Home Blog Page 6217

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து வைகோ உண்ணாவிரதம் துவக்கம்

மதுரை: நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மதிமுக பொது செயலர் வைகோ தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. புதன் கிழமை இன்று காலை மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடராஜ் தியேட்டர் அருகில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் துவங்கியது. லெனின் ராஜப்பா, திருமுருகன்காந்தி, கி.வே.பொன்னையன், இராச.முகிலன், சந்திரன், இளையரசு, நியூட்ரினோ எதிர்ப்பு இயக்க புதூர் மு.பூமிநாதன் உள்பட பல்வேறு அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தென்னாப்பிரிக்காவுடனான போட்டி: இலங்கை அணி தடுமாற்றம்

உலகக் கோப்பை போட்டிகளின் முதல் காலிறுதிப் போட்டியில் இன்று தென்னாப்பிரிக்க அணியும் இலங்கை அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதை அடுத்து களம் இறங்கிய இலங்கை அணி, துவக்கத்திலேயே முக்கிய இரு விக்கெட்களை இழந்து தவித்தது. பெரேரா 3 ரன் எடுத்த நிலையிலும், தில்ஷன் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். இருப்பினும் திரிமன்னே சங்ககரா இணைந்து விளையாடினர். திரிமன்னே 48 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 41 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். அவருடன் விளையாடிக் கொண்டிருந்த அனுபவ வீரர் சங்ககரா 51 பந்துகளில் 15 ரன் எடுத்து விளையாடி வருகிறார். 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழந்து 72 ரன் எடுத்து தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது.

தான் அடித்து உதைக்கப்படும் வீடியோ: வாட்ஸ்அப்பில் வந்ததால் இளம்பெண் அதிர்ச்சி

up-girl-beatஹத்ராஸ் (உ.பி.,): உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் தான் நண்பருடன் சென்றபோது ஒரு கும்பலால் 10 நிமிடங்களுக்கும் மேல் அடித்து உதைக்கப்படும் வீடியோ வாட்ஸ் அப்பில் உலவியதால் அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து 5 மணி நேர பயணத் தொலைவில் உள்ள ஹத்ராஸில் கடந்த மார்ச் 8ம் தேதி இளம்பெண் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் நடு சாலையில் வழிமறித்து தாக்கப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணும் அவரது ஆண் நண்பரும் மோட்டார் சைக்கிளில் சந்தைப் பகுதி வழியாகச் சென்றுள்ளனர். அப்போது இரு பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அந்த இரு சக்கர வாகனத்தை மறித்து, இருவரையும் கீழே தள்ளி, அந்தப் பெண்ணை அடித்து உதைத்துள்ளது. அந்தப் பெண்ணை மோசமான வார்த்தைகளால் திட்டி, உதைத்துள்ளனர். அந்தப் பெண் தன்னை விட்டு விடுமாறு கெஞ்சியும், அவர்கள் அந்தப் பெண்ணின் பெயரைச் சொல்லி திட்டி அடித்து உதைத்துள்ளனர். இந்த வீடியோ பதிவு செல்பொனில் பதிவாகியுள்ளது. இதனை, அந்தப் பெண்ணை அடித்த நால்வரில் ஒருவரே தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். பின்னர் அதனை நண்பர்களிடம் உலவ விட்டுள்ளார். அது வாட்ஸ் அப்பில் வெளியாகி அந்தப் பகுதியில் பலரிடம் பரவியுள்ளது. தான் ஒரு கும்பலால் அடித்து உதைக்கப்பட்ட சம்பவத்தை தன் பெற்றோரிடம் கூறாமல் தவிர்த்துள்ளார் அந்தப் பெண். ஆனால், அவரது உறவினர் ஒருவர் இந்த வாட்ஸ் அப் வீடியோவைக் கண்டு அவரது பெற்றோரிடம் கூறியதில் உண்மை வெளிவந்துள்ளது. இதை அடுத்து, இந்த விவகாரம் காவல் நிலையத்துக்குச் சென்றது. போலீஸாரின் விசாரணையில், அந்த கும்பல் அதே ஊரைச் சேர்ந்தது என்றும், அவர்களில் ஒருவன் அந்தப் பெண்ணைக் காதலித்ததும், ஆனால் அந்தப் பெண் வேறு ஒரு ஆண் நண்பருடன் சுற்றியதால் ஆத்திரமடைந்து அடித்ததும் தெரியவந்தது. இதை அடுத்து அந்த 4 பேரும் கைது செய்யப் பட்டுள்ளனர்.

