Home Blog Page 6008

அதிமுக அரசின் நாடகம் கலைந்து விட்டது – ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

தமிழ்நாட்டில் கோடைக்காலம் முடிவடைந்த பிறகும் கடுமையான வெயில் வாட்டி வரும் நிலையில், கூடுதல் கொடுமையாக மின்வெட்டும் மக்களை வாட்டி வதைக்கத் தொடங்கியிருக்கிறது. தினமும் 4 மணி நேரம் வரை மின்வெட்டு தொடர்வதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

தமிழகத்தின் மின் தேவையை நிறைவேற்றத் தேவையான அளவுக்கு மின் திட்டங்களை செயல்படுத்த தி.மு.க., அ.தி.மு.க. அரசுகள் தவறியதன் பயனாக கடந்த 9 ஆண்டுகளாக கடுமையான மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. காற்றாலைகள் மூலம் அதிக அளவில் மின்னுற்பத்தி செய்யப்படும் போது சில மாதங்கள் மட்டும் மின்வெட்டு குறைவதும், அதன்பின் மீண்டும் மின்வெட்டு உச்சத்தை அடைவதும் வாடிக்கையான ஒன்றாகி விட்டது.

காற்றாலைகள் மூலம் அதிக மின்சாரம் கிடைத்ததால் கடந்த சில வாரங்களாக கட்டுக்குள் இருந்த மின்வெட்டு இப்போது மீண்டும் தலை தூக்கியுள்ளது. கடந்த 21–ந்தேதி 365 மெகாவாட் மின் பற்றாக்குறை நிலவியது. இது 23–ந்தேதி 2333 மெகாவாட் ஆகவும், 24–ந்தேதி 2171 மெகாவாட் ஆகவும் அதிகரித்தது.

நேற்று அதிகபட்சமாக 975 மெகாவாட் மின்வெட்டு நிலவியது. தமிழகம் முழுவதும் இன்றும் கடும் மின்வெட்டு நீடிக்கிறது. காற்றாலைகள் மூலம் 2,000 மெகாவாட்டுக்கும் கூடுதலாக மின்சாரம் கிடைத்த போது தமிழகத்தில் மின்வெட்டு இல்லை. மாறாக காற்றாலை மின்சாரம் 1000 மெகாவாட்டுக்கும் கீழ் குறையும் போது மின்வெட்டு அதிகரிக்கிறது.

மின் தேவையை சமாளிக்கும் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படவில்லை என்பதும், காற்றாலைகள் தான் கைகொடுக்கின்றன என்பதும் இதன்மூலம் தெளிவாகிறது.

நேற்று முன்நாள் 24 ஆம் தேதி மாலை நிலவரப்படி தமிழகத்தின் ஒட்டுமொத்த மின் தேவை 13,058 மெகாவாட் ஆகும். ஆனால், ஒட்டு மொத்தமாக 11,633 மெகாவாட் மின்சாரம் மட்டுமே வினியோகிக்கப்பட்டிருக்கிறது.

இதில் தமிழ்நாடு மின்சார வாரியம் நேரடியாக உற்பத்தி செய்த மின்சாரத்தின் அளவு 4422 மெகாவாட் (அனல் மின்சாரம் 2885, நீர் மின்சாரம் 1262, எரிவாயு மின்சாரம் 275 மெகாவாட்) மட்டும் தான். நெய்வேலி மற்றும் மத்திய மின்தொகுப்பிலிருந்து 2196 மெகாவாட் மின்சாரம் பெறப்பட்டிருக்கிறது.

இவை தவிர 4731 மெகாவாட் மின்சாரம் தனியாரிடமிருந்து வாங்கப்பட்டிருக்கிறது. தனியாரிடமிருந்து வாங்கப்பட்ட மின்சாரத்தில் 799 மெகாவாட் மின்சாரம் 6 நிறுவனங்களிடமிருந்து யூனிட்டுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது.

3219 மெகாவாட் அதிகபட்சமாக ரூ.6.00 வரை விலை கொடுத்து கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. 713 மெகா வாட் மின்சாரம் மட்டுமே குறைந்த விலையில் காற்றாலைகளிடமிருந்து வாங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் நேற்றைய மின்னுற்பத்தி நிலவரமும் கிட்டத்தட்ட இதே நிலையில் தான் இருந்திருக்கிறது.

