக்ரமாதித்ய சிங் மற்றும் மகள் அபரஜிடா சிங் ஆகியோரிடம் விசாரனை நடத்தப்பட்டன. வீரபத்ர சிங்குக்கு சொந்தமான இடங்களில் இருந்து சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவரின் தனிச் செயலாளரிடமும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இந்த சோதனையின் போது முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கே இல்லை. வீரபத்ர சிங்கின் மகள் திருமண நிகழ்ச்சிக்காக அவர்கள் சிம்லாவில் உள்ள கோவிலுக்குச் சென்றிருந்னராம். மாநில மூத்த அமைச்சர் ஒருவர் தகவலறிந்து அங்கு விரைந்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிரசாந்த் பூஷன் கொடுத்த புகாரின் அடிப்படையில் காங்கிரஸ் தலைவர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேசியக் கொடி மீது பிரதமர் கையெழுத்திடவில்லை: மத்திய அரசு

புது தில்லி:

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி மீது கையெழுத்திட்டுக் கொடுக்கவில்லை என்று மத்திய அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.

ஐ.நா.  சபையின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்க சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள வால்டோர்ப் ஆஸ்டோரியா ஓட்டலில், இந்தியாவின் சார்பில் நடத்தப்பட்ட அமெரிக்க தொழில் அதிபர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விருந்தை சிறப்பாக அமைத்துக் கொடுத்ததாக தலைமை சமையல் கலைஞர் விகாஸ் கன்னாவை பிரதமர் மோடி வெகுவாகப் பாராட்டினார். அப்போது விகாஸ் கன்னா, இந்திய தேசியக் கொடியில் மோடியின் கையெழுத்தைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. அதை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு தான் வெகுமதியாகக் கொடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், மோடி கையெழுத்திட்ட கொடியை விகாஸ் கன்னா ஊடகங்களுக்கும் காண்பித்தார்.
 
ஆனால் தேசியக் கொடி மீது பிரதமர் மோடி கையெழுத்திடவில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தலைமை சமையற் கலைஞரின் மாற்றுத் திறனாளி மகள் கால் விரல்கள் மூலம் அழகிய வேலைபாட்டுடன் வடிவமைத்திருந்த ஒரு துண்டுத் துணியில்தான் பிரதமர் கையெழுத்திட்டார். அந்தத் துணியில் வெள்ளை நிறமோ, அசோகச் சக்கரமோ கிடையாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.

மனிதக் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட விபத்து: சவுதி அரேபிய மதகுரு

கடந்த இரு நாட்களுக்கு முன்னர் மெக்காவில் பலர் உயிரைப் பலி வாங்கிய விபத்து நடந்த இடத்தில் செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்த விபத்தில் தங்கள் குடிமக்களைப் பறிகொடுத்த ஈரான் உள்ளிட்ட நாடுகள் சவூதி அதிகாரிகளை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில் விபத்து, மனிதக் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது என சவூதி அரேபிய மூத்த மதகுரு முஃப்தி ஷேக் அப்துல் அஜீஸ் பின் -அப்துல்லா அல் – ஷேக் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக சவூதி பட்டத்து இளவரசரும் உள்துறை அமைச்சருமான முஹம்மது பின் நயீஃபிடம் பேசிய அவர், இந்தத் துயரச் சம்பவத்துக்கு அவரைப் பொறுப்பாக்க முடியாது என்றும் விதியைத் தடுக்க முடியாது என்றும் கூறினார்.

காவல்துறைக்கே பாதுகாப்பு கேட்கும் நிலையில் தமிழகம்: ராம.கோபாலன் வேதனை

சென்னை:
 காவல் துறைக்கே பாதுகாப்பு கேட்கும் நிலையில்… தமிழகம் எங்கே போய்க்  கொண்டிருக்கிறது என்று அதிர்ச்சிக் கேள்வி எழுப்பியுள்ளார் இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன்.

இன்று இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை…

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய பயங்கரவாதிகள் நேற்று சிறை காவலர்களை சிறைப்பிடித்ததும், ஜெயிலர்கள் தாக்கப்பட்டதும், ஏடிஜிபி பேச்சுவார்த்தை நடத்தி காவலர்களை மீட்டதும் தமிழகத்தை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இந்து முன்னணி மீண்டும் மீண்டும் கூறிவரும் கருத்தை அரசு கண்கொண்டு காண மறக்கின்ற நிலையில், இத்தகைய கோரத் தாண்டவம் ஆடி முஸ்லீம் பயங்கரவாதிகள் காவல்துறைக்கு பாடம் புகட்டியுள்ளனர்.