அவைக்கு வராதது ஏன்?: வாக்கெடுப்புக்கு வராத பாஜக., எம்பிக்களுக்கு மோடி கேள்வி

புது தில்லி: “முக்கிய மசோதாக்கள் மீது வாக்கெடுப்பு நடைபெறும் போது அவைக்கு வராதது ஏன்? காரணம் சொல்லுங்கள்” என்று மக்களவையில் பாஜக., எம்.பி.,க்களிடம் பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். செவ்வாய்க் கிழமை நேற்று மக்களவையில் நிலம் கையகப்படுத்தும் மசோதா மீதான ஓட்டெடுப்பு நடைபெற்றது. அப்போது பா.ஜ.க, எம்.பி.,க்கள் பலர் அவைக்கு வரவில்லை. இதையடுத்து, அவைக்கு வராதவர்கள் பெயர்களை எழுதித் தருமாறு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடுவிடம் பிரதமர் மோடி கேட்டார். இதை அடுத்து அந்தப் பட்டியலை பிரதமரிடம் கொடுத்தார் அவர். இந்நிலையில், அவைக்கு வராத காரணத்தை பிரதமரிடம் தெரிவிக்க வேண்டும் என அவர்களிடம் வெங்கய்ய நாயுடு கேட்டுக் கொண்டார். அவைக்கு வராத எம்.பி.,க்களின் பெயர்ப் பட்டியலில் நரேந்திர சிங் டோமர், சத்ருகன் சின்கா, வருண் காந்தி, பூணம் மகாஜன், பிரீத்தம் முண்டே, ரிதி பதக், சந்திர பிரகாஷ் ஜோஷி என 23 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இதனால் கோபமடைந்த மோடி, மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்து முக்கியப் பொறுப்புக்காக தேர்ந்தெடுத்துள்ளனர். அதை வீணாக்குகிறீர்கள் என்று கோபத்துடன் கூறினாராம். அவைக்கு வராத காரணமாக, தங்கள் வீட்டில் துக்கம் அல்லது திருமணம், உடல்நலக் கோளாறு இப்படியாக பெரும்பாலான எம்.பி.க்களும் கூறியுள்ளனர். முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டியிருப்பதால் அரசின் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க அனைத்து உறுப்பினர்களும், அனைத்து நாட்களும் அவைக்கு வர வேண்டும் என வெங்கய்ய நாயுடு உறுப்பினர்களுக்கு உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

அவையை முடக்கவே எதிர்க்கட்சிகள் தேவையற்ற பிரச்னைகளை எழுப்புகின்றனர்: மோடி

புது தில்லி: மக்களவையிலும் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சியினர் வேண்டுமென்றே தேவையற்ற பிரச்னைகளைக் கிளப்பி, அவையை வீணடிக்கின்றனர் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசின் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற விடக் கூடாது என்பதற்காக நேரத்தை வீணடித்து வருகின்றன. இதனை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்கள் என்று மோடி கூறியுள்ளார்.