ஒரு மாநிலம் சொந்தமாக உற்பத்தி செய்யும் மின்சாரத்தை விட அதிக மின்சாரத்தை தனியாரிடம் இருந்து வாங்குவதற்காக வெட்கப்பட வேண்டும். தமிழகத்தின் ஒட்டுமொத்த மின் தேவையில் மூன்றில் ஒரு பங்கு மட்டும் தான் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் சொந்தமாக உற்பத்தி செய்யப்படுகிறது.

உண்மை நிலவரம் இவ்வாறு இருக்கும் போது, தமிழகத்தை மின்மிகை மாநிலமாக்கி விட்டதாகக்கூறி மக்களை ஏமாற்றும் முயற்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா ஈடுபட்டிருக்கிறார். 2011 ஆம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் ஒரு மெகாவாட் மின்சாரம் கூட சொந்தமாக திட்டமிட்டு உற்பத்தி செய்யப்படவில்லை.

தமிழ்நாட்டில் 10,000 மெகாவாட்டுக்கும் கூடுதலான அனல் மின் திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையிலேயே கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. அ.தி.மு.க. ஆட்சியில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மின் திட்டம், எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் ஆகிய இரு மின் திட்டங்களுக்கு மட்டும் தான் ஒப்பந்தம் விடப்பட்டது.

அவற்றிலும் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மின் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி அதை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து விட்டது. மற்றொரு எண்ணூர் மின் திட்டத்திற்கு ஒப்பந்தம் விடப்பட்டும் பணிகள் தீவிர மடையவில்லை.

உடன்குடி மின்திட்டத்திற்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் ஒப்பந்த நடைமுறையையே ரத்து செய்ததன் மூலம் அத்திட்டம் மேலும் தாமதமாகும் நிலையை ஏற்படுத்தியது அ.தி.மு.க. அரசு தான். மின்திட்டங்களை செயல்படுத்தாமல் விளம்பரங்கள் மூலமாக மாயையை ஏற்படுத்தி வந்த அ.தி.மு.க. அரசின் நாடகம் இப்போது கலைந்து விட்டது என மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இலங்கை அதிபர் சிறிசேனாவை அமெரிக்காவில் சந்தித்த பிரதமர் மோடி

ஐ.நா. சபையின் 70–வது ஆண்டு பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் சென்றுள்ளார். அங்கு அவர் உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்தார்.நிகழ்ச்சியின் இடையே ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்துள்ள இலங்கை அதிபர் மைத்திரி பால சிறிசேனாவையும் சந்தித்தார். இருவரும் சிறிது நேரம் பேசினார்கள்.

இதுகுறித்து வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் நிருபர்களிடம் கூறியதாவது:–

‘‘தலைவர்கள் சந்திப்பின் போது இரு நாட்டு உறவை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. சமீபத்தில் இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே இந்தியா வந்திருந்தார்.அப்போதும் இரு நாட்டு உறவை மேம்படுத்துவது குறித்தும், பல திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. சமீபத்தில் இலங்கையில் பாராளுமன்ற தேர்தலை வெற்றிகரமாக அதிபர் சிறிசேனா நடத்தி முடித்ததற்கு அவருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

இதன் மூலம் ஜனநாயகத்தின் மீது இலங்கை கொண்டுள்ள நம்பகத்தன்மை வெளிப்பட்டுள்ளது என்று அவர் புகழாரம் சூட்டினார். இலங்கையில் போர் நடந்த பகுதியில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன. இந்தியா சார்பில் அங்கு ரெயில்வே கட்டமைப்பு, மின் திட்டங்கள், வீடுகள் கட்டுதல் உள்ளிட்ட பல புதிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 37 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 46 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மனித உரிமைகள் கவுன்சில் தாக்கல் செய்துள்ள அறிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.ஐ.நா. சபை கூட்டத்தில் உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடி பேசினார். அப்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.

இது சர்வதேச சமூகத்திடம் இருந்து நம்பிக்கையை பெற தூண்டுதலாக இருக்கும்’’ என்றார். தற்போது உலகின் முக்கிய பிரச்சினையாக வறுமை உள்ளது. அதை 15 ஆண்டுகளில் ஒழிக்க திட்டம் தீட்டப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஐ.நா. சபையில் சர்வதேச நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல் அளித்தனர்.