சிறையில் இருக்கும் பயங்கரவாதிகளே இத்தகைய கொடூர செயலைச் செய்ய முடிகிறது என்றால், தமிழக அரசின் செயல்பாடு எத்தகைய நிலையில் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம். சிறையிலேயே சிறை காவலர்கள் சிறை வைத்து மிரட்ட பயங்கரவாதிகள் துணிந்துவிட்டனர். வேறு கைதிகள் இதுபோல் நடந்தால் இப்படித்தான் சிறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? ஏன் இந்த மென்மையான போக்கு?

ஊடகத்துறையினருக்கும், அரசு ஊழியர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை நீடிக்கிறது. காவல்துறை பாதுகாப்பிற்கு மத்திய பாதுகாப்பு படையை, துணை இராணுவப் படையை கேட்கும் நிலையில் தமிழகம் உள்ளது. மனித உரிமை பேசுவோர், தொடர்ந்து காவலர்கள் கொடூர தாக்குதலுக்கு உள்ளாகும்போது ஏன் மௌனம் சாதிக்கின்றனர்? காவலர்கள் மனிதர்கள் இல்லையா?!

அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது, அச்சுறுத்தி திரைப்படங்களைத் தடுத்தனர். அப்போதெல்லாம் அரசு ஓட்டு வங்கிக்கு பயந்து முஸ்லீம் பயங்கரவாதிகளுக்குத் துணைபோனது. ஆம்பூர் கலவரத்திலாவது தமிழக அரசு பாடம் கற்றிருக்க வேண்டும். அங்கு காவல் துறை அதிகாரிகளை கைவிட்டது அரசு. விளைவு புழல் சிறைக் கலவரம். தமிழக அரசிற்கும், சிறைத் துறைக்கும் இவையெல்லாம் அவமானம் ஆகும்.

பாடி சுரேஷ் படுகொலை செய்த முஸ்லீம் பயங்கரவாதிகளை கைது பண்ணி ஒருவருடம் முடிந்த நிலையிலும், அவர்களுக்கு உதவியவர்கள், பதுங்கியிருக்க இடம் கொடுத்தவர்கள், பண உதவி செய்தவர்கள் போன்ற குற்றவாளிகளுக்கு உடந்தையானவர்கள் கைது செய்யப்படவில்லை. வழக்கு விசாரணையின் காலதாமதத்தை காரணம் காட்டி பயங்கரவாதிகளை ஜாமீனில் விடுவிக்கவும் அரசு உதவியோடு ரகசிய திட்டம் இருந்ததாகத் தெரிகிறது.

பயங்கரவாத வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதி நியமிக்காத நிலையில், அதுவும் செயலற்று கிடக்கிறது.

இன்று புழல் சிறையில் இருந்த முஸ்லீம் பயங்கரவாதிகளை வேறு வேறு சிறைச்சாலைகளுக்கு அனுப்பி வைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதுவும் முஸ்லீம் பயங்கரவாத அமைப்புகளின் செயல் திட்டம் தான். ஒவ்வொரு வாய்தாவிற்கு இவர்களை கொண்டு வந்து கொண்டு செல்வது பெரிய கேள்விக் குறியாகும். அதுமட்டுமல்ல, தமிழகத்தின் மற்ற சிறைகளில் இருக்கும் பயங்கரவாதிகளுடன் இவர்கள் கலந்தாலோசித்து மீண்டும் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற வழிவகுத்துக் கொடுத்துவிடும் என்பதை அரசு உணர வேண்டும்.

இரண்டு நாட்கள் முன்பு 72 மாடுகளை கடத்தி வந்த லாரியை பிடித்தவுடன், தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்த முஸ்லீம் கூட்டத்திற்கு பயந்து காவல்துறை நள்ளிரவில் நீதிபதியின் வீட்டிற்கே சென்று மாடுகளை விடுவிக்க உத்தரவு பெற்றனர். ஒவ்வொரு லாரியிலும் 6 மாடுகளை ஏற்றிச் செல்ல நீதிபதி உத்திரவிட்டுள்ளார். இதுவும் சட்டத்திற்குப் புறம்பானது இல்லையா? கூட்டமாக வந்தால் நீதியை மிதிக்கும் முன் உதாரணத்தை தமிழக காவல்துறை செயல்படுத்தி காட்டி, தமிழக அரசு செயழிந்துவிட்டதை உறுதி படுத்தி உள்ளது. இது வெட்கக்கேடானது.

