Home Blog Page 6214

இளைஞர் குறித்து வாட்ஸ்-அப்பில் அவதூறு: பெண்ணுக்கு 70 சவுக்கடி

இளைஞர் ஒருவர் குறித்து அவதூறான செய்தியை வாட்ஸ் அப்பில் உலவவிட்ட பெண்ணுக்கு சவுதியில் 70 சவுக்கடி தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர், ‘வாட்ஸ் அப்’பில் இளைஞர் ஒருவர் குறித்து அவதூறாக செய்தி பரப்பினார். இது குறித்து அந்த இளைஞர் போலீசில் புகார் அளித்தார். சவுதி அரேபிய சட்டப்படி தொழில்நுட்ப கருவிகள் மூலம் அடுத்தவர்களை அவமதிப்பதும் துன்புறுத்துவதும் குற்றம் என்பதால்,அந்தப் பெண் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்தப் பெண்ணுக்கு ரூ.3,28,000 அபராதம் விதித்தது. அதற்கு அந்த இளைஞர் ஒப்புக் கொள்ளவில்லை. அந்தப் பெண் பரப்பிய அவதூறு மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதால், கடுமையாக தண்டிக்க வேண்டும் எனக் கோரினார். இதை அடுத்து, அந்தப் பெண்ணுக்கு 70 சவுக்கடி தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகள் நாளை தொடக்கம்

சென்னை: எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு வியாழக்கிழமை நாளை தொடங்குகிறது. இந்தத் தேர்வை 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். தேர்வை கண்காணிக்க 5 ஆயிரத்து 200 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் நாளை தொடங்கி ஏப்ரல் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வு 11 ஆயிரத்து 827 பள்ளிகளில் நடக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி, தேர்வை 5 லட்சத்து 40 ஆயிரத்து 505 மாணவர்களும், 5 லட்சத்து 32 ஆயிரத்து 186 மாணவிகள் உள்பட 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 பேர் எழுதுகின்றனர். எஸ்.எஸ்.எல்.சி, தேர்வை 50 ஆயிரத்து 429 தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். எஸ்.எஸ்.எல்.சி, தேர்வு மொத்தத்தில் 3 ஆயிரத்து 298 மையங்களிலும் நடக்கிறது. சென்னையில் மட்டும் எஸ்.எஸ்.எல்.சி தேர்வை 578 பள்ளிக்கூட மாணவர்கள், 209 தேர்வு மையங்களில் எழுதுகின்றனர். 28 ஆயிரத்து 124 மாணவர்களும், 29 ஆயிரத்து 230 மாணவிகளும் எழுதுகின்றனர். புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி, தேர்வுகளை 291 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 48 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். தேர்வை 9 ஆயிரத்து 703 மாணவர்களும், 9 ஆயிரத்து 856 மாணவிகளும் எழுதுகின்றனர். கடந்த ஆண்டைவிட எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை கூடுதலாக 33 ஆயிரத்து 816 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். பள்ளிக் கல்வித்துறை அரசாணைப் படி அனைத்து இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்களும் தேர்வு முடியும் நாள் வரை, தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்டங்களில், கண்காணிப்புப் பணியினை மேற்கொள்ள உள்ளனர். முக்கியப் பாடங்களுக்கு, அண்ணா பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் அடங்கிய மேற்பார்வை குழுவினர் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் சிறப்புப் பார்வையாளர்கள் கண்காணிப்புப் பணியினை மேற்கொள்ள உள்ளனர்.

மீண்டும் நடிப்புக் களத்தில் நடிகர் செந்தில்

senthil சென்னை: தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிப்பால் தனக்கென ஒரு தனியிடம் பிடித்தவர் நடிகர் செந்தில். இவர், நடிகர் கவுண்டமணியுடன் நடித்த நகைச்சுவைக் காட்சிகள் இன்றும் கூட மிகவும் பிரபலமானவை. சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்த இவர் கடந்த சில வருடங்களாக நடிப்பதை குறைத்துக் கொண்டார். அரசியலில் கவனம் செலுத்தி வந்த இவர் தற்போது மீண்டும் நடிப்புப் பாதைக்கு திரும்பியிருக்கிறார். இறுதியாக இவர், சிம்புதேவன் இயக்கிய ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’ எனும் படத்தில் நடித்தார். தற்போது, நடிகர் செந்தில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு ‘கள்ளப்படம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். படத்தை மிஷ்கினின் உதவியாளர் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் செந்திலாகவோ அல்லது புரொடக்‌ஷன் மானேஜராகவோ வரலாம் என கூறப்படுகிறது. செந்திலின் கதாபாத்திரத்தை ரகசியமாக வைத்திருக்கிறார்களாம். நான்கு காட்சிகளில் மட்டுமே நடிகர் செந்தில் நடித்திருந்தாலும், படம் முழுக்க அவர் வருவது போல் கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சினிமா தொடர்பான இந்தப் படம் வரும் மார்ச் 20ஆம் தேதி திரைக்கு வருகிறது குறிப்பிடத்தக்கது. படத்தை மிஷ்கின் வெளியிடுகிறார்.