அமைச்சரின் கல்லூரியில் மாணவர்கள் போராட்டம் – வகுப்பு அறை சூறை : மேலும் 2 மாணவர் தற்கொலை

ஆந்திர மாநில உள்ளாட்சி துறை அமைச்சராக இருப்பவர் நாராயணன். சந்திரபாபு நாயுடுவின் நண்பரான இவர் தேர்தலில் போட்டியிடாமல் அமைச்சர் ஆனார். பின்னர் எம்.எல்.சி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

அமைச்சர் நாராயணனுக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளது. இங்கு மாணவர்களை தேர்ச்சி பெற கடுமையான பயிற்சி அளிக்கப்படுவதாகவும், அதனால் ஏற்படும் மன அழுத்தத்தால் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதாகவும் புகார்கள் எழுப்பப்பட்டு வருகிறது.

இதுவரை 11 மாணவ– மாணவிகள் தற்கொலை செய்து இருப்பதாகவும், சந்திரபாபு நாயுடுவின் நண்பர் நிறுவனம் என்பதால் அதன் மீது அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் இந்த கல்வி நிறுவனத்தில் படித்த 2 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

கர்னூல் மாவட்டம் நன்னூரில் உள்ள நாராயணா ஜூனியர் கல்லூரியில் ஸ்ரீகாந்த் என்ற மாணவன் விடுதியில் தங்கி பிளஸ்–1 படித்து வந்தான்.

கணித தேர்வில் தோல்வி அடைந்த இவன் மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெற்றான். ஆனாலும் அவன் அவமரியாதையாக நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் விரக்தி அடைந்த ஸ்ரீகாந்த் விடுதி அறையில் தூக்கில் தொங்கினார். உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த அவனை சக மாணவர்கள் கர்னூல் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி இறந்து போனான்.

இதனால் ஆவேசம் அடைந்த மாணவர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சில மாணவர்கள் பள்ளிக்குள் புகந்து கண்ணாடி ஜன்னல்களை அடித்து நொறுக்கினர். மேஜை நாற்காலிகளை உடைத்து சூறையாடினார்கள்.

இதே போல் விஜயவாடாவில் உள்ள நிடமானூர் நாராயணா கல்லூரியில் பிரகாசம் மாவட்டம் வெந்தவாரி பேட்டையை சேர்ந்த பிளஸ்–1 மாணவன் அகில் பேஜ்குமார் ரெட்டி விடுதியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆத்திரம் அடைந்த மாணவர்கள் அகில் உடல் வைக்கப்பட்டு இருந்த சாமினேனி தனியார் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திமுக ஆட்சி அமைந்தால் மாணவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்

திமுக ஆட்சி அமைந்தால் மாணவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்

திமுக பொருளாளர் ஸ்டாலின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மாநிலமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.மதுரை மாவட்டத்தின் மாநகராட்சி பகுதியில் பகுதியில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட , அவர் மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்து உரையாற்றினார்.

திமுக பொருளாளர் ஸ்டாலின் மத்தியில் கூறியதாவது:-

மாணவர்களே மாற்றங்களை உருவாக்கப் போகிறவர்கள்,அவர்களுக்கு திமுக எப்போதும் துணை நிற்கும் என்றும், திமுக ஆட்சி அமையும் பட்சத்தில், மாணவர்களின் கோரிக்கைகள் உறுதியாக பரிசீலிக்கப்படும் என்று உறுதி கூறினார்.

சோ நலமாக உள்ளார்: குடும்ப மருத்துவர்

சென்னை:

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி நலமாக உள்ளதாக அவரது குடும்ப மருத்துவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக சுவாசக் கோளாறு காரணமாக அவ்வப்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் உடல் நலம் தேறி வீடு திரும்பி வந்தார் சோ.

கடந்த ஆகஸ்ட் மாதம்  பிரதமர் மோடி சென்னை வந்திருந்த போதும் சோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவரை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார் மோடி.

பின்னர் முதலமைச்சர் ஜெயலலிதாவும் சோவை சந்தித்து நலம் விசாரித்துச் சென்றார்.

