புது தில்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பது குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மசோதாக்கள் சில நிறைவேற்றப் பட வேண்டியிருப்பதால், கூட்டத் தொடரை இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. புதன்கிழமை இன்று காலை நிலக்கரி மற்றும் சுரங்க மசோதாக்கள் மீதான தேர்வுக் குழு அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிலக்கரி மசோதா மீதான தேர்வுக் குழு அறிக்கை எந்த வித திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமலும் ஏற்கப்பட்டது. அதேநேரம், சுரங்க மசோதா மீதான தேர்வுக்குழு அறிக்கையில் 2 திருத்தங்கள் மட்டும் மேற்கொள்ளப்பட்டு ஏற்கப்பட்டது. ஆனால் மசோதாக்களை தேர்வுக் குழுவுக்கு அனுப்பியது குறித்து பிரச்னை எழுப்பி மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று காலை நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான அமைச்சரவைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில், நிலக்கரி மற்றும் சுரங்க மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு வசதியாக பட்ஜெட் கூட்டத் தொடரை மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், திரிணமூல் காங்கிரஸ், பிஜூ ஜனதா தள கட்சிகள் ஆதரவு இருப்பதால் மசோத்தாக்கள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தப்பிக்க எண்ணி தங்கக் கட்டிகளை விழுங்கி கடத்தியவருக்கு வாழைப்பழ சிகிச்சை
திருச்சி: அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்க எண்ணி தங்கக் கட்டிகளை விழுங்கிய நபருக்கு வாழைப்பழங்கள் கொடுகப்பட்டு சிகிச்சை நடைபெற்று வருகிறது. திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று மலேசியாவில் இருந்து வந்த தனியார் விமானத்தில் பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகப்படும்படி வந்தார் ஒருவர். திருச்சி ஆழ்வார்தோப்பைச் சேர்ந்த அப்துல் வகாப் (55) என்ற அவரைப் பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது அவர் மீது சந்தேகம் வலுத்ததால், அதிகாரிகள் அவரை நவீன ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்தனர். அப்போது அவர் வாய் வழியாக 15 தங்கக் கட்டிகளை விழுங்கியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து வயிற்றுக்குள் இருக்கும் தங்கக் கட்டிகளை வெளியில் எடுக்க முடிவு செய்த அதிகாரிகள், அவரை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு வாழைப்பழம் அதிக அளவில் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் விலகல்
உலகக் கோப்பை போட்டிகளில் முக்கியக் கட்டமான காலிறுதியில் பாகிஸ்தானுக்கு அடுத்த போட்டி வரும் 20ம் தேதி நடக்கவுள்ளது. அடிலெய்டில் நடைபெறும் இந்தப் போட்டியில் முக்கிய அணியான ஆஸ்திரேலியாவுடன் பாகிஸ்தான் மோதுகிறது இந்நிலிலையில் இந்தப் போட்டியில் பாகிஸ்தானின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது இர்பான் காயம் காரணமாக பங்கேற்ற இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இர்பானுக்கு இடுப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தால் அவர் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முகமது இர்பானுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரது ஸ்கேன் அறிக்கையில் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. இதனால் அவர் எஞ்சிய போட்டியில் இருந்து விலகியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. இது பாகிஸ்தானுக்கு ஒரு பின்னடைவாகக் கருதப் படுகிறது.
அதிபர் இல்லாவிடில் என்ன; பிரதமருக்கு போட்டியிடலாமே! ராஜபட்ச யோசனை!
கொழும்பு: இலங்கையின் பிரதமர் பதவியைக் குறிவைத்து இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபட்ச இயங்குகிறார் என்று கூறப்படுகிறது. அவர், தனது கட்சியில் இருந்து விலகி தொழிலாளர் கட்சி வேட்பாளராக இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறாராம். இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி போன நிலையில் தமது கட்சி வேட்பாளராகப் போட்டியிட தமக்கு வாய்ப்பு கிடைக்காது என்பதால் கட்சி மாறி, இலங்கைத் தொழிலாளர் கட்சி வேட்பாளராக வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க ராஜபட்ச திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக முதல் கட்ட பேச்சுவார்த்தைகளை இலங்கை தொழிலாளர் கட்சி தலைவற் ஏ.எஸ்.பி. லியாங்கேவுடன் ராஜபட்ச நடத்தியதாக இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் இலங்கை பிரதமர் தேர்தலில் தொழிலாளர் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராஜபட்ச களமிறங்குவார் எனக் கூறப்படுகிறது. 2 முறைக்கு மேல் அதிபர் பதவியில் ஒருவர் அமர முடியாது என்று அதிபர் ஆட்சி முறையில் திருத்தம் செய்வதால் அந்த வாய்ப்பு ராஜபட்சவுக்கு பறிபோகும். முன்னதாக ராஜபட்ச தனக்காகவே இந்த சட்டத்தில் சாதகமாக திருத்தம் கொண்டு வந்தார். புதிய அரசு அதை நீக்குகிறது. இந்நிலையில், அவர் பிரதமர் வேட்பாளராக முயற்சி செய்துவருகிறார் என இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மோடியின் விவசாயிகளுக்கான ’மன் கி பாத்”: மார்ச் 22ல்!
