Home Blog Page 6216

டுமினி ஹாட்ரிக்; சங்ககரா ஆட்டமிழப்பு; கண்ணீர் விட்ட வானம்: தெ.ஆ., இலங்கை போட்டியில் சுவாரஸ்யங்கள்

உலகக் கோப்பை போட்டிகளின் முதல் காலிறுதிப் போட்டியில் இன்று தென்னாப்பிரிக்க அணியும் இலங்கை அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதை அடுத்து களம் இறங்கிய இலங்கை அணி, துவக்கத்திலேயே முக்கிய இரு விக்கெட்களை இழந்து தவித்தது. பெரேரா 3 ரன் எடுத்த நிலையிலும், தில்ஷன் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். இருப்பினும் திரிமன்னே சங்ககரா இணைந்து விளையாடினர். திரிமன்னே 48 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 41 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். அவருடன் விளையாடிக் கொண்டிருந்த அனுபவ வீரர் சங்ககரா ஒருவர் மட்டுமே நிலைத்து நின்று ஆடினார். இந்நிலையில் ஜெயவர்த்தனே இம்ரான் தாஹிர் பந்தில் 4 ரன்களில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து தஹிர் பந்தில் பெரேரா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த மெத்யூஸ் 19 ரன்னில் டுமினியின் பந்தில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து, கௌஷல், சமீரா இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதில் அற்புதமாக டிமினி ஹாட்ரிக் எடுத்தார். வெறும் 2 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்களை இலங்கை இந்தக் கட்டத்தில் இழந்தது. குறிப்பாக சுழற்பந்து வீச்சில் 6 விக்கெட்டை இலங்கை அணி இழந்தது. 8 விக்கெட் இழந்த நிலையில் 116 ரன் மட்டுமே எடுத்து மோசமான நிலையில் தடுமாறிய இலங்கை அணிக்கு புத்துயிர் ஊட்ட இரு பவுண்டரிகளை அடித்து அசத்தினார் சங்ககரா. ஆனால் அவர் 45 ரன் எடுத்த நிலையில் மோர்கல் பந்தில் ஆட்டம் இழந்தார். அவர் ஆட்டம் இழந்த அதே நொடியில், மைதானத்தில் வானம் பொத்துக் கொண்டு மழை பொழியத் துவங்கியது. இதனால் ஆட்டம் தடைப்பட்டது.

தொலைதூரக் கல்வியில் பொறியியல் தொழில்நுட்பப் படிப்புகள் நடத்த யுஜிசி தடை

புது தில்லி: தொலைதூரக் கல்வி மூலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பட்டப்படிப்புகள் நடத்துவதற்கு பல்கலைக் கழக மானியக் குழு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக பல்கலை மானியக்குழு (யுஜிசி) வெளியிட்டுள்ள அறிக்கை: தொலைதூர கவுன்சில்(டெக்) அமைப்பின் பணிகள் பல்கலைக் கழக் மானியக் குழுவின் (யுஜிசி) கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதையடுத்து தொலைதூரக் கல்வித் திட்டத்தில் வழங்கப்படும் படிப்புகளை ஒழுங்குபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக எந்த ஒரு பல்கலைக்கழகம் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகம், எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகளைத் தவிர தொலைதூரக் கல்வித் திட்டத்தில் பிற தொழி்ல்நுட்பப் பாடங்கள் மற்றும் பட்டயப் படிப்புகளை நடத்தக் கூடாது. மீறினால் யுஜிசி அல்லது ஏஐசிடிஇ நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது.

இளம்பெண் பலாத்காரம்: நாமகிரிப்பேட்டையில் பேரணி

ராசிபுரம் அருகே நாமகிரிப் பேட்டையில், இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப் பட்ட சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து பேரணி சென்றனர். இந்தப் பேரணியில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நாமகிரிப்பேட்டையில் வர்த்தகர்கள் இந்தச் சம்பவத்தை கண்டித்து கடையடைப்பு நடத்தினார்.