இந்நிலையில் ஓரளவு உடல் நலம் தேறி வீடு திரும்பிய சோ ராமசாமிக்கு மீண்டும் நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து,  நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது.  இந்நிலையில் சோ நலமாக உள்ளார் என்றும், அவரது உடல் நலம் தேறி வருவதாகவும் குடும்ப மருத்துவர் விஜய சங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் கொண்டாட வேண்டிய அற்புதமான படம் கத்துக்குட்டி: வைகோ, பாரதிராஜா சிலிர்ப்பு

சென்னை:

நரேன் – சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கத்துக்குட்டி’ படத்தின் பிரத்யேகக் காட்சியை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சமீபத்தில் பார்த்தார். படம் அவருக்குப் பெரிதாகப் பிடித்துப்போக தனது செலவிலேயே அடுத்த பிரத்யேகக் காட்சியை சென்னை ஃபோர் பிரேம்ஸ் தியேட்டரில் ஏற்பாடு செய்த வைகோ, படத்தைப் பார்வையிட இயக்குநர் பாரதிராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு, தோழர் தியாகு, வழக்கறிஞர் சங்கர சுப்பு உள்ளிட்ட பலரையும் அழைத்திருந்தார். படத்தின் பிரத்யேகக் காட்சியைப் பார்வையிட்ட இயக்குநர் இமயம் பாரதிராஜா, ”ஒரு படத்தைப் பார்க்க வைகோ அழைக்கிறார் என்றாலே அந்தப் படம் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்பதை என்னால் யோசிக்க முடிந்தது. காரணம், வைகோ அந்தளவுக்குத் தேர்ந்த சினிமா ரசிகர். ஒவ்வொரு காட்சியையும் இயக்குநரின் நுணுக்கத்தை விட சிறப்பாகக் கவனிக்கக் கூடியவர். அதனால் ‘கத்துக்குட்டி’ படத்தில் ஏதோவொரு நல்ல விஷயம் நிச்சயம் இருக்கும் என நம்பித்தான் படம் பார்க்க வந்தேன். ஒரு நல்ல விஷயம் அல்ல. பல நல்ல விஷயங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடியோடு கலகலப்பாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் தம்பி சரவணன். குறிப்பாக படத்தில் சூரியின் காமெடி பெரிதாகக் கொண்டாட வைக்கும். நல்ல விஷயங்களை நாடக பாணியில் சொல்லாமல் சுவாரஸ்யமாகச் சொல்லி, பார்ப்பவர் மனதைக் கொக்கிப் போட்டு இழுக்க இந்த இயக்குநர் கற்று வைத்திருக்கிறார். வசனங்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு கூர்மையாக இருக்கின்றன. தஞ்சை மக்களின் கொண்டாட்டங்களையும் கூடவே அவர்களின் அன்றாடத் துயரங்களையும் மிகச் சரியாகப் பதிவு செய்திருக்கும் ‘கத்துக்குட்டி’ திரைப்படம் மாபெரும் வெற்றியை அடைய வேண்டும். இந்தப் படத்தை ஜெயிக்க வைக்க வேண்டியது தமிழ் மக்களின் கடமை!” என்றார் சிலிர்ப்போடு.