புது தில்லி: பிரதமர் மோடியின் அடுத்த மன் கி பாத் நிகழ்ச்சி, விவசாயிகளுக்கானது. அது வரும் மார்ச் 22ம் தேதி முற்பகல் 11 மணிக்கு ஒலிபரப்பாகும். இதுவரை 6 நிகழ்ச்சிகளில் மோடி பேசியுள்ளார். இது குறித்த தங்களது கருத்துகளை நேயர்கள் mygov.in இணையதளத்தில் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் விலை குறையாதது ஏன்?: ராமதாஸ் கேள்வி
சென்னை: கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் விலை குறையாதது ஏன்? என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: பெட்ரோல், டீசல் மீதான விலைக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு 15 நாட்களுக்கு ஒருமுறை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்றவாறு அவற்றின் விலைகள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கடந்த மார்ச் 15 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாததன் பின்னணியில் அரசியல் இருப்பதாகவே தோன்றுகிறது. உலக சந்தையில் ஏறுமுகமாகவே இருந்து வந்த கச்சா எண்ணெய் விலை கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் சரியத் தொடங்கியது. ஆனால், இந்த விலைவீழ்ச்சியின் பயனை மக்களுக்கு வழங்க எண்ணெய் நிறுவனங்களும், மத்திய அரசும் தயாராக இல்லை. இதனால் கச்சா எண்ணெய் விலை குறைந்ததற்கு இணையாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. அதேநேரத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்ததை காரணம் காட்டி 2 முறை பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டன. கடைசியாக கடந்த மார்ச் 1-ஆம் தேதி இரவு பெட்ரோல் விலை வரிகளையும் சேர்த்து லிட்டருக்கு ரூ.3.46, டீசல் விலை ரூ.3.34 உயர்த்தப்பட்டன. அதன்பின் மார்ச் ஒன்றாம் தேதி முதல் இன்று வரை உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்திருக்கிறது. பிப்ரவரி 28 ஆம் நாள் இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் பீப்பாய் 59.85 டாலர் (ரூ.3698) என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. மார்ச் 16 ஆம் தேதி நிலவரப்படி இது 55.56 டாலராக (ரூ.3419) குறைந்து விட்டது. இதன்படி பார்த்தால் பெட்ரோல் விலை வரிகளையும் சேர்த்து லிட்டருக்கு 3.56 ரூபாயும், டீசல் விலை 3.42 ரூபாயும் குறைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எண்ணெய் நிறுவனங்கள் இதுவரை விலைக்குறைப்பை அறிவிக்கவில்லை. உலகசந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த பிறகும், உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் எண்ணெய் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டி வருகின்றன. தனியார் எண்ணெய் நிறுவனங்கள் இப்போது முழு அளவில் பெட்ரோல், டீசல் விற்பனையில் ஈடுபட்டுள்ள நிலையில் அவையும் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு வசதியாகவே விலைகள் குறைக்கப்படவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு ஏற்றவாறு கடந்த 15 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாததால் மட்டும் பொதுத்துறை மற்றும் தனியார் துறை எண்ணெய் நிறுவனங்கள் நாள் ஒன்றுக்கு ரூ.141 கோடி கூடுதலாக லாபம் ஈட்டி வருகின்றன. விலை நிர்ணய நாளுக்கு ஒரு நாள் முன்பாக கச்சா எண்ணெய் விலை அதிகாரித்தால் கூட அதை நுகர்வோர் தலையில் சுமத்தும் எண்ணெய் நிறுவனங்கள், கடந்த 15 நாட்களுக்கும் மேலாக கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதன் பயனை பொதுமக்களுக்கு வழங்க மறுப்பது ஏற்க முடியாதது; கடுமையாக கண்டிக்கத்தக்கது. கடந்த ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி நிலவரப்படி ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 84.77 டாலராக (ரூ.5209) இருந்தது. அப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.67.01 ஆகவும், டீசல் விலை ரூ.61.70 ஆகவும் இருந்தது. அதன்படி பார்த்தால் இப்போது கச்சா எண்ணெய் விலை 55.56 டாலராக(ரூ.3419) குறைந்து விட்ட நிலையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.43.98 ஆகவும், டீசல் விலை ரூ.40.47 ஆகவும் குறைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு கலால் வரியை உயர்த்தியதாலும், தனியார் எண்ணெய் நிறுவனங்கள் கூடுதல் லாபம் ஈட்ட துணை போகும் நோக்குடன் விலை நிர்ணயத்தில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் செய்யும் குளறுபடிகளாலும் பெட்ரோலுக்கு 19.33 ரூபாயும், டீசலுக்கு 12.45 ரூபாயும் கூடுதல் விலை செலுத்த வேண்டியிருக்கிறது. உலக அளவில் பெட்ரோல், டீசல் மீது அதிக வரி வசூலிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. இத்தகைய சூழலில் வெளிப்படைத் தன்மை இல்லாத விலை நிர்ணயக் கொள்கையின் மூலம் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும். எனவே, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு இணையாக பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதுடன், விலை நிர்ணய முறையையும் வெளிப்படையானதாக மாற்ற வேண்டும்.