நிலம் கையகப் படுத்தும் மசோதா எதிர்ப்பு: அன்னா ஹசாரே பாதயாத்திரை ஒத்திவைப்பு

புது தில்லி: மத்திய அரசின் புதிய நிலம் கையகப்படுத்தும் மசோதா ஏழை விவசாயிகளுக்கு எதிரானது என்று கூறி, இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப் போவதாக அறிவித்திருந்த பாத யாத்திரையை அன்னா ஹசாரே திடீரென ஒத்தி வைத்துள்ளார். முன்னதாக, இந்த மாதம் 30-ம் தேதி தொடங்கி 1100 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாதயாத்திரை நடத்தப்போவதாக அறிவித்திருந்தார். மகாராஷ்டிரத்தின் வார்தா காந்தி ஆசிரமத்தில் இருந்து இந்த பாதயாத்திரை தொடங்கும் என்றும், ஏப்ரல் 30-ம் தேதி தில்லி ராம்லீலா மைதானத்தில் இது நிறைவடையும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் அன்னா ஹசாரேவின் இந்த பாதயாத்திரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவரது உதவியாளர் தத்தா தனியார் டி.வி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

தோனி, ரெய்னா, கோலியை வீழ்த்த ஐபிஎல் அனுபவம் கைகொடுக்கும்: சொல்கிறார் வங்கதேச வீரர் அல் ஹசன்

shahib-al-hasan மெல்போர்ன்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன் காலிறுதிப் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதன் இரண்டாவது காலிறுதியில் இந்தியாவும் வங்கதேசமும் மெல்போர்னில் மோதுகின்றன. நேற்று இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல்ஹசன், நாங்கள் உலகக் கோப்பை காலிறுடிப் போட்டியில் முதல் முறையாக விளையாடுகிறோம். வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் இது மிகப்பெரிய போட்டி இது என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் இது கிரிக்கெட்டில் இன்னொரு சாதாரண ஆட்டம் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்த மைதானத்தில் போட்டியைக் காண வருவார்கள். இந்த அளவு மிகப்பெரிய ரசிகர் கூட்டத்துக்கு மத்தியில் எப்படி நெருக்கடி இல்லாமல் விளையாடுவது என்பது எனக்கு ஓரளவு தெரியும். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியபோது அது போன்ற சூழலைச் சந்தித்துள்ளேன். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் ஏறக்குறைய 70 ஆயிரம் ரசிகர்கள் அமரும் அளவு பெரியது. ஆனாலும் மெல்போர்ன் அனுபவம் வித்தியாசம்தான். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கிடைத்த அனுபவம் மூலம் தோனி, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா போன்ற வீரர்களுக்கு எதிராக திட்டங்களை வகுப்பதில் என்னால் உதவிட முடியும். அவர்களின் பலம் மற்றும் பலவீனங்கள் குறித்து எனது சக வீரர்களுக்கு தெரிவிப்பேன். இந்தியா நடப்பு உலக சாம்பியன். அந்த அணியின் டாப்-6 வரிசை பேட்ஸ்மேன்கள் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள். ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறமை பெற்றவர்கள். அவர்களை வலுவான பார்ட்னர்ஷிப் அமைக்க விடாமல் விரைவில் வீழ்த்தினால் போதும். 2007 உலகக் கோப்பையில் இந்தியாவைத் தோற்கடித்தபோது, நாங்கள் அச்சமின்றி விளையாடினோம். அதேபோன்று இப்போதும் விளையாட விரும்புகிறோம். இந்த உலகக் கோப்பையைப் பொறுத்தவரை இதுவரை நாங்கள் நன்றாக ஆடியுள்ளோம். இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக ஆடியது போன்று செயல்பட்டால், எங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்க வாய்ப்புள்ளது.. என்றார்.