அடுத்து பேசிய வைகோ, ”அரசியல் கட்சிகளின் போராட்டங்களால் சாதிக்க முடியாததை ஒரு திரைப்படத்தால் சாதிக்க முடியும் என நிரூபித்திருக்கிறார் தம்பி இரா.சரவணன். கிராமத்து வாழவியலை அவ்வளவு அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது இந்த ‘கத்துக்குட்டி’ படம். முள்ளி வாய்க்கால் கொடுமைக்குப் பிறகு நான் படம் பார்ப்பதை அடியோடு குறைத்துக் கொண்டேன். ஆனால், ‘கத்துக்குட்டி’ படத்தை சில நாட்களுக்குள்ளேயே இரண்டாவது முறையாகப் பார்க்கிறேன். இந்தப் படத்தின் அடிநாதமான விவசாயப் பிடிப்பான கதையும், திரைக்கதைத் திருப்பங்களும், நுட்பமான வசனங்களும், கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சியமைப்புகளும், வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது மாதிரியான கருத்துச் சொல்லும் பாணியும் என்னை இந்தப் படத்தின் பெரிய ரசிகனாக்கிவிட்டன.” எனப் பாராட்டியவர் ஒருகட்டத்தில் கையெடுத்துக் கும்பிட்டு, ”இந்தப் படத்தை பாக்ஸ் ஆபிஸ் வெற்றியாக மாற்றி நமக்காக சோறு போடும் விவசாய ஜீவன்களுக்கு நன்றி காட்டுபவர்களாக தமிழக ரசிகர்கள் பெரும்பணி செய்ய வேண்டும். ‘கத்துக்குட்டி’ படத்தைக் கடைக்கோடி மக்களின் பார்வைக்கும் கொண்டு சென்று மாபெரும் புரட்சியை நாம் நிகழ்த்த வேண்டும். ‘கத்துக்குட்டி’ தரணி போற்றும் தஞ்சை தமிழ் மக்களின் பேரழகான காவியம் என்றால் அதில் கொஞ்சமும் மிகை இல்லை!” என்றார் நெகிழ்ந்துபோய்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், ”மக்களின் வலியைப் பேசுகின்ற படங்கள் பெரிதாக ஓடுவது கிடையாது. இந்த விஷயத்தை நன்றாகப் புரிந்துகொண்டு சொல்லும் விதமாகச் சொன்னால் எதையும் சரியாகச் சொல்லலாம் என நிரூபித்திருக்கிறார் ‘கத்துக்குட்டி’ இயக்குநர். விவசாய மக்களின் துயரங்களை இவ்வளவு ஆழமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்திருப்பதும், அதனை அனைத்து தரப்பிலான மக்களுக்கும் கொண்டு செல்லும் வகையில் நகைச்சுவையாகச் சொல்லியிருப்பதும் பாராட்டத்தக்கது. ‘கத்துக்குட்டி’ மக்களுக்கான படம்… மாபெரும் புரட்சியை இந்த மண்ணில் நிகழ்த்தக்கூடிய படம்!” என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு, ”இந்த ‘கத்துக்குட்டி’ படத்தில் சொல்லப்படாத அரசியல் இல்லை. பேசப்படாத பிரச்னைகள் இல்லை. அலசப்படாத விவாதங்கள் இல்லை. ஆனால், இவ்வளவு விஷயங்களையும் சீரியஸாகச் சொல்லாமல், எப்படி எல்லாவிதத் துயரங்களையும் சிரித்த முகத்தோடு தாங்கிக் கொண்டு விவசாய ஜீவன்கள் இந்த உலகுக்குப் படியளக்கிறார்களோ… அதே பாணியில் சொல்லி இருக்கிறார் இயக்குநர். குறிப்பாக இன்றைக்கும் கிராமங்களை ஆட்டிப் படைக்கும் சாதியக் கொடூரத்தை அட்மாஸ்பியரில் இருக்கும் ஒரு பாட்டியை வைத்துப் போகிற போக்கில் நெஞ்சைப் பிளந்திருக்கிறார் இயக்குநர் சரவணன். இத்தகைய படைப்புகளை தமிழ் மக்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டும்.” என்றார்.

மகத்தான பாராட்டுகளைப் பெற்றிருக்கும் ‘கத்துக்குட்டி’ திரைப்படம் அக்டோபர் முதல் தேதி திரைக்கு வருகிறது.

போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

சட்டீஸ்கர் மாநிலம் பிஜபூர் பகுதியில் மாவோயிஸ்ட்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில்  இரண்டு மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாது என்ற அரசின் அறிவிப்புக்கு தமிழருவி மணியன் கண்டனம்

சென்னை:

மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாது என்று அரசு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவரான தமிழருவி மணியன் இன்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாது என்று மாநில அரசு திட்டவட்டமாக அறிவித்து விட்டது.  

மதுவிலக்கைப் படிப்படியாகக் கொண்டு வரும் நோக்கமும் இந்த அரசுக்கு இல்லை என்று புரிந்துவிட்டது.  மக்கள் நலன் சார்ந்த சிந்தனைக்கும் நம் மாநில அரசுக்கும் எள்ளளவும் சம்மந்தமில்லை என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகிவிட்டது.  மக்களின் ஆர்ப்பாட்டங்களும், அழுகைக் குரல்களும், மதுவால் நிகழும் மரணங்களும் அ.தி.மு.க. அரசின் மனச்சான்றைத் தட்டி எழுப்ப முடியவில்லை.
 
கண்களையும் காதுகளையும் வேண்டுமென்றெ மூடிக்கொண்டு தவறான பாதையில் தொடர்ந்து நடைபோடும் இந்த அரசை ஆட்சிப்பீடத்தில்   இருந்து அகற்றும் நேரம் நெருங்கிவிட்டது.   இந்த ஆட்சியை வீழ்த்தி விட்டு, ஆர்வத்துடன் காத்திருக்கும் தி.மு.க.வை அரியாசனத்தில் அமர்த்தினால் ஒரு தீமையைத் தவிர்ப்பதற்கு  இன்னொரு தீமையை அரவணைத்துக் கொண்ட மன்னிக்க முடியாத தவறாகவே அது முடியும்.   
 