நேற்று புழலில் முஸ்லீம் பயங்கரவாதிகள் தாக்கியதில் படுகாயம் அடைந்தது காவலர்கள், ஜெயிலர்கள். ஆனால், முஸ்லீம் பயங்கரவாதிகள் தாக்கப்பட்டதாக முஸ்லீம் அமைப்புகள் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி பிரச்னையை திசைத்திருப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு தமிழக அரசு துணைபோகலாமா?

மத்திய உள்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்து தமிழகத்தையும் தமிழக மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

விஷ்ணு பிரியா தற்கொலை: தலைமறைவாக உள்ள யுவராஜ் முக்கிய ஆடியோ தகவல்

அண்மையில் தற்கொலை செய்து கொண்ட நாமக்கல் மாவட்ட திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணு பிரியா,  வற்புறுத்தலின் பேரில்தான்  தற்கொலை செய்து கொள்ள வைக்கப்பட்டார் என்பதற்கான அசைக்க முடியாத ஆதாரம் தன்னிடத்தில் உள்ளதாக யுவராஜ் தெரிவித்துள்ளார். இவர், பொறியாளர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள தீரன் சின்னமலைப் பேரவை நிறுவனர்.

யுவராஜ் சற்று முன்னர் வெளியிட்ட ஆடியோவில் கொடுத்துள்ள அறிவிப்பு:
நாளை 27ந்தேதி காலை 11மணிக்கு விஷ்ணுபிரியா வற்புற்த்தலின் பேரில்தான் தற்கொலை செய்து கொள்ள தள்ளப்பட்டார் எனபதற்கான ஆதாரத்தினை ஊடகங்களுக்கு நான் அனுப்பி வைக்க உள்ளேன். அந்த ஆதாரத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கையினை முதல்வர் எடுப்பார் என நான் நம்புகிறேன். தவறு செய்பவர்கள் குறித்து தகுந்த ஆதாரங்கள் இருந்தால், முதல்வர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என்பது மக்களின் எண்ணம்…. என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் வாட்ஸ்-அப் மூலம் வெளியிட்ட ஆடியோ தகவல்:

 

 

அதிக முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பட்டியல் : மூன்றாவது இடத்தில் மோடி  

இந்திய பிரதமர் மோடி அதிக முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்திலேயே உள்ளார்.

2000 மே முதல் 2001 .செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 92 நாட்களுக்கு 41 முறை சுற்றுப்பயணம் செய்துள்ளார்.

வெளிநாடுகளுக்கு அதிகள முறை சுற்றுப்பயணம் மேற்கொண்ட சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பட்டியலில், புதின் முதலிடத்தில் இருந்தார்.

2010 மே முதல் 2011 செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், 71 நாட்களில் 41 முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி, 2014 மே – 2015 செப்டம்பர் வரையிலான காலகட்டம் வரை, 69 நாட்களில், 29 முறை பயணம் செய்துள்ளார்.மோடியின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தால், 1.3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளதாக மத்திய அரசாங்கம் கூறியுள்ளது .

டி.எஸ்.பி. தற்கொலை விவகாரத்தில் திடீர் திருப்பம்: விஷ்ணுபிரியாவிடம் அடிக்கடி பேசிய வாலிபரிடம் தீவிர விசாரணை

 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்த விஷ்ணுபிரியா கடந்த 18–ந் தேதி அவருடைய அலுவலகத்துடன் கூடிய அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இவர் என்ஜினீயர் கோகுல்ராஜ் வழக்கினை விசாரணை நடத்தி வந்த அதிகாரி என்பதாலும், இவர் பணியில் சேர்ந்த 7 மாதத்தில் தற்கொலை செய்து கொண்டதாலும். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அவர் 15 பக்கங்கள் கொண்ட கடிதம் எழுதியுள்ளதாக தகவல் பரவியது. பின்னர் 9 பக்கங்களை மட்டுமே போலீசார் வெளியிட்டனர்.அந்த கடிதத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் ஒரு இடத்தில் கூட குறிப்பிடவில்லை.

அதனால் கடிதத்தின் சில பக்கங்களை போலீசார் மறைத்து விட்டதாகவும் அதில் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்களை தெரிவித்திருக்காலம் எனவும் அவரது தந்தை ரவி தெரிவித்தார்.

மேலும் அந்த கடிதத்தில் உள்ள கையெழுத்து விஷ்ணுபிரியா எழுதியது தான் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.பின்னர் உயர் அதிகாரிகளின் தொடர் டார்ச்சரால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் அவர் குற்றம் சாட்டடினார்.