மசூதிகள் குறித்த சுப்பிரமணிய சாமி கருத்து: மாநிலங்களவையில் அமளி

புது தில்லி: மசூதிகள் குறித்த பாஜக தலைவர் சுப்பிரமணிய சாமியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சாமி அண்மையில் அசாம் மாநில பல்கலைக்கழத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, கோயில்களில் மட்டுமே கடவுள்கள் உள்ளனர், மசூதிகள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்கள் வெறும் கட்டடங்கள், அவற்றை அப்புறப்படுத்துவதில் தவறில்லை” எனப் பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், சுப்பிரமணியன் சாமியின் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இன்று இப்பிரச்சினை மாநிலங்களவையில் எதிரொலித்தது. இன்று காலை மாநிலங்களவையில், காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பிரமோத் திவாரி, இப்பிரச்னையை எழுப்பினார். ‘மதச் சார்பின்மை இந்திய ஜனநாயகத்தின் அடித்தளம். எனவே, சுப்பிரமணியன் சாமியின் கருத்து தொடர்பாக அவருக்கு எதிராக குற்ற வழக்கு பதிவு செய்ய முடியும்’ என அவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அவையின் துணைத் தலைவர் குரியன், ‘இப் பிரச்னையை ஜீரோ அவர்ஸில் எழுப்ப நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது, அப்போது இது குறித்துப் பேச அனுமதிக்கப்படும்’ என்றார். இதனால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப் பகுதிக்கு வந்த அவர்கள், பாஜக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை இருக்கைக்குச் செல்லுமாறு அவை துணைத் தலைவர் குரியன் விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து குரியன், இது ஒழுக்கமற்ற செயல், இதுபோன்று நடந்து கொள்ளாதீர்கள் என்று கூறி மாநிலன்களவையை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.

இனி ரயில்வே பிளாட்பாரக் கட்டணம் ரூ.10

புது தில்லி: ரயில்வே பிளாட்பார கட்டணம் வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதியில் இருந்து உயர்த்தப்படுகிறது. இது குறித்து ரயில்வே துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியபோது, தற்போது ரயில் நிலையங்களில் பிளாட்பார கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்பட்டு வருகிறது. வரும் ஏப்ரல் மாதம் முதல் தேதியில் இருந்து இக்கட்டணம் ரூ.5ல் இருந்து ரூ.10 ஆக அதிகரிக்கப்பட்டுகிறது என தெரிவித்துள்ளார்.

கணக்குத் தேர்வுக்கு பயந்து ப்ளஸ் 2 மாணவி தற்கொலை

சென்னை கணக்குத் தேர்வுக்கு பயந்து ப்ளஸ் 2 மாணவி ஒருவர் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். ப்ளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. தற்போது முக்கியப் பாடங்களின் தேர்வுகள் நடந்து வருகின்றன. இன்று கணிதப் பாடத் தேர்வு நடக்கிறது. இந்நிலையில், கணிதப் பாடத் தேர்வில் தான் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தில் சென்னை திரிசூலத்தில் 12ம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி ஒருவர், தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ரயிலில் முன்பதிவு நாள் நீட்டிப்பு ஏப்ரல் 1 முதல் அமலாகிறது

புது தில்லி: ரயில்களில் முன்பதிவு செய்யப்படும் நாட்கள் 60இல் இருந்து 120 ஆக அதிகரிப்பது, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலாகிறது. கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2015-16-ம் ஆண்டுக்கான மத்திய ரயில்வே பட்ஜெட்டில், ரயில்களில் முன்பதிவு செய்யப்படும் நாட்கள் 60லிருந்து 120 நாட்களாக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், ரயில்வேயில் முன்பதிவு செய்யும் நாட்கள் 60 -ல் இருந்து 120 நாட்கள் திட்டம் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், பயணியர் ரயில்களில் டிக்கெட் எடுக்க நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையில், 5 நிமிடங்களில் எளிதாக டிக்கெட் எடுக்கும் திட்டம் விரைவில் அனைத்து ரயில் நிலையங்களிலும் அமல்படுத்தப்படும் என்றும் ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் விலை மீண்டும் சரிவு

சென்னை: தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்துள்ளது. தற்போது சவரன் ஒன்றுக்கு ரூ.19,528 என்ற அளவில் விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ. 9 குறைந்து கிராம் ஒன்றின் விலை ரூ.2441க்கு விற்பனை செய்யப் படுகிறது. வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.37.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நெல்லை: குடும்பத் தகராறில் மனைவியைக் கொன்று ஆட்டோ ஓட்டுநர் சரண்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் குடும்பத் தகராறில் தனது மனைவியைக் கொன்றுவிட்டு ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் போலீஸில் சரண் அடைந்தார். நெல்லை இந்திரா நகரைச் சேர்ந்த அன்பரசு ஆட்டோ ஓட்டுநராகத் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பொன்னீஸ்வரி(26). இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், குடும்பத் தகராறு காரணமாக இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அன்பரசு, பொன்னீஸ்வரியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். பின்னர் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணை மார்ச் 24ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு

புது தில்லி: ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு வழக்கில் பவானி சிங்கை மாற்றக் கோரி திமுக பொது செயலர் அன்பழகன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை மார்ச் 24ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றத்தில் ஒத்தி வைக்கப்பட்டது.