மதுவைக் கொண்டு வந்தது தி.மு.க.  மது வருவாயை மட்டுமே பெரிதாக நம்பி அரசை நடத்துவது அ.தி.மு.க.    

இந்த இரு கட்சிகளையும் ஆட்சிப் பீடத்தில் இனி அமராமல் பார்த்துக் கொள்வதே மதுவிலக்கை நாடுபவர்களின் முதற்கடமையாக இருக்க வேண்டும்.  தமிழகத்தில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று எல்லா எதிர்க்கட்சிகளும் வலிமையாகக் குரல் கொடுக்கின்றன. மதுவால் தமிழகத்தைப் பாழ்படுத்திய இரு திராவிடக் கட்சிகளையும், தமிழினத்தை ஈழத்தில் அழிப்பதற்குத் துணை நின்ற காங்கிரஸையும், இந்துத்துவத்தை வெளிப்படையாக வேகப்படுத்தும்  பா.ஜ.க.வையும் முற்றாகத் தவிர்த்துவிட்டு  தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., த.மா.கா.,  ம.ம.க.,  இடது சாரிகள்,  தலித்  அமைப்புகள்  ஆகிய   கட்சிகள்
 
ஒன்றினைந்து வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் வலிமையான கூட்டணி அமைத்து களம் கண்டால், மக்கள் நலன் காக்க முனையும் இந்தக் கூட்டணியின் பக்கம் வாக்காளர்கள் தங்கள் பார்வையை நிச்சயம் திருப்புவார்கள்.   தேர்தல் முடிவு இரு திராவிடக் கட்சிகளுக்கும் எதிராக அமையும்.  தமிழகத்தில்  புதிதாய் ஒரு கூட்டணி ஆட்சி மலரும்.   இந்தச் சமூகக் கடமையைச் செய்வதற்கு இக்கட்சிகள் அனைத்தும் முடிவெடுத்தால்  உண்மையான மதுவற்ற மாநிலத்தை உருவாக்க இவை பூரணமாக பாடுபடுவதாய் நம்பலாம்.  இவை அனைத்தும் ஓர்  அணியில் ஒன்று பட்டு களம் அமைக்க காந்திய மக்கள் இயக்கம் எல்லா வகையிலும் தன் பங்களிப்பைத் தரத் தயாராக இருக்கிறது.
 
இதைச் செய்வதற்குத் தவறினால் மதுவிலக்குக்குக் குரல் கொடுக்கும் இந்தக் கட்சிகள் அனைத்தும் தனித்தனியாக நின்று அ.தி.மு.க.,வே மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துவிடும்.  இக்கட்சிகள் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் பொய்மையாளர்களின் புகலிடங்கள் என்றும்,   இவை  முன் வைக்கும் தி.மு.க., அ.தி.மு.க., எதிர்ப்புக் கோஷங்கள் அனைத்தும் போலித்தனமானவை என்றும் மாற்று அரசியலை நாடும் வாக்காளர்களால் பொருள் கொள்ளப்படும்.

தமிழகத்தை மீண்டும் வாட்டும் மின்வெட்டு: ராமதாஸ்

சென்னை:
தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு வாட்டுவதாகவும், அரசு அதை மூடி மறைப்பதாகவும் கூறியுள்ளார் பாமக நிறுவுனர் ராமதாஸ்.

அவர் இன்று இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் கோடைக்காலம் முடிவடைந்த பிறகும் கடுமையான வெயில் வாட்டி வரும் நிலையில்,  கூடுதல் கொடுமையாக மின்வெட்டும் மக்களை வாட்டி வதைக்கத் தொடங்கியிருக்கிறது. தினமும் 4 மணி நேரம் வரை மின்வெட்டு தொடர்வதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