இதேபோல், விஷ்ணு பிரியாவின் தோழியும், கீழக்கரை டி.எஸ்.பி.யுமான மகேஸ்வரி, கோகுல்ராஜ் கொலை வழக்கில் நேர்மையாக விசாரணை நடத்தி வந்த விஷ்ணுபிரியாவை உயர் அதிகாரிகள் டார்ச்சர் செய்ததாகவும் வழக்கில் தொடர்பில்லாத சிலர் வழக்கு போடச் சொல்லி வற்புறுத்தியதாகவும் தெரிவித்தார்.

விஷ்ணுபிரியாவின் தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. நாகஜோதி தலைமையில் ஏ.டி.எஸ்.பி. ஸ்டாலின், டி.எஸ்.பி வேலன், ராஜன் ஆகியோர் அடங்கிய குழுவினர் தொடர்ந்து விசாரணை மேற் கொண்டனர்.

இதற்கிடையில் விஷ்ணு பிரியாவுடன் பணியாற்றிய போலீசாரிடமும், அவருடைய பெற்றோரிடமும் விசாரணை நடத்தினர். பின்னர் விஷ்ணுபிரியா தங்கியிருந்த அறையை முழுவதும் சோதனையிட்டனர்.இந்தநிலையில் அவர் பயன்படுத்தி வந்த செல்போன், லேப்–டாப் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர்.

இதில் விஷ்ணுபிரியாவின் செல்போன் எண்ணுக்கு கடந்த 10 நாட்களாக வந்த அழைப்புகள், அவர் தொடர்புக்குகொண்டு பேசிய அழைப்புகளை போலீசார் எடுத்துள்ளனர்.

இதில் அடிக்கடி பேசிய எண்கள் மற்றும் அதிக நேரம் பேசிய எண்கள் ஆகியவற்றில் ஆய்வு செய்ததில் 600 வினாடிகள் முதல் 1000 வினாடிகள் வரை பேசி இருப்பதாகவும், இதில் சில அழைப்புகள் இரவு நேரங்களில் வந்ததாகவும், அவை சுமார் 10 நிமிடங்கள் முதல் 15 நிமிடங்கள் பேசியதாக தெரியவந்தது. செல்போனில் அதிக நேரம் பேசிய எண் சென்னையில் இருந்து பேசப்பட்டது தெரியவந்தது.

மேலும் சிவகங்கை மாவட்டத்தில் பயிற்சி டி.எஸ்.பி.யாக பணியாற்றிய விஷ்ணுபிரியாவுக்கு திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவில் குருக்கள் ஒருவரின் மகன் அறிமுகம் ஆனதும், விஷ்ணுபிரியா தற்கொலை செய்துக்கொள்வதற்கும் 5 நாட்களுக்கு முன்பு தினமும் அவரிடம் செல்போனில் பேசியது தெரியவந்துள்ளது.சென்னையில் இருந்து பேசிய நபர் யார்? அவர் என்ன பேசினார்? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

விஷ்ணுபிரியா தற்கொலை செய்துக் கொண்ட அன்றும் அந்த நபர் 15–க்கும் மேற்பட்ட முறை விஷ்ணுபிரியா செல்போனுக்கு தொடர்புக்கு கொண்டு பேசியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையில் கடலூரை சேர்ந்த வாலிபர் ஒருவரை பிடித்துள்ள போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த வாலிபருக்கும் விஷ்ணு பிரியாவுக்கும் இடையே உள்ள தொடர்பு காதலாக இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதற்கிடையில் தற்கொலை செய்துக் கொள்வதற்கு 2 தினங்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்று இருந்தபோது விஷ்ணுபிரியாவுக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளதும். அந்த மாப்பிள்ளை யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்தும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இதில் அதிகாரிகளின் டார்ச்சரால் அவர் தற்கொலை செய்தாரா? அல்லது காதல் தோல்வியால் தற்கொலை செய்துக்கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

தற்போது விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு இறுதிகட்ட விசாரணை எட்டியுள்ளதாகவும், முதற்கட்ட விசாரணை அறிக்கையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்னும் ஓரிரு நாளில் தாக்கல் செய்ய உள்ளார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிறுவனத்தில் ரூ.1000 கோடி பறிமுதல்: தாவூத் இப்ராகிமுக்கு ரூ.5,000 கோடி கடத்தலா?- தமிழகத்தை சேர்ந்த நாகராஜன் பிடிபட்ட தகவல்

தமிழகத்தைச் சேர்ந்த லாட்டரி ஏஜெண்டு மார்ட்டினுக்கு சொந்தமான வீடுகள், நிறுவனங்கள், மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவிலும், சிலிகுரியிலும் சி.பி.ஐ. அதிகாரிகளும், அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் திடீர் சோதனை நடத்தினார்கள்.