தேசிய புகைப்படம் மற்றும் காணொளி பயிலரங்கம் நாளை துவக்கம்

புது தில்லி; தேசிய புகைப்படம் மற்றும் காணொளி (வீடியோ) ஒருநாள் பயிலரங்கு நாளை நடைபெறவுள்ளது. மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் முதன் முதலில் நடத்தும் இந்த பயிலரங்கு புது தில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் நடைபெறும். மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் கர்னல். ராஜ்யவர்தன் ரத்தோர் இதனை துவக்கிவைப்பார். ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், மூன்றாவது தேசிய புகைப்பட விருதுகளில் வாழ்நாள் சாதனை விருது பெற்ற புகைப்பட கலைஞர் திரு. ராஜேஷ் பேடி உள்ளிட்ட பல வல்லுனர்கள் இந்த பயிலரங்கில் பயிற்சி அளிக்க உள்ளனர். புகைப்பட பிரிவு, பொதிகை உட்பட 25 மத்திய அரசு நிறுவனங்களின் அலுவலர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். புகைப்படம் பயிலரங்கில் 100 அலுவலர்களும் காணொளி பயிலரங்கில் ­40 பேர் பயிற்சி பெறுவார். இந்த துறைகளில் உள்ள நவீன தொழில்நுட்பம், அதன் பயன்பாட்டு முறை, துறை வரலாறு போன்றவை குறித்த கருத்தரங்குகள் நடைபெறும்.

நான்காவது தேசிய புகைப்பட விருதுகள்: அருண் ஜேட்லி வழங்குகிறார்

புதுதில்லி: நான்காவது தேசிய புகைப்பட விருதுகள் நாளை மறுநாள் அதாவது மார்ச் 20, 2015 புது தில்லியில் வழங்கப்படவுள்ளது. இந்த விருதுகளை மத்திய நிதி, நிறுவனங்கள் விவகாரம் மற்றும் தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் அருண் ஜெட்லி வழங்குவார். விருது வழங்கும் நிகழ்ச்சி புது தில்லியில் உள்ள மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் தேசிய ஊடக மையத்தில் நடைபெறும். புகைப்பட துறையில் உள்ள சிறந்த திறமையாளர்களை கௌரவிக்கும் நோக்கத்தோடு இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகிறது. “ஆண்டின் சிறந்த புகைப்படக் கலைஞர்” விருது மற்றும் புகைப்பட கலை வல்லுனர்கள், பொழுதுபோக்கு புகைப்பட கலைஞர்கள் என இரு பிரிவுகளிலும் “சிறப்பு குறிப்பு விருது” வழங்கப்படும். இதைத்தவிர தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் புகைப்பட துறைகளில் பல சாதனைகளை பெற்றதற்காக வாழ்நாள் சாதனை விருதையும் இந்த அமைச்சகம் வழங்குகிறது. புகைப்பட கலை வல்லுனர்களுக்கு “எனது பாரதம் தூய்மையான பாரதம்” என்ற தலைப்பும் பொழுதுபோக்கு புகைப்பட கலைஞர்களுக்கு “தாயும்சேயும்” என்ற தலைப்பும் வழங்கப்பட்டுள்ளது. ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழு விருதுக்கான வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும். தேசிய புகைப்பட விருதுகள் 2010 ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த விழா முதன்முதலில் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் புகைப்படப் பிரிவின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியோடு சேர்த்து கொண்டாடப்பட்டது. புகைப்படப் பிரிவு நாட்டின் மிகப்பெரிய புகைப்பட தயாரிப்பு மற்றும் ஆவணங்களை பிரிவுகளில் ஒன்றாகும்.

குஜராத்தின் 13 பத்திரிகையாளர்களுக்கு பதுக்பாய் தீட்சித் விருது: வழங்கினார் மோடி

புதுதில்லி பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தை சேர்ந்த 13 பத்திரிகையாளர்களுக்கு பதுக்பாய் தீட்சித் விருதினை அளித்தார். இந்த விருதுகளை சூரத் ஷாஹெர் பத்ரகார் கல்யாண் நிதி நிறுவனம் வழங்கியது. இந்த விருதினை பெற்ற பத்திரிகையாளர்களை பிரதமர் பாராட்டினார். சி. ஆர். பாட்டில் உட்பட நாடுளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து திமுக மார்ச் 20ல் ஆர்ப்பாட்டம்

சென்னை: மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம், தமிழக வேளாண் துறை அதிகாரி ஒருவரின் தற்கொலை ஆகியவற்றில் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து மார்ச் 20ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக திமுக தெரிவித்துள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையிலும், சென்னை ஆட்சியர் அலுவலகம் முன் கட்சி பொதுச் செயலர் அன்பழகன் தலைமையிலும், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மு.க.ஸ்டாலின் தலைமையிலும், வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகில் துரைமுருகன் தலைமையிலும் ஆர்ப்பட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்பயா ஆவணப் படத்துக்கு தடை நீட்டிப்பு

புது தில்லி நிர்பயா ஆவணப் படத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு அவகாசம் கேட்டுள்ளதால், படத்தை ஒளிபரப்ப விதிக்கப்பட்டுள்ள தடையை ஏப்ரல் 15ம் தேதி வரை நீட்டித்து தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, நிர்பயா ஆவணப் படத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ள தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு, தில்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஆவணப் படத்துக்கு தடை விதிக்கப்பட்டது ஏன் என மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பியது. மேலும் தடையை நீக்கக் கோரும் பொது நல மனு குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அது கேட்டுக் கொண்டது

மேற்கு வங்க கன்னியாஸ்திரி பலாத்கார சம்பவம்: மனித உரிமைக் கழகம் நோட்டீஸ்

புதுதில்லி : மேற்கு வங்கத்தில் கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, மேற்கு வங்க தலைமை செயலர், காவல் துறை ஆணையர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் கழகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தென்னாப்பிரிக்கா அபார வெற்றி: சறுக்கியது இலங்கை

உலகக் கோப்பை போட்டிகளில் இன்று நடைபெற்ற முதல் காலிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 37.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 133 ரன் எடுத்தது. அடுத்து விளையாடிய தென்னாபிரிக்க அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 18 ஓவரில் வெற்றிக்குத் தேவையான 134 ரன்களைப் பெற்று 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.