தமிழகத்தின் மின் தேவையை நிறைவேற்றத் தேவையான அளவுக்கு மின் திட்டங்களை செயல்படுத்த தி.மு.க., அ.தி.மு.க. அரசுகள் தவறியதன் பயனாக கடந்த 9 ஆண்டுகளாக கடுமையான மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. காற்றாலைகள் மூலம் அதிக அளவில் மின்னுற்பத்தி செய்யப்படும் போது சில மாதங்கள் மட்டும் மின்வெட்டு குறைவதும், அதன்பின் மீண்டும் மின்வெட்டு உச்சத்தை அடைவதும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. காற்றாலைகள் மூலம் அதிக மின்சாரம் கிடைத்ததால்  கடந்த சில வாரங்களாக கட்டுக்குள் இருந்த மின்வெட்டு இப்போது மீண்டும் தலை தூக்கியுள்ளது. கடந்த 21 ஆம் தேதி 365 மெகாவாட் மின் பற்றாக்குறை நிலவியது. இது 23 ஆம் தேதி 2333 மெகாவாட் ஆகவும், 24 ஆம் தேதி  2171 மெகாவாட் ஆகவும் அதிகரித்தது. நேற்று அதிகபட்சமாக  975 மெகாவாட் மின்வெட்டு நிலவியது. தமிழகம் முழுவதும் இன்றும் கடும் மின்வெட்டு நீடிக்கிறது.

காற்றாலைகள் மூலம் 2,000 மெகாவாட்டுக்கும் கூடுதலாக மின்சாரம் கிடைத்த போது தமிழகத்தில் மின்வெட்டு இல்லை. மாறாக காற்றாலை மின்சாரம் 1000 மெகாவாட்டுக்கும் கீழ் குறையும் போது மின்வெட்டு அதிகரிக்கிறது. மின் தேவையை சமாளிக்கும் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட வில்லை என்பதும், காற்றாலைகள் தான் கைகொடுக்கின்றன என்பதும் இதன்மூலம் தெளிவாகிறது. கடந்த ஒன்றாம் தேதி தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா,‘‘ மின்துறையில்  தமிழகம் தன்னிறைவு பெறும் அளவுக்கு கடந்த 4 ஆண்டுகளில் எனது அரசு அளப்பறிய சாதனைகளை படைத்திருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் கடந்த நான்கரை ஆண்டுகளில் 5954 மெகாவாட் மின்சாரம் மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக மக்களுக்கு தரமான மற்றும் தடையில்லாத மின்சாரம் கிடைக்கப்பெற்று வருகிறது’’ என்று பெருமிதத்துடன் கூறினார். ஆனால், அவரது வார்த்தைகள் உண்மையல்ல என்பது இப்போது தெளிவாகியிருக்கிறது. தமிழக மின்நிலைமை மிக மோசமான நிலையில் இருப்பதை தெளிவான புள்ளிவிவரங்களுடன் என்னால் விளக்க முடியும்.

உதாரணமாக நேற்று முன்நாள் 24 ஆம் தேதி மாலை நிலவரப்படி தமிழகத்தின் ஒட்டு மொத்த மின்  தேவை 13,058 மெகாவாட் ஆகும். ஆனால், ஒட்டுமொத்தமாக 11,633 மெகாவாட் மின்சாரம் மட்டுமே வினியோகிக்கப்பட்டிருக்கிறது. இதில் தமிழ்நாடு மின்சார வாரியம் நேரடியாக உற்பத்தி செய்த மின்சாரத்தின் அளவு 4422 மெகாவாட் (அனல் மின்சாரம் 2885, நீர் மின்சாரம் 1262, எரிவாயு மின்சாரம் 275 மெகாவாட்) மட்டும் தான். நெய்வேலி மற்றும் மத்திய மின்தொகுப்பிலிருந்து 2196 மெகாவாட் மின்சாரம் பெறப்பட்டிருக்கிறது. இவை தவிர 4731 மெகாவாட் மின்சாரம் தனியாரிடமிருந்து  வாங்கப்பட்டிருக்கிறது. தனியாரிடமிருந்து வாங்கப்பட்ட மின்சாரத்தில் 799 மெகாவாட் மின்சாரம் 6 நிறுவனங்களிடமிருந்து யூனிட்டுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை  விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது. 3219 மெகாவாட் அதிகபட்சமாக ரூ.6.00 வரை விலை கொடுத்து கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது.713  மெகாவாட் மின்சாரம் மட்டுமே குறைந்த விலையில் காற்றாலைகளிடமிருந்து வாங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் நேற்றைய மின்னுற்பத்தி நிலவரமும் கிட்டத்தட்ட இதே நிலையில் தான் இருந்திருக்கிறது.