அப்போது அங்கு 11 டிராலி பேக்குகளில் கட்டுகட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. கொல்கத்தாவிலும், சிலிகுரியிலும் மொத்தம் ரூ.1000 கோடி பணம் சிக்கியது.

இதைத் தொடர்ந்து லாட்டரி ஏஜெண்டு மார்ட்டினுக்கு நெருக்கமானவரான தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.நாகராஜன் என்பவரை சி.பி.ஐ. அதிகாரிகள் பிடித்துச் சென்று விசாரித்து வருகிறார்கள்.

நாகராஜனின் ஏஜெண்டுகளான பேட்ரிக், அலெக்சாண்டர் ஆகியோர் பெயரில் கொல்கத்தாவில் வீடுகள் வாடகைக்கு எடுத்துள்ளனர். சோதனை நடப்பதற்கு சற்றுமுன் இருவரும் தப்பி விட்டனர்.

வெளி மாநிலங்களில் ரூ.4,500 கோடி அளவுக்கு லாட்டரி முறைகேடுகள் நடந்து இருப்பது பற்றி சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. தற்போது ரூ.1,000 கோடி பணம் சிக்கியதன் மூலம் இது ஹவாலா பணமா? என்ற கோணத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

நாகராஜன் லாட்டரி விற்பனையுடன் ஹவாலா பணம் கடத்தலில் ஈடுபட்டதும், 8 ஆண்டுகளாக இந்த முறைகேட்டில் ஈடுபட்ட அவர் பலமுறை அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு உள்ளார். தற்போது அவரது பாஸ் போர்ட்டை அதிகாரிகள் கைப்பற்றி எந்தெந்த வெளி நாடுகளுக்கு சென்று வந்துள்ளார் என்று விசாரணை நடத்தினார்கள்.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கும் மும்பை தாதா தாவூத் இப்ராகிமுக்கும் மேற்கு வங்காள ஹவாலா கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. நிதி அமைச்சக புலனாய்வு அதிகாரிகள் விசாரணைக்கும் உத்தரவிட்டது.

அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மேற்கு வங்காளத்தில் அலுவலகங்கள் நடத்துவதை புலனாய்வுத்துறை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். மத்திய பிரதேச மாநிலத்தில் சிலரது வங்கி கணக்குகளில் திடீர் என்று லட்சக்கணக்கில் பணம் போடப்பட்டதும் தெரிய வந்தது. இது தொடர்பாக 5 பேரை கைது செய்து விசாரித்த போது அவர்கள் லாட்டரியில் விழுந்த பரிசு பணம் என்று தெரிவித்தனர்.

ஆனால் அவர்கள் ஹவாலா பணத்தை லாட்டரி பரிசு பணம் என்று சொல்லி வங்கியில் டெபாசிட் செய்து இருப்பது தெரிய வந்தது.

மேற்கு வங்காள ஹவாலா கும்பல் பெருமளவு பணத்தை சவுதி அரேபியாவுக்கு அனுப்பி உள்ளனர்.

கடந்த சில வருடங்களாக பாகிஸ்தானின் கராச்சி நகருக்கும் ஹவாலா பணம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த பணம் கராச்சியில் பதுங்கி இருக்கும் தாவூத் இப்ராகிம் ஆட்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. மொத்தம் ரூ.5,000 கோடி அளவுக்கு பணம் கடத்தப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த 1175 செல்போன் மற்றும் போன் நம்பர்களை ஆய்வு செய்தனர். அப்போது 305 எண்கள் இந்தியாவில் இருந்து பேசப்பட்டது. அந்த டெலிபோன் உரையாடல்கள் மூலம் தாவூத் இப்ராகிம் தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதை புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

மேற்கு வங்காளத்தில் ஹவாலா பணம் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் 150 வங்கி கணக்குகளை பல்வேறு நபர்கள் பெயர்களில் போலீயாக தொடங்கி இருக்கிறார்கள். நாடு முழுவதும் 1,200 போலி வங்கி கணக்குகள் தொடங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

நாகராஜன் பல வருடங்களாக போலியாக லாட்டரி நடத்தி பொது மக்களை ஏமாற்றி பல ஆயிரம் கோடி மோசடி செய்து இருக்கலாம் இந்த மோசடி பணத்தின் மூலம் ஹவாலா வர்த்தகத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐ.நா. சபையில் 30- ந்தேதி ஓட்டெடுப்பு : இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா கொடுத்த தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு

இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி அங்கு மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும் நடந்து இருப்பதை உறுதி செய்தது.