தமிழக- இலங்கை மீனவ பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

tnசென்னை: தமிழகம் மற்றும் இலங்கையின் மீனவர் பிரதிநிதிகளுக்கு இடையேயான 3-ம் கட்ட பேச்சுவார்த்தையை வரும் 24ஆம் தேதி சென்னையில் நடத்தத் தயாராக இருப்பதாக தமிழக அரசு, மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி உள்ளது. தமிழக் மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா முயற்சிகளை மேற்கொண்டார். அதன் காரணமாக சென்னையிலும், கொழும்பிலும் இரண்டு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் இடம், தேதி போன்றவற்றை, இலங்கை மற்றும் தமிழக அரசிடம் பேசி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நிர்ணயித்து வந்தது. இந்நிலையில் 3-ம்கட்ட பேச்சுவார்த்தை, சென்னை தேனாம்பேட்டை மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தில் மார்ச் 5-ந் தேதி நடத்துவதாக தமிழக தரப்பும், மார்ச் 11-ந் தேதி என்று இலங்கை அரசும் அறிவித்தது. இரு தினங்களுமே இருதரப்புக்கும் சரிவராத நிலையில், தற்போதுன் மார்ச் 24ம் தேதி பேச்சுவார்த்தையை நடத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறைக்கு, தமிழக அரசு நேற்று எழுதிய கடிதத்தில், வரும் 24 ஆம் தேதி சென்னையில் இருநாட்டு மீனவர்களின் 3வது கட்ட பேச்சுவார்த்தையை நடத்த தயாராக இருப்பதாக கடிதம் எழுதி உள்ளது.

துவங்கியது ஆபரேஷன் ஆம்லா

சென்னை: தமிழக கடலோர மாவட்டங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடத்தப்படும் ஆபரேஷன் ஆம்லா திட்டம் இன்று துவங்கியது. இரு நாட்களுக்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் படுகிறது. தமிழகத்தின் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் இந்த ஆபரேஷன் ஆம்லா திட்டம் நடைபெறுகிறது. இந்த நடவடிக்கையில் நூற்றுக்கணக்கான போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கப்பல்படை, கடலோர காவல் படை, உட்பட பல்வேறு பாதுகாப்பு குழுவினர் இந் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மும்பை குண்டு வெடிப்புச் சம்பவத்தை அடுத்து, கடலோரப் பாதுகாப்பை மேம்படுத்தவும், கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊருடுவலைத் தடுக்கவும், ஆண்டுக்கு இரு முறை ஆபரேஷன் ஆம்லா நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மத்திய அரசு மீது மோடியின் சகோதரர் குற்றச்சாட்டு

prahalat-modi புது தில்லி: மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற மோடியின் அரசு தவறிவிட்டதாக மோடியின் இளைய சகோதரர் பிரஹ்லாத் குற்றம்சாட்டியுள்ளார். தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் அகில இந்திய நியாயவிலைக் கடைகள் கூட்டமைப்பின் சார்பில் நடந்த தர்ணா போராட்டத்தில், பிரதமர் மோடியின் இளைய சகோதரர் பிரஹ்லாத் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது, ”மத்தியில் ஆட்சிக்கு வந்த பின், மக்களின் எதிர்பார்ப்புகளையும், அவர்களின் பிரச்னைகளையும் தீர்த்து வைக்க பா.ஜ.க. அரசு தவறிவிட்டது. எங்கள் போராட்டம் இங்கே நடத்தப்படுவதற்கு, தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் தோல்வியே காரணம். நான் மேற்கொள்வது எனது சகோதரருக்கு எதிரான போராட்டம் அல்ல. என்னைப் பொறுத்தவரை எனது சகோதரர் மதிப்பு மிக்கவர். அவரை நான் மதிக்கிறேன். ஆனாலும், தொழில் ரீதியாக எனது குரலை சகோதரருக்கு முன்பாக எழுப்ப இந்த மேடைக்கு வந்திருக்கிறேன். எங்களுடைய பிரச்னைகளை பா.ஜ.க. கண்டு கொள்ளவில்லை என்றால் தில்லி சட்டசபைத் தேர்தலில் நடந்ததுபோல் உத்தரப் பிரதேசம், பீகார் மாநில சட்டசபை தேர்தல்களிலும் நடக்கும். நானும் பா.ஜ.க.வின் உறுப்பினர்தான். ஆனாலும், தேசியக் கட்சிகளின் தவறான கொள்கைகளை எதிர்க்கிறேன்” என்றார்.