ஒரு மாநிலம் சொந்தமாக உற்பத்தி செய்யும் மின்சாரத்தை விட அதிக மின்சாரத்தை தனியாரிடம் இருந்து வாங்குவதற்காக வெட்கப்பட வேண்டும். தமிழகத்தின் ஒட்டுமொத்த மின் தேவையில் மூன்றில் ஒரு பங்கு மட்டும் தான் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் சொந்தமாக உற்பத்தி செய்யப்படுகிறது. உண்மை நிலவரம் இவ்வாறு இருக்கும் போது, தமிழகத்தை மின்மிகை மாநிலமாக்கி விட்டதாகக்கூறி மக்களை ஏமாற்றும் முயற்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா ஈடுபட்டிருக்கிறார். 2011 ஆம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் ஒரு மெகாவாட் மின்சாரம் கூட சொந்தமாக திட்டமிட்டு உற்பத்தி செய்யப்படவில்லை. மாறாக வெற்று அறிவிப்புகள் தான் வெளியிடப்படுகின்றன. தமிழ்நாட்டில் 10,000 மெகாவாட்டுக்கும் கூடுதலான அனல் மின் திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையிலேயே கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. அ.தி.மு.க. ஆட்சியில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மின் திட்டம்,  எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் ஆகிய இரு மின் திட்டங்களுக்கு மட்டும் தான் ஒப்பந்தம் விடப்பட்டது. அவற்றிலும்  எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மின் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி அதை சென்னை உயர்நீதிமன்றம்
ரத்து செய்து விட்டது. மற்றொரு எண்ணூர் மின் திட்டத்திற்கு ஒப்பந்தம் விடப்பட்டும் பணிகள் தீவிரமடையவில்லை.

உடன்குடி மின்திட்டத்திற்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் ஒப்பந்த நடைமுறையையே ரத்து செய்ததன் மூலம் அத்திட்டம்  மேலும் தாமதமாகும் நிலையை ஏற்படுத்தியது அ.தி.மு.க. அரசு தான். மின்திட்டங்களை செயல்படுத்தாமல் விளம்பரங்கள் மூலமாக மாயையை ஏற்படுத்தி வந்த அ.தி.மு.க. அரசின் நாடகம் இப்போது கலைந்து விட்டது. மக்களை ஏமாற்றிய அ.தி.மு.க.வுக்கு வரும் தேர்தலில் தமிழக மக்களே சரியான பாடம் புகட்டுவர்.

தீவிரவாத அமைப்பால் உலகுக்கு அச்சுறுத்தல் : இந்திய பிரதமர்  மோடி

ஐக்கிய நாடுகள் சபையின் 70-வது பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வந்துள்ள இந்திய பிரதமர்  மோடி, ஜோர்டான் நாட்டு மன்னர் அப்துல்லாவை சந்தித்து இந்தியா-ஜோர்டான் இடையிலான பரஸ்பர உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக  ஆலோசனை நடத்தினார்.

 சர்வதேச தீவிரவாதத்தை ஒழித்துக்கட்ட மன்னர் அப்துல்லா அளித்துவரும் அளப்பரிய பங்களிப்புக்கு பாராட்டு தெரிவித்த மோடி, ஈராக் மற்றும் சிரியாவில் சிக்கித்தவித்த இந்தியர்களை பத்திரமாக தாய்நாட்டுக்கு அனுப்பி வைப்பதில் ஜோர்டான் அரசு செய்த உதவிக்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.

 சர்வதேச சமுதாயத்துக்கு விடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சவாலாகவும், அச்சுறுத்தலாகவும் திகழும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளின் தொல்லையை ஒழித்துக்கட்ட உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து முன்வர வேண்டும் என மோடி குறிப்பிட்டார்.

 சர்வதேச சமுதாயத்துக்கு விடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சவாலாக ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகளை மதத்தோடு இணைத்துப் பார்க்காமல், இதுபோன்ற அமைப்புகளை மதத்தில் இருந்து துண்டித்து, தனிமைப்படுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

 இளைஞர்களை மதவாதிகளாக மாற்றுவது மற்றும் தீவிரவாதம் தொடர்பான தகவல்களை பரப்புவது போன்றவற்றை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும் பிரதமர் மோடியும், மன்னர் அப்துல்லாவும் இந்த ஆலோசனையின்போது விவாதித்தனர்.

 மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க ஜோர்டான் ஆதரவு அளிக்க வேண்டும் என மன்னர் அப்துல்லாவிடம் மோடி கேட்டுக் கொண்டார். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு எப்போதுமே ஜோர்டான் முழுமையான ஆதரவு தெரிவித்து வந்துள்ளதாகவும், இந்த ஆதரவு என்றும் தொடரும் என்றும் மன்னர் அப்துல்லா வாக்குறுதி அளித்துள்ளார்.