கோவை உதவி பேராசியர் கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்
கோவை: கோவை, மேட்டுப்பாளையம் அருகே கல்லூரி உதவிப் பேராசிரியர் ரம்யா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், திருநெல்வேலி மாவட்டம், தென்காசி பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். கைதான் மகேஷ் மீது, நெல்லை, தென்காசி மற்றும் கோவை மாவட்டங்களில் கொலை, கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளதால், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கோவை ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் உத்தவிட்டுள்ளார்.
நெல்லை நுண்ணறிப் பிரிவு உதவி கமிஷனர் பணியிட மாற்றம்
நெல்லை: திருநெல்வேலி மாநகர நுண்ணறிவுப் பிரிவு உதவி கமிஷனராக இருந்த ஸ்டான்லி ஜோன்ஸ், ராமநாதபுரம் மாவட்ட பணியிட பயிற்சி மைய டி.எஸ்.பி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
133 ரன்களில் இலங்கை ஆட்டமிழப்பு
உலகக் கோப்பை போட்டிகளின் முதல் காலிறுதிப் போட்டியில் இன்று தென்னாப்பிரிக்க அணியும் இலங்கை அணியும் மோதுகின்றன. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 133 ரன்களில் ஆட்டம் இழந்தது. முன்னதாக இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதை அடுத்து களம் இறங்கிய இலங்கை அணி, துவக்கத்திலேயே முக்கிய இரு விக்கெட்களை இழந்து தவித்தது. பெரேரா 3 ரன் எடுத்த நிலையிலும், தில்ஷன் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். இருப்பினும் திரிமன்னே சங்ககரா இணைந்து விளையாடினர். திரிமன்னே 48 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 41 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். அவருடன் விளையாடிக் கொண்டிருந்த அனுபவ வீரர் சங்ககரா ஒருவர் மட்டுமே நிலைத்து நின்று ஆடினார். இந்நிலையில் ஜெயவர்த்தனே இம்ரான் தாஹிர் பந்தில் 4 ரன்களில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து தஹிர் பந்தில் பெரேரா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த மெத்யூஸ் 19 ரன்னில் டுமினியின் பந்தில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து, கௌஷல், சமீரா இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதில் அற்புதமாக டிமினி ஹாட்ரிக் எடுத்தார். வெறும் 2 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்களை இலங்கை இந்தக் கட்டத்தில் இழந்தது. குறிப்பாக சுழற்பந்து வீச்சில் 6 விக்கெட்டை இலங்கை அணி இழந்தது. 8 விக்கெட் இழந்த நிலையில் 116 ரன் மட்டுமே எடுத்து மோசமான நிலையில் தடுமாறிய இலங்கை அணிக்கு புத்துயிர் ஊட்ட இரு பவுண்டரிகளை அடித்து அசத்தினார் சங்ககரா. ஆனால் அவர் 45 ரன் எடுத்த நிலையில் மோர்கல் பந்தில் ஆட்டம் இழந்தார். அவர் ஆட்டம் இழந்த அதே நொடியில், மைதானத்தில் வானம் பொத்துக் கொண்டு மழை பொழியத் துவங்கியது. இதனால் ஆட்டம் தடைப்பட்டது. பின்னர் மழை விட்டதும் ஆட்டம் துவங்கியது. மலிங்கா தனது பங்குக்கு 3 ரன் சேர்த்தார். இந்நிலையில் அவர் மில்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இதை அடுத்து, இலங்கை அணி 37.2 ஓவரில் 133 ரன்னில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, ஆட்டம் இழந்தது. 134 ரன் என்ற எளிய இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயித்தது.
2ஜி, 3ஜி ஏலம்: ஒரு லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய்
புது தில்லி: நாடு முழுவதும் உள்ள பல்வேறு தொலைதொடர்பு மண்டலங்களுக்கான, அனைத்து அலைவரிசைகளுக்குமான 2ஜி, 3ஜி அலைக்கற்றை ஏலத்தில் 12 வது நாளான நேற்று ஒரு லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. முன்னதாக இந்த ஏலம் கடந்த வாரம் துவங்கியது. இந்த ஏலம் மூலம் மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தொலைத் தொடர்புத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் நேற்றைய 12வது நாள் ஏலத்தின் முடிவில், 88 சதவீத அலைக்கற்றைகள் ஏலம் விடப்பட்டுள்ளதாகவும் 13வது நாளாக இன்றும் அலைக்கற்றை ஏலம் தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

