புது தில்லி: “முக்கிய மசோதாக்கள் மீது வாக்கெடுப்பு நடைபெறும் போது அவைக்கு வராதது ஏன்? காரணம் சொல்லுங்கள்” என்று மக்களவையில் பாஜக., எம்.பி.,க்களிடம் பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். செவ்வாய்க் கிழமை நேற்று மக்களவையில் நிலம் கையகப்படுத்தும் மசோதா மீதான ஓட்டெடுப்பு நடைபெற்றது. அப்போது பா.ஜ.க, எம்.பி.,க்கள் பலர் அவைக்கு வரவில்லை. இதையடுத்து, அவைக்கு வராதவர்கள் பெயர்களை எழுதித் தருமாறு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடுவிடம் பிரதமர் மோடி கேட்டார். இதை அடுத்து அந்தப் பட்டியலை பிரதமரிடம் கொடுத்தார் அவர். இந்நிலையில், அவைக்கு வராத காரணத்தை பிரதமரிடம் தெரிவிக்க வேண்டும் என அவர்களிடம் வெங்கய்ய நாயுடு கேட்டுக் கொண்டார். அவைக்கு வராத எம்.பி.,க்களின் பெயர்ப் பட்டியலில் நரேந்திர சிங் டோமர், சத்ருகன் சின்கா, வருண் காந்தி, பூணம் மகாஜன், பிரீத்தம் முண்டே, ரிதி பதக், சந்திர பிரகாஷ் ஜோஷி என 23 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இதனால் கோபமடைந்த மோடி, மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்து முக்கியப் பொறுப்புக்காக தேர்ந்தெடுத்துள்ளனர். அதை வீணாக்குகிறீர்கள் என்று கோபத்துடன் கூறினாராம். அவைக்கு வராத காரணமாக, தங்கள் வீட்டில் துக்கம் அல்லது திருமணம், உடல்நலக் கோளாறு இப்படியாக பெரும்பாலான எம்.பி.க்களும் கூறியுள்ளனர். முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டியிருப்பதால் அரசின் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க அனைத்து உறுப்பினர்களும், அனைத்து நாட்களும் அவைக்கு வர வேண்டும் என வெங்கய்ய நாயுடு உறுப்பினர்களுக்கு உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
Popular Categories