இதையடுத்து ஜெனீவாவில் நடந்து வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 30–வது கூட்டத்தில் மனித உரிமை ஆணையர் 19 பக்க அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில் இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் பற்றி இலங்கை அரசு சர்வதேச நாடுகளின் நீதிபதிகளைக் கொண்ட சர்வதேச கலப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்தது.

ஆனால் இலங்கை அரசு உள்நாட்டு விசாரணைதான் நடத்துவோம், இதில் சர்வதேச நீதிபதிகள் மற்றும் சட்ட வல்லுனர்களின் யோசனைகளை ஏற்றுக் கொள்வோம் என்றும் கூறி வருகிறது.

மேலும் ஜனவரி மாதம் உள்நாட்டு விசாரணையை தொடங்கப் போவதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

உள்நாட்டு விசாரணை நடத்தினால் அது இலங்கை அரசுக்கு சாதகமாக இருக்கும். தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என்று கூறி சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக தமிழக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சட்டசபை தீர்மானத்தை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடிதமும் எழுதினார்.

இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா முதலாவது வரைவு தீர்மானம் தாக்கல் செய்தது. அதில் இலங்கை மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு இருந்தன.

இதற்கு இலங்கை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிகாரிகள் குழுவினருடன் இலங்கை குழுவினர் தொடர்ச்சியாக விவாதங்கள் நடத்தினர்.

இதையடுத்து இறுதியாக திருத்தப்பட்ட வரைவு தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா இன்று தாக்கல் செய்தது. அதில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் பரிந்துரைத்த சர்வதேச நீதிமன்றம் பற்றி எதுவும் குறிப்பிடப்பட வில்லை.

போர்க்குற்ற புகார்களை இலங்கையின் நீதித்துறை அமைப்பே விசாரிக்கலாம் என்றும் காமன்வெல்த் நாடுகள் மற்றும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகளும், வக்கீல்களும், விசாரணை அதிகாரிகளும் இந்த விசாரணை அமைப்பில் இடம் பெறலாம் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

உள்நாட்டுப் போரின் போது மனித உரிமைகளை நிலை நாட்டுபவர்கள், சிறு பான்மையினர், வழிபாட்டு தலங்கள் ஆகியோர் மீது தாக்குதல் நடத்திய தனி நபர்கள் குறித்தும், குழுக்கள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த புதிய வரைவுத் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு மேலும் திருத்தங்கள் செய்யப்படும் வாய்ப்பு உள்ளது.

அதன் பிறகு இறுதி தீர்மானம் வருகிற 30–ந்தேதி ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் வாக்கெடுப்பு நடைபெறும்.

அமெரிக்காவின் இந்த வரைவு தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. இதுபற்றி வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் சுவரூப் கூறியதாவது:–

இந்தியாவைப் பொறுத்தவரை நாம் எப்போதுமே இயற்கையாகவே நீதிக்கான விசாரணையை ஆதரிக்கிறோம். அந்த வகையில் இலங்கையின் இறையாண்மைக்கு மதிப்பளிக்கிறோம்.

எனவே எதிர்மறையான கருத்துக்களையும் சந்தித்து அதற்கான வழி காண வேண்டும். இறுதி வரைவு தீர்மானம் வரும்போது, அது ஏகமனதாக இலங்கை அரசால் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

இலங்கை அரசு ஒரு மித்த வகையில் ஏற்றுக் கொள்ளத்தக்க தீர்மானத்தை ஒவ்வொருவரும் ஏற்க கூடிய வகையில் ஏகமனதாக நிறைவேற்ற வேண்டும். இலங்கை அரசு தற்போது மனித உரிமை கமிஷன் கவுன்சிலுடன் ஒருங்கிணைந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன் நிலையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இதில் இந்தியாவின் நிலை தெளிவாக உள்ளது எனஅவர் கூறினார்.

அமெரிக்காவின் வரைவு தீர்மானத்தை வரவேற்பதாக இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு சட்ட வல்லுனர்கள் இடம் பெறும் விசாரணைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முழு ஒத்துழைப்பையும் அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.